சுதந்திரம் ஒரு முறை தான்
“சார்ள்ஸ்டன் கரோலைனா” என்னும் ஊரில் “கெனத்” எனும் இளைஞன் புகையிலைகள் மத்தியில் கொட்டும் வெய்யிலில் களை எடுத்துக் கொண்டிருந்தான். அவன் பாதங்கள் மண்ணில் வெறுமையாகப் பரவியிருந்தன. கருங்கல் போன்ற தோல் உருவம், அடர்த்தியற்ற கருமைத் தலைமுடிகள்… அவன் வியர்வைத் துளிகள் வெய்யிலில் உலர்கின்றன. துணிமணி இல்லாத… ஆங்காங்கே கை, கால், முதுகு, தொடை என பல இடங்களில் காயத் தழும்புகள் கொண்ட பரிதாப இளம் உடல். ஆமாம் பாவம் ‘கெனத்’, அவன் ஒரு வெள்ளை எசமானது உடமை. அவன் அமெரிக்கா எனும் புது நிலத்தின் ஒரு ஆபிரிக்க அடிமை.
‘கெனத்’தின் உண்மைப் பெயர் என்னவோ அதை அவன் மறந்து விட்டான். அவன் அம்மா, அப்பா, அக்காள்மார் இருக்கும் நிலம் அவனிற்குத் தெரியாது. அவர்களும் உயிருடன் தான் இருக்கிறார்களா என்பதும் அவனிற்குத் தெரியாது. ‘கெனத்’ அறிந்தது இரண்டு ஏலங்களில் அடிமைச் சந்தையில் குழுவாகப் பேரம் பேசி வெள்ளை எசமான்கள் தன்னையும், மற்ற இளம் சிறுவர் சிறுமிகளையும் வாங்கியதேயாகும்.
புதிய எசமான், அவன் கையாட்கள் தமக்குத் தோன்றிய பெயர்களைப் புதிய அடிமைகளிற்கு வைத்து அழைத்தனர். அடிமைப் பிள்ளைகள் விவரம் தெரியாமல் பல சவுக்கு அடிகள் பெற்று அதன் பின்னரே அந்நிய ஆங்கில மொழியில் தமக்கெனப் புதிய அழைப்புப் பெயர் வைக்கப்பட்டதென உணர்ந்து கொண்டனர்.
‘கெனத்’ போன்ற பல சிறுவர், சிறுமிகள், உடல் பலம் உள்ள பெரியவர் எனப் பலரும் அவர்கள் விருப்புக்கு மாறாக மேற்கு ஆபிரிக்காவில் கைப்பற்றப்பட்டு அமெரிக்க அடிமைச் சந்தையில் விற்கப்பட்டனர். இதில் ‘சார்ள்ஸ்டன்’ சந்தை பெரியதொன்று. இதைச் செய்தவர் பலரும் ஐரோப்பிய, அராபியக் கடல் பகுதி அடிமை வியாபாரிகளே ஆவர். இவர்கள் கரும் நிறம் உடைய ஆபிரிக்க மக்கள் மனிதரில், விலங்குகளிற்குச் சமம் எனக் கருதியவர். இதனால் பண்ணையில் உழும் விலங்குகள், வண்டில் இருக்கும் குதிரைகள் போன்று அமெரிக்க வாழ் ஐரோப்பிய விவசாயிகள் மற்றும் தொழிலுற்பத்தியாளர் ஆபிரிக்க மனிதர்களை பாவித்து வந்தனர்.
கொடிய அடிமை வியாபாரிகள் கடல் கடந்து ஆபிரிக்காவில் அவ்விடப் பூர்வீக வாசிகளைக் கைப்பற்றினார்கள். இதன் போது வேள்விக்குப் போகும் விலங்கிலும் வேதனையான முறையில் கழுத்திலும் கை கால்களிலும் இரும்புச் சங்கிலிப்பிணைகள் போட்டு மரக்கலங்களில் ஏற்றி விற்பனைக்கு அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தக் கொடூர கடல் பயணங்களில் உணவு, குடிநீர் இன்றி மந்தைகளாகக் கட்டுப்பட்டு மரிக்கும் மக்கள் தொகையோ மிக அதிகம் .
‘கெனத்’ போன்ற சிலரே அமெரிக்க மண்ணுக்கு பலயீனமாக உயிருடன் வலுக்கட்டாயமாக வரவழைக்கப்பட்டனர். இறந்த மக்கள் உடல்கள் கடலில் தூக்கி எறியப்பட்டன. ஆபிரிக்க மக்கள் கழுத்துச் சங்கிலியுடன் உழைக்கும் அவர் உடல் பருமன் பார்த்து சார்ள்ஸ்டனில் உள்ள அமெரிக்க வெள்ளை விவசாய எசமான்களுக்கு விற்கப்பட்டனர். அடிமை மக்கள் குடும்பமாகக் கைப்பற்றப்பட்டனரோ இல்லையோ ஏலத்தில் அவர்களை வாங்கும் வெள்ளை முதலாளிகள் விருப்பத்திற்கு ஏற்ப பிரித்து விற்கப்பட்டனர்.
‘கெனத்’ கரோலைனாவில் மக்னோலியா எனும் தோட்டத்தில் அதன் எசமானிற்கு ஏலத்தில் விற்கப்பட்டான். ‘மக்னேலியா’ எசமான் ஐரோப்பிய ஏற்றுமதிக் காசுப் பயிர்களாகிய பருத்தி மற்றும் புகையிலை பராமரிப்பு வேலைக்கு ‘கெனத்’தை தள்ளினான். ‘கெனத்’தின் வயது சுமார் 12 ஆக இருக்கலாம். அவன் போன்ற பல ஆபிரிக்க அடிமையாகிய பிள்ளைகளும், முதியவர்களும் ஊதியம் அற்று எஞ்சிய வாழ்நாட்கள் முழுவதும் எசமானிற்கு உழைத்து மரித்தனர்.
வெள்ளை எசமான்களின் வேலைப்பழு மற்றும் துன்புறு காரணிகளால் அடிமைகள் இறந்தால் புதிய குதிரை வாங்குவது போல ஆபிரிக்க அடிமைகளை வாங்கி உபயோகித்தனர். இந்த மனிதர்கள் அக்காலத்தில் வெள்ளை ஐரோப்பிய மனிதர்க்குச் சமமாகக் கருதப்படவேயில்லை.
‘கெனத்’ இளம் பையன், சாதாரண தனது வயதுப் பிள்ளைகள் போல சில சமயம் வேலைக் கருமங்கள் தவற விட்டுவிடுவான். இது இந்த அடிமைப் பிள்ளைகள் மத்தியில் தோன்றும் களைப்பு, சுகயீனமாக இருக்கலாம். அதன் விளைவு எசமானாலோ அல்லது கண்காணிப்பாளராலோ கடுமையாகக் கைய்யாளப்படுவார்கள்.
பிள்ளைகள் சிறுபிழை விட்டாலும், முதிய அடிமைப் பெண்கள் வெடித்த பருத்திப் பஞ்சு கொய்வதில் தவறி விட்டாலும் தண்டனை உதை, மற்றும் சாட்டையேயாகும். ‘கெனத்’தும் பல முறை அவன் இளம் தோல் புண்ணாகும் வரை சவுக்குச் சாட்டையினால் அடி வாங்கியுள்ளான். இதற்கு அவன் உடலில் காணும் பல தழும்புகள் ஆதாரம்.
சில சமயம் விலங்குகளுடன் விலங்காக எசமானால் அல்லது அவன் கையாட்களால் ‘கெனத்’தும் நாய்களின் கூடுகளிற்குள்ளும் தள்ளப்படுவான். கையாட்கள் வேடிக்கை பார்க்க நாய்களுடன், உணவுக்குப் போட்டி போட வைப்பார்கள். தோல் நிறதோற்றத்தினால் இவர்கள் பட்ட துன்பமோ பலவாகும்.
ஒரு நாள் ‘கெனத்’ தனது துன்ப வாழ்க்கையில் இருந்து விடுபட விரும்பினான். மேலும் அன்றாடம் எசமான்களின் பிள்ளைகள் எவ்வளவு வித்தியாசமான வாழ்க்கையை அனுபவிக்கின்றனர் என்பதையும் அவதானித்தான். தான் பிறந்த இடம் போவது எவ்வாறு என்று தெரியாவிட்டாலும், இவ்விடம் இருந்து மீழ ஆசைக் கனவு கண்டான். தன் அடிமை வாழ்க்கையில் இருந்து விடுபட்டுக் கொள்ள அவன் மனம் ஏங்கியது.
‘கெனத்’ சிந்தனைக்கு ஒரு நாள் அவன் எசமான் தோட்ட நிகழ்வு ஆதாரமாக அமைந்தது. ஒரு நாள் எசமானின் கையாட்கள் தமது மது போதையில் ‘கெனத்’தையும், மற்ற அடிமைகளையும் அடித்து, உதைத்து பல வகையிலும் துன்புறுத்தினர். இதன் போது ‘கெனத்’தை அன்பாகப் பார்த்துக் கொண்ட அடிமைப் பெண் ஒருவளும் அருகதையின்றி விபரீதமாக உயிரிழந்தாள்.
இது ‘கெனத்’தையும் மற்றய அடிமைகளையும் மிகுவாகப் பாதித்தது. ‘கெனத்’ அந்த இரவு தனது மெல்லிய கைகளைத் தனது இரும்புப் பிணைச் சங்கிலியில் இருந்து நெழுத்தி நழுவிக் கொண்டான். இதே போன்று மற்றும் சிறுவர்களும் தம்மை ஒருவாறாக விடுவித்துக் கொண்டனர்.
அடுத்து ‘மக்னோலியா’ தோட்டத்திற்கு அருகேயுள்ள அடர்த்தியான பிரம்புக் காட்டினுள் ஒடினர். ‘கெனத்’தைத் தொடர்ந்து மற்றச் சிறுவர்களும் இருளில் காட்டிற்குள் ஓடினர். ஆயினும் இது அடிமைச் சிறுவர்களுக்கு அதிர்ஷ்டமாக அமையவில்லை. வெள்ளை எசமானர்களின் வேட்டை நாய்கள் சிறுவர்களைத் துரத்தின. எசமானர்களின் கையாட்கள் குதிரைகளில், துப்பாக்கியுடன் அடிமைகளைத் துரத்திச் சுற்றிவழைத்தனர். இதன் போது துப்பாக்கியினால் சுட்டு சில அடிமைகளைக் கொன்றனர் ,
‘கெனத்’ உட்பட எஞ்சியவர்களை சங்கிலியில் கட்டி இழுத்து மக்னோவியா தோட்டத்தினுக்குள் கொண்டு வந்தனர். ஆத்திரம் அடைந்த வெள்ளை எசமான் தனது குதிரைகளை ஏவும் கொடிய சாட்டையினால் தோல் உரித்து இரத்தம் வரும் வரை சிறுவர் களை நயப்புடைந்தான்.
புதிய காயங்கள் பல பெற்றும், பல சக அடிமைகள் உயிர் கொல்லப்பட்டும் ‘கெனத்’ மனம் மாறவில்லை. அவன் சாவிலும் விடுதலையே முக்கியம் என மனத்திடமானான். உடல் காயம் ஆற முதலே மீண்டும் தப்பி ஓடத் திட்டம் இட்டான். ‘கெனத்’திற்கு சுதந்திரம் என்றால் என்னவென்று தெரியாவிட்டாலும், தான் படும் துன்பங்களிலும் தயவான வாழ்க்கை மக்னோ லியாத்தோட்டங்களின் அப்பால் எங்கோ உண்டு என்று எண்ணினானன். இதனால் தருணம் பார்த்து ஒரு நாள் பருத்திப் பஞ்சு அறுவடை காலத்தில், மங்கிய மாலைப் பொழுதில் ‘கெனத்’ மீண்டும் நழுவினான். அவன் பஞ்சு மூட்டைகள் ஏற்றும் பாரிய குதிரை வண்டில் ஒன்றில் ஏறி ஒழிந்து கொண்டான். பருத்தி மூட்டைகள் குதிரை வண்டில்கள் இருந்து ‘சார்ல்ஸ்டன்’ துறைமுகத்தில் ஏற்றப்பட்டன.
‘கெனத்’தும் மூட்டைகளுடன் மூட்டையாக இங்கிலாந்து செல்லும் கப்பல்களில் ஏறினான். கப்பல்கள் அத்திலாந்திக் ஆழ்கடலில் கடல் கொள்ளையரால் தாக்கப்பட்டது. இதன் போது கப்பல் சிப்பாய்கள் கொள்ளையருடன் போர் தொடுத்தனர். மரக்கலங்கள் பலவும் சேதமடைந்தன. ‘கெனத்’ சந்தர்ப்பம் பார்த்து கடலில் பாய்ந்தான். மிதக்கும் மரப்பலகைகளில் ஏறிப் படுத்தான். சில நாட்களின் பின்னர் பின்னர் தெளிவான கடற்கரை தனில் கரையேறினான்.
தான் இறங்கிய இடம் எதுவெனத் தெரியாவிடினும் நீல வானமும், வெண்மணலும் தென்னை மரங்களும் முதன் முறையாக சுதந்திரத்தை சுவாசிக்க வைத்தது ஆபிரிக்காவின் அருமை மைந்தனை.
– யோகி –