கவித்துளிகள்
நீ எனக்குத் தேவையில்லை…!!
தனிமையின் சொற்களை
விழுங்கி செரித்துவிட்டேன்.
நீ எனக்குத் தேவையில்லை…
நடுங்கும் விரல் கொண்டும்
தழல் மூட்டத் தெரிந்து கொண்டேன்.
நீ எனக்குத் தேவையில்லை…
அட்சய பாத்திரம் அதை
நான்கு வாங்கி வைத்துவிட்டேன்.
நீ எனக்குத் தேவையில்லை…
சகாய விலை பேசி
உடல் புகுந்து பழகிவிட்டேன் ..
நீ எனக்குத் தேவையில்லை…
எரியும் பகலொன்றில் உன்
எச்சில் தேடும் நிமிடம் வரை
நீ எனக்குத் தேவையே இல்லை ..
எரியாத பகலென்று ஏதும் உண்டா என்ன..?
வேஷம் கலைந்த விடியலில்
சிவந்த கண்களுடன்
கருணையின் நிழல் தேடி
அலையும் ஒரு சக கலைஞனிடம்
முடிந்த இரவின் கருப்புப் பக்கங்களை
புரட்டிக் காட்டும் நீங்கள், அவனை
ஒரு மீள முடியாத குற்ற உணர்வின் குழிக்குள் தள்ளி, பாவியாகுகிறீர்கள்…..
உங்கள் நிழலில் உறங்க அனுமதித்து
பரிவுடன் தலை கோத நீளும்
உங்கள் கைகளின் மூலம்
நீங்கள் தேவனாகுகிறீர்கள்….!!!!!
வேறொரு நாடகத்தின் இரவில்
கடவுள் வேஷம் போடும் அவனிடம்
உங்களுக்கான வரங்களை அற்பமென கேட்டுப் பெறுங்கள் …….!!!
நான் தனியே நடந்த கடல் தீரவில்லை
நாம் சேர்ந்தே கடக்க வானம் தூரமில்லை….
கரையிலாக் கடலென ஏதுமில்லை
நம் காதலில் கரைந்த அதைக் காணவில்லை…..
எழுந்த என் கடல், அலை..!!
அயர்ந்த உன் அலை, கடல்…!!!
நனைந்தே கிடக்கும் இந்த நிலம்…..!!!!!!
இந்த மழைக்கும்
என் மகனுக்கும் பெரிய
வித்தியாசம் ஏதுமில்லை..
நினைத்த நேரத்தில்
நினைத்த இடத்தில
பெய்து விடுகிறது இரண்டும்….
குடை விரிக்கவோ, மடக்கவோ
அவகாசம் கொடுப்பதில்லை..
நனைபவரின் வசவோ வாழ்த்தோ
எதையும் அவை அறிவதில்லை…
உங்கள் கவிதைகளை ஒருபோதும்
அவை வாசிக்கப் போவதில்லை…
பேதங்கள் அறுத்து எவர் மீதும்
எதன் மீதும் நின்று பெய்கிறது..
நனைந்த உங்கள் ரகசியங்களுக்காக
ஒரு சிரிப்பை மட்டும் பரிசளிக்கிறான் அவன்…
மற்றபடி இந்த மழைக்கும்
என் மகனுக்கும் பெரிய
வித்தியாசம் ஏதுமில்லை…..!!!
– மனோ அழகன்