சாதல் வைபோகமே!
அமெரிக்கா வந்த புதிதில், வியப்புக்குண்டாக்கிய அமெரிக்கர்களின் நடவடிக்கைகளில், இந்த ஹாலோவீன் (Halloween) கொண்டாட்டமும் ஒன்றாக இருந்தது. அதுவரை விழா என்பதும், கொண்டாட்டம் என்பதும் மங்களகரமான அம்சமாகவே பார்த்த எனக்கு, இந்தப் பேய்த்தனமான கொண்டாட்டம் வியப்பு அளித்ததில் எந்த வியப்பும் இல்லை.
ஆங்காங்கே பேய் வீடு செட் போடுவார்கள். பேய் கெட்டப்புடன் சுற்றுவார்கள். கடைகளில் எலும்புக்கூடு, ரத்தக் காட்டேரி பொம்மைகள் விற்பார்கள். இப்படி இவர்களது செய்கைகள், பேய்களை ரொம்பவும் காமெடி பீசுகளாகக் காட்டுவதாக இருக்கும். நம்மூரில் பேய்களை வைத்து காமெடிப் படங்கள் இப்போது தான் எடுக்கிறார்கள். அமெரிக்காவில் ஆண்டாண்டு காலமாகப் பேய்களை வைத்து இப்படி ஜாலியாக ஒரு பண்டிகை கொண்டாடுகிறார்கள்.
பேய், பிசாசு, பூச்சாண்டிகள் நமக்கு மனதார உணர்வுபூர்வமானவை. துஷ்டச் சக்திகள் என நம்பப்படுபவை. மங்களகரமான நேரங்களில் இவை குறித்துப் பேச மாட்டோம். ஜாலியாக எப்போதாவது பேசத் தொடங்கினாலும், மனதில் ஒரு திகில் பரவத் தொடங்கி விடும். இருட்டு, தனிமை ஆகியவை இப்பயத்தை மேலும் அதிகரிக்கும். இப்படிப் பேய்கள் குறித்த தயக்கங்கள், எண்ணங்கள், அவற்றைத் தூரம் தள்ளி வைத்து, ஒரு அமானுஷ்ய உயரத்திற்கு எடுத்துச் சென்று விடும்.
ஆனால், இங்கோ அவை விளையாட்டுச் சாமான்கள். பேய் ஓட்டுகிறேன், பிசாசு ஓட்டுகிறேன் என்று நம்மூரில் பிஸினஸ் செய்பவர்கள், அக்டோபர் மாதம் அமெரிக்கா வந்தால் சல்லிக் காசில் ‘தொழிலுக்கு‘ தேவையான நிறையப் பொருட்கள் வாங்கிச் செல்லலாம். ஒரு சிறு பட்ஜெட் பேய்ப் படத்திற்குத் தேவையான செட் ப்ராப்பர்டிகளும், மேக்கப் உபகரணங்களும் இங்குள்ள எந்தப் பெரு அங்காடிகளுக்குச் சென்றாலும் அள்ளிவிட்டு வரலாம்.
குழந்தைகள், பெரியவர்கள் என்று வயது வித்தியாசம் இல்லாமல் இந்த டெரர் கெட்டப்பில் ஆங்காங்கே சுற்றுவார்கள். இது ஒருபுறம் இருந்தாலும், அழகான, காமெடியான காஸ்ட்யூம்களும் நிறையக் கிடைக்கும். மிருகங்கள் போல, கார்ட்டூன் கதாபாத்திரங்கள் போல, சூப்பர் ஹீரோ/ஹீரோயின் கதாபாத்திரங்கள் போல, பல்வேறு துறை பணியாளர்கள் போல, காய்கறி, பழங்கள் போல என ஏகப்பட்ட வெரைட்டிகளில் காஸ்ட்யூம்கள் கிடைக்கும். கிட்டத்தட்ட, தேசிய அளவில் நடத்தப்படும் மாறு வேடம் போட்டி என ஹாலோவீன் கொண்டாட்டங்களைக் குறிப்பிடலாம். இவ்வருட கூகிள் தேடலில் முதலிடம் பிடித்திருப்பது, வொண்டர் வுமன் காஸ்ட்யூம்ஸ்.
இப்படி விற்கும் ஆடைகளை அணிந்து, அதற்குத் தேவைப்படும் ஒப்பனையுடன், ட்ரிக் ஆர் ட்ரீட் (Trick or Treat) என இங்குள்ள குழந்தைகள் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று ஸ்வீட்கள் வாங்கி வரும் வழக்கம், கடந்த நூறாண்டுகளாக அமெரிக்காவில் உண்டு. ஆரம்பத்தில் ஏழைக்குழந்தைகளிடம் மட்டும் இருந்த இந்த வழக்கம், இன்று அனைத்துக் குழந்தைகளின் வேடிக்கை விளையாட்டாகியதற்குச் சாக்லேட் நிறுவனங்கள் மட்டும் காரணமாக இருக்காது என்று நம்புவோமாக. ஆனால், பெரு நிறுவனங்களில் அக்டோபர் முதல் வாரத்தில் இருந்தே சாக்லேட் பொட்டலங்களைக் குவித்து வைத்திருப்பதைக் காணும் போது, அப்படி எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்கவியலாது.
ஹாலோவீனை முன்னிட்டு, ஆங்காங்கே கம்மீனிட்டி சென்டர்களில், பள்ளிக்கூடங்களில், அபார்ட்மெண்ட் கூடங்களில் இப்படி மாறுவேடங்களில் மக்கள் பங்கு பெறும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பூசணிக்காயை அலங்கரிப்பது, வீட்டை அலங்கரிப்பது என எல்லா அலங்கரிப்புகளும் பேய்கள் சார்ந்ததாக இருக்கும். சிறந்த உடையலங்காரம், பூசணி அலங்காரம் போன்றவற்றுக்குப் பரிசுப் பொருட்கள் வழங்குவார்கள். இது போன்ற நிகழ்ச்சிகளில், நெருப்பில் மாஷ்மெல்லோ (Marshmellow) சுட்டுச் சாப்பிடுவது இன்னொரு வழக்கம்.
பொதுவாக, பூசணிக்காயை எந்தளவு டெரராக அலங்கரிக்க முடியுமோ, அந்தளவு டெரராக அலங்கரிப்பது தான் வழக்கம். ஆனால், அதில் எவ்வளவு கிரியேட்டிவ் காட்ட முடியுமோ, அவ்வளவு காட்டுவார்கள். பூசணியில் பேய் வடிப்பது ஆண்டாண்டுக் காலச் சம்பிரதாயம். அதோடு மட்டும் நிற்காமல், கலையார்வம் இருப்பவர்கள் தங்கள் எண்ணங்களை எல்லாம் அதில் வடிப்பார்கள். தங்கள் அபிமானக் கதாபாத்திரங்கள், உயிரினங்கள் எல்லாம் பூசணியில் வந்து சேரும்.
இப்படி இந்த மாதம் முழுவதும் ஊர் முழுக்க, பேய்களைக் (அதாவது, பேய் வேடம் போட்டவர்களை) காண வேண்டி இருப்பதால், குழந்தைகளுக்குப் பேய்கள் குறித்த சகஜ நிலை ஏற்படுகிறது. அப்படித் தென்படும் பேய்களைக் காட்டி, குழந்தைகளிடம் “பயமா இருக்கா?” என்று கேட்டால், “பயமா? எனக்கா?” என்று கபாலி மாதிரி சிரிக்கிறார்கள். அதற்காக இங்குள்ள குழந்தைகளுக்குப் பேய் குறித்த பயமே இல்லாமல் போய்விடும் என்று சொல்லுவதற்கு இல்லை. திடீரென்று ஏதேனும் பேயைச் சந்திக்க வேண்டி இருந்தாலும், அதிர்ச்சியடைய வேண்டி இருக்காது. வருடா வருடம் பார்ப்பதால், அந்தப் பழக்கத்தோஷம் இருக்கும். (சிலருக்குத் தினசரி சந்தித்து வரக்கூடிய சூழலும் உண்டு) 😂
எனிவே, இந்தப் பேய் சமாச்சாரம் எல்லாம் மனரீதியானது, நிஜத்தில் ஒன்றும் கிடையாது என்பதை வளர்ந்தவுடன் புரிந்துக் கொள்வார்கள். எது மெய்யுலகம், எது பொய்யுலகம் என்று சிறு வயதில் இருக்கும் குழப்பங்களை ஹாலோவீன் வழக்கங்கள் தணிக்கும்… குறைக்கும்… கலாய்க்கும்.
ஹாப்பி ஹாலோவீன்!!
- சரவணகுமரன் –