\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

சுகமான தீபாவளி

Filed in கதை, வார வெளியீடு by on October 15, 2017 0 Comments

”ஏன்னா… நான் சொன்னேனே.. ஜிலேபி ரெட் வாங்கிண்டு வந்தேளா?” மங்களம் மாமியின் கேள்வி தொடங்கியது.

“நீ சொன்ன எல்லாம் வாங்கிண்டு வந்துட்டேண்டி.. அது ஒண்ணு தவிர… கடைக்காரா யாருக்கும் ரெட்டுனா என்னன்னே தெரியலடி… அது தமிழ் வார்த்தைதானா?” ஒரு சாதாரணத் துணிக்கு பதினைந்து ரூபாய் தர வேண்டுமா என்ற எண்ணத்தில் விட்டுவிட்டு வந்து, அதைச் சமாளிப்பதற்காக இழுத்தார் சுந்தரம் மாமா.

“ஆமா.. உங்களுக்கு ஒண்ணு வாங்கிண்டு வர சாமர்த்தியமில்லன்னா, நேக்குத் தெரியாதுன்னு சொல்லிடுங்கோ… ஜிலேபி ரெட்டு தெரியாதவா இருக்காளா என்ன… பண்ணிப்போட்டா மட்டும், நன்னா சப்புக் கொட்டிண்டு சாப்பிடுங்கோ…”

”ஏண்டி மங்களம், ஏன் இப்டி என்ன கரிச்சுக் கொட்ற? தொண்ணூத்தொம்பது சாமானத்த வாங்கிண்டு வந்துட்டேன்.. ஒண்ணு விட்டதுக்கு இப்டியா?” என்ற கணவனின் குரலில் இருந்த பணிவையும், பரிவையும் கேட்டவுடன் சற்று தரையிறங்கி வந்தாள் மங்களம்.

“சரின்னா… நேக்குப் புரியறது…. உங்களுக்கும், கொழந்தேளுக்கும் ஜிலேபி ரொம்பப் பிடிக்குமே, தீபாவளிக்குச் செய்யலாமேன்னு பாத்தேன்…”

“தெரியுண்டி… தீபாவளி அடுத்த வாரந்தானே.. நாளைக்கு ஸ்கூல் விட்டு வரச்ச, வாங்கிண்டு வந்துடறேன்..” என்றார்

“அது சரி, அடுத்த வாரந்தான்.. ஆனா நேக்கு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பட்சணம்னு ப்ளான் இருக்கு… இன்னக்கி ப்ளான் பிரகாரம் ஜிலேபி… ரெட் இல்லாததுனால இப்போ என் ப்ளான் எல்லாம் அப்செட்”

படபடவெனப் பொறிந்து தள்ளும் மனைவியை, பதில் ஏதும் சொல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தார் சுந்தரம். கிராமத்திலுள்ள உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக இருக்கும் அவருக்கும், மங்களத்திற்கும் திருமணம்
முடிந்து கிட்டத்தட்ட இருபது வருடங்கள் ஆகியிருந்தன. இரண்டு ஆண்பிள்ளைகள் மற்றும் ஒரு பெண் பிள்ளை என, ஐவரைக் கொண்ட குடும்பம். ஆசிரியத் தொழிலில் வரும் சொல்ப வருமானம், மூன்று குழந்தைகள், உடன் பிறந்த தங்கைகள் என அனைவரையும் காக்குமளவுக்கு இல்லை. வறுமையில் வாடினாலும், அந்நியோன்னியமான குடும்பம். முடிந்த அளவு மகிழ்ச்சியாக வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தனர். பொரிந்து தள்ளினாலும், தன்மீது அளவு கடந்த பாசமுள்ளவள் என்பதை உணர்ந்த சுந்தரம், பேசட்டும் என விட்டுவிட்டு, சட்டையைக் கழட்டி ஆணியில் மாட்டிக் கொண்டே, பழைய இரும்பு டேபிள் மேல் வைக்கப்பட்டிருந்த கருப்பு / வெள்ளை போர்ட்டபிள் டி.வி.யை ஆன் செய்தார்.

ன்னா.. நம்ம டெய்லரண்ட கொழந்தேள் சட்டையெல்லாம் தச்சுட்டாரான்னு ஒரு நட போய் பாத்துண்டு வந்துருங்களேன்… நம்ம கணேசன் ராத்திரி தூக்கத்தில புதுச்சட்டை பத்திப் பேசுறான்னா…” என்று தனது கடைக்குட்டியின் தீபாவளி எதிர்பார்ப்பை ‘மேட்டர் ஆஃப் ஃபாக்ட்’ஆக விளக்கிக் கொண்டிருந்தாள்.ஸ்கூல் டீச்சர்ஸுக்கு என அரசாங்கத்தில் ஒதுக்கியிருந்த பழங்காலக் கடையான ‘ராம்கோ’வில் சென்று மீட்டர் கணக்கில் அனைவருக்கும் ஒரே டிசைனில் வாங்கிய துணியைத் தனது நண்பன் ஸ்டீஃபன் கடையில் தைக்கக் கொடுத்திருந்ததைப் பற்றித்தான் அவள் கேட்டுக் கொண்டிருக்கிறாள்.

ஸ்டீஃபன் டெய்லர், சுந்தரத்தின் நண்பர். ஞாயிற்றுக்கிழமையானால் சந்தைத் திடலில் பால் பாட்மின்டன் விளையாடும் நடுத்தர வயது நண்பர்களில் சுந்தரமும், ஸ்டீஃபன் டெய்லரும் அடக்கம். உலகம் முழுவதும், பளபளவென மினுமினுக்கும் நகர்ப்புறக் கடைகளுக்குச் சென்றுவிட, பெரும்பாலும் கிழிந்த துணிகளைத் தைத்து வரும் வருமானத்தில் குடும்பம் நடத்தும் ஸ்டீஃபனுக்கு, தீபாவளி, பொங்கல் போன்ற சமயங்களில்தான்
சற்று வருமானம். வரும். கைக்கு மேல் பணங்கொடுத்துத் தைக்கும் மத்திய தரக் குடும்பங்களுக்காக முதலில் தைத்துக் கொடுத்து விட்டு, கடன் சொல்லும் சுந்தரம் போன்ற குடும்பங்களைக் கடைசிவரைக் காக்க வைப்பது புரிந்து கொள்ளக்கூடியதே.

“சரிடி, நான் ஒரு எட்டு ஸ்டீஃபன் கடையண்ட போயி, முடிச்சுட்டானான்னு பாத்துட்டு வரேன்…” என்று, கழட்டி வைத்த அழுக்குச் சட்டையை மீண்டும் மாட்டிக் கொண்டு புறப்படத் தயாரானார். அப்பா டெய்லர் கடைக்குப் போகப் போகிறார் என்றவுடன், தான் ஆர்டர் செய்த பட்டனுக்கு மேலே ஒரு ஃப்ளாப் வந்து, பட்டனே வெளியே தெரியா வண்ணம் புதுவித ஸ்டைலில் தைத்திருக்கும் தனது சட்டை எப்படி இருக்குமென்று பார்க்க ஆர்வம் பெருகியவனாய், “அப்பா, நானும் வரேம்பா” என்று புறப்பட்டான் சிறுவன் கணேசன். ”இன்னும் ஒரு வாரம் இருக்கு, கண்டிப்பா நம்ம ட்ரெஸ்ஸ தொட்டுக்கூட இருக்க மாட்டாரு ஸ்டீஃபன் மாமா” சற்றுப் பெரியவனான கணேசனின் அண்ணன், டெய்லர் கடைக்குச் செல்வதற்குச் சற்றும் ஆர்வம் காட்டவில்லை. அக்காளுக்கோ, ஸ்டைலா தைக்க அத்தனை டெய்லர் இருக்கையில், இந்தக் கிழவரிடம் தனது உடைகள் கொடுக்கப்பட்ட சோகத்தில், அவளும் டெய்லர் கடைக்குப் போவதில் ஆர்வம் காட்டவில்லை.

சுந்தரம், நான் உங்கிட்ட எத்தன தடவ சொல்லட்டும்… புள்ளையக் கூட்டிக்கிட்டு கடைக்கு வராதப்பா… எப்புடி வாடிப்போச்சு பாரு அந்த மூஞ்சி.. நானும் என்ன பண்ணட்டும்பா.. பணம் குடுக்குறவுகளுக்குச் சீக்கிரமா தச்சிக் குடுத்தாதான் என் குடும்பத்தையும் பாத்துக்க முடியும்… சத்தியமா தீவாளிக்கு மொத ராத்திரியாவது குடுத்துருவேம்பா… என்ன தப்பா நினக்காத…” நட்பு, சிறுவனின் ஏமாற்றத்திற்குக் காரணமாகிறோம் என்ற வருத்தம், அதே சமயத்தில் தன் குடும்பத்தையும் பராமரிக்க வேண்டிய பிராக்டிகல் நிலைமை எனப் பல விஷயங்களையும், படிப்பறிவில்லாத அந்த ஸ்டீஃபன் சுருக்கமாய் விளக்கிவிட்டார்.

ன்னா… என்ன வெடியெல்லாம் வாங்கப்போறேள்னு புள்ளேளண்ட சொல்லுங்கோளேன்.. பாவம், உங்களண்ட கேக்க பயம்..” கணவனின் வறுமையையும், குழந்தைகளின் ஏக்கங்களையும் முழுமையாய் உணர்ந்த மங்களம், பேச்சிலேயே கோட்டை கட்டிவிடலாம் என்ற நம்பிக்கையில் கணவனிடம் காதில் ஓதிக் கொண்டிருந்தாள். “ஏண்டி… நோக்குத் தெரியாதா… ஸ்கூல் சொஸைட்டி ஃபண்ட்ல மாசத்துக்குப் பத்து ரூபானு போட்டுண்டு வந்தேன்… அதுவும் கடைசி ரெண்டு மாசம், நம்ம பிருந்தா
பெரியவளாயிட்டதுக்கு வந்த செலவுல, கட்ட முடியல… அக்கவுண்டண்ட் சிதம்பரம் அந்த இருபது ரூபா குடுத்தாத்தான் வெடி டிஸ்டிரிபியூட் பண்ணுவேன்னு சொல்லிட்டான்…. அதுக்குத்தான் என்ன பண்ணலாம்னு யோசிச்சுண்டு இருக்கேன்….” இழுத்த சுந்தரம், அதெல்லாம் சமாளிச்சுடலாம்… பாவம் கொழந்தேள் ரொம்ப ஏங்கிப் போயிருக்கா, அவாளண்ட பேசுறேன் மொதல்ல…  என்று திண்ணையிலிருந்து எழுந்து வீட்டுக்குள் நுழைந்தார் சுந்தரம்.

ப்பா… என் ஃப்ரெண்ட்ஸெல்லாம் வெடி வெடிக்க ஆரம்பிச்சுட்டா… பக்கத்தாத்து வெங்கடேசன் நேத்து இரண்டு பாக்கெட் லக்‌ஷ்மி வெடியை ரோட்ல வச்சு வெடிச்சிண்டு இருந்தாம்பா.. எப்பப்பா நம்மாத்துக்கு வெடி வரும்?” கேட்ட கணேசனிடம் என்ன சொல்வதென்று தெரியாமல், மென்று விழுங்கிக் கொண்டிருந்தார் சுந்தரம். ”எப்படியாவது, கடனை உடனை வாங்கி, அந்த இருபது ரூபாயைக் கொடுத்துவிட்டு, சிதம்பரத்திடமிருந்து
அந்த வெடிக் கட்டை வாங்கி வந்துவிட வேண்டும்”, நினைத்துக் கொண்டார்.

ன்னா…. என்ன யோஜனை… எதப்பத்தி நெனச்சிண்டிருக்கேள்”? கேட்டுக் கொண்டே கணவனின் அருகில், வீட்டின் வெளியிலிருந்த திண்ணையில் அமர்ந்தாள் மங்களம். குழந்தைகளெல்லாம் களைப்பாகத் தூங்கிக் கொண்டிருந்த மதிய நேரம். அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து, எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிந்து, வீட்டுக்கு வெளியில் பக்கத்து வீட்டுக் குழந்தைகளுக்குப் போட்டியாக வெடி வெடித்து மகிழ்ந்து, அக்கிரகாரத்திலுல்ள அனைத்து வீட்டிற்கும் சென்று பட்சணங்கள் உண்டு அரட்டை அடித்து மகிழ்ந்து, இன்னும் பலப்பல தீபாவளிக்கே உரித்தான சிறப்புச் செயல்களையெல்லாம் செய்து, தீபாவளி முழுதும் கொண்டாடி  முடித்த பின்னர் அயர்ச்சியாய்த் தூங்கிக் கொண்டிருந்தனர் பிள்ளைகள் மூவரும்.


”ஒண்ணுமில்லடி… போன இரண்டு மாசமா எவ்வளவு டென்ஷன்னு யோசிச்சுண்டு இருந்தேன்… ஆனா கொழந்தேள் பட்ட சந்தோஷத்தைப் பாக்கறச்ச, நாம பட்ட கஷ்டமெல்லா ஒரு தூசு போல மறைஞ்சு போய்டுத்து… நிறையா தரம் ஒரு நாள் கூத்துக்கு, இந்த மாதிரிப் பண்டிகைகள்லாம் வேணுமான்னு யோசிச்சதுண்டு.. ஆனா இதெல்லாம்தான் நம்மள ஏதோ செய்யச் சொல்லி, பாஸிடிவ்வா தூண்டறதுங்கறதுக்காகத்தான் பெரியவா செஞ்சாளோன்னு இப்ப தோண்றது” என்று பேசிக்கொண்டே போனார் சுந்தரம்.

 

“அம்மா….. கார்த்திகைக்கு கொஞ்சம் வெடியை மிச்சம் வச்சிடலாம்மா..” அந்தத்
தூக்கத்திலும் தெளிவாகப் பேசிக் கொண்டிருந்த கணேசனின் குரலைக் கேட்ட அம்மாவும் அப்பாவும், அடுத்த பந்தயத்துக்கு ஓடத் தயாராக வேண்டும் என்ற உணர்வினராய், எழுந்து நடக்கத் தொடங்கினர்.


வெ. மதுசூதனன்.

Tags: , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad