\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

“லக்ஷ்மி” குறும்படம்

அண்மையில் வெளியாகி, சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் பல விவாதங்களையும் சர்ச்சைகளையும் எழுப்பியுள்ள குறும்படம் – லக்ஷ்மி.  முழுநீளத் திரைப்படங்கள் பலவும் கவனிக்கப்படாமல் போய்விடும் காலக்கட்டத்தில் குறும்படம் ஒன்று மக்களைச் சென்றடைந்துள்ளது மகிழ்வளிக்கிறது. இதற்கு படத்தில் கையாளப்பட்டுள்ள கருத்தும் காரணமாயிருக்கலாம்.

மிகச் சராசரியான குடும்பத்தைச் சேர்ந்த லக்ஷ்மி எனும் பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவம் பற்றியது தான் கதை. கணவன், ஒரு பிள்ளை என்ற சிறிய வட்டத்துக்குள் இயந்திரமாக வாழும் லக்ஷ்மி, ஒரு சந்தர்ப்பத்தில் அந்நியன் ஒருவனின் அன்பில் ஈர்க்கப்பட்டு, அவனோடு உறவு கொள்கிறாள். பின்னர் அந்த உறவே வழக்கமாகிவிடக் கூடாதென நினைத்து தன் பாதையை மாற்றிக்கொள்ள எத்தனிக்கிறாள்.

சமூகம் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய ‘பெண்மை’ எனும் தலைப்பை மிகவும் மென்மையாக ஆனால் அழுத்தமாகக் கையாண்டுள்ளார் இயக்குனர் சர்ஜுன். தொடக்கத்தில் அன்றாட இயந்திரத்தனமான வாழ்வைக் கருப்பு வெள்ளையில் காட்டி, இடையில் லக்ஷ்மி கதிரைச்   சந்திக்கும் காட்சிகளை, அவளின் பரவசத்தைக் காண்பிக்கும் வகையில் வண்ணத்தில் காட்டுவது; சமையலறையில் உழல்வது, பிள்ளையைத் தயார்படுத்துவது, கணவனுக்கு சாப்பாடு கட்டி வழியனுப்புவது, இரவில் கணவனின் தேவைகளைப் பூர்த்தி செய்வது  என லக்ஷ்மியின் வாழ்க்கை ஸ்விட்ச் போட்டது போல இயங்குவதை காட்சியில்  உணர்த்துவது என முத்திரை பதிக்கிறார். லக்ஷ்மி வேலைக்குப் போகும் வழியில் எதிரில் வரும் ஆடவன் மீது இடித்துவிடக் கூடாது என ஒதுங்கிச் செல்வது, பஸ்ஸுக்குக் காத்திருக்கும் வேளையில் கதிரிடம் கணவன் வந்து அழைத்துச் செல்வான் என பாதுகாப்புக்காகச் சொல்வது போன்ற காட்சிகளில் லக்ஷ்மியின் கண்ணியத்தைத் தூக்கிக் காட்டுகிறார்.

ஆனால் கணவனுக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பிருக்கலாம் என்று லக்ஷ்மி கருதுவதாக அமைத்திருப்பது இயக்குனர் தன்னைத் தற்காத்துக் கொள்ள அமைத்திருப்பது  போன்று தோன்றுகிறது. அவன் தவறு செய்யும் காரணத்தால் தன் தவறும் பரவாயில்லை என்று சொல்லி  ஃப்ளாஷ் பாக்கைத் துவங்குவதற்குப் பதிலாக, வேறேதாவது காட்சியைச் சேர்த்திருக்கலாம். ‘பெண் ஒழுக்கம்’ எனும் சமூகப் கருத்துக்கு அஞ்சியே இதைச் செய்திருக்கிறார் இயக்குனர். அதே போல் கதைக்கு தேவையில்லாமல் காவிரி பிரச்னையைப் பேசியிருக்கத் தேவையில்லை.

இந்தப் பாத்திரத்துக்கு லட்சுமிப்ரியா சந்திரமௌலியைத் தெரிவுச் செய்திருப்பது. இயக்குனரின் சிறப்பு.

லட்சுமிப்ரியா லக்ஷ்மியாகவே மாறியுள்ளார்.  அடுக்களை, ரயில் பிரயாணம், அச்சகத்து வேலை, கதிருடன் சந்திப்பு போன்ற காட்சிகளில் மிக மிக இயல்பாக நடித்துள்ளார்.  மிக எளிதாக கண்களால் உணர்வை வெளிப்படுத்துகிறார். குறிப்பாக கணவனுடன் உறவு கொள்ளும் காட்சியில் எமாற்றமடைவதையும், பிள்ளை விழித்துக் கொள்வானோ என்ற அச்சத்தையும் அழகாக வெளிப்படுத்தியுள்ளார். அதே போல் கதிருடன் பேருந்து நிலையத்தில் உரையாடும் காட்சியிலும் பிரமாதப்படுத்தியுள்ளார். நாயகன் நந்தனும் அருமையாக நடித்துள்ளார். அவரது உதட்டோரம் ஒட்டியிருக்கும் புன்னகை, முகபாவம்,  லக்ஷ்மியுடன் பழகும் விதம் அனைத்தும் அருமை.

ஒளிப்பதிவாளர் சுதர்சன் ஸ்ரீநிவாசன் நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்துள்ளார். காட்சிகளில் கதாபாத்திரங்களை விட்டு நமது கவனம் சிதறாமல் பார்த்துக் கொண்டுள்ளார். க்ளோஸ்-அப் காட்சிகளில் மிகத் துல்லியமான ஒளிப்பதிவு.

K.S. சுந்தரமூர்த்தியின் இசை படத்துக்குக் கூடுதல் பலம். லக்ஷ்மியின் மகிழ்வை வெளிப்படுத்த பாரதியின் கும்மியடி பாடலை பயன்படுத்தியிருப்பது புத்திசாலித்தனம். சவுண்ட் டிசைனர் தனுஷ் நயனார் மற்றும் ஆடியோகிராபர் ஆனந்த் மேனன் இருவரும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர்.

படத்தொகுப்புச் செய்தவரும் சர்ஜுன் தான். மிகக் கச்சிதம். இருபது நிமிடங்களில் இவ்வளவு வலுவான கதையம்சத்தைக் கையாள்வது மிகக் கடினம். சர்ஜுன்  இயக்குனராகவும், தொகுப்பாளராகவும் இருந்தது இதனைச் சாத்தியப்படுத்தியுள்ளது.

மொத்தத்தில் மிகச் சிறப்பானதொரு குறும்படம். திரைப்படம் என்பதைத் தாண்டி சமூகவலைத்தளத்தில், இதில் சொல்லப்பட்டுள்ள கருத்து  பெரிதும் அலசப்பட்டு வருகிறது. பாரதி சொன்ன புதுமைப் பெண் இதுவல்ல; அவரின் கும்மியடிப் பாடலைத் துடுக்குத்தனமாகப் பயன்படுத்தியுள்ளனர் என்று பல விவாதங்கள் கிளம்பியுள்ளன.

பெண் என்றால் உணர்ச்சிகளை மறைத்துக் கொண்டு, மனதால் கூட எந்தத் தவறும் செய்யாது வாழவேண்டும் என்று எழுதப்படாத விதிப்படி பார்த்தால் இந்தப் படம் சற்று அத்துமீறல். ஆனால், பெண்ணும் ஒரு மனிதப் பிறவி தான்; சந்தர்ப்பவசத்தால் தவறிழைக்கும் இயல்பான மனிதக்குணம் அவளுக்கும் உண்டு என்ற யதார்த்த நிலவரப்படி பார்த்தால் இப்படம் சிறந்த வெளிப்பாடு.

திருமணமான பின்பும் தவறான உறவு கொள்ளும் ஆண்களைப் பற்றி பல படங்கள் வந்துள்ளன. அவற்றால் அழியாத கலாச்சாரம், பாரம்பரியம் ‘லக்ஷ்மி’யால் அழிந்துவிடும் என்பது அபத்தம்.

-ரவிக்குமார்-

Tags: , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad