\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

எதிர்பாராதது…!? (பாகம் 3)

Filed in கதை, வார வெளியீடு by on December 10, 2017 0 Comments

( * பாகம் 2 * )

ப்பா தனக்கு இப்போதைக்குக் கல்யாணம் பண்ணி வைக்க மாட்டார் என்று உறுதியாய் அறிவாள் கல்பனா. அம்மா பவானிதான் அரித்தெடுக்கிறாள். பஞ்சாபகேசன் அசைவதாயில்லை.

“உனக்கு ஒண்ணும் தெரியாதுடி….நாம என்ன ஆம்பிளைப் பிள்ளையா பெத்து வச்சிருக்கோம்…ஒரு பொண்ணுதானே இருக்கு…. உனக்கும் எனக்கும் பென்ஷனா வருது? ஏதோ வியாபாரத்தைப் பார்த்தேன்…. காலத்தை ஓட்டினேன். கஷ்டப்பட்டு ஒரு பொண்ணைப் படிக்க வச்சிட்டேன்… என் தங்கச்சி லலிதா இருந்தா… அவ வேலைக்குப் போனதால கூடக் கொஞ்சம் வருமானம் வந்திட்டிருந்திச்சி… இப்போ அவளும் இல்லை…. பிரிஞ்சிப் போயிட்டா… இவ இப்போ, வேலைக்குப் போனவுடனே, கல்யாணத்தைப் பண்ணி ஒருத்தன்ட்டத் தூக்கிக் கொடுத்திருங்கன்னா நல்லாயிருக்கே கதை…. பயிருக்குத் தண்ணி ஊத்தி, ஊத்தி, அதைப் பார்த்துப் பார்த்து வளர்த்துப்பிட்டு, பலனை எவனோ அனுபவிக்கிறதுன்னா? விட்ர முடியுமா? கொஞ்ச காலத்துக்காவது அது நமக்கு உரிமையில்லையா? அவளோட சம்பாத்தியம் நமக்குப் பயன்படக் கூடாதா? நல்ல நியாயமா இருக்கே…?”

“யாராவது இப்படிப் பேசுவாங்களா? பொண்ணை வச்சிட்டிருக்கிறவங்க யாரும் உங்களை மாதிரிப் பேச மாட்டாங்க….. எப்படா கல்யாணத்தைப் பண்ணி அனுப்பி வைப்போம்னுதான் துடிச்சிட்டிருப்பாங்க…. நீங்க என்னடான்னா நேருக்கு மாறா இருக்கீங்க…. வர்ற மாப்பிள்ளைகிட்டே கேட்டுக்கிடுவோம்…. எங்களுக்கு வேறே நாதியில்லே… எங்களையும் கூடத்தான் வச்சிக்கிடணும்…. அப்படியானாத்தான் எங்க பொண்ணைக் கட்டிக் கொடுப்போம்னு சொல்லிப் பார்ப்போம்…. யாராவது ஒரு மாப்பிள்ளை மாட்ட மாட்டானா? இல்ல நம்ம பொண்ணுக்குத்தான் சாமர்த்தியம் இருக்காதா? அப்டியா நம்மளக் கைவிட்ரும்?” – பதிலுக்கு ஆதங்கப்பட்டாள் பவானி.

“நீ சொல்றதெல்லாம் கவைக்கு உதவாது. கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி சரின்னு தலையாட்டி, பின்னாடி உதறி விட்டவங்களெல்லாம் எனக்குத் தெரியும்….. மாசா மாசா இவ்வளவு கொடுத்திருவோம்னு சொல்லிட்டுத் தாலியைக் கட்டினவனெல்லாம் எப்பவோ மாறிப் போயிட்டான். உங்களைக் கைவிடவே மாட்டேன்னு சொல்லிட்டுப் போன பொண்ணுக ஏராளம். எம்புருஷன்காரர் மாட்டேங்கிறார்…நான் என்னப்பா பண்றதுன்னு மூக்கைச் சிந்திக்கிட்டு நாடகம் போடுங்க…. பொம்பளைப் புள்ளைங்க கல்யாணம் கட்டியாச்சின்னா அப்புறம் தன் புருஷன், தன் குழந்தைங்க…. தன் வீடு, தன் வாழ்க்கைன்னு மாறிடுவாளுங்க…..”

“அதுக்காகப் பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணாமயே வீட்டோட வச்சிட்டிருப்பீங்களா? கன்னி கழிய வேண்டாமா? இது பாவமில்லையா?”

“பாவமாவது, புண்ணியமாவது? பாவ புண்ணியம் பார்த்தா   பிள்ளையே பெத்திருக்கக் கூடாது. யாரும் நினைக்காத, ஒரு எதிர்பாராத இடத்தில்தான் நான் என் பெண்ணைக் கொடுப்பேன். அதன் மூலமா நீயும் நானும் சாகுறவரைக்கும் சௌக்கியமா இருக்கணும்… அதுதான் என்னோட திட்டம்… இந்தத் திட்டத்துக்கு யார் குறுக்கே வந்தாலும், எவர் பேச்சையும் கேட்கமாட்டேன். நான் முடிவு பண்ணி வச்சிருக்கிறது யாருக்கும் தெரியாது. அது எனக்கு மட்டுமே தெரிஞ்ச ரகசியம்….!! பரம ரகசியம்..!!!”

என்ன பேச்சுப் பேசுகிறார் இந்த மனுஷன்? பவானியால் எதுவும் செய்ய முடியவில்லை. இதற்கு மேலும் பேசினால் சண்டைதான் வளரும். அண்டை அசலில் இருப்பவர்கள் சிரிப்பாய் சிரித்தாலும் அவர் கவலைப்படமாட்டார் என்பது தெரியும். ரொம்பவும் அடம் பிடித்தால் வெளியே போ என்று தன்னையே சொன்னாலும் சொல்லி விடுவார். தன் மனக்குறையை யாரிடமாவது கொட்டி அழ வேண்டும் என்றிருந்தது அவளுக்கு. யாரிடம் போவாள்? அவள் தங்கை லலிதாவிடம்தான் போயாக வேண்டும். அந்தக் குடும்பத்துக்கு ஆதரவாய் இருந்த பெண். அவளையும் விரட்டியாயிற்று…அசட்டுப் பிசட்டென்று அவளைச் சினிமாவில் சேர்க்கிறேன் என்று அலைந்தார். உன் அழகுக்கு நீ கோடி கோடியாச் சம்பாதிக்கலாம் என்று உளறிக்கொட்டினார். பயந்து போயேவிட்டாள் அவள். அவள் சம்பளத்தால்  வந்த வருமானமும் போனதுதான் மிச்சம். லலிதாவின் நினைப்பு வந்து பவானியை உலுக்கியெடுத்தது. பவானியின் சிந்தனை தடை படுவதுபோல் கத்திக் கொண்டிருந்தார் பஞ்சு.

‘இது என் வீடு…. நான் லோன் போட்டுக் கட்டின வீடு. இங்க என் பேச்சைக் கேட்டுட்டு கம்முன்னு இருக்கிறதானா இரு…இல்லன்னா நீயும் வெளியேறலாம்…. வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுதான்….’ எத்தனையோ முறை சொல்லியிருக்கிறார். அவருக்கு இன்னதுதான் பேசுவது என்றில்லை. இதே பேச்சை எத்தனை முறைதான் லலிதாவும் கேட்பாள். அவர் எதைத் திரும்பத் திரும்பச் சொன்னாரோ அது ஒரு நாள் நடந்தே விட்டது…. அந்தக் கதை தனி. அதுதான் அவளைச் சினிமாவில் சேர்க்க அலைந்த கதை. தெரியாத்தனமாய் லலிதாவை இழுத்துக்கொண்டு போய் ஒரு தவறான இடத்தில் விடுவதற்கு இருந்தார். போலீஸ்ல சொல்லி உங்களை உள்ளே தள்ளிடுவேன்…. ஜாக்கிரதை என்று மிரட்டி விட்டு வெளியேறி விட்டாள் லலிதா. அப்புறம்தான் தன் தவறை உணர்ந்தாரோ என்னவோ, அவரே சங்கடப்பட்டு உதறி விட்டார். அதற்குப்பின் சுதந்திரமாய் வாழ்கிறாள் லலிதா. சொந்தக் காலில் நிற்கிறாள்.

வீட்டை அடகு வைத்துக் கடன் வாங்கிக் கல்பனாவின் கல்யாணத்தை முடித்து விடலாம் என்று எத்தனையோ முறை சொல்லிப் பார்த்து விட்டாள் பவானி.  அந்தப் பேச்சே எடுக்காதே என்று விட்டார்.

 

“அப்போ எப்பத்தான் உங்க பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணப் போறீங்களாம்?”

“பார்ப்போம்…பார்ப்போம்…”. – இதுதான் அவர் பதில். தினமும் பார்க்கும் பழகும் நண்பர்களெல்லாம் அவரவர் பெண்டுகளைக் காலா காலத்தில் திருமணம் செய்து கொடுப்பதையும் பொறுப்பினைக் கழித்து ஹாயாக இருப்பதையும் பார்க்கத்தான் செய்கிறார். அப்படியும் புத்தி வர மாட்டேன் என்கிறதே…?

“அந்த மார்த்தாண்டம் இருக்காரே, அதான் உங்க வியாபார நண்பர்… எவ்வளவு சாமர்த்தியமா தன் பெண்ணைத் தள்ளி விட்டிருக்கிறார் பார்த்தீங்கல்ல?”

“இதிலென்னடி சாமர்த்தியம் இருக்கு? சூரத் கொள்முதலுக்குப் போகும்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் அந்தப் பையன் கூடவே போயிருக்கான். நாலுகடை தள்ளி சின்னக் கடையா வச்சிருக்கானேன்னு பெருகட்டும்னு எல்லாம் கத்துக் கொடுத்திருக்கார்… கத்துக் கொடுக்கிறதென்ன அவனே கத்துட்டிருக்கான்… பிளான் பண்ணியே இவர் கூடவே அலைஞ்சிருக்கான். வியாபார நுணுக்கங்களையெல்லாம் தெரிஞ்சிக்கிட்டான்…. இப்போ கடையைப் பெருக்கிட்டான்…. ஆளைக் குறி வச்சிட்டாரு…”

“இப்டியே பேசுங்க….உங்களுக்கு உங்க பேர்லயும் நம்பிக்கை கிடையாது…அடுத்தவங்களையும் தப்பாவே நினைச்சுப் பேசவீங்க….”

“அதுதாண்டீ உண்மை…. பத்துக்குப் பத்து கடைக்கு எதுக்கு சூரத் போகணும்… இங்கிருக்கிற ஈரோட்டுச் சந்தைல போய் கொள்முதல் பண்ணிட்டு வந்தாலே நல்ல லாபம் பார்க்கலாமே…. அப்டிப் பார்த்திட்டிருந்த பயதானே அவன்…. இவர்தானே அவனைச் சேர்த்துக்கிட்டார்…..”

“பார்த்தீங்களா… கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்ன சொன்னீங்க…? பிளான் பண்ணியே அந்தப் பய ஒட்டிக்கிட்டான்னீங்க…இப்போ அவர் சேர்த்துக்கிட்டாருங்கிறீங்க…”

“என்னதான் சேர்த்துக்கிட்டாலும் எல்லா நடைமுறைகளையும் புரிஞ்சிக்கிடறதுக்கு புத்தி வேணும்டி, புத்தி வேணும்…. அந்தத் திறமை அவனிட்ட இருந்திருக்கு…. பத்திக்கிடுச்சு…. பையனோட வளர்ச்சிய கூர்மையா கவனிச்சிட்டு வந்தவர்… சமயம் பார்த்துக் கோழி அமுக்கிற மாதிரி அமுக்கிட்டாரு…. அதத்தானே நான் அழுத்தி அழுத்திச் சொல்ல வர்றேன்… அப்டி ஒரு பய நம்ம பொண்ணுக்குக் கிடைக்கணும்னு…. அப்டிக் கிடைச்சான்னா நம்மளயும் கைவிட மாட்டான்…. நம்பிக்கையா மிச்ச நாட்கள ஓட்டலாம்…. நான் உன்னையும் சேர்த்து இழுத்திட்டேல்ல யோசிக்கிறேன்…. நீ என்னடான்னா என்னைப் புரிஞ்சிக்கிடவே மாட்டேங்கிறியே?”

“அந்த ரங்கன் மாப்பிள்ளை மாதிரி நம்ப கல்பனாவுக்கும் கிடைக்கணுமே?”

“ஏன் கிடைக்காது? கண்டிப்பா கிடைக்கும்… நம்பிக்கையோட இரு… பொண்ணுகளுக்கு இருபத்தி ஏழு, எட்டுல கல்யாணம் பண்றதில்லையா? அது மாதிரி நடத்திட்டுப் போறோம்….?”

“அந்த வயசெல்லாம் பசங்களுக்குத்தாங்க பொருந்தும்… பொம்பளப்பிள்ளைங்களுக்கு இருபத்தி அஞ்சே ஜாஸ்திங்க….”

“அப்போ என்ன செய்யச் சொல்றே? எவன்ட்டயாவது தள்ளிவிட்டுட்டு, கையில திருவோட்டை ஏந்திட்டு நிக்கச் சொல்றியா? அதெல்லாம் இல்லை… பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணி, வசதி வாய்ப்போட இருக்கிறவன் இவன் ஒருத்தன்தான்யான்னு ஊர் சொல்லணும்…. அப்டி ஒரு மாப்பிள்ளையைப் பிடிப்பேன்…. வலைவீசிப் பிடிக்கிறேனா இல்லையா பாரு….? –நான் வீசுற வலைல ஒரு திமிங்கிலமே மாட்டப்போகுதாக்கும்….” சவால் விடுவதுபோல் சொன்னார்  பஞ்சாபகேசன்.

அப்படி அவர் சொன்னபோது அவர் மனதில் அந்தக் கனவு ஓடிக் கொண்டிருந்தது. அந்தக் கனவும் வீட்டு ஜன்னல் வழி கண்ணுக்குத் தெரிந்தது. தினமும் தெரிந்து கொண்டுதான் இருக்கிறது. அவர் ஆசைகளை வளர்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

தெருவின் எதிர்ச்சுவரில் ஒட்டப்பட்டிருந்த அந்த சினிமாப் போஸ்டரில் கையில் ஓங்கி வீசிய சவுக்கோடு எதிரிகள் நாலைந்து பேரைப் புரட்டி எடுத்துக் கொண்டிருந்தான் ரசிகர்களின் கனவு நாயகன் பிரேம்குமார். பாலா என்கிற பாலசுந்தரம் இன்று பிரபல நடிகர் பிரேம்குமாராகி அவன் வெட்டி பயலாய்த் திரிந்த இந்த ஊருக்கே அவன் நடித்த படங்கள்  வந்து போய் விட்டன. இன்று நம்மைக் கண்டால் பிரியமுடன் வந்து கட்டிக் கொள்ளமாட்டானா?

“மாம்மா…..மாமோய்……” அப்படித்தானே துள்ளுவான்…அந்தத் துள்ளல் அதற்குள்ளுமா மறந்து போயிருக்கும்?

தன் அம்மா வழிக்குத் தூரத்து உறவான ரங்கபாஷ்யம் இப்போது சினிமாத் தயாரிப்பாளராய் சென்னையில் கொடிகட்டிப் பறக்கிறார். என் பெண் கல்பனாதான் எத்தனை அழகு? அந்த ரங்கபாஷ்யம்தான் அவன் சமீபத்திய படங்களைத் தயாரித்தவர். அவரிடம் சொல்லி அந்தப் பிரேம்குமாரைப் பிடித்துப் போட்டால் என்ன? பெரிய்ய்ய்ய கனவோ?

“என்னங்க, சுத்தப் பைத்தியக்காரத்தனமா இருக்கு …உங்களுக்கென்ன கிறுக்குப் பிடிச்சுப் போச்சா…? இன்னைக்கு அவன் இருக்கிற நிலைமை என்ன? நம்ம இருப்பு என்ன? எதாச்சும் யோசிச்சீங்களா? சினிமாக்காரனுக்குக் கொண்டு கொடுத்தா, வச்சு வாழ்வானா? கொஞ்ச நாள்ல வேறொருத்திய வச்சிக்கிட்டான்னா? இவளைக் கழட்டி விட்டுட்டான்னா நம்ம பொண்ணு வாழ்க்கை என்னாகுறதுங்க? எதாச்சும் யோசிச்சுத்தான் பேசுறீங்களா?”

“இந்த ஊர்ல சுத்தின பயல்ங்கிறதால, நம்ம பொண்ணை அவன் தலைல கட்டிட முடியும்ங்கிற உங்க நினைப்பு உங்களுக்கே கேலியாத் தெரிலயா?  அவனோட இன்னைக்கு இருப்பு என்ன? பிழைப்பு என்ன? வருமானம் என்ன? நீங்களெல்லாம் அவன் மனசுலயாவது இருப்பீங்களா? அந்தப் பாலா ரெண்டு மூணு வாட்டி நம்ம வீட்டுக்கு வந்திருக்கான், சாப்பிட்டிருக்கான்ங்கிறதையெல்லாம் இப்பப் போய்ச் சொன்னா தெரிஞ்ச மாதிரி அவன் காட்டிக்குவானா? அவன் அந்தஸ்தே இன்னைக்கு எவ்வளவு உயரத்துல இருக்கு? எதாச்சும் புரிஞ்சிதான் பேசறீங்களா?”

பவானி அவள்பாட்டுக்குப் பேசிக் கொண்டிருந்தாள். காதில் விழுந்ததா இவருக்கு? அவர்தான் நினைத்ததை முடிப்பவன் ஆயிற்றே…! ஜன்னல் வழி தெரிந்த பிரேம்குமாரைக் கண்டுகொண்டே அசாத்தியமான  கனவுகளில் மிதக்கலானார் பஞ்சாபகேசன். அவர் மனசில் அப்போதே கல்யாணம் நிச்சயம் ஆகிவிட்டது எனலாம். மனுஷனின் கற்பனைகளுக்கு எல்லை உண்டா என்ன? கனவு காணும் வாழ்க்கை…… இந்த இடத்தில்தான் யாரும் எதிர்பார்க்காதபடிக்குக் கதையின் போக்கே மாறிப் போகிறது.

   உஷாதீபன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad