மரம்கொத்திப் பறவை
கொத்திக் கொத்தி நீ யெழுப்பு மோசைகூட
புத்திக்கு இதமாய் இசையாய் யமைந்ததுவோ
சங்கேத ஒலியிலுன் சகாக்களுடன் நீகுலவும்
சங்கீதக் காதல் மொழிக்கொரு சான்றாகுமாம்
கூரிய மூக்கால் முட்டி மரப்பட்டை யுரிக்கும்போது
வீறியெழும் வேகமுடன் குத்தியெழும் ஒலிதான்
இசைவடிவம் தருகின்ற எதிரொலியா யெங்கும்
விசையுடன் வெளியே வெகுவாய்க் கேட்குமாம்
இலைகளும் பூக்களுமுன் இன்னிசை கேட்டு
இசைந்தினிதே ஆடும் – மரமெல்லாம் தாளமிடும்
மரமீதில் அமர்ந்தாடித் தலையசைத் தாடுமழகேயது
மாபாரதத்தின் பெருமை சொல்லும் பரதமாகும்
மரங்களை மரணங்களிலிருந்து காக்கும் நீ
மரணமில்லா பெருவாழ்வு பெற வேண்டுமப்பா
- பெருவை பார்த்தசாரதி –
Tags: Woodpecker, மரம்கொத்திப் பறவை