கார்மேகங்கள்
பகலிலும் குளிருதோ
கதிரவனுக்கு…
போர்த்திக் கொண்டான்
கார்மேகப் போர்வையை!
நனையாமலிருக்க
எவர் பிடித்த குடை
கார்மேகங்கள்!
பூமிக்கு
முகங் காட்டிய
மேகப் பெண்கள்…
வானுக்கு
முகங் காட்ட
திரும்பிக் கொண்டதோ!
அதன் கூந்தலிலிருந்து
உதிர்ந்த பூக்களோ
மழைத்துளிகள்!
கூந்தலின்
வாசந் தானோ
மண் வாசனை!
கதிரவ மன்னனின்
மனைவிமார்களோ
இம்மேகங்கள்!
அவன்
நோய்வாய்ப்பட்டதால்
கூடி அழுகிறார்களோ?
இம்மேகப்பெண்கள்!
ஆடையிழக்கும்
பூமிப்பெண்ணிற்குப்
பச்சை சேலை வழங்கும்
கருமைநிற
மாயக் கண்ணன்
இக்கார்மேகங்கள்!
வான் காரிகையின்
மார்பகங்கள்
மேகங்கள்!
தாய்மையடைந்த அவளின்
பாலூட்டும் மார்பகங்கள்
கார்மேகங்கள்!
மேகப்பால் குடித்த
காற்றின்
இரத்த ஓட்டம்
ஈரப்பதம்!
கவிஞனின் சிந்தனைக்கும்
பாலூட்டும்
கார்மேகங்கள்!
தேர் பவனி
செல்லுகின்றன
வானில்!
சிந்தனையில்!
- சா. கா. பாரதி ராஜா