தீரன் அதிகாரம் ஒன்று
விதவிதமான போலீஸ் கதைகள் பார்த்திருக்கிறோம். முழுக்க சினிமாத்தனமான போலீஸ் கதைகள், தினசரிக் குற்றங்களைப் பதிவு செய்த கதைகள், பிரபலக் கொலை வழக்குகள் சார்ந்த கதைகள் என வந்துகொண்டே தான் இருக்கின்றன. போலீஸ் கதை என்றால் நன்றாகக் கதை விடலாம் என்ற அதிகாரம் இயக்குனர்களுக்கு வந்துவிடும். அதிலும் தெரிந்த உண்மைக் கதைகள் என்றால் அதைப் பார்ப்பதில் ரசிகர்களுக்கும் ஒரு ஆர்வம் வந்துவிடும்.
தொண்ணூறுகளில் இந்த ஜானரில் செல்வமணி நட்சத்திர இயக்குனராக மிளிர்ந்தார். புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் ஆகிய படங்களில் தமிழகத்தில் பிரபலமான குற்றவாளிகளின் கதைகளின் மேல் சுவர் எழுப்பி, திரைக்கதை அமைத்திருந்தார். அவ்விரண்டு படங்களும் பெரும் வெற்றி அடைந்தன. இரண்டாயிரத்திற்குப் பிறகு கன்னட இயக்குனரான ஏ.எம்.ஆர். ரமேஷ் எடுத்த குப்பி என்ற படம் இந்த வகையில் நன்றாக வந்திருந்தது. ஆனால், இதே போல் சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் எடுத்த ‘வனயுத்தம்’ ரொம்பவும் சொதப்பலாக வந்திருந்தது. ராம் கோபால் வர்மாவும் இது போன்ற கதைகளைப் படமாக்குவதில் விருப்பமுள்ளவர். ஆனால், அவர் படங்களில் குற்றவாளிகள் முதன்மையானவர்களாக இருப்பார்கள்.
தமிழ்நாட்டில் நாம் அவ்வப்போது காணும் மோசடிச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, 2014 இல் வெளிவந்த ‘சதுரங்க வேட்டை’ படத்தின் மூலம் ரசிகர்களது கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் வினோத். அதில் கதாநாயகனாக மோசடிச் செய்பவரை வைத்திருந்தார். அதற்குப் பிராயசித்தமாகவோ, என்னவோ தனது இரண்டாவது படமான ‘தீரன் அதிகாரம் ஒன்றில்’ குற்றவாளிகளைக் கஷ்டப்பட்டு, திறமையாகப் பிடிக்கும் கடமை தவறாத தமிழ்நாட்டு போலீஸைக் கதாநாயகனாக வடிவமைத்து இருக்கிறார்.
சதுரங்க வேட்டையில் எப்படி ஒவ்வொரு மோசடியையும் ஒரு அத்தியாயமாகக் காட்டுவாரோ, அது போல் இதில் ஒரு குற்றக் குழுவை விரட்டி பிடிப்பதை, முதல் அதிகாரமாகக் காட்டி இருக்கிறார். இன்னும் தீரனின் பல அதிகாரங்கள் வர வாய்ப்புள்ளது. பல்வேறு நிஜ குற்றச் சம்பவங்களை இதைப் போல் சுவாரஸ்யமாகப் படமாக்கினால், நாமும் தாராளமாக வரவேற்கலாம்.
1995 இல் இருந்து 2005 வரை தமிழகத்திலும், இந்தியாவின் இதரப் பகுதிகளிலும் கொலை, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பவாரியா கொள்ளைக் கும்பலை எப்படித் தமிழகக் காவல் துறை கடும் போராட்டத்திற்குப் பிறகு பிடித்தது என்பதைக் கலங்கடிக்கும் த்ரில் காட்சிகளுடன், மிரட்டும் ஆக்ஷன் காட்சிகளுடன் இயக்குனர் வினோத், கார்த்திக்கு ஒரு வெற்றிப் படமாக அளித்திருக்கிறார். படத்தின் பலமாக வினோத் காட்டியிருக்கும் காவல்துறை விசாரணை நுணுக்கங்களைக் கூற வேண்டும். போலீஸ் தரப்பு நியாயங்களை வசனங்களில் சொல்லியிருப்பதைக் கூற வேண்டும்.
தொண்ணூறுகளில் தமிழக ஹைவேக்களின் ஓரத்தில் தனிமையில் இருக்கும் வீடுகளில் ஒரு மர்மக் கொள்ளைக் கும்பல் வீட்டில் இருப்பவர்களைக் கொடூரமாகத் தாக்கி, கொன்று, வீட்டில் இருக்கும் பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்துச் செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். கைரேகையைத் தவிர, வேறு எதையும் விட்டு செல்லாத அந்த மர்மக் கும்பலை எப்படித் தீரன் தலைமையிலான தமிழகக் காவல் துறை பல வட மாநிலங்களுக்குச் சென்று பிடிக்கிறார்கள் என்பதை விறுவிறுப்பான அதிரடிக் காட்சிகளுடன் காட்டி இருக்கும் படம்தான் தீரன் அதிகாரம் ஒன்று.
தீரனாகப் போலீஸ் கதாபாத்திரத்தில் மிடுக்காக வரும் கார்த்தி, ரகுல் ப்ரீத்துடனான காட்சிகளில் கொஞ்சவும் செய்கிறார். படித்ததை வேலையில் நடைமுறையில் பயன்படுத்தி, டிபார்ட்மெண்டில் தனியொரு ஸ்மார்ட் போலீஸாக வருகிறார் கார்த்தி. தடயங்களைத் தேடுவதாகட்டும், பணியில் போலீசார் சந்திக்கும் நெருக்கடிகள் ஆகட்டும், நடைமுறை சிக்கல்களைக் காட்டியிருப்பதில் பார்வையாளர்களுக்கு ஒரு ஆர்வத்தையூட்டி வெற்றிப் பெற்றிருக்கிறார்கள்.
அதே சமயம், டாக்குமெண்டரி டைப் மேக்கிங் இல்லாமல் கமர்ஷியல் ஃபார்மெட்டில் படத்தைக் கொடுத்திருப்பதில் இயக்குனரின் திறமை தெரிகிறது. கும்பலைக் கண்டுப்பிடித்த பிறகு அவர்களைக் கைது செய்யச் சிரமப்படும் காட்சிகள் இழுவையாகச் செல்கிறது. அவ்வளவு சிரமப்படும் அணிக்கு அதற்கேற்ற அங்கீகாரம் இறுதியில் கிடைக்காமல் போவது நடைமுறை உண்மையாக இருப்பினும், கமர்ஷியல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுப்பதாக முடிகிறது. அதே போல், ரகுல் ப்ரீத் வரும் காட்சிகள் கொஞ்சம் நேரத்திற்குக் குளுமையைக் கொடுத்தாலும், அதற்குப் பிறகு சோதிக்கும் விதமாகச் செல்கிறது. பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை.
வில்லனாக அபிமன்யூ சிங் மிரட்டியிருக்கிறார். சக போலீஸாக போஸ் வெங்கட், சத்யன், நாயகியின் தந்தையாக மனோபாலா ஆகியோர் படத்திற்குத் தேவையான தங்களது பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். இசையமைப்பாளர் கிப்ரான், ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன், படத்தொகுப்பாளர் சிவநந்தீஸ்வரன் ஆகியோர் படத்தின் பரபரப்புக் குறையாமல் பார்த்திருக்கிறார்கள். படத்தின் கிராஃபிக்ஸ் குழுவை (ஹைப்ரிட் ஸ்டுடியோஸ் செந்தில் & ஜெய்) முக்கியமாகப் பாராட்ட வேண்டும். பவாரியா இனத்தின் வரலாற்றை அதன் வீரியம் குறையாமல் அழகாகக் காட்டியிருப்பதில் இவர்கள் பெரும் பங்கு ஆற்றியிருக்கிறார்கள். லொக்கேஷன்களும், திலீப் சுப்பராயனின் சண்டைக் காட்சிகளும் படத்தின் குறிப்பிடத்தக்க பலங்கள்.
உண்மைக் கதையை மையமாகக் கொண்டு கமர்ஷியல் சமாச்சாரங்கள் சேர்ந்து, முடிந்தளவு நியாயமாகக் கொடுத்திருக்கிறார்கள் (அந்த இறுதி குத்துப் பாட்டு எரிச்சலான விஷயம்). இந்தப் படத்தின் மீதும் ஒரு பஞ்சாயத்து எழுந்துள்ளது. குற்றப் பரம்பரை இனத்தார் அனைவரையும் இயக்குனர் வில்லன்களது கதாபாத்திர வடிவமைப்பின் மூலம் புண்படுத்திவிட்டார் என்பது சீர்மரபினர் என்ற அமைப்பின் மீதான வாதம். யார் மனதையும் 100% புண்படுத்தாமல் படம் எடுப்பது என்பது சாத்தியமா என்று தெரியவில்லை. இயக்குனரும் நொந்துப் போய், இனி இது போன்ற கதைகளைத் தவிர்க்கப் போவதாகக் கூறியிருக்கிறார். இது போன்ற நெருக்கடிகள் படைப்பாளிகளுக்கு மட்டுமல்ல, வித்தியாசமான படைப்புகளை ரசிக்கும் ரசிகர்களுக்கும் தடையாக இருக்கப் போகிறது. எல்லோருக்குமே சகிப்புத்தன்மை தேவைப்படுகிற காலம் இது.
தீரன் – காவல்துறையின் வீரன்
- சரவணகுமரன்
Tags: Dheeran Athikaaram Ontru, கார்த்தி, தீரன் அதிகாரம் ஒன்று, பவாரியா