ரஜினி Vs கமல் – யாருக்கு ஓட்டுப் போடலாம்?
கடந்த டிசம்பர் மாதம் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள் மரணமடைந்த அதே சமயத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களும் தீவிர அரசியலில் இருந்து உடல் நிலை காரணமாக விலகினார். தமிழகத்தின் அசைக்க முடியாத ஆளுமைகளாக இருந்த இந்த இருவரும் விட்டுச் சென்ற வெற்றிடத்தைப் பயன்படுத்திக் கொள்ளப் பலரும் முயலுகிறார்கள். ஏற்கனவே களத்தில் இருப்பவர்கள், களத்திற்கு வர நினைத்தவர்கள், எங்கிருந்தோ வந்தவர்கள் எனப் பல வகையினரை இப்போது காண முடிகிறது. அதில் முக்கியமாக ரஜினி, கமல் இருவரையும் சொல்லலாம்.
தற்போதைய நிலவரப்படி, ரஜினி போருக்குக் காத்திருக்கும்படிச் சொல்லியிருக்கிறார்!! கமல் தான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டதாகவும், நூறு நாளில் முதலமைச்சராகத் தம்மால் ஆக முடியும் என்றும் கூறியிருக்கிறார். இவர்கள் உண்மையிலேயே அரசியலில் இறங்குவார்களா, அப்படி இறங்கினால் இவர்களுக்கு ஓட்டுப் போடலாமா என்று அலசலாம்.
ரஜினியை எடுத்துக் கொண்டால் பாட்ஷா காலத்தில் இருந்து, பாச்சாக் காட்டிக் கொண்டு இருக்கிறார். நேரடி அரசியலில் ஈடுபடாவிட்டாலும், ஒவ்வொரு தேர்தலிலும் யாருக்கு ஓட்டுப் போடலாம், யாருக்குப் போட வேண்டாம், யாருக்காச்சும் போட்டுக்கோங்க என்று எதையாவது கூறி வருகிறார். அவர் பேச்சுக் கேட்டு ஓட்டுப் போடும் மனநிலையில் யாரும் இல்லையென்றாலும், சொல்லி வைப்போம் என்று சொல்லி வைக்கிறார். அதெல்லாம் ஒரு காலம், தலைவா வா வா என்று ஊரே அழைத்தது. இப்போது, அவ்வளவு பவுசு கிடையாது. அவருடைய அரசியல் பேச்சுகளுக்கு முன்பளவு பெப் இருப்பதில்லை.
ரஜினிக்கு அரசியல் பேச்சு என்பது அவருடைய ரசிகர்களை உற்சாகமாக வைத்துக் கொள்ளத் தேவைப்படும் டானிக். ரசிகர்களுக்கு என்ன தேவையோ, அதைக் கொடுக்கிறார். அரசியலுக்கு வரச் சொல்லும் ரசிகர்களை விட, அவர் சினிமாவில் நடித்தால் போதும் என்று நினைக்கும் ரசிகர்கள் அதிகம். தவிர, ரஜினிக்கும் சினிமா, அரசியல் இந்த இரண்டில் எது அவருடைய பலம் என்று தெரியும். ஆக, அவர் முழு நேர அரசியலுக்கு எந்நேரமும் வரமாட்டார் என நாம் முழுமனதாக நம்பலாம். நம் நம்பிக்கையை அவர் காப்பாற்றுவார்.
எங்காவது பார்க்கும் யாரோ, நம்மை எதற்கோ பாராட்டினாலே நாம் பெரிதும் மகிழுவோம். பல ஆண்டுகளாகத் தம்மைக் காண வரும் மக்கள் கூட்டம், தம் பேச்சுக்குக் கை தட்டி ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள், தம்மை மதித்துப் பேசும் பிற கலைஞர்கள், தலைவர்கள் – இவற்றைக் காணும் எவருக்கும் அரசியல் ஆசை வருவது இயல்பே. உண்மையில் அரசியலுக்கு வரப் பொது நலம், சமூகப் பார்வை, தைரியம், நேர்மை, உழைப்பு, தியாகம் போன்றவை தேவை. தற்கால அரசியலில் வெற்றி பெற, சில பல மொள்ள மாரித்தனங்கள் தேவை. ரஜினி குறிப்பிட்ட சிஸ்டம் என்பது அதைத் தான். சிஸ்டம் மோசமாக இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டது, அதனால் அவர் சிஸ்டத்தைச் சரி செய்யப் போகிறார் என்றல்ல, தம்மால் அதற்குள் வர முடியாது என்பதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
கமல் இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை, அரசியலுக்கு வருவதாகக் கூறியது இல்லை. இத்தனை ஆண்டு காலமாக அரசியலுக்கும் அவருக்கும் சம்பந்தமில்லாமல் தான் இருந்தது. சண்டியர் பிரச்சினை எழுந்த போது கூட, மேலோட்டமாகக் கருத்துக் கூறிவிட்டு, சினிமா வேலைகளில் முழ்கி விட்டார். விஸ்வரூபம் பிரச்சினையில் கொஞ்சம் அதிகமாக ஆவேசப்பட்டார். ஜெயலலிதா மறைந்த பிறகு, அரசையும், அமைச்சர்களையும் வெளிப்படையாகத் தாக்கத் தொடங்கி விட்டார். சும்மாவே, டிவிட்டரில் சுருக்கமாக எழுத வேண்டி பலர் எழுதுவது புரிவதில்லை. அதிலும், கமல் போடும் ட்வீட்களைப் பற்றிச் சொல்ல வேண்டாம். இவருக்காக நாலைந்து பேர்கள் உரை எழுதிக் கொண்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ட்வீட்களா, நம்மூர் அமைச்சர்களை உலுப்பப் போகிறது?
எது எப்படியோ, அப்படி இப்படி என்று இப்போது அரசியல் தான் அதிகம் பேசிக் கொண்டிருக்கிறார். கேரளா முதல்வரைச் சந்திப்பது, டெல்லி முதல்வரைச் சந்திப்பது எனப் பார்க்க ஆக்கப்பூர்வமாகத் தான் தெரிகிறது. ஆனால், கமலின் இந்தப் பரபரப்புக் காலக்கட்டம் இப்படியே நீடிக்குமா? அல்லது, பிக் பாஸ் முடிந்த கையோடு, இந்தியன் 2 தொடங்கிய கையோடு முற்றுப்பெறுமா? என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
எது எப்படியோ, தப்பித் தவறி இருவரும் அரசியலுக்குள் இறங்கி எதிரும் புதிருமாக ஆகிவிட்டால், நாம் என்ன செய்யலாம்? “தற்காப்பு அல்ல, தன்மானம் தான் முக்கியம்”, “அரசியலுக்கு வர, சினிமாப் புகழ் மட்டும் போதாது” போன்ற ஏட்டிக்கு போட்டிகளைக் கேட்டுக் கொண்டு, யாருக்கு ஓட்டுப் போடலாம் என்பதை முடிவெடுப்போம்.
ரஜினிக்கு ஓட்டுப் போட ஜாலியா சில காரணங்கள்,
- முதல் கையெழுத்தை நதிகள் இணைப்பிற்குப் போடுவார். (அது எப்ப’ங்கிற விவரமெல்லாம் அதுல இருக்காது!!)
- எதிர்த்துப் பேசுற கட்சிக்காரங்களுக்கும் பதவி கொடுப்பாரே தவிர, கட்சியை விட்டுத் தூக்க மாட்டாரு (அவ்ளோ நல்லவரு)
- மத்திய அரசு வரி அதிகமாகப் போட்டால், அதைக் கேட்காமல் சும்மா இருப்பாரே தவிர, கட்டவும் மாட்டார், ஏன் உயர்த்தினீர்கள் என்று கேட்கவும் மாட்டார். மத்திய அரசு நீதிமன்றத்திற்குச் சென்று புலம்பினாலும், தமிழருவி மணியனை வைத்து ஒரு அறிக்கை விட்டு அமைதி காப்பார்.
- காவிரி, மீத்தேன் போன்ற பிரச்சினைகளுக்குக் குரல் கொடுத்தால், ஏன் இப்பவே போராட்டம், வறட்சி வரட்டும், பார்த்துக் கொள்ளலாம் என்று சமாதானம் சொல்லி அனுப்பி வைத்துப் பிரச்சினையைச் சுமூகமாகத் தீர்த்து வைப்பார்.
- மோடி, சிதம்பரம், ஸ்டாலின், ஓபிஎஸ், அன்புமணி, சீமான், திருமாவளவன், வைகோ, அழகிரி, கமல், விஜயகாந்த். சரத்குமார் இப்படி இவர் நட்பு பாராட்டாத ஆளே அரசியலில் கிடையாது. எல்லோரையும் அரசு விழாக்களுக்கு அழைத்து வணக்கம் போடுவார்.
அடுத்து, கமலுக்கு ஏன் ஓட்டு போட வேண்டும் என்று பார்ப்போம்.
- இவர் அறிக்கைகளை, அறிவிப்புகளை யாரும் கேள்வி எழுப்ப மாட்டார்கள். (புரிந்தால் தானே கேள்வி எழுப்ப)
- திட்டங்கள் வெற்றி பெறுகிறதோ, இல்லையோ, பொதுப்பணி, சமூக நீதி, கலை மேம்பாடு என அனைத்துத் துறைகளிலும் தனது முத்திரை பதிப்பார்.
- இருபது வருடங்கள் கழித்து மக்களுக்குப் புரிந்து, பயன் தரக்கூடிய திட்டங்களை இப்பவே தொடங்கி வைப்பார்.
- வெற்றி பெறும் என்று நிச்சயமாகத் தெரியும் திட்டங்களை, மாநில நிதி கொண்டும், பரிசோதனை நிலை திட்டங்களை மத்திய அரசு நிதி கொண்டும் செயல்படுத்துவார்.
- முத்தத்தால் ஏற்படும் மருத்துவ நன்மைகளை எடுத்துரைத்து, முத்த சிகிச்சை மையங்களை ஊரெங்கும் திறந்து வைப்பார்.
என்ன, முடிவு பண்ணிட்டீங்களா? 🙂
ஜோக்ஸ் அபார்ட், இருவருமே தீவிர அரசியலில் ஈடுபடுவது சந்தேகம் தான். அப்படியே ஈடுபட்டாலும், அவர்களுடைய கொள்கைகள் என்ன, திட்டங்கள் என்ன, அவற்றின் சாதக பாதகங்கள் அறிந்து ஓட்டுப் போடுவோம். வெறும் நட்சத்திர மினுக்கு, மக்களுக்கு உதவப் போவதில்லை. ஆற்றல் மிக்க தலைவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு வாக்களிப்போம்.
- சரவணகுமரன்.
Tags: Kamal, Kamalhasan, Rajini, Rajinikanth, tamilnadu politics, அரசியல், கமல், கமல்ஹாசன், ரஜினி, ரஜினிகாந்த்