\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

வீரத்துறவி சுப்பிரமணிய சிவா

Courtesy: Wikipedia.org

அக்டோபர் மாதம் இந்திய சுதந்திரத்திற்கும், நாட்டின் மேம்பாட்டிற்கும் ஒரு பெரிய புண்ணிய காலம் என்றே சொல்ல வேண்டும். இந்திய நாட்டிற்காகச் சேவை புரிந்த ஒப்புயர்வற்ற பலர் உதித்த சிறந்த மாதம் இதுவென்றே தோன்றுகிறது. அண்ணல் காந்தியடிகள் அக்டோபர் இரண்டாம் நாள் உதித்தது உலகம் அறிந்த ஒன்று. பெருந்தலைவர் என்றும், கர்ம வீரர் என்றும் போற்றப்பட்ட காமாராஜரின் நினைவு நாளும் இந்த இரண்டாம் திகதியே. இவர்களிருவர் தவிர, சுதந்திர இந்தியாவின் இரண்டாவது பிரதமராகப் பதவி வகித்து, நேருவின் குடும்பமல்லாத ஒருவர் நாட்டைத் திறமையுடன் ஆண்டு, அண்டை அயல் நாடுகளிடம் இந்தியத் திருநாட்டிற்கென ஒரு மரியாதையை உருவாக்கிய லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் பிறந்த தினமும் அதே அக்டோபர் இரண்டாம் திகதிதான். இவர்கள் மூவரையும் குறித்து, பனிப்பூக்களில் ஏற்கனவே கட்டுரைகள் வரையப்பட்டுள்ளன. இவர்கள் தவிர்த்து, ”வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று அனைத்து உயிர்களிடத்தும் அன்பு போதிக்கும் உயரிய ஜீவகாருண்யத்தை உலகுக்கு அளித்த ராமலிங்க வள்ளலார் தோன்றியதும் அக்டோபர் ஐந்தாம் திகதி ஆகும். இவர் குறித்து, இன்னொரு முறை பார்க்கலாம்.

அதே அக்டோபர் முதல் வாரத்தில், அதாவது அக்டோபர் நான்காம் திகதி, இந்தியத் திருநாட்டில், தமிழ் மண்ணில், அன்றைய மதுரை மாகாணத்திலிருந்த திண்டுக்கல் நகருக்கு அருகாமையிலுள்ள வத்தலகுண்டு எனும் கிராமத்தில் தோன்றி, இந்திய சுதந்திரத்திற்காக எவராலும் எண்ணிப் பார்ப்பதற்கரிய அரும் தியாகங்கள் புரிந்த சுதந்திரப் போராட்டத் தலைவர் திரு. சுப்பிரமணிய சிவா குறித்து வரையப்படுகிறது இந்தக் கட்டுரை.

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?

என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?

என்று எமது அன்னைகை விலங்குகள் போகும்?

என்று எமது இன்னல்கள் தீர்ந்து பொய்யாகும்?

…..

…..

பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?

பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?

தஞ்சம் அடைந்தபின் கைவிடலாமோ?

தாயும் தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?

என்ற பாரதியின் தீப்பிழம்பான கேள்விகளுக்குப் பின்னர் அவர் மனத்தில் முதன்மையாய் நின்றது அவரின் உயிர்த் தோழர் சுப்பிரமணிய சிவாவே ஆகும். பாரதியின் ஒத்த வயதினராகிய சிவா, வெள்ளையருக்கு எதிரான போராட்டத்தில், மூன்று முறை, மொத்தமாகப் பத்தாண்டுகளுக்கு மேலான கடுஞ்சிறைவாசம் அனுபவித்தார். அந்தச் சிறைவாசம் அவருக்குத் தந்த பரிசு, குணப்படுத்தவே முடியாது என்று அந்நாளில் கருதப்பட்ட தொழுநோய்.

”நான் ஒரு சந்நியாசி. முக்தியடையும் வழியைப் பிரச்சாரம் செய்வதே என் வேலை. அதன் தத்துவங்களை எடுத்து விளக்கி அதை அடையும் மார்க்கத்தைப் போதிப்பதே என் வேலை. சகலவிதமான வெளி பந்தங்களினின்றும் விடுவித்துக் கொள்வதே ஆத்மாவிற்கு முக்தியாகும். இதே போன்று ஒரு தேசத்தின் முக்தியாவது, அந்நிய நாடுகளின் பிடிப்பினின்றும் விடுவித்துக் கொள்வது; பரிபூர்ண சுதந்திரம் அடைவது. அதையே இந்நாட்டு மக்களுக்கு நான் போதிக்கிறேன். அதாவது, சுதந்திர லட்சியத்தை அடையும் மார்க்கம் சுதந்திரப் பாதையில் குறுக்கே நிற்கும் எதையும் புறக்கணிப்பது, சாத்வீக முறையில் எதிர்ப்பது, சுதேசக் கல்வி இவையேயாகும்.”

சுப்பிரமணிய சிவா தன் கைப்பட எழுதிய தனது லட்சியக் கோட்பாடு இதுவாகும். சிவா மிகச் சிறந்த தமிழ் எழுத்தாளர். தன் வசீகரப் பேச்சினாலும், வாள் வீச்சொத்த எழுத்தினாலும், வெள்ளை எதேச்சதிகாரத்தைச் சாடிக் கொண்டிருந்த அவரைக் கண்டு அரசாங்கம் அஞ்சியதில் எந்த வியப்பும் இல்லை. தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு, ஆங்கில நீதிபதி ஜட்ஜ் பின்ஹே (Judge Binhay) முன்னர் நிறுத்தப்படுகிறார். நீதிமன்றத்தில் சிங்கமென கர்ஜித்த அவரின் உரை, நாட்டுப்பற்று உள்ள ஒவ்வொரு தமிழனும் படித்தறிய வேண்டிய ஈடு இணையற்ற பொக்கிஷம்.

“கொலைமேற் கொண்டாரிற் கொடிதே – அலைமேற்கொண்டு
       அல்லவை செய்தொழுகும் வேந்து”

என்று தொடங்கி, திருவள்ளுவரின் “கொடுங்கோன்மை” எனும் அதிகாரத்தின் பத்துக் குறள்களையும் விளக்கி, ஒரு அரசு கொடுங்கோல் ஆட்சி புரிவது அந்த நாட்டை எவ்வாறு பாதிக்கும் என்றும், அதற்கு மிகச் சரியான உதாரணம் வெள்ளையர்கள் இந்தியாவில் புரியும் ஆட்சி என்றும் உரக்க அந்த நீதிமன்றத்தில் விளக்கினார். பொருள்மீது ஆசைகொண்டு பொதுமக்களை வருத்தி நீதியில்லாதவற்றைச் செய்யும் அரசன் கொலைத்தொழில் புரிபவரைவிடக் கொடுமையானவன் என்ற இந்தக் குறளின் விளக்கத்தில் தொடங்கி, பத்தாவது குறள் வரையும் அனைத்தையும் இவர் கர்ஜித்தது அன்றைய சுதந்திர அனல் கொழுந்து விட்டெரிவதற்கு மிகப் பெரிய சக்தியாக விளங்கியது. பால கங்காதர திலகரின் தீவிரவாதத்தை ஆதரித்து, மகாத்மாவின் மிதவாதத்தில் நம்பிக்கையில்லாத இவர், தென்னகத்தின் தலைசிறந்த மூன்று மேடைப்பேச்சாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். மற்ற இருவர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரும், மகாகவி பாரதியாரும் ஆகும்.

இவரின் அடக்க முடியாத அதீத தீரத்தைக் கண்டு, ஜட்ஜ் பின்ஹே இவருக்குப் பத்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தார். அன்றைய கடுங்காவல் சிறை என்பது நம்மால் கனவிலும் எண்ணிப் பார்க்க முடியாத ஒன்று. நாள் முழுதும் ஓயாத வேலை தரப்படும், இரவில் கட்டாய ஓய்வு என்று கூறி, காரிருளான அறையில் அடைக்கப்படுவர் போராளிகள். சிவா போன்ற எழுத்தாளர்களுக்குத் தங்களின் எண்ணங்களை வெளிப்படுத்த இயலாமல் செய்வதற்காகக் கையாளப்பட்ட உத்தியே இந்தக் காரிருள் அறைச் சிறை. இதற்கு நடுவிலும், அவர் எழுதுவதும், தனது கருத்துக்களை வெளியிடுவதும் சற்றாவது தொடர்ந்து கொண்டிருந்தது.

ஜூலை 1908 ஆம் ஆண்டு சிறையிலடைக்கப்பட்ட இவர் சிறைவாழ்க்கையில் அடைந்த துயர் சொல்லும் தரமன்று. இந்தக் காரிருள் சிறை தந்த சீதனம், பார்ப்பவர் அஞ்சும் தொழுநோய். “கொடியதோர் வியாதி கொல்லுது என்னை” என்று தன் கவிதையொன்றில் குறிப்பிட்ட இவர், அந்தக் கொடுமைகளையும் மீறி, தொடர்ந்து சுதந்திரத்திற்கான போர்க்கொடி பற்றிப் போராடிக் கொண்டிருந்தார். தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பொதுப் போக்குவரத்து வாகனங்களில் நடமாடலாகாது என்று சட்டம் வகுத்திருந்தது கொடுமைமிகு வெள்ளை அரசு. அந்தக் காரணங்களுக்காக, தொழுநோயால் பாதிக்கப்பட்ட பிறகு, நாடெங்கும் கால்நடையாகவே நடந்து சென்று சுதந்திரப் போராட்டத் தீயை, தன்னுடலையும் உயிரையுமே ஆகுதியாய் இட்டு, வேள்வியென வளர்த்தவர் சிவா.

ஒப்பாரும் மிக்காரும் அற்ற சுப்பிரமணிய சிவா, மிகச் சிறந்த தமிழ் எழுத்தாளர். “ஞான பானு” என்ற பத்திரிக்கையை நடத்தி வந்தார். இந்தப் பத்திரிக்கையில், இவரின் குருவான வ.வே.சு.ஐயரும், நண்பரான மகாகவி பாரதியாரும் தொடர்ந்து எழுதி வந்தனர். பின்னர் “பிரபஞ்ச மித்திரன்” என்ற இன்னொரு பத்திரிக்கையும் நடத்திய இவர், தாய்மொழியைக் கற்க வேண்டியதின் அவசியத்தை மிகவும் அழகாக விளக்கியுள்ளார். பல மொழிகளைக் கற்ற தமிழ்ப் பண்டிதர்கள், தாய்மொழியின்பால் அவ்வளவாகப் பற்றில்லாததைக் குறித்து மகாகவி கீழ்க்கண்டவாறு ஏசியது நாமறிந்ததே;

வேறுவேறு பாஷைகள் — கற்பாய்நீ
    வீட்டு வார்த்தை கற்கிலாய்போபோபோ

தனது ஞானபானு 1915 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத இதழில், இதே கருத்தை, இன்னும் மிகக் கடுமையாகக் கீழ்க்கண்டவாறு சாடுகிறார் சிவா;

”ஒரு நாட்டின் உயிர் என்பது அந்த நாட்டு பாஷைகளில் இருக்கின்றது. தன் சொந்த பாஷையைக் கற்காதவர்கள், தங்களது பைத்தியக்காரத்தனத்தாலோ அல்லது முட்டாள்தனத்தாலோ தற்கொலை செய்து கொள்பவர்களுக்கு ஒப்பானவர்கள். தற்கொலை குற்றமென்றால், சொந்த பாஷையைக் கற்காதது அதுபோல ஆயிரம் மடங்கு குற்றம் செய்வதற்குச் சமம். அரசாட்சி செய்பவர் இதனைக் குற்றமென்று கூறிடினும், சர்வலோகத்தையும் ஆளும் மகாசக்தியின் முன்னர் இவர்களெல்லாம் மன்னிக்க முடியாத குற்றவாளிகள்”

இன்றும் பொருந்தும் இணையிலாக் கருத்தல்லவா இது? தாய்மொழி குறித்துச் சிலாகித்து எழுதிய சுப்பிரமணிய சிவா பலமொழி அறிந்தவர், சமஸ்கிருதத்தில் கட்டுரைகள் எழுதும் அளவிற்குப் பாண்டித்யம் படைத்தவராய் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிப்பற்றாளர்களும் தேசப்பற்றாளர்களும்கூட இன்று அவ்வளவாக நினைவில் கொள்ளாமல் ஒதுக்கி விட்ட, “வீரத்துறவி” என்று அந்நாளில் பெருமைப்படுத்தப்பட்ட இந்தத் தியாகச் செம்மலுக்கு, அவரின் பிறந்த நாளையொட்டி தலைவணக்கம் செய்வதில் பனிப்பூக்கள் பெருமை கொள்கிறது.

   வெ. மதுசூதனன்.

Tags: , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad