அமெரிக்கக் குடிவரவு மாற்றங்கள் 2017
2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்கக் குடிவரவு சட்டக் கையாளல்கள் பல்வேறு மாற்றங்களிற்கும் உள்ளாகியுள்ளது. இது சென்ற வருட சனாதிபதி தேர்தல் வாக்களிப்புகளின் பிரதி விளைவாக உருவாகியுள்ளது எனலாம். புதிய அமெரிக்க சனாதிபதி டோனல்ட் டிரிம்ப் பதவியேற்றதிலிருந்து ஏறத்தாழ 21 குடிவரவுத் தணிப்புக் கட்டளைகள் அமுலுக்கு வந்துள்ளன. இது சில அரசியல் ஐதீகங்கள் அடிப்படையில் அமைந்திருப்பினும் இந்தத் திருப்பம் அமெரிக்கப் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வாறு வழி வகுக்கும் என்பது கேள்விக்குரிய விடயமே.
சென்ற ஐம்பது ஆண்டுகளில் நடைமுறையில் இல்லாதது இன்று நடைபெறுகிறது.
அமெரிக்க நிலத்தில் காலெடுத்து வைக்கும் வெளிநாட்டவர் அனைவரும் அமெரிக்கக் குடிபுகு, எல்லைத் தடுப்பு இலாக்கா ஊழியர்களால் வெகுவாக கேள்விக் கணைகளுக்கு உள்ளாகின்றனர். ஏன் அவர்கள் அடிப்படை உரிமைகளே அமெரிக்க சாசனத்திற்கு அப்பால் போயுள்ளது என்றும் வாதாடுகிறார்கள் குடிவரவுச் சட்ட வழக்கறிஞர்கள்.
இது பெரும்பாலும் இவ்வருடம் வந்து திரும்பிய பல வெளிநாட்டுப் பயணிகளின் அனுபவம். குறிப்பாக மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்க இஸ்லாமிய நாடுகளிலிருந்து வருபவர்களும், அரபு மொழி சார்ந்த பெயர்கள் கொண்டவர்களும் பல வகையிலும் அசெளகரியம் அடைகின்றனர் . இதைத் தவிர தொடர்ந்தும் ஸ்பானியம், போர்த்துக்கேயம் பேசும் தென் அமெரிக்கக் கண்டத்திலிருந்து வருகை தருவோரும் அமெரிக்க நாட்டு விமான நிலையங்களில் பல இன்னல்களுக்கு உள்ளாகின்றனர்.
மேலும் அமெரிக்க நாட்டுப் பிரசைகளின் உறவினர்கள் வந்து செல்லவும் அனுமதிகள் வழங்குவதும் இவ்வருடம் குறைக்கப்பட்டுள்ளது. இதனை அமெரிக்க மக்கள் உரிமை ஒன்றியங்களும், பாதிப்புற்ற மக்கள் சார்பில் வாதாடும் வழக்கறிஞர் ஒன்றியங்களும் தெரிவிக்கின்றன. மேலும் இந்த அவசர ஆணைகள் நியாயமற்றவை என்று வாஷிங்க்டன், கலிஃபோர்னியா, மினசோட்டா மற்றும் ஹவாய் போன்ற மாநிலங்களும் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுத்துள்ளன.
வெளிநாட்டு வேலையாட்களை அமெரிக்காவில் அனுமதித்தல்
சென்ற வருடம், மினசோட்டா மாநிலத்தில், 21,000 வெளிநாட்டு தொழிநுட்ப வேலையாட்களைப் பெற்றுக்கொள்ள அனுமதி விண்ணப்பங்கள குடிவரவு இலாக்காவிற்கு் ஒப்படைக்கப்பட்டன.
ஆயினும் இந்த வருட நிலவரமோ வேறுபட்டது. பல மினசோட்டா மற்றும் அயல் மாநில தற்காலிக மற்றும் நிரந்தர கணினி தொழில்நுட்ப வேலை தரும் தொழில்தாபனங்கள புதிதாக விசா பெறுவதைக் குறைத்துள்ளன.
அமெரிக்கப் பொருள், சேவைகளையே வாங்குங்கள் என்ற வெள்ளை மாளிகை மனு பலரையும் சிந்திக்க வைத்துள்ளது. மேலும் சித்திரை மாதம் இயற்றப்பட்ட அமெரிக்க அதிபரின் செயற்குழு ஆணையான ‘அமெரிக்கப் பொருட்களை வாங்குதலும், அமெரிக்கர்களை வேலைக்கமர்த்துவதும்’
பல நிறுவனங்களைத் தமது தொழிலாளர் தேவைகளை பூர்த்தி செய்வது பற்றி மீழச் சிந்திக்க வைத்துள்ளது. இது H1-B,EB,LC விசா அனுமதிகளை நேரடியாகப் பாதித்துள்ளது.
இந்தியத் துணைகண்டப் பகுதியிலிருந்து வரும் கணினி வல்லுனர்களையும் அவர்கள் இந்நாட்டில் வேலை செய்யப்பெறும் அனுமதிகளையும் பாதித்துள்ளது. மேலும் இந்த விசா எண்ணிக்கை குறைப்பு பற்றி கேட்ட மைக்ரோசாஃப்ட், கூகிள், ஃபேஸ்புக் போன்ற பிரமாண்டமான நிறுவனங்களுக்கும் வெள்ளைமாளிகை தமது மறுப்புக் காரணத்தை சொல்லியுள்ளது.
தற்போது, பிற நாட்டு கணினி நிறுவனங்கள், குறிப்பாக பாரிய இந்திய தாபனங்கள், சூசகமாகக் குடிவரவு அனுமதிகளைப் பெற்று, ஊரில் சொல்லுவது போல இடம் கொடுக்க மடம் பிடிக்க முனைகிறார்கள் என்கிறது குடிவரவு அலுவலகம். இவர்களின் பிரதான குற்றச்சாட்டு தகுதியற்ற ஊழியர்கட்கு உரிய ஊதியம் வழங்காமல், அதே சமயம் உயர் திறமை கொண்டவர்களென காட்டி அனுமதி பெறுகிறார்கள் என்பது.
இதில் குறிப்பாக காக்னிசன்ட், டி.சி.எஸ். போன்ற நிறுவனங்களின் குடிவரவு விண்ணப்பங்கள் விசேட பரிசீலிப்பிற்குப் போயுள்ளனவாம். இது நிச்சயமாக அவரவர் கண்களில் வித்தியாசமாகப்படலாம், ஆயினும் குடிவரவு அனுமதி என்ற விடயத்தில் பாதிக்கப்படுவோர் நடுத்தர மக்கள், அவர்கள் நாளாந்த வாழ்க்கை, தொழில் எனலாம்.
இவ்வருடம் அமெரிக்கக் குடிவரவு அனுமதி பெற வேண்டிய பலரும் பல்வேறு புதிய சோதனைகளிற்கு உள்ளாக வேண்டி வந்துள்ளது.
உக்கிர ஆய்வு (Extreme vetting) என்றால் என்ன?
அமெரிக்க மண்ணில் பாதுகாப்பின்மையை உண்டு பண்ணக் கூடிய செயல்களைத் தடுப்பதாகக் கூறி அவசரச் சட்டங்கள் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. இவற்றில் குடிவரவுத் திணைக்கள எல்லைக் காப்பு (Homeland Security) ஊழியர் பிரதானமாகக் கேட்பது ” இவ்விடம் வருபவர்களின் அமெரிக்காவைப் பற்றிய உண்மை அபிப்பிராயம் என்ன” என்பதே ஆகும்.
இவ்வருடம் பல தற்காலிக குடிவருகை அனுமதிகளும் மறுக்கப்பட்டுள்ளன. நியாயமாக ஐ.நா. சபை பரிந்துரைப்படி அகதிகள் அந்தஸ்து பெற்ற மக்களே புறக்கணிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் குடிவரவு அனுமதி பெறச் செல்லுகையில் அவர்களது கைத்தொலைபேசிகள் ஆய்வுக்குடுத்தப்பட்டு, உடன் எடுத்து வர அனுமதி மறுக்கப்பட்டதாம்.. இதை எதிர்த்த பலர் அடுத்த விமானத்தில் திருப்பியனுப்பப்பட்டும் உள்ளனர்.
இதைப் பல்வேறு நாட்டிலுள்ள தூதரகங்களில், நேர்முகக் கேள்வி விடை பொழுது கேட்பது மட்டுமல்லாது, நாட்டின் உள்வரும் போது கைத்தொலைபேசி, கம்ப்யூட்டர்களையும் தகவல்கள் தேட நிர்பந்திக்கப்படப் படுகிறது. இது நேரடியாக மின்னஞ்சல், சமூக வலயங்கள், மற்றும் தகவல் பரிமாறும் மென்பொருட்களை ஆராய்வதற்காகவேயாகும்.
குடிவரவு மீறல் உடன் அகற்றலும் தற்காலிக கட்டளை நிறுத்தல்களும்
2017 இல் புதிய சனாதிபதியின் நேரடிக் செயற்குழு சட்டம், இதனை மீறியவர்கள் பலரது அகற்றல் விளைவுகளுக்குக் காரணிகளாக அமைந்துள்ளது. மினசோட்டா மாநிலத்திலும் இவ்வருடம் பல குடும்பங்கள் நாட்டை விட்டு இவ்வருடம் அகற்றப்பட்டுள்ளனர்.
சிறு வயதில் தமக்கும் தெரியாமல் தாய் தந்தையர் களவாகக் கொண்டு வந்து, அதன் பின் இன்னாடே தம் நாடு என வளர்த்த பிள்ளைகளைக் குடியகற்றல் நியாயமற்றது சென்ற அரசு, வயதுக்கு வந்த அனுமதியற்ற புகலிகளை திருப்பி அனுப்பும் முடிவை தள்ளிபோட்டது. (Deferred Action for Childhood Arrivals-DACA). இந்த முறமையையும் தற்காலிக அரசு படிப்படியாக இந்த வருடமே தகர்த்து எறிந்துள்ளது.
இதற்காக உள்நாட்டுப் பாதுகாப்பு இலாக்காவிற்கு (Department of Homeland Security) உடன் அமூல் ஆணைகளும் அறிவித்தல்களும் தரப்பட்டுள்ளன.
இதுவரை நான்கு உடன் அமுல் ஆணைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இரண்டு வெளியேற்றம் மற்றும் உடன் தடை ஆணைகள் மற்றும்
இரண்டு தகவல் கைப்பற்றல், அன்னியத் தீவிரவாதத் தடை ஆணைகளும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அமுலுக்கு வந்தன
பல வெள்ளை மாளிகை நாட்டுப் பாதுகாப்பு அறிவித்தல்கள் (memos) தரப்பட்டுள்ளன.
இதுவரை அமெரிக்கக் காங்கிரஸ் குடிவரவுச் சட்டங்கள் எதுவும் உருவாக்காவிட்டாலும் வெள்ளை மாளிகை மும்முரமாகக் குடிவரவு தடைகளை, தமது சனாதிபதியின் செயற்குழு ஆணை மூலம் உருவாக்கியுள்ளதை தெளிவாக உணரமுடிகிறது. சென்ற அரசாங்கத்திலும் சனாதிபதி ஒபாமா காங்கிரஸ் ஊடுபோய் சட்டங்கள் உருவாக்குது கடினம் என்று தெரிந்த போது செயற்குழு ஆணைகள் மூலம் பல விடயங்களை அமுலுக்குக் கொண்டு வந்தார்.
முன்னாள் அதிபரின் பல கட்டளைகளைக் கிழித்து எறிந்து, தமது கொள்கைக்குச் சாதகமாகப் புதிய தற்காலிகக் கட்டளைகளை உருவாக்கி வருகிறார் தற்போதைய அதிபர்.
இதனை எதிர்த்து அமெரிக்க நீதிமன்றங்கள் கடந்த மாசி மாதத்தில் இருந்து இன்று வரை பல அத்துமீறல் முறைப்பாடுகள் சட்ட ரீதியில் கொணரப்பட்டு, வாதாடப்பட்டு வருகின்றன. மார்கழி மாதம் இவ்வகை குடிவரவு இறுக்கம், நாட்டுப் பாதுகாப்பிற்கே என்ற வாதாடலில் உச்சி நீதிமன்றத்தில் வெள்ளைமாளிகைச் சட்டத்தரணிகள் தற்காலிக வெற்றியை அடைந்துள்ளனர்.
புதிய மத்தியரசின் நீதித்துறை, குடியுரிமை அனுமதியில்லாத மக்களுக்கு புகலிடம் கொடுக்கும் மினியாப்பொலிஸ், சான்பிரான்சிஸ்கோ போன்ற நகரங்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகக் கூறியுள்ளது .
ஆயினும் பல கிறிஸ்த்தவ சமய அமைப்புகளும், நகரங்களும் இதை எதிர்த்துத் தொழிற்பட்டவாறுள்ளன. இந்த குடிவரவுக் கட்டளைகள் பற்றிய வாதாடல்கள் 2018 இல் தொடரும் என்பது தெளிவாகத் தெரிகிறது.
இதன் பரிவிளைவுகளை அனுபவிப்பவர் பெரும்பாலும் புதிதாக நாட்டிற்கு உல்லாச ரீதியில் வரும் உலக மக்கள், அவர்களது அமெரிக்க உறவினர், நண்பர்களுமே. வயோதிப உற்றார், உறவினர தமது வருங்காலச் சந்ததிகளை அமெரிக்காவில் வந்து பார்த்துப் போக முடியாது. அமெரிக்கப் பொருளாதாரத்தின் அத்திவாரம் நாட்டின் மூலப்பொருட்கள், மற்றும் கடுமையாக உழைக்கும் குடிபுகுந்த சந்ததிகளினால் தான் உருவாக்கப்பட்டது. என்பதை நினைவூட்டுகிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள் . மேலும் வரும் ஆண்டுகளில் இக்குடிவரவு தடைகள் நீடிப்பது, அடிப்படை அமெரிக்கப் பொருளாதாரத்தையே உருக்குலைய வழி வகுக்கலாம்.
இதை ஆழ்ந்து, ஆராய்ந்து சமரசமான சட்டங்களை உருவாக்கிக் கொள்ளும் பொறுப்பு அமெரிக்கக் காங்கிரஸின் கையில் தான் உள்ளது. இதைத் துரிதமாக மக்கள் பிரதிநிதிகள் காங்கிரஸில் உருவாக்க வாக்கிடும் பிரசைகள் யாவரும் உள்ளுர் வேட்பாளர்களை, பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்து நிர்பந்திப்பது அவசியம். மேலும் குடியேற்ற சட்டதுறை, (www.ilcm.org) போன்ற தாபனங்கள் மூலமும் மேலதிகத் தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
தொகுப்பு – ஊர்க் குருவி
Tags: H1B, Immigration, Undocumented, Visa, குடிவரவு, விசா