\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மெர்சல்

ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு ஸ்டைல் உண்டு. அட்லீயின் ஸ்டைல், ஏற்கனவே ஹிட்டான ஒரு படத்தைத் தற்போதைய ட்ரெண்டிற்கு மீள் – உருவாக்கம் செய்வது. மௌனராகம், சத்ரியன் என முதல் இரண்டு படங்களில் மணிரத்னத்தை ஃபாலோ செய்தவர், மூன்றாம் படமான மெர்சலில் அபூர்வ சகோதரர்கள் சாயல் கதையை, தனது குருநாதர் ஷங்கர் பட பாணியில் படமாக்கியிருக்கிறார்.

முதல் முறையாக, மூன்று வேடங்களில் விஜய். பத்து வேடங்களில் நடித்தாலும், விஜய் வித்தியாசம் காட்ட மாட்டார் என்று தெரியும். அவரென்ன வச்சுக்கிட்டா வஞ்சனை பண்றாரு!! அதனாலேயே இந்தப் படத்தில் சிறு வித்தியாசத்தோடு வரும் ஃப்ளாஷ்பேக் ‘தளபதி’ விஜய் கவருகிறார்.

மருத்துவத்துறை சார்ந்த சிலர், முதல் காட்சியில் மர்ம நபர்கள் சிலரால் கடத்தப்படுகின்றனர். அதில் சந்தேகத்திற்கு உட்படும், ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் செய்யும் ’மாறன்’ விஜய் கைது செய்யப்படுகிறார். அவரைத் தனியே அழைத்துச் சென்று விசாரிக்கும் போலீஸ் அதிகாரி சத்யராஜிடம், தனது பின் கதையை விவரிக்கிறார். அதில் தொடங்கும் அட்லீயின் கதை சொல்லல், பார்வையாளர்களை வசியப்படுத்துவது உண்மை தான்.

மூன்று விஜய், ஃபேமிலி செண்டிமெண்ட், கமர்ஷியல் ஆக் ஷன், லைட்டா காமெடி என விஜய் ரசிகர்களுக்குத் தீபாவளி விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர் அட்லீ. போதாக்குறைக்குத் தமிழன் பெருமை, மருத்துவத்துறை சீர்கேடுகள் பற்றிச் சமூகக் கருத்துகள் பேசி, ஆடியன்ஸிடம் கைத்தட்டல் பெறுகிறார். எல்லாவற்றுக்கும் மேல், சோகக் காட்சிகளைப் படமாக்குவதில் மிளிர்கிறார். காட்சியின் பாதிப்பை பார்ப்போரிடம் அப்படியே கடத்துகிறார். குழந்தைகளைக் கவரும் மேஜிக் காட்சிகள் இருந்தாலும், ரத்தம் தெறிக்கும் காட்சிகள் அவர்களைப் பயமுறுத்தும்.

இளைய தளபதியாக இருந்து தளபதியாக இந்தப் படத்தில் ப்ரமோட் ஆனாலும், விஜய் படத்திற்குப் படம் வயதைக் குறைத்துக் கொண்டே செல்கிறார். தளபதி கதாபாத்திரத்தில் ஒன்றிரண்டு நரையோடு தாடி வைத்திருந்தாலும், அவருடைய உடல் வாகிற்கு அதிலும் இளமையோடு தான் இருக்கிறார். உடலை இன்னும் ஃபிட்டாக்கியிருக்கிறார். தளபதி கேரக்டருக்கு மட்டும், இன்னும் கொஞ்சம் உடம்பு போட்டிருந்தால், வெயிட் கூடியிருந்திருக்கும். மற்றபடி, தனது வழக்கமான நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

நித்யா மேனன் தவிர, மற்ற இரு ஹீரோயின்களான காஜல், சமந்தாவிற்குப் பெரிய வேலை இல்லை. ஆளுக்கொரு பாடல். நித்யாவிற்கு அவரைப் போலவே வெயிட்டான கேரக்டர்!! பெரிதாகக் காமெடி செய்யாவிட்டாலும், முக்கியமான குணச்சித்திர பாத்திரத்தில் வடிவேலு. வில்லனாக எஸ்.ஜே.சூர்யா அவருக்கே உரிய பாணியில் நடித்திருக்கிறார். வயது மாற்றம் தோற்றத்தில் லாஜிக்கலாக வரவில்லை. ஆடியன்ஸ்களின் பிரதிநிதியாகச் சத்யராஜ், படத்தில் கதை கேட்டறிந்து வந்து செல்கிறார்.

படத்தின் ப்ளாஷ்பேக் காட்சிகள் பெரும் நீளத்தை எடுத்துக் கொள்கின். அது உணர்வு பூர்வமாக எடுக்கப்பட்டிருப்பதால் தப்பிக் கொள்கிறது. மருத்துவத் துறையில் நடக்கும் குற்றங்கள் பற்றிய காட்சிகள், மனதைப் பிசைகின். அவை அனைத்தும் உண்மையில் ஆங்காங்கே நடைபெறும் நிகழ்வுகள் என்பதால், பார்வையாளர்களால் அதனுடன் ஒன்றிச் சென்றிட முடிகிறது. முக்கியமாக, அந்த ஆட்டோ ட்ரைவர் எபிசோட். அதனாலேயே, நாயகனின் நியாயம் பார்வையாளர்களுக்குப் பிடித்துப் போய், அவன் பேசும் ஜி.எஸ்.டி., மெடிக்கல் செக்கப் ஸ்கேம் வசனங்களுக்குக் கைத்தட்டி ஆதரவளிக்கிறார்கள். எஸ்.ஜே.சூர்யா பேசும் சிசேரியன் வசனமும் அப்படியே. (“இப்ப, சிசேரியன் டெலிவரி’ன்னா அதிர்ச்சி அடையுறான். இன்னும் முப்பது வருஷத்துல நார்மல் டெலிவரி’ன்னா அதிர்ச்சி அடைவான்”)

ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியிருந்தன. நான்கு பாடல்களில் மூன்று முதல் பாதியில் வருகிறது. அதன் ப்ளேஸ்மெண்ட் அவ்வளவு பொருத்தமாக அமையாததால், திரையரங்கில் அவ்வளவு வரவேற்பில்லை. பாடல்களை அம்சமாகவே படமாக்கி இருக்கிறார்கள். படத்திற்குத் தேவையான பின்னணி இசையை வழங்கியிருக்கிறார் ரஹ்மான். நித்யா மரணமடையும் காட்சியில், கதறல் இசை அமைக்காமல், நிசப்தமாக விட்டிருப்பது சிறப்பு. விஜய் – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் முதல் வெற்றிப் படம்.

ஒளிப்பதிவாளர் ஜார்ஜிற்கு ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. அட்லீ படங்களின் கலர்ஃபுல் காட்சிகளுக்குக் காரணக்கர்த்தா. இந்தப் படத்தில் அவர் இல்லாவிட்டாலும், புதியவர் விஷ்ணுவின் ஒளிப்பதிவும் செம ஃப்ரஷ். வசனத்தை அட்லீயும், ரமணகிரிவாசனும் எழுதியிருக்கிறார்கள். பெரிதாகப் பஞ்ச் இல்லையென்றாலும், கரண்ட் விஷயங்களை உள்ளே புகுத்தி புரியும் வகையில் நச்சென்று எழுதியிருக்கிறார்கள்.

தற்காலத்தில் படத்தின் வெற்றிக்கு உள்ளடக்கம் மட்டுமின்றிப் புறக் காரணங்களும் தேவைப்படுகின். பட உருவாக்கம் சமயத்தில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்களுக்கு மட்டும் இருந்தது. (எப்படி ஓட்டலாம் என்று அஜித் ரசிகர்களுக்கும் இருந்திருக்கலாம். இவர்கள் இப்போது சைலண்ட் மோடில் இருக்கிறார்கள்!!). படம் சென்சாருக்குச் சென்ற சமயம், விலங்கு நல வாரியத்திடம் இருந்து பிரச்சினை வந்தது. மறைந்த இயக்குனர் ராமநாராயணனின் தேனாண்டாள் ஃபிலிம்ஸின் நூறாவது படம் இது. விலங்குகளை வைத்துப் படமெடுக்கும் இயக்குனரான ராமநாரயணனின் எந்தப் படத்திற்கும் இது மாதிரியான பிரச்சினை வந்ததில்லை. படம் வெளிவருவதற்கு இரு தினத்திற்கு முன்பு, விஜய் முதல்வரைச் சந்திக்கிறார். விலங்கு நல வாரியச் சான்றிதழ் கிடைக்கிறது. படம் வெளியாகிறது. இதற்குப் பின்னால் இருக்கும் அரசியல் தெரியவில்லை. சென்சார் ஒப்புதல் கொடுத்து, வெளி வந்த படத்தில் இருக்கும் வசனங்கள் சில, ஆளும் மத்திய அரசை நேரடியாகத் தாக்குவதாக இருக்க, அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் அந்த வசனத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். அவ்வசனங்கள் மீண்டும் தணிக்கை செய்யப்படுகின். படத்தின் எடிட்டர், “அடேய், படத்தின் எடிட்டர் நான்டா!!” என்று ட்விட்டரில் புலம்பும் நிலை. இதுவும் எந்த வித அரசியல் என்று புரியவில்லை. இவை படத்தை மேலும் பலருக்கு எடுத்துச் செல்கின். தேசியத் தொலைக்காட்சிகள் வரை பேசும் பொருளாக ஆகிறது. போற போக்கில், படத்திற்குத் தேவையோ இல்லையோ, இதற்காகவே அரசியல் கட்சிகளைத் தாக்கி வசனம் வைக்கப் போகிறார்கள் நம் இயக்குனர்கள்.

எது எப்படியோ, மெர்சல் வெற்றி பெறுவதற்கு உள்ளடக்கக் காரணங்களும் உள்ளன, புறவய அரசியல் காரணங்களும் வந்து சேர்ந்து விட்டன. விஜய் – அட்லீ கூட்டணிக்கு நிச்சய வெற்றி உறுதியாகிவிட்டது.

மெர்சல் – ஃபுல் மீல்ஸ் பார்சல்

  • சரவணகுமரன்.

Tags: , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad