போர்வை
மினியாபொலிஸில் பேய் மழை பெய்து கொண்டிருக்கிறது. லேசாகக் குளிரும் இந்த அறையில் போர்வைக்குள் தஞ்சம் புகுந்து ஜன்னலின் வழியே மழையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஏதாவது எழுதலாம். என்ன எழுதுவது..? இந்த மழை பற்றியா? வேண்டாம் நிறைய எழுத வேண்டும். இந்த மழையின் குளிரிலிருந்து காக்கும் இந்தப் போர்வை பற்றி எழுதலாமா ..? அட, புதுசா இருக்கே..!! எழுதுவோம்.. நல்லா இருந்தா பாராட்டிச் சொல்லுங்க.. நல்லா இல்லைனா..? வேற என்ன பண்றது ? அதையும் சொல்லுங்க .. கேட்டுத் தொலைக்கிறேன்..
இனி போர்வை…….
விழிப்புத் தட்டிய ஒரு குளிர்ந்த அதிகாலையில், கருவில் இருந்து வெளிவர விரும்பாத ஒரு சிசுவைப் போல் போர்வைக்குள் லயித்துக் கிடக்கிறது இந்த உடல். இவ்வளவு கதகதப்பைத் தரும் போர்வையில் இருந்து விலகுவது எனக்கு ஒருபோதும் பிடித்தமானதாக இருந்ததில்லை. பரீட்சை நாளின் அதிகாலையில் அப்பாவின் அதட்டலால் எழுந்து, நாற்காலியில் அமர்ந்து படிக்கும் நேரங்களில் மடித்து வைக்காமல் விடப்பட்ட என் போர்வை, ஒளிரும் கண்களில் குளிர் காய்ந்தபடி படுத்திருக்கும் ஒரு மோகினியின் உடலைப் போல என்னைக் கவர்ந்திருக்கிறது.
முதல் அணைப்பைப் பரிசளித்து விட்டு மிகக் குறைந்த இடைவெளியில் ”பார்ப்போம் உன் தைரியத்தை” என்பதைப் போல் நிற்கும் இளம் காதலியைப் போல் நம்மை பார்த்துச் சிரிக்கின்றன அதிகாலையில் நாம் துறந்த குளிர்காலப் போர்வைகள். வேலை நிமித்தமாகவோ, வெளியூர் பயணத்திற்காகவோ, இன்ன பிற காரணங்களின் பொருட்டோ நாம் கைவிடும் போர்வைகள் புது மனைவியின் கண்களைக் கொண்டு நம்மைப் பார்க்கின்றன. நாம் அறையிருந்து வெளியேறிய பின்னும் நமக்கான கதகதப்பை வைத்துக் கொண்டு அது காத்திருக்கக்கூடும்.
ஒவ்வொரு போர்வையிலும் ஒன்று அல்லது இரண்டு உடலின் வாசனை ஏறியிருக்கிறது. உங்களுக்குச் சொந்தமில்லாத போர்வைக்குள் நீங்கள் நுழையும் போது நீங்கள் அடுத்தவரின் அந்தரங்கத்தில் அத்துமீறி நுழைகிறீர்கள். எச்சரிக்கை.
இன்னொரு உடலின் வாசனையை உங்கள் மீது படரவிடும் போர்வைகளால், முறையற்ற காமத்தின் இறுதியில் வரும் குற்ற உணர்ச்சிக்கு ஆட்படுவீர்கள் அல்லது
சரியான உடலைக் கண்டடைந்த திருப்தியைச் சிறிது நேரமேனும் கண்ணீருடன் அனுபவிப்பீர்கள் அல்லது நீங்கள் மட்டுமே அறியப்போகும் ஒரு கள்ளத்தனத்துக்காகக் கிளர்ச்சி அடைவீர்கள். இருப்பினும், உடல் மூட உடல் இல்லா ஒரு குளிர்ந்த அதிகாலையின் அந்தரங்க உணர்வுகளைக் கருணையின் கதகதப்போடு வைத்துக்கொள்ளும் இந்தப் போர்வைகள் எந்த மனிதனை விடவும் மேலானது அல்லவா..?
போர்வை அணிந்து கொண்டே டீக்கடைக்கு வரும் கிழவர்களை நான் அறிவேன். அந்தப் போர்வை நிரந்தரமாய்ப் பூசியிருக்கும் ஒரு முதிர்ந்த உடலின் வாசனை இறந்த அவரின் மனைவியோடதாக இருக்கலாம். பேச்சுக்கள் அதிகம் அற்ற வெறித்த பார்வைகளும், அடர்த்தியான பீடிப் புகையையும் கொண்ட டீக் கடைகளில் அமர்ந்து போர்வையின் நைந்த பகுதியில் பிரியும் நூலைச் சேர்த்து முடிச்சுப் போடும் அவர்களின் கண்களில் வழிவது இதுவரை எழுதப்படாத ஒரு பெருங்காதல் கதையாக இருக்கலாம், திரும்பப் பெற வாய்ப்பில்லாத பேரிழப்பாக இருக்கலாம் .
பிறந்த பின்னும் கருப்பையோடே இருக்கும் குழந்தை போல இவர்கள் போர்வையுடனே அலைகிறார்கள். என்றேனும் ஒரு குளிர் அதிகாலையில் இந்தப் போர்வையிலேயே மரணிக்கும் இவர்கள் எவ்வளவு பாக்கியவான்கள்.!!
கருவில் தோன்றி கருவிலேயே மரிப்பவர்கள் வாழ்வு ஒரு வட்டமாக இருக்கிறது. வட்டத்திற்கு முதல் எது ? முடிவு எது ? முடிவற்ற பெருவாழ்வுதானே அது..?
எல்லாவற்றாலும் கைவிடப்பட்டு குளிரில் நடுங்கும் உயிர்களுக்கு அவர்கள் வசதியாய் மரிப்பதற்கு அல்லது மீண்டும் ஒரு பெரு வாழ்வு வாழ்வதற்கு
உன் பெருங்கருணையின் கதகதப்பைக் கொண்ட ஒரு போர்வை கிடைக்கச் செய்யும் ஆண்டவரே !! ஆமென்!!!!!!
-மனோ அழகன்