கேள்வி
ஒரு கேள்வி..
பூமி எங்கும் குளிர் பரப்பி, வெளிச்சத்திற்காக மட்டும் சுடாத சூரியனை எழுப்பி, விடிந்திருக்கிறது இந்த நாள்.
தன் வாழ்வின்
இறுதி நாளை வண்ணங்கள் பரப்பிக் கொண்டாடிவிட்டு, நளினமாகக் காற்றில் ஆடி, விழுதலை வெற்றியாக்கி, நிலத்தை அடைகிறது ஒரு பழுத்த இலை..
மரத்திலிருந்து நிலம் பார்த்த இலை, இப்பொழுது நிலத்தில்
இருந்து மரம் பார்க்கிறது.
உறவல்ல.., பிரிவு உணர்த்தும்
பிரம்மாண்டம்…
சருகிடம் அந்த மரம் கேட்கும் ஒரு கேள்வி அதனை மீண்டும் இலையாக்கும். அந்தக் கேள்விக்காக அந்த இலை மீண்டும்
மீண்டும் சருகாகும்..
வாழ்வைக் கொண்டாட்டமாக மாற்றும்
இந்தக் கேள்விகள் நாம் பெரும்பாலும்
யாரையும் கேட்காதவையாக இருக்கும். யாரேனும் நம்மைக்
கேட்க ஏங்க வைப்பதாக இருக்கும் …
அந்தக் கேள்வியை உங்களைப்
பார்த்துக் கேட்கத்தான் உங்கள் கதவைத்
தட்டிக் கொண்டு நிற்கிறேன்..
பேப்பர் வந்துச்சா..? என்ற கேள்வி ஆரம்பிக்கிறது
இந்த நாளை.
பொண்ணு பிடிச்சிருக்கா..? என்ற கேள்விக்கு
பதில் தெரியாமல் குழம்பி நிற்கும்போதே துரித கதியில் ஆரம்பித்து விடுகிறது மண வாழ்க்கை.
பையனா..? பொண்ணா..? என்ற கேள்வியோடே விரிகிறது எதிர்காலம் பற்றிய கனவுகளும் சுமைகளின் கணக்கீடுகளும்.
இந்தியர்களுக்கு உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும்
முதலாளிகளிடம் இருந்து எத்தனை எத்தனை கேள்விகள் கடல் கடந்து வருகின்றன!.
கேள்விகளின் அழுத்தம் தாங்காமல் பொத்தல் விழுந்த பலூன் போல, காற்றில் தாறுமாறாக
அலைக்கழிந்து சுருங்கி வீழ்ந்துவிடும் குறுகிய வாழ்வு தானே இது..!!
இப்படி, கேள்விகள் ஒரு வெறி நாயைப்
போல் துரத்தும் இந்த வாழ்க்கையைக் கடக்க ஓடிக்
கொண்டே இருக்கும் நம்மை ஒரு கேள்வி நிற்க வைத்து , இதயத் துடிப்பைச் சீராக்கி, தரையில் பாதம் பட நிற்க வைத்து
உங்களைச் சுற்றி நடப்பவற்றை
ரசிக்கும் ஏகாந்தத்தை உங்களுக்குப் பரிசளிக்கிறது..
பரபரப்பான உங்கள் வாழ்க்கையின்
இரண்டு நிமிடங்களைப் புன்னகைகளால் நிரப்புகிறது
அல்லது உங்கள் வாழ்நாள் கணக்கில் அந்த இரண்டு நிமிடத்தைச் சேர்க்கிறது.
தொலைதூரத்தில் இருந்து இந்தக் கேள்வியைத் தாங்கி வரும் குரல்கள் உங்கள் தோள்களை ஆதரவாய் அணைத்துக் கொள்கின்றன.
யாரும் பரிகாசிக்க முடியாத அன்பின் பரப்பில் பகிரங்கமாய் முத்தம் இடுகிறது.
பெருங்கோபம் கொண்டு வசைச் சொற்களுடன் பேச ஆரம்பிப்பவனின் மீது வீசப்படும் இந்தக் கேள்வி அவனை முதலில் நிலை குலைய
வைத்து, சமநிலைக்கு இழுத்து வந்து
புனிதனாக்குகிறது .
நிறமற்ற அந்திமத்தின் பெரு வெளியில் தனியே அமர்ந்திருப்பவனின் கண்களில் இந்தக் கேள்வி நம்பிக்கைத் துளிகளைச் சுரக்கச் செய்கிறது.
தனித்தலையும் ஓநாயின் காதுகளில்
ஓதப்படும் இந்தக் கேள்வி, தற்காலிகமாக அதனை ஒரு ஆட்டுக்
குட்டியாக மாற்றுகிறது.
இந்த அன்பின் கேள்வி, எல்லாம் இழந்து விட்டவனின்
தற்கொலையைக் கொஞ்சம் தள்ளிப்
போடுகிறது அல்லது அவனைத் தூக்கி வந்து மீண்டும்
வாழ்வில் கடாசி விட்டுச் செல்கிறது.
யாரோ ஒரு புதியவரிடம் வீசப்படும் இந்தக் கேள்வி நட்பின் முதல் அத்தியாயத்தை
எழுதத் தொடங்கலாம். பிரிந்த உங்கள் காதலிடம்
கேட்கப்படும் இந்தக் கேள்வி இறவாத உங்கள் நேசத்தின்
குளிர்ந்த பக்கங்களைப் பரிசளிக்கக்கூடும்.
நேரமே இல்லாத ஒரு காலை வேளையில் எனக்காகக் கதவைத் திறக்கும் உங்களிடம்
அந்த கேள்வியைக் கேட்டுவிடுகிறேன்
நல்லா இருக்கீங்களா
தோழர்..?
இதற்குப் பதிலாக நீங்கள் தரப்போகும்
புன்சிரிப்பை நான் திருடிக்
கொள்ள அனுமதியுங்கள் ..!!!
-மனோ அழகன்