\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

ஹாலோவீன் கார்த்திகை கவர்ச்சி விளக்குகள்

ஊருசனம் ஓய்ந்திருக்கு; ஊதல் காற்றும் அடிச்சிருக்கு. வெட்ப தட்ப மாற்றம் வழமை போல் வருகிறது வட அமெரிக்காவிற்கு. பகலவனாகிய சூரியன் பருவகாலம் தொட்டுப் பதுங்குகையிலும் பாங்காக வருகிறாள் இயற்கையன்னை. இலையுதிர்காலத்தை , அவள் தன் இயல் வண்ணத் தூரிகைகளுடன் வரைகிறாள். பனிப்பூக்கள் எழுத்தாளர் சரவணக்குமரன் அவரது வர்ணஜாலக் கட்டுரையில் வர்ணித்தது போல் மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு,  செவ்வூதா நிறங்கள் வட அமெரிக்கக் காடுகள், மேடுகள், ஏரிக்கரைகள், ஆற்றோரங்கள் என அனைத்தையும் எழிலோடு மின்ன வைக்கின்றன.

 

இயற்கையன்னை ஒளிமயமான ஓவியங்களை எம்முன்னால் தோகை விரித்துத் தருகிறாள். இதைப் பார்த்து ரசிப்பது அமெரிக்க வாழ் மக்களின் பாக்கியம்.

எனினும் இதையடுத்து வருகிறது இருள்காலம். வட பகுதியில் வெய்யில் குறைகிறது, இருள் நேரம் அதிரிக்கிறது. அதற்கு நாம் தயாராக வேண்டாமா? பூகோளப் பருவகாலம் இருள் நோக்கிப் போக, மக்கள் தம் வெளிச்சகாலக் கொண்டாட்டங்கள் பலதை உருவாக்கிக் கொள்வர். தமிழர் தாயகங்களில் மாரிக்கால  மப்பு வானிலையில் நவராத்திரி, அதைத் தொடர்ந்து தீபாவளி, கார்த்திகை விளக்கீடு, ஊர்க்கோயில் இரவுத் திருவிழாக்கள் எனப் பல ஒளிமிகு கொண்டாட்டங்கள் வருகின்றன.

இதே சமயம் வட அமெரிக்காவில் புகலிடம் கொண்ட தமிழர் பல வகைக் கொண்டாட்டக் கேளிப்புக்களிலும் பங்கு கொள்வர். இவ்விடம் ஹாலோவீன், தீபாவளி, கார்த்திகை விளக்கீடு, நன்றி நவிலல் நாள் (Thanks Giving), நத்தார் பண்டிகை எனப் பல்வேறு கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கவுள்ளன.

இதன் போது நாம் எவ்வாறு தமிழர் கொண்டாட்டங்கள் சிலவற்றை இவ்வூர் இலையுதிர் காலப் பண்டிகை பாணியில் அலங்கரித்து, கொண்டாடிக் குதூகலிக்கலாம் என்று பார்ப்போம்.

அமெரிக்காவில் அறுவடை காலமிது ஆப்பிள், பூசணிகள, மேப்பிள், ஓக் (Oak ) மர இலைகள் ஏக்கோன் விதைகள், பலவர்ணச் சோள கும்பிகளும் (ear of a corn),  சருகுகள்  அனைத்தும் பரந்து குவிந்து காணப்படும் நேரம் இது. பூசனிக்காய் ஹாலோவீன் காலத்தில் வீட்டுக்கு வருவோரை, பகிடியாக  பயமுறுத்தும் உருவகங்களாகச் செதுக்கப்படும்.

இம்முறை நாம இந்தப் பூசனிக்காய் செதுக்கலை எவ்வாறு தமிழ்க் கலாச்சார உருவகங்களாகச் செதுக்கி, பிள்ளைகளும், பெற்றார்களும், உற்றார்களும், நண்பர்களும் இருள் போக்கும்  பூசணிக்காய் வெளிச்ச வீடுகளை உருவாக்கி மகிழலாம் என்றும் பார்ப்போம்.

தேவையானவை

  • 9-12 அங்குல பருமன் உள்ள பூசணிக்காய்கள்
  • கீழே வைத்து இலகுவாக சுத்தம் செய்யப் பழைய பத்திரிகைகள்
  • ஒரு மிதமான அகலத்தில், நீண்ட தண்டு உடைய உலோக அகப்பை (Metal Spoon)
  • கூர் முனையும், நீளமான அலகுமுள்ள கத்தி
  • மெழுகுவர்த்தி (tea candles)

நுணுக்கமாகச் செதுக்கிக் கொள்ள விரும்பினால், பூசணைக்காய் செதுக்கும் சிறிய நுண்வாள்கள் (Pumkin Carving kit). நீங்கள் பொதுவாக உருவகங்களைப் பூசணிக்காயில் சிறு கத்தி கொண்டே செய்து விடலாம். ஆயினும் இதில் மென்மேலும் ஆர்வம் இருந்தால், நுட்பமான உருவகங்களைச் செய்ய விரும்பினால் பூசணிக்காய் செதுக்கும் துணைப் பொட்டலம் உதவும்.

கீழே செய்முறைகளைத் தருகிறோம்.

பூசனிக்காய் தேர்ந்து எடுத்தல்

சரியான அளவு பூசனிக்காயைத் தெரிவு செய்துக் கொள்வது அவசியம். செதுக்கும் பூசனிக்காய் அதன் உருவம் மேற்பகுதி சற்று சிறிதாகவும், கீழ்ப் பகுதி சற்று அகன்றதாகவும் இருக்குமாறு தெரிவு செய்து கொள்ளலாம். இதன் காரணம் பூசணிக்காய் நிலை தளும்பாமல் குற்றி இருக்க வேண்டும்.

மேலும் பூசணிக்காயின் மேற்பகுதித் தோல் காயங்கள், நெளிவுகளைக் கொண்டிராமல் இருந்தால்  மிகவும் நல்லது. இல்லாவிடில் செதுக்கவிருக்கும் உருவகங்களை முதலில் வரைந்து கொள்வது கடினமாகி விடும்.

பூசனிக்காயைச் சுத்தம் செய்தல்

கடையில், சந்தையில், தோட்டத்தில்  இருந்து வரும் பூசனிக்காய்கள் சேறு மண் கறைகள் கொண்டு இருக்கலாம் எனவே இலேசாக ஈரத் துணியால் துடைத்து எடுத்துக் கொள்ளலாம். மேலும் பூசனிக்காயின் மேல் முகிழ்தண்டுப் பகுதியை வட்டமாக வெட்டியெடுத்து, உட்பகுதியையும் குடைந்து விதைகள் மற்றும் உட்பாக நார்களையும் அகற்றிக் கொள்ள வேண்டும்.

பூசனிக்காய் விதைகளை உப்புத்தண்ணியில் ஊறவைத்துக் காயவைத்து வறுத்து, அல்லது அகல் அடுப்பில் (Oven) வாட்டி சிற்றுண்டியாகக் கொறித்தும் கொள்ளலாம்.

பூசனிக்காயின் மேல் படம் வரைதல்

நீங்கள் வரைவதில் கில்லாடியானால் நீங்களே ஒரு கறுப்பு பெரிய நுனி எழுதுகோல் (Fat Tip Black Sharpie) மூலம் உருவகங்களை நேரடியாகவே வரைந்து கொள்ளலாம்.

இந்த வரைதல் பற்றி முன்கூட்டியே யோசனை செய்வது சாலவும் நல்லது. நீங்கள் வரையும் உருவகத்தில் எவை எவற்றை பூசனிக்காய்த் துளைகளாகச் செதுக்கினால் அது இருளில் சிறப்பாக இருக்கும் என்று சிந்தித்து அதை பின்னர் பல வகையில் பூசனிக்காய் மேல் வரைந்து கொள்ளலாம்.

  1. நேரடியாகப் பூசனிக்காய் மீது வரைதல்
  2. 6-9 அங்குல காகிதத்தில் உருவகத்தை வரைந்து, அதை வெட்டி எடுத்து பூசனிக்காய் மீது பதித்தல்
  3. 6-9 அங்குல படத்தை அச்சடித்து எடுத்து அதை பூசனிக்காய் மீது பதித்தல் .

பூசனிக்காயில் கலாச்சார உருவகங்கள்

வழக்கமாக வட அமெரிக்க மக்கள்  சூனியக்காரி , பேய், பிசாசு, தும்புக் கட்டை, கறுப்புப் பூனை, கபாலம், எலும்புக்கூடு போன்ற சித்திரங்களையே பூசணிக்காயில் தீட்டுவர் / செதுக்குவர். நாம் இதைச் சற்று மாற்றி, எமது கலாச்சார உருவகங்கள், எழுத்துக்களைச் சேர்த்து, வரவிருக்கும் பண்டிகைகளைக் கொண்டாடலாம் என்பது தான் எமது கருத்து

இதற்காகச் சில உதாரணங்களை நீங்கள் செய்து பார்க்கத் தருகிறோம். வரும் தீபாவளி, கார்த்திகை விளக்கீடுகள் கருதி அகல் விளக்கு, மற்றும் பூக்களைக் மேலே செதுக்கிக் காட்டியுள்ளோம். அதே போல் நாம் கீழே தந்திருக்கும் உதாரணங்களைத் தரவிறக்கம் செய்து, நீங்கள் விதவிதமான உருவகங்களைச் செதுக்கிப் பார்க்கலாம்.

கார்த்திகை விளக்கீடு

உங்கள் கைவண்ணத்தைக் காட்டி, வீட்டு முன்முற்றம், சன்னல்களை  அலங்கரித்து அவற்றைப் படம் பிடித்து, பனிப்பூக்கள்  சஞ்சிகைக்கு அனுப்பி வையுங்கள்.

தொகுப்பு – யோகி

Tags: , , , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad