\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

எதிர்பாராதது – பாகம் 2

Filed in கதை, வார வெளியீடு by on December 3, 2017 0 Comments

 

* பாகம் 1 *

தொலைபேசி மணி அடித்தது. ரிங் டோனை வைத்து அது கங்காவின் செல் என்று அறிந்து பேசாமல் இருந்தார் தாமோதரன். அவளுக்கு ஃபோன் வந்தால் அவர் போய் எடுக்க மாட்டார். அவளே வந்து எடுக்கட்டும் என்று இருந்து விடுவார். அதுபோல் அவருக்கு ஃபோன் வந்தால் அவளும் போய் எடுப்பதில்லை. அடித்து ஓயட்டும், நமக்கென்ன என்று விட்டுவிடுவாள்.

இப்போது மணி அடித்துக் கொண்டேயிருந்தது.

நிற்கிறவரை அடிக்கட்டும்…எனக்கென்ன? என்று உட்கார்ந்திருந்தார். அவள் எங்கே என்ற எண்ணமும் இருந்தது. பாத்ரூம் போயிருக்கிறாள் என்று தெரிந்தது.

“ஏன், ஃபோனை எடுத்தா என்ன குறைஞ்சு போவீங்களா?”

“நான் எதுக்கு எடுக்கணும்? உனக்கு வந்த ஃபோன் ஆச்சே அது….?”

“அதனாலென்ன? எடுத்து யாருன்னு  கேட்கலாமில்ல…? இல்லன்னா பாத்ரூம் போயிருக்கா…கொஞ்சம் கழிச்சுப் பேசங்கன்னு சொல்லலாமில்ல….”

“அப்படி நான் செய்யணும்னா நீ முதல்லயே சொல்லணும்….ஃபோன் வந்தா எடுங்க…பாத்ரூம் போறேன்னு…இல்லாம நான் செய்ய மாட்டேன்….நீ உடனே வந்து எடுத்தா மட்டும் என் காதுக்கு விழக்கூடாதுன்னு தனியாக் கொல்லைப் பக்கம் போயிடறேல்ல…ஏன்? அதை நான் கேட்டா என்ன?”

“இதிலென்ன இருக்கு…சிக்னல் நல்லாக் கிடைக்கும் அங்கே…அதனால போறேன்…”

“அந்தச் சாக்குல வெளில போய் ரகசியம் பேசறே…அதானே….ஒண்ணு தெரிஞ்சிக்கோ….ரெண்டு பேர் இருக்கிற வீட்டிலே ரகசியங்கள் மெயின்டெய்ன் பண்ணாதே…அது நல்லதில்லே…”

“அப்போ நிறையப் பேர் இருந்தாப் பண்ணலாமா?”

“இந்தக் கேள்வி குசும்புன்னு உனக்கே தெரியலை? புத்திசாலித்தனமா கேள்வி கேட்கிறதா நினைப்பா?”

“ரகசியம் என்ன ரகசியம்? நீங்களா எதாச்சும் நினைச்சிட்டா அதுக்கு நான் என்ன பண்றது?”

“நானா நினைச்சிட்டா இல்லை….நினைச்சிக்கட்டும்னுதான் நீ அப்டிப் போறே….என்ன ரகசியம் வேண்டிக் கிடக்கு? உன் பையன் பேசாறான்னா பகிரங்கமாப் பேசு….அது எனக்கும் தெரியணும்….அவனோட பேசிட்டு, செய்ய வேண்டிய காரியங்களுக்கு நீ எனக்கு உத்தரவு போடுவே…நான் அதுக்கு ஓடணுமா? நீ ஏவுறதுக்கு மட்டும்தானா நான்? நானென்ன நீ வச்ச வேலைக்காரனா?”

“ஏவுறதென்ன? உங்களுக்கும் கடமையில்லையா?”

“எங்கடமையை உணர்த்துறதுக்கு நீ யாருடி? அது எனக்குத் தெரியும்…அதை நீ சொல்லி நான் உணர்ந்துக்கணும்ங்கிற நிலைமைல நான் இல்லை…. எங்களுக்கு அது பிறவியோட வந்தது… நாங்க வளர்ந்த வளர்ப்பு எங்களுக்கு அதைச் சொல்லிக் கொடுத்திருக்கு… எதாச்சும் வேணும்னா அவன் நேரிடையா என்கிட்டே சொல்லணும்… அவனுக்குச் சொல்லத் தெரியலைன்னா நீ சொல்லிக் கொடுக்கணும்… அதுதான் உன்னோட கடமை… ஒரு நல்ல தாயாருக்கு அதுதான் அடையாளம்…. பதிலா அவன் தன்னோட மட்டுமே நிறைய நேரம் பேசறான்னு காண்பிச்சிக்கிறதுக்கும், அதைப் பெருமையா நினைச்சிக்கிறதுக்கும் ஒண்ணும் இல்லே…. அதுல எந்தப் பெருமையும் இல்லை….”

“உங்களுக்கு வேணும்னா பெருமை இல்லாம இருக்கலாம்… எனக்கிருக்கு… என் கண்ணனைப்பத்தி எனக்குத் தெரியும்..”

“என்ன எனக்கிருக்கு? கிறுக்கு….. ஊர் உலகத்துல எல்லாரும்தான் பிள்ளை பெத்து வச்சிருக்காங்க… அந்தப் பிள்ளைங்கள்லாம் இப்டியா இருக்குங்க? போய்ப் பாரு…. தெரியும்… பசங்க அல்லது பொண்ணுங்க எப்டி இருக்குதுங்கிறதைத் துல்லியமா  கவனிச்சு, அதுகளுக்கு நல்லதைப் போதிக்கணும்… இந்த வயசுல மனசுல நல்லது படிஞ்சாத்தான் காலத்துக்கும் அது நிலைக்கும்…. டீன் ஏஜூக்கு முன்னாடியே மனசுல நல்லவைகள் எல்லாம் பதிஞ்சிடுச்சின்னா அது அவனுக்கும் நல்லது, நம்மளுக்கும் நல்லது….அவனுக்கு முதல்ல மரியாதை கத்துக் கொடு… இத்தனை காலம் அவன்கிட்டே மணிக்கணக்காப் பேசுறியே… அவன்ட்ட ஏதாச்சும் முன்னேற்றம் இருக்கா? படிக்கைல எப்படியிருந்தானோ அதே மாதிரிதான் இருந்திட்டிருக்கான் இப்பவும்….”

“அதுக்காக டீச்சர் மாதிரி அட்வைஸ் பண்ணிட்டே இருக்க முடியுமா?”

“நீ டீச்சர் மாதிரி இருக்க வேண்டாம்டீ… அம்மா மாதிரியே இரு… அம்மா ஸ்தானத்துல இருந்து நீ சொல்றதையே அவன் கேட்டா பெரிசு…! நான் நம்மளுக்கும் நல்லதுன்னு சொன்னது அவன் நம்மை வச்சுக் காப்பாத்தணும்ங்கிற  அர்த்தத்துல சொல்லலை… அவன் பாட்டை அவன் சரியாப் பார்த்துக்கிட்டாப் போதுங்கிற அர்த்தத்துலதான் சொன்னேன்…என்னைப் பொறுத்தவரை ஒண்ணுமில்லை… இன்னைக்கே எங்கயாச்சும் ரூம்ல போய் இருந்துக்கணும்னா நான் போயிடுவேன்… என்னால தனிமைல இருக்க முடியும்… அதுக்கான மனப்பழக்கமும், பக்குவமும் எனக்குண்டு….. நீ உன் பையனோட போய் இருந்தாலும் எனக்குக் கவலையில்லை. என்னை அழைக்காட்டாலும் பரவாயில்லை… எதைக் கொண்டு வந்தோம்… கொண்டு செல்லங்கிற தத்துவத்துல எனக்கு ரொம்ப நம்பிக்கை உண்டு… ஈடுபாடும் உண்டு…”

“உங்களுக்கு மட்டுமா, எல்லாருக்கும்தான்…..”

“உனக்கு அப்படி இருக்கிறதா எனக்குத் தெரில…என்னவோ பையன் உன்னையே சுத்திச் சுத்தி வருவான்னு நினைச்சு இயங்கிட்டிருக்கே நீ…. கல்யாணம் ஆகட்டும்…. அப்புறம் பாரு… பெண்டாட்டி குண்டிக்குப் பின்னாடி அவன் போகலே என்னை என்னன்னு கேளு…”.

“அப்படிப் போகணும்னு நீங்க உங்க மனசுல ஆசைப் படுறீங்க… அதனாலதான் அந்த வார்த்தை வருது… என் பையன் அப்டியெல்லாம் இருக்க மாட்டான்…”

“இப்டிச் சொன்னவங்க எத்தனை பேரை நான் பார்த்திருக்கேன்….”

“உங்களுக்கென்னப்பா வசதிக் கேடு… இங்கே தனி ரூமு, டி.வி.,நியூஸ் பேப்பர், மூணு தரம் காபி, வேளா வேளைக்குச் சாப்பாடு, வாராவாரம் டாக்டர் செக்கப்பு, வெளில படி இறங்கினா கோயில்…. இதுக்கு மேலே என்ன வேணும்? நான்தான் தவறாமப் பணம் அனுப்பிடறேனே இல்லத்துக்கு… அவங்க உங்களை எதுவும் கேட்கமாட்டாங்க…. நீங்கபாட்டுக்கு நிம்மதியா இருக்கலாம்…..”

“நேத்துத்தாண்டீ அந்த போஸ்ட்மாஸ்டர் சாம்பசிவம் சொன்னதை இந்தக் காதாரக் கேட்டேன்….என் கையைப் பிடிச்சிட்டு அழறார் அவர்…. ‘வீட்டோட வச்சிக்கணும்…. அன்பான வார்த்தை பேசணும், ஆதரவா இருக்கணும், வீட்டுக் காரியங்கள்ல தன்னைக்  கலந்துக்கணும்ங்கிற அக்கறையெல்லாம் இல்லாமப் போயிடுச்சேய்யா என் பையனுக்கு… இப்படி மாறுவான்னு நினைக்கவேயில்லை…. அவ அழகுல மயங்கிச் சரிஞ்சிட்டான்யா….. என் நாட்டுப்பெண் அவனைக் கைக்குள்ள போட்டுக்கிட்டாய்யான்னு’ பொலம்பினார் ..’உங்க வீட்ல மட்டும் இது பிரச்னையில்ல… பல வீடுகள்ல இதுதான் நிலமை… நிறையப் பேரு வாய்விட்டுச் சொல்றதில்ல…. சந்தோஷமா, திருப்தியா இருக்கிறதா நடிச்சிக்கிட்டு இருக்காங்க… மனசுக்குள்ள அழுதிட்டிருக்காங்க…. இன்னைக்கு தலைமுறை இடைவெளியான இந்த விஷயம் எல்லாத்துக்கும் பொது’ன்னு நான் சொன்னேன். என் நிலைமைக்கு நான் போய் அவருக்கு ஆறுதல் சொல்றதுக்கு என்ன அருகதை இருக்கு? ஆனா, சொன்னேன். வாயால நாலு வார்த்தை சொன்னா, அது ஒருத்தருக்குச் சமாதானமா இருக்கும்னா நஷ்டமா? அப்டியாவது ஒருத்தரை ஆறுதல் படுத்த முடியுதே…. மனுஷாள் ஏங்கிக் கிடக்கிறதே இந்த வார்த்தைகளுக்குத்தானே… பிரியமில்லையா? நடி அப்டியாவது அந்தப் பெரியவங்க மனச் சமாதானமா இருக்கட்டும்ன்னால் இந்தப் பொடிப் பசங்களுக்குத் தெரியுதா? இந்தத் தலைமுறைப் பையன் எவன் எந்தத் தந்தைட்ட ஆறுதல் வார்த்தை பேசறான். எல்லாப் பயல்களும் கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்திட்டிருக்கானுங்க… இயந்திரத்தோடு பழகிப் பழகி அவங்களுக்கு மனித உணர்ச்சிகளே அத்துப் போச்சு…. நம்ம பய என்ன வித்தியாசமாவா இருக்கான்… அவனும் இந்த லட்சணம்தான்.”

“என் பையன் ஒண்ணும் அந்த மாதிரிக் கிடையாது….”

“அதென்ன என் பையன்?… இத்தனை பேசற நானு, நம்ம பையன்னு சொன்னேன்… நீ என் பையன்ங்கிறே…? எப்டிப் பெத்தே என் உதவியில்லாம? அப்புறம் எப்டி என் பையன்னு சொல்ல மனசு வருது? அதுலயே தெரிஞ்சி போகுது உன் குறுகின மனசு….இந்த மாதிரியான உன்னோட பேச்சைக் கேட்கிற உன் பையனுக்கு எந்தப் புத்தி மண்டைல ஏறும்? நினைச்சிப்பாரு…? நாமதாண்டீ அவனை உருவாக்குறோம்…அவன் முன்னாடி நீ என்கிட்டே எப்டி இருக்கேங்கிறதைப் பொறுத்துத்தானே அவன் என்னை மதிப்பான்? அவன் முன்னாடி நான் எப்படி உன்கிட்டே பேசறேங்கிறதைப் பார்த்துத்தானே அவன் உன் கிட்டப் பேசுவான்? நாளைக்கு அவன் பெண்டாட்டிகிட்டே பேசும்போதும் நாம சொல்லிக் கொடுத்த இந்தப் புத்தி அங்கே வேலை செய்யத்தானே செய்யும்?”

“ஐயோப்பா,…. போதும் போதும் உங்க வியாக்கியானம்… .என்னை ஆளை விடுங்க… அவன் எதுக்குப் பேசினான்னு கேட்டுட்டு வர்றேன்…”. சொல்லிவிட்டு செல்லை எடுத்துக் கொண்டு பின்புறம் ஓடினாள்.

“எந்த சோப்புப் போட்டுத்தான் உன்னை வெளுக்கிறதுன்னு எனக்குத் தெரியலை… .பாரு… திரும்பவும் எடுத்திட்டுக் கொல்லைப் புறம் போறதை… .நீ திருந்த மாட்டடீ… அவனையும் இப்டியே பழக்கிட்டே…. பேசறதோ பேசற, அவனை முன்னேத்தப் பாரு…. வெறுமே பேசிப் பேசிப் பொழுதைப் போக்குறதுல என்ன இருக்கு பெருமை…? “

சொல்லிவிட்டு வெளியேறினார் தாமோதரன். கதவை ஞாபகமாகச் சாத்தி, உள்ளே கொண்டிபோட்டுவிட்டுப் புறப்பட்டார். அவள்பாட்டுக்குத் திரேகம் தெரியாமல் பேசிக் கொண்டிருப்பாள். என்னதான் அவன் அப்படிக் கதை பேசுவானோ, ம்…..ம்…..ம்….என்று “ம்“ கொட்டிக்கொண்டு கேட்டுக் கொண்டேயிருப்பாள். அவனுக்கும் அவன் கதைகளைச் சொல்ல வேற இடம் கிடைக்கவில்லை போலும்… ஆனால் ஒன்று நிச்சயம்…. இப்படி அவன் ஒன்றுமில்லாத விஷயத்தையெல்லாம் ஏதோ இருப்பதுபோல் சொல்வதும், அவை ரொம்ப விஷயார்த்தமானதாய் இவள் எடுத்துக் கொண்டு படு அக்கறையாய்க் கேட்டுக் கொண்டிருப்பதும்… இதற்கு முடிவே இல்லையென்றுதான் இவருக்குத் தோன்றியது. அந்த நேரத்தில் ஒரு புத்தகத்தின் முப்பது நாற்பது பக்கங்களைப் படித்து விடலாமே என்று தோன்றும் இவருக்கு.

‘ஏதாச்சும் விஷயம் உண்டா? விபரம் சொல்லணுமா? அல்லது ஏதாச்சும் செய்யணுமா? சீக்கிரம் சொல்லு…’.. – இப்படிக் காரியார்த்தமாய் இருந்துதான் இவருக்குப் பழக்கம்.

என்ன சொல்லி என்ன செய்ய? எது நம் கைக்குள் அடங்குகிறது? நாமாய் நினைத்துக் கொள்ள வேண்டியதுதான். எல்லாம் அடங்கியவைகள்தான் என்று. விடுவித்துக் கொண்டு எல்லாமும் பறந்து சென்றதை எவனால் உணர முடிகிறது? அனுபவம் பெறப் பெறத்தான் ஒவ்வொன்றாய் உணர வேண்டியிருக்கிறது. வயதிற்கும் அதற்கும் சம்பந்தமில்லை. வயது, தானாய் ஓடிக் கொண்டிருக்கிறது. வயதாகிவிட்டதாலேயே எல்லா அனுபவங்களும் வந்து விட்டது என்று பொருளாகுமா? ஆள் வளர்ந்து விட்டதால், அறிவும் வளர்ந்து விட்டது என்று சொல்லலாமா? எந்த அனுபவமும் கிட்டாமல் மரித்துப் போன மனிதர்கள் ஏராளம். எல்லா அனுபவமும் கிட்டியும், திருந்தாமல் போன ஜென்மங்கள் அநேகம். இப்படித்தான் இந்த உலகம் இன்றுவரை இயங்கிக் கொண்டிருக்கிறது.

பழுத்த அனுபவம் என்பார்கள் யாரைப் பார்த்தாவது. அவன் செய்ததெல்லாம் தகிடு தத்தங்களாயிருக்கும். பெரிய சாணக்கியன்யா அவரு…என்று மரியாதையோடு விளம்புவார்கள். நன்றாக உள்ளே நுழைந்து பார்த்தால் அந்த மரியாதைக்கு இம்மியும் தகுதி இல்லாதவராய் இருப்பார் அவர். இங்கே அவர் என்று விளிப்பது வயது கருதி மட்டும்தான். இப்படி இந்த லோகத்தில் எத்தனை பார்க்கிறோம்…?

போய்க்கொண்டேயிருந்தார் தாமோதரன். திர்ப்பட்டார் பஞ்சாபகேசன்.    அவரைப் பார்த்ததும் ஏதோவொரு பழைய திரைப்படத்தில் வெட்டியாய்த் திரிந்து கொண்டிருக்கும் விசுவின் கதாபாத்திரம்தான் ஞாபகத்திற்கு வரும் இவருக்கு. சரி, மாட்டியாயிற்று. இனி தப்பிப்பதற்கில்லை என்று எதிர்கொண்டார் அவரை.

“வயசு இருபத்திநாலுதான்யா  ஆகுது…. அதுக்குள்ளேயும் என்னய்யா கல்யாணம்… .எம்பொண்டாட்டி என்னைப் போட்டு அரிச்செடுக்கிறா… பொண்ணு கல்பனாவுக்கு உடனே கல்யாணம் பண்ணியாகணுமாம்….”

“சரிதானே…அப்புறம் எப்போ கல்யாணம் பண்றது… சரியான வயசுதானே இது…” -அடக்க முடியாமல் சொல்லி விட்டார் தாமு.. பிறகுதான் தெரிந்தது சொல்லியிருக்கக் கூடாது என்று. ஏதேனும் பதில் சொல்லப் போக அதுதான் சாக்கென்று பிடித்துக் கொண்டு விடுவார் பஞ்சு. பிறகு மனுஷனிடமிருந்து தப்பிக்க முடியாது. வம்புக்கு எதுடா இடம் என்று அலைபவர்.

“என்னய்யா சொல்றீர்,இப்பயே கல்யாணம் பண்ணிக் கொடுத்திட்டு அப்புறம் நானும் என் பொஞ்சாதியும் சோத்துக்கு சிங்கி அடிக்கிறதா? புரியாமப் பேசுறீரே…”

‘மனுஷனா இந்த ஆளு?’ என்று தோன்றியது தாமுவுக்கு. அவனவன் காலாகாலத்தில் ஒரு திருமணத்தை முடித்து எப்படா தள்ளி விடுவோமென்று துடித்துக் கொண்டிருக்கிறான். இந்தாள் என்னடாவென்றால் தன் பாட்டை நினைத்து பெண்ணின் கல்யாணத்தைத் தள்ளிப் போட நினைக்கிறார். எங்காவது இப்படி உண்டா? இந்த மனுஷன் எப்போ என்ன செய்வார் என்று யாராலும் சொல்ல முடியாது. திட்டமில்லாமல் மனதில் தோன்றியதையெல்லாம் செய்து கொண்டே போவார். பின் விளைவுகள் என்னாகும் என்று எதுவும் யோசிப்பதில்லை. இப்படிப்பட்ட மனுஷனை நம்பி யாரும் எதுவும் செய்ய முடியாது. தன் யோசனை இல்லாமல் எடுப்பார் கைப்பிள்ளை மாதிரி, காற்று அடிக்கும் பக்கம் எல்லாம் பறக்கும் கிழிந்த பேப்பர் மாதிரிப் போய்க் கொண்டேயிருப்பார். அவரது இப்படியான இருப்பினால் என்னெல்லாம் அனுபவிக்கப் போகிறாரோ? – தன் நண்பரைப் பற்றி இப்படி நினைத்து சற்றே வருத்தமுற்றார் தாமோதரன். அவருக்கு எந்த ஆபத்தும் வரக் கூடாது என்று அவர் மனசு கடவுளை வேண்டியது. உண்மையான நட்புக்கு அதுதானே அடையாளம்… ?

(தொடரும்)

–உஷா தீபன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad