அருவி – திரை விமர்சனம்
தவிர்க்கவே முடியாத, தவிர்க்க கூடாத ஒரு சினிமா தமிழில் வந்திருக்கிறது. போஸ்டர் டிசைன், டீஸர், ட்ரைலர், பாடல்கள் என ஏகத்துக்கும் எகிறிவிட்ட எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்திருக்கிறதா இந்த அருவி என்றால், நிச்சயமாகச் செய்திருக்கிறது, சொல்லப் போனால் எல்லா எதிர்பார்ப்பையும் மீறி இருக்கிறது இந்தப் படம். ஜோக்கர், தீரன் இப்போது அருவி போன்ற நல்ல படங்களைக் கொடுக்கும் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்குப் பாராட்டுகள். இப்படி ஒரு கதையையும் காட்சியமைப்பையும் யோசித்த இயக்குனருக்கு அன்பின் முத்தங்கள்..
சரி படத்துல அப்படி என்னதான் இருக்கு? சமூகம் கிழித்த அனைத்து கோடுகளுக்குள்ளும் அடங்கி வாழும் ஒரு சராசரி நடுத்தரக் குடும்பத்தின் மூத்த பெண் அருவிக்கு வரும் ஒரு பிரச்சனையில், அவளை நம்பாமல் வீட்டை விட்டு வெளியேற சொல்கிறார்கள் அவளது பெற்றோர்கள்.. ஆதரவற்ற, 24 வயதேயான ஓர் அழகான இளம்பெண் இந்தச் சமூகத்தைத் தனியாக எதிர்கொள்ளும் போது சந்திக்கும் பிரச்சனைகளும், அதை அவள் கையாளும் விதமும் தான் கதை.
மேலோட்டமாகப் பார்க்கும்போது சாதாரண, தமிழ் சினிமாவில் அதிகம் வந்துவிட்ட கதை போலத் தோன்றினாலும் கதை சொன்ன விதம், காட்சியமைப்பு, அருவி எடுக்கும் ஆயுதம் எல்லாம் சேர்ந்து இந்தப் படத்தை வேறு தளத்திற்குக் கொண்டு செல்கிறது. ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உதவி கேட்டு செல்லும் அருவியைப் படுக்கையில் தள்ளும் ஒரு அழுக்கான மனிதனுக்கு உயிர் பயத்தைக் காட்டும் அருவி, அவனிடம் அடிவாங்கிக் கலங்கும் அருவி, கடைசியாகத் துப்பாக்கி முனையில் அவனுக்குள் இருக்கும் ஈரமான, களத்து தோசை சுட்டு கொடுத்த, தனக்கு உறவில்லாத பணியாரக் கிழவிக்காக அழும் ஒரு குழந்தை மனசை வெளியே இழுத்துக் காட்டி கண்ணீரால் அவன் அழுக்கைக் கழுவி அவனுக்கு மன்னிப்பைத் தண்டனையாகத் தருகிறாள். தன்னை வெறும் உடலாகப் பார்க்கும் இந்தச் சமூகத்தின் மீது வைத்திருக்கும் பேரன்பின் உச்சமாக மன்னிப்பை வழங்கி செல்கிறாள் இந்த அருவி.
முன்னும் பின்னும் நகர்ந்து கதை சொல்லும் உத்தியில் எடிட்டிங்கின் நேர்த்தி பிரமிக்க வைக்கிறது. அருவி கொட்டும் அந்த அழகான கிராமம், படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் எடுக்கப்பட்ட அந்த ஸ்டூடியோ, கேம்ப், அன்றில் குடில்கள் என கேமரா அந்தந்த இடங்களை அள்ளி வந்து தந்திருக்கிறது. பாலா, மிஷ்கின் படங்களில் கூட ஏதோ ஒரு காட்சி பார்வையாளனைத் தாக்காமல் மிதக்கும். அந்த இடங்களில், இளையராஜா அந்தக் காட்சியை அப்படியே எலிவேட் செய்து நம் மனதில் வந்து சொருகிவிட்டு செல்வார். அப்படியாக, தான் இருப்பது துருத்திக்கொண்டு தெரியாமல் அதே சமயம் காட்சியின் அழுத்தத்தை அதிகரிக்கும் பின்னணி இசை இந்தப் படத்தின் பெரிய பலம். பாடல்களும், ஒலிப்பதிவும் சிறப்பாகவே உள்ளது.
இழப்பதற்கு எதுவும் இல்லாத கட்டற்ற சுதந்திர உணர்வு தரும் ஆகச்சிறந்த தைரியத்தில் அருவி செய்யும் அனைத்தும் நம்மை அதிர வைத்து , அழ வைத்து, சிரிக்க வைத்து, நெகிழவைத்து எல்லா வித உணர்ச்சியையும் நமக்குள் கடத்துகிறது. எல்லாவற்றிக்கும் மகுடம் வைத்தது போல் மிகச்சிறப்பாக அமைந்திருப்பது எல்லோருடைய நடிப்பும். ஒவ்வொரு ஃபிரேமிலும் கடைசியில் இருக்கும் ஆள் கூட சிறப்பாக நடித்து காட்சிக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.
லேசான தெத்து பல்லும் படபடக்கும் கண்களுமாக, அதிதி கொஞ்சம் தலையைத் தாழ்த்தி சிரிக்கும் அழகுக்கே படத்தை இன்னொரு முறை பார்க்கலாம்.. துறுதுறு இளம்பெண்ணாகவும், உடலிலும், மனதிலும் வலி சுமக்கும் பெண்ணாகவும், துப்பாக்கி முனையில் எல்லோரையும் மிரட்டும் கோபத்திலும், மன்னிப்பைப் பரிசளிக்கும் கடவுளாகவும், அனாயசமாக நடிக்கிறார் அதிதி பாலன்.. கண்டிப்பாகத் தேசிய விருது வாங்குவார்.
பாட்டில் சுத்திவிடும் ஆஃபீஸ் பாய் சுபாஷ், ஏழாம் வாய்ப்பாடு சொல்லும் ஒரு கடைநிலை ஊழியர்; ‘இந்த ஆம்பளைங்க அரவாணிய வச்ச கண்ணு வாங்காம பாக்குறாங்க, நாங்க என்ன அவ்வளவு அழகாவா இருக்கோம்?’ என்று கேட்கிற அருவியின் திருநங்கை தோழி எமிலி, சானிடரி நாப்கினைக் கடனாகக் கேட்டு அவமானப்படும் பள்ளி தோழி, அருவியின் மீது ஈர்ப்பு கொண்ட, கே.எஸ் .ரவிக்குமார் காலத்து நாட்டாமை கதை சொல்லும் ஒரு உதவி இயக்குனர், ஷூட்டிங் பிரேக்கில், ECR இல் உள்ள வீட்டுக்கு அருவியை வார இறுதியைக் கொண்டாட வரச் சொல்லும் இயக்குனர், எளிய மனிதர்களின் அந்தரங்கங்களைத் தொலைக்காட்சியில் காட்டி அதற்குப் பஞ்சாயத்து செய்து 4 மணி நேரத்துக்கு முப்பது ஆயிரம் ரூபாய் வாங்கும் அந்த நடிகை, எல்லோரும் மனதில் ஒட்டிக் கொள்கிறார்கள்.
அடுத்த வேளை உணவுக்காக வாட்ச்மேன் வேலை பார்க்கும் 62 வயதான தாத்தா அவர் வாழ்க்கையில் எதிர்பார்க்கவே வாய்ப்பில்லாத ஒரு அற்புதத் தருணத்தில் அழகான ஒரு உயர்குடி பெண்ணிடம் தன் மனதின் ஆழத்தில் கிடந்த காதலை வெளிப்படுத்தும் விதம், அதைக் கேட்ட அந்த பெண்ணும், அருவியும் சிரிப்பதைப் பார்த்து அவர் வெட்கப்படும் காட்சி எல்லாம் காமிராவில் எழுதிய கவிதை. இப்படி எல்லா மனிதனுக்குள் இருக்கும், அவர்கள் மறந்துவிட்ட அல்லது இழந்துவிட்ட , குழந்தையை , காதலனை , நல்லவனை மீட்டெடுத்து அவர்களுக்கே பரிசளித்த விதத்தில் நாம் எல்லோர் மனதையும் கொள்ளைகொள்கிறாள் இந்த அருவி..
சரி படத்துல குறையே இல்லையா? இருக்கலாம். ஆங்காங்கே எழும் கேள்விகளை இந்தப் படம் தரும் அனுபவம் சுழியாக்கிவிடுகிறது. அதுவும் இல்லாமல் சினிமா என்பது ஒரு அனுபவம், அறிவின் கூர்முனையில் நின்று பார்ப்பதற்கு நாம் என்ன நாசாவில் விண்வெளி ஆராய்ச்சியா செய்கிறோம்.
சினிமா என்பது ஒரு அனுபவம். நாம் தரிசிக்காத எத்தனையோ மனங்களின் கதை. எல்லோர் வாழக்கையில் நடக்கும் சம்பவங்களும் லாஜிக்கோடு நிகழ்கிறதா என்ன..?
அருவி என்பது நீரின் வீழ்ச்சி அன்று. இயற்கையின் படைப்பில் எப்போதும் கீழே இருக்கும் நம்மை நோக்கிப் பாயும் கருணையின் பிரவாகம் . இந்தப் படத்தில் வரும் அருவியின் கதாபாத்திரமும் அதைத்தான் செய்கிறது. திரையரங்கிற்குச் சென்று ஆனந்தமாய் நனையுங்கள்.!! இந்த அருவி வெகுநாட்களுக்கு நம்மை ஈரமுடன் வைத்திருப்பாள்..!!!!!
– மனோ அழகன்