திரைப்படத் திறனாய்வு – பரதேசி
65 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மக்களே தமிழ் மக்களை அடிமைகளாக நடாத்திய உண்மைப் பதிவுகளை மையமாக கொண்டு படைத்திருக்கும் பாலாவின் மற்றுமொரு சீரிய படைப்பு. ஒரு படைப்பாளியின் திறமை வெளிப்படுவது சமரசம் செய்யாமல் கதை சொல்லும் பாங்கில் தான். மனிதக் குலத்தின் கருமையான பகுதியைத் துகிலுரித்துக் காட்டுவதில் வல்லவர் பாலா. வேறு நாடுகளுக்குக் கொத்தடிமைகளாகச் சென்றவர் அனுபவித்த பல துன்பங்களைக் கதைகளாகப் படித்திருப்போம். ஆனால் நம், சொந்த மண்ணிலேயே கொத்தடிமைகளாய் ஆக்கப்பட்ட மக்களின் கதை தான் பரதேசி.
படம் முழுக்க ”நாடோடி மன்னன்” கேவா கலரிலேயே எடுத்திருப்பது ஸ்பீல்பர்க்கின் “Schindler’s List” படத்தைக் கருப்பு வெள்ளையில் பார்த்த அனுபவம் போன்றிருந்தது. இந்தத் தைரியம் மிகச்சிலருக்கே உண்டு, அதில் பாலா முதன்மையானவர்.
1939ஆம் ஆண்டு வாக்கில் தற்போதைய தென் சென்னைப் பகுதியைச் சார்ந்த சாலூர் கிராமத்தில் சுதந்திரமாய் ஆனால் ஏழையாக வாழ்ந்த மக்கள் எப்படித் தேயிலை தோட்டங்களை ஏற்படுத்தக் கொத்தடிமைகள் ஆனார்கள் என்பதுதான் கதை. பல்லாயிரக்கணக்கான மக்கள் இதைப்போன்று மாநிலத்துக்குள்ளேயே புலம் பெயர்ந்து சீரழிந்ததற்கான சான்று இது
பனை ஓலை வீடுகளும், குடுவைகளில் தண்ணீரும், கொட்டாங்குச்சியில் பால்/தண்ணீர் அருந்துவது, விருந்துக்கு இனிப்பாகப் பணியாரம் பரிமாறுவது போன்றவை கதையின் காலகட்டத்தைப் பிரதிபலிக்கின்றது. ஆனால் எந்தக் கிராமத்திலும் இவ்வளவு சமமாக/தரைமட்டமான நிலப்பரப்பில் அனைத்து ஓலை குடிசைகளும் இருக்காது, காட்சியமைப்பை கையாண்ட கலை இயக்குநர் இதில் அதிகக் கவனம் செலுத்தவில்லை.
”ஒட்டுப்பொறுக்கி” என்ற பாத்திரத்தில் அதர்வா முரளி வருகிறார். பாலாவின் மற்றக் கதாநாயகர்களைப் போல இவர் அந்தளவிற்குப் பரிமளிக்கவில்லை. ஊர்ப்பெருசு பாலையாவின் மரணத்தை மறைத்து நடக்கும் கல்யாணம் கதையோடு இழையோடிய மெல்லிய நகைச்சுவை. மனிதர்களின் சுயநலத்தையும் இது வெளிக்காட்டுகிறது.
ஆட்களை வளைத்துப் பிடிக்கும் கங்காணியாகப் புதுமுகம் நன்றாகவே நடித்திருக்கிறார். பாலாவின் மற்றப் படங்கள் போல வில்லன் கதாபாத்திரம் மனதில் நிற்கிறது. நாஞ்சில் நாடனின் வசனங்கள் வட்டார வழக்கை நிதர்சனமாக எடுத்துரைக்கிறது. ”கழுதை பொறது (மதிப்பு) கால்துட்டு, சுமை கூலி முக்காத்துட்டு” போன்றவை மனிதனின் சுயநலத்தைக் காட்டுகிறது.
ஆடு மாடுகளைப் போலத் தண்ணீர் குடிப்பது, மக்கள் செருப்பில்லாமல் 48 நாட்கள் நடைபயணமாகச் செல்வது போன்ற காட்சிகள் நன்றாகப் படமாக்கப்பட்டுள்ளது.
அத்துடன் “ஓ செங்காடே” பாடல் மிக நன்று.
உயிரோடு வாழ்வது கூடச் சிறு துன்பமே!
வயிறோடு வாழ்வது தானே பெருந்துன்பமே!
பாடலில் இரு வரிகள் எளிமையாகக் கதையை உணர்த்துகிறது.
மலைக்காடுகளில் அட்டைகளை அண்ட விடாமல் இருக்கத் தேய்க்கப்படும் புகையிலை, கொடுக்கும் சிறு பணத்தையெல்லாம் வெவ்வேறு வகையில் பிடுங்கும் தாயத்து மந்திரிப்பவர், டாக்டர் என்று சொல்லி மருந்து கலப்பவர், சாயபு போன்ற பாத்திரங்கள் படத்தின் பலம்.
படத்தின் மற்றுமொரு நெருடல், குடும்பத்துடன் வாழும் ஆங்கிலத் துரை அவ்வளவு வெளிப்படையாகப் பெண்களைப் பலாத்காரம் செய்வது, திருமண வாழ்வின் போது மது அருந்துவதைக் காட்டுவது எனப் பெரும்பாலான இந்தியப் படங்களிலும் தேசப் பக்தியைக் காட்ட ஆங்கிலேயரைக் கொடுங்கோலராக காட்டுவது போன்று பாலாவும் செய்திருப்பது ஒட்டவில்லை.
இயக்குநரின் உச்சக்கட்டத் திருப்பம் பல படங்களில் முத்தாய்ப்பு, இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல.
தமிழகத்தில் நடந்த பல வன்கொடுமைகளை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்புண்டு, கீழ்வெண்மணியில் நடந்த 47 பேரின் படுகொலை, மேலவளவு படுகொலைகள் இவற்றைத் திரைப்படமாக எடுத்தால் தமிழகத்தில் பல்வேறு பிரிவினர் போராட்டம் நடத்துவர், படமே வெளிவராது. கீழ்வெண்மணி கொலைகளை “இராமையாவின் குடிசை” என்று ஒரு ஆவணப்படமாகத்தான் முயன்றிருக்கிறார்கள்.
ஏழைகளுக்குள்ளேயே பரம ஏழை எவர், மனிதனுக்குள்ளே எவன் பெரியவன்/சிறியவன், தன் கீழ் நிலைக்குக் கீழேயும் கொஞ்சப் பேராவது இருக்க வேண்டும் என்று நினைப்பது போன்றவை தான் உலகின் பல போராட்டங்களுக்கும் வன் கொடுமைகளுக்கும் காரணம். இவற்றைச் சாக்காக வைத்து மதத்தைப் பரப்பும் நடவடிக்கையையும் வெளிப்படையாகக் காண்பித்திருக்கிறார் இயக்குநர்.
பாலா தமிழக மண்ணிலேயே நடந்த, நாம் அறிந்திராத, கொத்தடிமைக் கதையை எடுத்திருக்கும் பாங்கிற்குப் பாராட்டுகள்.
-மா.சிவானந்தம்