வாய்ப்புகள் திரும்புவதில்லை
நூறாவது தடவையாக திலகவதி கதிர் கூறிய வார்த்தைகளை நினைவுபடுத்திக் கொண்டாள்.
சுற்றி வளைத்துப் பேசினாலும் கடைசியில் அவன் பேசிய மொத்தப் பேச்சின் அடக்கமும் அந்த ஒரு வாக்கியத்தில்தான் முடிவு பெற்றது. ‘நல்ல நண்பர்களாக இருக்கும் நாம் ஏன் கணவன்-மனைவியாகக் கூடாது?’
என்ன துணிச்சல்? என்ன ஒரு துரோகம்?
திலகவதி ஒரு அறிவுஜீவி. தான் படிக்கும் இரசாயனப் பாடம்தான் அவளது முதல் காதல். அதில் முனைவர் பட்டம் பெற்று மேல் படிப்புக்கு வெளிநாட்டுப் பல்கலையில் நுழைய வேண்டும் என்பதுதான் அவள் இலக்கு.
அந்தக் கருத்துக்களுக்கொப்ப பலவிதமான பாடம் சம்பந்தப்பட்ட சர்ச்சைகளில் பங்கு பெற்றுத்தான் கதிர் திலகவதிக்குத் தோழன் ஆனான். மிகவும் புத்திசாலி; அவனும் ஒரு அறிவுஜீவிதான். அவன் நேரடியாக இரசாயனத்தில் ஆராய்ச்சி செய்யும் மாணவன் இல்லையென்றாலும், அந்தப் பாடத்தின் ஒரு கிளைப் பாடத்தில்தான் அவன் தன் முனைவர் பட்டத்திற்கான ஆய்வில் ஈடுபட்டிருந்தான்.
திலகவதிக்குப் பல சமயங்களில் கருத்துக்கள் கூறி அவள் ஆய்வுக்குத் துணை செய்திருக்கிறான். கதிரும், திலகவதியும் பாட சம்பந்தமாகப் பேச ஆரம்பித்தால் நேரம் போவதையே உணர மாட்டார்கள். வாதப் பிரதிவாதங்கள் ஆரோக்கியமானதாக இருக்கும். புதிய வழிமுறைகளையும், எண்ணக் கோர்வைகளையும், முடிவுகளையும் திட்டவட்டமாகக் கொண்டு வருவதாக இருக்கும்.
திலகவதிக்கு இரசாயனம் தவிர கர்நாடக இசையில் மிகுந்த ஆர்வம் உண்டு. கதிருக்கு அதில் அவ்வளவு நாட்டம் கிடையாது. என்றாலும் சங்கீதம் அவனுக்குக் கசப்பான விஷயமல்ல.
ஒருநாள் பேச்சோடு பேச்சாக திலகவதி சங்கீதம் பற்றி சொன்னபோது, கதிர் “எனக்கு வீணை இசை மிகவும் பிரியம்” என்றான்.
திலகவதி அவனை வியப்புடன் பார்த்தாள்.
“அப்படியா…? நீங்கள் சொன்னதே இல்லையே?” என்றாள்.
கதிர் புன்னகை புரிந்தான்.
“சந்தர்ப்பம் வரவில்லை… ஏன்?”
“நான் வீணை வாசிப்பேன்” என்றாள் திலகவதி.
“அப்படியா?” என்று வியப்புடன் கேட்டவன், “நான் ஒருநாள் நீங்கள் வீணை வாசிப்பதைக் கேட்க வேண்டும்” என்றான்.
“வாங்களேன் வீட்டுக்கு…” என்று அழைப்பு விடுத்தாள் திலகவதி.
திலகவதிக்கும், கதிருக்கும் தந்தை கிடையாது. தாயார்கள்தான். திலகவதியும், அவள் அம்மாவும் மைலாப்பூரில் ஒரு இரண்டு படுக்கையறைக் குடியிருப்பில் இருந்தனர்.
திலகவதி ஆராய்ச்சி மாணவியாக உதவித்தொகை பெற்று வந்ததுடன் அவளின் தந்தையின் ‘பென்ஷன்’ அவள் அம்மாவுக்கு கிடைத்தது. அதில்தான் அவர்கள் எளிமையாக அந்தச் சொந்த வீட்டில் குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தனர்.
கதிரின் குடும்பம் கோவையில் இருந்தது. வசதியான வாழ்க்கைதான். நிலம், சொத்துகளில் இருந்து நல்ல வருமானம்.
அவனுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகம் இருந்ததால்தான் அவனும் உதவித்தொகை பெற்று ஆராய்ச்சி மாணவனாக திலகவதி வேலை பார்க்கும் ஆராய்ச்சிக் கூடத்திலேயே வேறொரு பிரிவில் வேலை செய்து வந்தான்.
திலகவதியின் வீட்டுக்கு வந்த கதிர் மிகவும் அடக்கமாக அவள் அம்மா பார்வதியைப் பார்த்ததும், கையிலிருந்த பழங்கள் இருந்த பையை அவரிடம் கொடுத்து அவர் காலைத் தொட்டு வணங்கினான்.
திலகவதி, அவள் அம்மா பார்வதி இருவரும் கதிரின் அடக்கத்தைக் கண்டு திடுக்கிட்டனர்.
“அடடா… என்ன தம்பி… நீங்க?” என்றார் பார்வதி.
“நீங்க மூத்தவங்க… உங்க மாதிரி பெரியவங்க காலில் விழுந்து வணங்கணும்னு எங்க அம்மா சொல்லுவாங்க… உங்க ஆசீர்வாதம் தேவை” என்றான்.
பார்வதிக்கு மிதமிஞ்சிய மகிழ்ச்சியில் கண்களில் கண்ணீரே வந்துவிட்டது. “கடவுள் உங்களை நல்லபடி வைப்பார்..” என்றாள் உணர்ச்சி ததும்பும் குரலில்.
பிறகு திலகவதியுடன் சிறிது நேரம் பேசிவிட்டு, “சரி, வீணை எங்கே? அதைக் கேட்கத்தானே நான் வந்திருக்கேன்” என்றான்.
திலகவதியும் எந்தப் பாசாங்கும் பண்ணாமல் வீணையை எடுத்து வந்து, ‘துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ…’ என்ற பாரதிதாசன் பாட்டை தேஷ் ராகத்தில் வாசித்தாள். கூடவே சன்னமான குரலில் சில வரிகளைப் பாடவும் செய்தாள்.
கதிர் கண்ணை மூடிக்கொண்டு ரசித்தான். முடிந்ததும் சிறிதாகக் கை தட்டி, “அற்புதம், ஒரு எதிர்கால விஞ்ஞானி வீணை வித்தகராகவும் இருப்பது மிகவும் மகிழ்ச்சி தரும் விஷயம்…” என்றான்.
இப்படித்தான் மெதுவாக, மென்மையாக, கதிர்-திலகவதியின் நட்பு வளர்ந்தது. இரசாயன ஆராய்ச்சி தவிர பிடித்த புத்தகங்கள், படித்த கவிதைகள், கேட்ட பாடல்கள் என்றெல்லாம் தொடர்ந்தது.
அன்று கதிர் திலகவதியைச் சந்தித்தபோது அவள் மிகவும் சோகமாகத் தோன்றினாள்.
கதிர் பதறிப் போனான். “என்ன திலகா? ஏன் இவ்வளவு சோகமாக இருக்கிறீர்கள்?” என்று நிசமான கவலையுடன் கேட்டான். திலகா பதில் சொல்லவில்லை.
“அம்மாவுக்கு உடம்பு சரியில்லையா? ‘கைட்’ ஏதாவது திட்டினாரா? ‘ரிஸல்ட்’ சரியாக வரவில்லையா?” என்று கேள்வி மேல் கேள்வியாக அடுக்கிக்கொண்டே போனான்.
திலகா பதில் தரவில்லை. அவனது ஆதரவான சொற்கள் அவள் மனச் சோகத்தை இன்னும் தூண்டி, கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. திலகவதியின் கண்ணீரைக் கண்டு கதிர் திடுக்கிட்டான்.
“ஐயோ… என்ன திலகா… ஏன் அழுகிறீர்கள்?” என்றான் பதட்டத்துடன்.
திலகா பதில் கூறாமல் முகத்தைக் கைகளில் மறைத்தபடி மேலும் அழத் தொடங்கினாள்.
கதிருக்கு ஏதும் விளங்கினால்தானே? அவளைத் தொட்டு ஆறுதல் சொல்லத் தயக்கமாக இருந்தது.
“சொல்லுங்கள் திலகா… என்ன விஷயம்? ஏன் இப்படி அழுகிறீர்கள்?” என்றான்
மீண்டும் பதைப்புடன்.
“நான் சொல்கிறேன்…” என்றபடி அங்கு வந்தாள் திலகவதியின் நெருங்கிய தோழி சுமதி. அவள் இன்னொரு ஆராய்ச்சி மாணவி. திலகவதி வெடுக்கென்று தலை நிமிர்ந்து, “ப்ளீÞ… இவர்கிட்ட அதையெல்லாம் சொல்லாதே…” என்றாள். ஆனால், அது ஒருவிதத்தில் நீ சொல்லேன் என்பது போல் இருந்தது, கதிருக்கு.
“உங்களுக்கு மதுசூதனனைத் தெரியுமில்லையா?” என்றாள் சுமதி. கதிர் தெரியும் என்று தலையசைத்தான்.
மதுசூதனனைத் தெரியாதவர்கள் இவர்கள் ஆராய்ச்சிக் கூடத்தில் இருக்க முடியாது. ‘பிரில்லியண்ட்’ என்பார்களே அந்த வகை ஆராய்ச்சி மாணவன். பார்க்கவும் ‘ஸ்மார்ட்டாக’ இருப்பான்.
அவன் எப்படி திலகவதியின் அழுகைக்குக் காரணமானான்? இவளை ஏதாவது கேவலமாகப் பேசிவிட்டானோ? அவன் அப்படிப்பட்ட பையனல்லவே?
கதிருக்கு ஒன்றும் புரியவில்லை.
“ஆமாம்… தெரியும்… அவருக்கும் திலகவதி இப்போது அழுவதற்கும் என்ன சம்பந்தம்…? அவர் திலகாவின் ஆராய்ச்சி பற்றி ஏதாவது கடுமையாக விமர்சனம் செய்து விட்டாரா?” என்று கேட்டான் கதிர்.
“அதெல்லாமில்லை… இது வேற…” என்றாள் சுமதி.
கதிர் பேந்த விழித்தான்.
“வேறன்னா…?”
“லவ்… காதல்…”
கதிருக்கு இன்னும் குழம்பியது. “என்ன லவ்… யாருக்கு?” என்றான் சற்று எரிச்சலுடன். சுமதியின் இந்தப் புதிர் போட்டுத் துளித் துளியாக விஷயம் சொல்லும் முறை எரிச்சலைத் தந்தது.
“கதிர்… திலகாவுக்கு மது மேலே ஒரு பயங்கர ‘இது’… ஐ மீன்… ‘க்ரஷ்’… அதாவது ஒரு ஈர்ப்பு… பயங்கரக் காதல் உண்டு… உங்களுக்குத் தெரியுமா?” என்றாள் சுமதி புன்னகையுடன்.
கதிர் அதிர்ச்சியடைந்தான். மதுவின் பின்னால் சுற்றும் சில பெண்கள் உண்டு. ஆனால் திலகா அப்படியெல்லாம் போனதில்லை.
“தெரியாது…”
“அது ஒருதலை ராகம்… ஸாரி… ஒருதலைக் காதலாகி விட்டது…” என்றாள் சுமதி.
கதிர், “அப்ப இவங்க போய் மதுகிட்ட பேசினாங்களா?” என்றான் வியப்புடன்.
“அதெல்லாமில்லை. திலகாவாவது, நேரில் பேசுவதாவது… இன்னொரு ஸீனியர் மூலம் சொல்லி அனுப்பி இருக்கிறாள்… பதில் எதிர்மறையாக வந்து விட்டது.”
“அடடா…” என்றான் கதிர்.
“அவள் அழுவது அதற்காக மட்டுமல்ல கதிர்… மது சொன்ன இன்னொரு விஷயத்திற்காக…”
“என்னது? மது ஏதாவது திலகாவைப் பற்றிக் கேவலமாகப் பேசி விட்டாரா?” என்றான் கதிர் பதட்டத்துடன்.
“இல்லை.. இல்லை… அவர் அப்படியெல்லாம் பேசுகிறவர் இல்லையே. அவர் ‘நான் இப்போது காதலிக்கும் நிலையிலோ, கல்யாணம் பண்ணிக் கொள்ளும் வகையிலோ இல்லை… என்னைக் கல்யாணம் செய்து கொள்ளும் பெண் மிகவும் கஷ்டப்பட வேண்டி இருக்கும்…’ என்றாராம். அப்படிப்பட்ட கஷ்டம் அவருக்கு வாழ்க்கையில் உள்ளதே என்று நினைத்துத்தான் திலகா அழுது கொண்டிருக்கிறாள்…” என்றாள் சுமதி.
கதிர் பதில் பேசவில்லை. திலகாவின் மனசுதான் எவ்வளவு மென்மையானது? தன்னை நிராகரித்தவரின் வாழ்க்கையில் உள்ள துன்பத்திற்காகத் தான் கண்ணீர் விடும் மனம் எத்தனை மனிதர்களுக்கு இருக்கும்?
கதிர் திலகாவை ஆச்சர்யத்துடன் பார்த்தான்.
“அழாதீங்க திலகா… அவருக்கு உள்ள கஷ்டம் பற்றி நமக்குத் தெரியாது… அது நீங்க வேண்டும்னு ஆண்டவனை வேண்டிக்குங்க…” என்றான் பரிவுடன்.
இந்த நிகழ்ச்சிக்கு ஒரு மாதம் கழித்துத்தான் கதிர் திலகாவுடன் பேசிக் கொண்டிருந்த போது கதிர் தன் மனசில் இருந்ததை வெளியிட்டான்.
“நல்ல நண்பர்களாக இருக்கும் நாம் ஏன் கணவன்-மனைவியாகக் கூடாது?”
திலகவதி சிலையாகிப் போனாள். உடனே பதில் ஏதும் தராமல் வெடுக்கென்று எழுந்து சென்றாள்.
கதிர் திகைப்புடன், “ஐம் ஸாரி… நான் தவறாக…” என்று சொல்ல ஆரம்பித்ததைக் கூட அவள் செவி கேட்கவில்லை.
வேறு வழி தெரியாமல் பல குறுஞ்செய்திகளை மன்னிப்புக் கேட்டு அனுப்பினான் கதிர்.
திலகவதி பதில் தந்தால்தானே?
இவளின் முகம், நடவடிக்கை இரண்டிலும் இருந்த மாற்றத்தைக் கண்டு சுமதிதான் கேட்டாள்.
“என்ன திலகா… ஏன் ஒருமாதிரி இருக்கே? இன்னுமா அந்த மது ‘மேட்டரை’ நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கே?” என்றாள்.
திலகா, “இல்லை… இது வேற..” என்றாள்.
“வேறன்னா? கதிர் ‘ஐ லவ் யு…’ன்னு சொன்னாரா?” என்றாள் சுமதி.
திலகவதி வியப்புடன் சுமதியைப் பார்த்தாள்.
“எப்படி ‘கரெக்டா’ கண்டுபிடிச்ச?”
“பெரிய்….ய விஷயம்… கதிர் ‘ஒரு மாதிரி’ உன்னை லவ் பண்றார்னு எனக்கு அப்பவே தெரியும்…” என்றாள் சுமதி கெத்தாக.
திலகாவுக்குக் கோபம் வந்தது.
“என்ன நீ? ஒரு ஆணும், பெண்ணும் நன்றாகப் பேசிப் பழகினாலே ‘காதல்’தானா?” என்றாள்.
சுமதி புன்னகை செய்தாள்.
“நான் அப்படிச் சொல்ல வரவில்லை. ஆனால், நம்ம நாட்டில இன்னும் அதை உரிய விதத்தில் புரிந்து கொள்ளும் பக்குவம் வரவில்லை என்கிறேன்… நண்பர்கள் காதலர்களாவதில் என்ன தப்பு…?” என்றாள் சுமதி.
“இதையேதான் வேறு விதமாகக் கேட்கிறார் கதிர்…” என்றாள்.
“நல்லது… உனக்கும் கதிரைப் பிடிக்கும்தானே? சரின்னு சொல்லு…”
திலகவதி சுமதியை உற்றுப் பார்த்தாள்.
“நீ என்னமோ எல்லாவற்றையும் நொடிப்பொழுதில் முடிவு கட்டுகிறாய்… இது சரியான முறையல்ல…”
“சரி… நீ சொல்லு… எது சரியான முறை…?”
“நண்பர்கள் என்று பழகிவிட்டுத் திடீரென்று ஒருநாள் கணவன்-மனைவி, காதலர்கள் என்றெல்லாம் மாற்றிக் கொள்வது பச்சோந்தித்தனம்…” என்றாள் திலகா கடுமையாக.
சுமதி சிரித்தாள்.
“நீ சரியான லூஸு… வாழத் தெரியாதவள்… கதிரிடம் உனக்குப் பிடிக்காத விஷயம் என்ன… சொல்லு…”
திலகா தயங்கினாள்.
“பிடிக்கும்தான்… அவர் ‘ஃபிரண்ட்’ என்ற முறையில் பழகிவிட்டு இப்ப திடீர்னு ‘ப்ரபோஸ்’ பண்ணறது சரின்னு எனக்குத் தோணலை.”
“ஸோ வாட்…?” என்று சற்று இரைச்சலாகவே கேட்டாள் சுமதி.
“ஐ டோன்ட் நோ… ஆனால், அவரது இந்தப் பேச்சு எனக்கு உறுத்தலாகவே இருக்கிறது…”
“உறுத்தலா…?”
“ஆமாம்… நான் அவரை ஒரு ‘ஐடியல்’ அதாவது நல்ல நண்பருக்கு உதாரணமாக மனதில் வைத்திருந்தேன்.. அவர்… இப்படிப் பேசியதிலிருந்து அந்த ‘இமேஜ்’ கலைஞ்சு போச்சு…”
சுமதி திலகாவை விழித்துப் பார்த்தாள்.
“திலகா… நீ ஏதோ யதார்த்தத்திற்கு அப்பால் பேசுகிறாய்… நல்ல நண்பர்கள் கணவன்-மனைவி ஆவதில் தவறில்லை… உனக்கு ஒரு நல்ல நண்பராக இருந்தவர் கணவராக மாறுகிறார் என்பது மகிழ்ச்சிக்குரிய வாய்ப்பு… அதைப் புரிஞ்சுக்காம நீ ஏதோ பிதற்றுகிறாய்…”
திலகா பதில் சொல்லவில்லை.
அவள் மௌனத்தைக் கலைக்கும் விதத்தில் சுமதியே பேசினாள்.
“இத பார்… நல்ல வாய்ப்புகள் வாழ்ககையில் ஒருதரம்தான் வரும். அதைத் தவற விட்டு பின்னால் வருத்தப்படக் கூடாது. நீ என்ன பண்ணப் போற?”
“நான் இனிமேல் கதிருடன் பேசப் போவதில்லை…”
“என்னது?”
“அவர் செய்தது துரோகம்.”
“துரோகமா?”
“ஆமாம்… நட்பு என்று பழகிவிட்டு காதல் என்றால் அதற்குப் பேர் என்ன?”
சுமதி அயர்ந்து போனாள்.
“திலகா, நீ ஓர் அதிசயப் பிறவி… உன்னைக் காதலிக்காதவனை நீ காதலித்து தூது விட்டாய்… உன்னைக் காதலிப்பவனை உதறித் தள்ளுகிறாய்… இது கொஞ்சம்கூட சரியில்லை.”
திலகா சுமதியை உஷ்ணமாகப் பார்த்தாள்.
“பரவாயில்லை…” என்று பதில் சொல்லிவிட்டு எழுந்து போனாள்.
இது நடந்து ஆறு மாதத்தில் கதிர் அவன் பிரிவிலேயே வேலை பார்க்கும் கவிதா என்ற இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு ஆஸ்திரேலியா சென்றான்.
மதுசூதனனும் அவன் பெற்றோர் பார்த்து வைத்த ஒரு பெண்ணை சம்பிரதாயமாகக் கல்யாணம் செய்துகொண்டு அமெரிக்கா சென்றான். அந்தப் பெண் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவள். திலகவதி இரசாயன ஆராய்ச்சியை மணந்து கொண்டு தனியாக இருக்கிறாள். அவள் இப்போது சுமதியுடனும் பேசுவதில்லை.
– ‘தேவவிரதன்’