\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

இரவல் சொர்க்கம்

Filed in கதை, வார வெளியீடு by on November 5, 2017 0 Comments

ர் உயிரைக் காப்பாற்ற இன்னோர் உயிரைப் பறித்தது முறைதானா?’

 ‘பிள்ளையைக் காக்க கணவருக்கு முடிவளித்தது சரியா?’

 ‘வாழ்வில் இனி எனக்கு நிம்மதி கிட்டுமா?’

 கத்தியின்றி இரத்தமின்றி கேள்விகளாலேயே ரணமாக்கும் வல்லமைகொண்ட வக்கீலான மனசாட்சியிடமிருந்து தப்ப முடியாது தவித்துக்கொண்டிருந்தாள் ஆதிரை.  

 கேள்விகள்…. கேள்விகள்…. விடாது துரத்தும் கேள்விகள்…

 எங்கே ஓடுவாள் ஆதிரை? ஓடத்தான் முடியுமா? கடந்த ஆறுமாதத்திற்கு மேலாக ஓடி ஓடியே உருத்தெரியாது போய்விட்டாளே! இனியும் ஓடுவதில் அர்த்தமில்லை எனும் நிலையில் சுருண்டு விழுந்தவளுக்கு, அந்த ஆயாசம்கூட துளி நிம்மதியாய்!

 உறவினர், நண்பர்களென மருத்துவமனையில் வருவதும் போவதுமாய் கூட்டம். அவளை ஆறுதல்படுத்தும் நோக்கில் துக்கத்தைக் கிளறிவிடும் செயல்கள் எதற்கும் அசைந்து கொடுக்காது கல்லாக மாறியிருக்கிறாள்.

 ‘கணவருக்கு முடிவுரையை எழுதியவள் தான்தான் என தெரிந்தால் இவர்களது பார்வை இப்படியிருக்குமா?’ கசப்பான நினைவுகள் தலைநிமிரவிடாமல் அவளை அழுத்துகின்றன.

 எதிர்பார்த்த கணவரின் முடிவு இதயத்தைக் கூறுபோட்டாலும், ஆறு மாதத்திற்கு மேலாக உயிருக்குப் போராடும் மகன் முழுதாய் தனக்கு கிடைக்கப் போகிறான் எனும் நினைவில் நெஞ்சோரத்தில் மகிழ்ச்சி எட்டிப் பார்க்கவே செய்கிறது ஆதிரைக்கு!

 கடந்தகாலத்தை நாடி ஓடுகிறது மனம்.

 பிருத்வி, ஆதிரை எனும் இருமனம் ஒத்த திருமணத்தில் உண்டான இல்லற வாழ்வு பிரகாசமாகவே இருந்தது. ஒளியைக் கூட்ட மகன் இன்பனின் வரவு தூண்டுகோலாக உவகையின் உச்சத்தில் தம்பதியினர். அதைக் காணப் பொறுக்கவில்லையோ விதிக்கு!

 மகனுக்கு உடல்நிலை சரியில்லையென பள்ளியிலிருந்து தகவல் வர, அலுவலகத்திலிருந்து பறந்தோடி வருகிறாள்.

 “திருமதி ஆதிரை, திடீரென இன்பனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இருமுகையில் இரத்தமும் வந்தது” என்கிறார் உதட்டுச்சாயத்துக்குப் பதிலாக எப்போதுமே புன்னகையை உறைய வைத்திருக்கும் ஆசிரியை, அப்போது அதை தொலைத்தவராக.

 செய்தி தந்த அதிர்ச்சி விலகா நிலையில், பள்ளியின் ‘சிக் பே’ யிலிருந்து இன்பன் அழைத்து வரப்படுகிறான். காலையில் துடிப்புடன் கையசைத்து விடைகொடுத்த மகனா இவன்?

 தண்ணீர்க்காணா செடிபோலத் துவண்டு, ஆசிரியையை பற்றியபடி வருவது இன்பனா? ஆதிரையின் உடல் உலுக்கலுக்குள்ளாக, தடதடக்கும் இதயத்துடன் தேசிய பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறாள்.

 சோதனைகள்…. சோதனைகள்….

 பிருத்விக்கு தகவலளிக்க உடனே வந்துவிட்டான். மகனது நிலையைப் பற்றியறிய துடிப்புடன் இருவரும் மருத்துவமனையில் பரிதவித்தவாறு.

 ரம்யமாய் சென்றுகொண்டிருந்த வாழ்வில் திடீரென வரும் ஆழிப்பேரலைபோல சோதனை மகனுக்கு நோயெனும் வடிவில்!

 “மேலும் சில சோதனைகளுக்குப் பிறகுதான் எதையும் உறுதியாகச் சொல்ல முடியும்” எனும் மருத்துவரின் பேச்சை முழுதும் கிரகிக்க முடியாமல் பீதி அவர்களை ஆட்கொள்கிறது.

 ஒவ்வொரு சோதனையாகச் செய்து வர, விடைதேடி மருத்துவமனையில் வாரக்கணக்கில் அலையும் பரிதாபத்தில் பெற்றோர்.

 இறுதியில், இன்பனது நுரையீரல் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 “சில கோளாறுகளுக்குக் காரணத்தைக் கண்டுபிடிப்பது இயலாத காரியம்”, என்று கணினியைச் சுட்டிக்காட்டியபடி சொல்கிறார் மருத்துவர்.

 எரிமலைக்குழம்பில் தள்ளிவிட்டார்போலாகினர் தம்பதிகள்.

 “இதை எப்படி குணப்படுத்துவது டாக்டர்?” அடுத்து என்ன என்பது குறித்த ஆதங்கத்தில் பிருத்வி. மருத்துவரின் வார்த்தைகளைச் சற்றும் சுதாரிக்கமுடியா நிலையில் ஆதிரை.

 “நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே இருக்கும் ஒரே வழி…” அவர் சொல்லி முடிப்பதற்குமுன் பிருத்வி குறுக்கிடுகிறான்.

 “எவ்வளவு செலவானாலும் பராவாயில்லை டாக்டர்… எங்க பிள்ளை எங்களுக்கு கிடைச்சா போதும்” அவன் முகத்தில் பரபரப்பு.

 “அது நீங்க நினைக்கிறமாதிரி அவ்வளவு சுலபமான காரியமில்லை” எரிமலைக்குழம்பை கிண்டுகிறார் மருத்துவர்.

 “ஏன் டாக்டர்? அதில் என்ன பிரச்சினை?” பிருத்வியின் உடல் நடுங்குகிறது.

 “மாற்று நுரையீரல் கிடைப்பதுதான் பிரச்சினை” என்கிறார் மருத்துவர்.

 நிலைமையின் தீவிரம் உறைக்க உறைந்த நிலையில் தம்பதியினர்.

 “ஏதோ காரணத்தால் மூளைச்சாவு அடைந்தவர்களுடைய உடலுறுப்பை, அவர்களது உறவினர்கள் தானமாகக் கொடுத்தால் இன்பன் காப்பாற்றப்படுவான்” என்று பிரச்சினைக்குத் தீர்வு சொல்கிறார் மருத்துவர்.

 “தன்னுயிரை எடுத்துக்கொண்டாவது மகனுக்கு உயிர் கொடு” முப்பொழுதும் கடவுளிடம் கோரிக்கை வைக்கிறாள் ஆதிரை. பிள்ளையைக் காப்பாற்ற வேறு ஏதேனும் மாற்றுத்தீர்வு கிடைக்குமா என அனுதினமும் கலக்கமுடன் கணினியில் தேடும் கணவர்.

 காசு பணமென்றால் யாசித்துப் பெற்றுவிடலாம்! மாற்று நுரையீரல் கிடைப்பதென்பது இலேசான காரியமா? இரக்கமில்லா உலோக பறவைபோல யாருக்கும், எதற்கும் காத்திருக்க விருப்பமற்று பறக்கும் நாட்கள்.

 நாளுக்குநாள் பிள்ளையின் உடல்நிலை மோசமாக, கடவுளிடம் இவள் போராட, வாழும் நாட்கள் நரகமாகின. உயிருக்குப் பகையான புகையில் உறவை வளர்த்துக்கொண்ட பிருத்வி, கனன்று கருகும் சாம்பலை அதிகம் ஆக்கினான். சூழ்நிலைகள்தான் மனிதனின் சுபாவத்தில் எத்தகைய மாற்றத்தை கொண்டுவருகின்றன? இன்பனைக் காணும்பொழுது தவிர மற்ற நேரங்களில் மேகமூட்டம்போல புகை நடுவிலே காட்சியளித்தான். பிள்ளையின்மீது கண்ணை வைத்திருந்த ஆதிரைக்கு மிகத் தாமதாமாகவே அது உறைத்தது.

 “மரணத்தின் விளிம்பில் நிற்கும் என் பிள்ளை படும் துயரத்தை நினைத்தால் வேதனை தாங்கவில்லையே” பிருத்வியின் கதறல் கற்சுவற்றைக் கரைக்கப் பார்த்தது.

 தீத துன்பத்தில் உழலுபவர்கள் மீதுதான் கடவுளின் சோதனைகள் இருக்குமோ? எதிர்பாரா சாலை விபத்தில் கோமாவிற்குப் போகிறான் பிருத்வி. செயற்கையாகச் செலுத்தப்படும் பிராணவாயுவால் ஒட்டிக்கொண்டிருக்கும் உயிர். அடிமேல் அடி விழ நிலைகுலைந்து போகிறாள் ஆதிரை.

 மூச்சுத் திணறல் ஏழு வயது பிள்ளையை அதிகம் யோசிக்க வைக்கிறது.

 “நான் பிழைக்க மாட்டேனாம்மா….?” இன்பனது கேள்வியில் மரண வேதனையை அனுபவிக்கிறாள்.

 “நீ நல்லாகிடுவே செல்லம்” நம்பிக்கையூட்டும் வார்த்தைகள்.

 “அப்பா எங்கேம்மா?”

 “வேலை விஷயமா அமெரிக்காவுக்குப் போயிருக்காங்கப்பா” எங்கோ பார்த்தபடி சொல்கிறாள்.

 “எங்கிட்ட சொல்லவே இல்லையே.”

 ‘என்னிடமும் சொல்லவில்லையே செல்லம்’ உள்ளம் ஊமையாய் அழ “அப்பா இங்கு வந்தப்ப நீ தூங்கிக்கொண்டிருந்தேப்பா” உதடுகள் பொய்யுரைக்கின்றன.

 மகனது தொடர் இருமல் அப்போதைக்கு அவளுக்கு  ஆபத்பாந்தவனாகிறது.

 தன்னுயிர்கள் இரண்டும் உயிருக்குப் போராட, அவளோ நடமாடும் சவமாய் தேசிய பொது மருத்துவமனையில் இரு பிரிவுகளுக்கும் ஓடிக்கொண்டிருக்கிறாள்.

 “அப்பா போன்கூட பண்ணலையேம்மா…” தந்தையைக் காணா தவிப்பு இன்பன் முகத்தில் விரவிக்கிடக்கிறது.

 “அங்கே வேலை அதிகமா இருக்குதாம். வேலை முடிஞ்சி வந்தபிறகுதான் பேசுறாங்க. அந்த நேரத்துல நீ தூங்கிடறே” என்கிறாள் ஆதிரை, விழிகளை பெரும் பிரயத்தனத்துடன் மறைத்தபடி.

 “இனிமே அப்பா பேசும்போது நான் தூங்கினாலும் என்னை எழுப்புங்கம்மா.”

 ‘எழுப்பினாலும் எழ மறுக்கும் நிலையில் உன் அப்பா இருக்கிறாரடா இன்பா….!’ ஓலமிடும் இதயத்தின் ஓசையை முகத்தில் காட்டாது, சரியென தலையசைக்கிறாள்.

 மகன் மனது துன்பப்படக்கூடாது என்பதற்காகவே உறவுகளும் நட்புகளும் மருத்துவமனைக்கு வருவதைத் தவிர்த்திருந்தாள்.

 ஒருநாள் வகுப்பு ஆசிரியை இன்பனை பார்க்க வர, அவனது ஏக்கம் கூடுகிறது.

 “ஒருநாளாவது ஹாஸ்பிடலைவிட்டு வீட்டுக்குப் போய் இருக்கணும்மா, பிரண்ட்சையெல்லாம் பாக்கணும்….!” இன்பனின் கண்களில் ஒளிவெள்ளம்.

 தாங்குமா தாயுள்ளம்?

  “உடம்பு சரியானதும் வீட்டுக்குப் போய்விடலாம் இன்பன்” தாதியின் வருகை தாய்மையின் தடுமாற்றத்தைக் காத்தது.

 மூச்சுத் திணறலுடன் இன்பன் இரத்த வாந்தி எடுப்பது அடிக்கடி நிகழ்கிறது. உடனடியாக மாற்று அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் காப்பாற்ற முடியாது என தீர்மானமாகச் சொல்கின்றனர் மருத்துவர்கள்.

 ‘தன்னுயிரை வேண்டுமானால் எடுத்துக்கொள் என கடவுளை வேண்டியது பலித்துவிட்டதோ?’

 கனத்த இதயத்துடன் உறுப்புதானத்திற்குக் கையெழுத்திடுகிறாள் ஆதிரை.  

 “பாடியை எப்போ கொடுப்பாங்க?” யாரோ ஒருவரது கேள்வி அவளை நிகழ்காலத்திற்கு இழுத்து வருகிறது.

 “அவரோட நுரையீரலை பையனுக்கு மாற்ற ஏற்பாடு நடந்துகிட்டிருக்கு” ஒருவரது பதில்.

 மருத்துவரிடமிருந்து அழைப்பு வருகிறது.

 “மனசை தேத்திக்குங்க திருமதி ஆதிரை. அதிகமா புகை பிடிச்சதால உங்க கணவரது நுரையீரல் முழுதும் சேதமாகியிருக்கு” மன்னிப்புக்கோரி பேச்சை முடித்துக்கொள்கிறார் மருத்துவர்.

 யாரிடம் மன்னிப்புக் கேட்பாள் ஆதிரை?

 “கடவுளே…. நான் எண்ண பண்ணுவேன்….?” நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கதறும் ஆதிரைக்கு ஆறுதலளிக்க வகைதெரியாது சுற்றத்தினர்!

 ‘என் முயற்சி தோல்வியடைய நானே காரணமாய் இருந்துவிட்டேனே….. என்னை மன்னித்துவிடு இன்பா….!’ உருகும் பிருத்வியின் ஆன்மாவுக்கு ஆறுதல் கிட்டுமா?

     

-மணிமாலா மதியழகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad