எதிர்பாராதது…!? (பாகம் 5)
“என்னம்மா நீங்க… உணர்ச்சி வசப்பட்டுட்டீங்க போலிருக்கு…? அவசரப்பட்டுட்டீங்களே?” – டச்சப் பார்கவி ஆறுதலாய் முன் வந்தாள்.
“ஆமா…. அவன் அழகு நடிப்புங்கிறதைக் கூட மறக்கடிச்சிடுதுப்பா…. ஒரு சிரிப்புச் சிரிக்கிறான் பாரு…. கண்ணை மயக்கி, உதட்டைச் சுழிச்சி… அந்தச் சிரிப்பு வெறும் நடிப்பில்லைப்பா…. உண்மைலயே எம்மேலே அவனுக்கு ஆசை இருக்குன்னு தோணிடிச்சு….. அவன் அணைக்கிறபோது நடிப்புங்கிறதையே மறந்திடுறேன் நான்…. எதுக்காக அவன் மேலே இப்டி ஆசை வந்திச்சின்னே தெரில….. ஆனாலும் நடிக்கிறபோது சில்மிஷம்ங்கிறது ஓவர்…. லாங் ஷாட்ல யாருக்குத் தெரியப்போகுதுன்னு உள்ளே கையை விடுறான்…. ரொம்ப ஓவர்ல?”
“அதுக்கு வெறி இருக்குதோ இல்லையோ, உங்களுக்கு எழும்பிடுச்சு போலிருக்கு…..”
“என்னப்பா சொல்ற?“ – இவளைப் பார்த்துக் கள்ளத்தனமாய்ச் சிரித்தாள் நந்தினி.
“பின்னே என்னங்க…? சிக்ஸ் பேக்தான் இப்போ அழகுன்னு ஆயிப்போச்சு…முன்னெல்லாம் உடம்பு பூசிக் கிடந்தாலே விரும்புவாங்க…. இப்போ என்னடான்னா இப்டிக் கேட்குறாங்க வறுமைல கிடந்த ஆளு… இப்போத்தான் பளபளப்பு ஏறுது…. அதுக்குள்ளேயும் நீங்க மயங்கிட்டீங்களாக்கும்…… உங்களை அறிமுகப்படுத்தினவரையே அடையணும்னு ஆசை வந்திடுச்சு உங்களுக்கு…. அப்போ சுதந்திரமா விட்ர வேண்டிதானே? அதுலேர்ந்தாவது அவர் புரிஞ்சிக்கட்டும்….”
“ஏய்..…என்ன ஒரேயடியா சொல்லிட்டே போற….? நாளைக்கு உனக்கு அத்தான் ஆகுற ஆளுடி அது……”
“அக்காவக் கட்டிக்கிட்டாத்தானே….?” – பட்டென்று சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டாள் பார்கவி.
“என்னடி மசிய மாட்டான்கிறியா? இப்பவே இழுத்துப் போட்டாத்தான் ஆச்சுங்கிறியா?”
“பின்னே? ஏற்கனவே சில படத்துக்கு விட்டாச்சு…! அதுலயே ரெண்டு வருஷம் போல ஓடிப் போச்சு… உங்க கூட இப்ப நடிக்க வந்திருக்கிறதே பெரிய அதிர்ஷ்டம்….. எத்தனை ப்ரொட்யூஸர்ஸ் வர்றாங்க தெரியுமில்ல…? இன்னைக்குக் காலைல கூட டைரக்டர்கிட்டே ஒரு சேட் உட்கார்ந்திருந்தாரே பார்க்கலியா? நீங்க தள்ளியிருந்த செட்டுல இருந்தீங்க….. கவனிச்சிருக்க மாட்டீங்க…. பெரிய ப்ராஜக்டாம்….. தெலுங்கு, கன்னடம்னு டப் செய்யப் போறாராம்… சொல்லிட்டிருந்தாரு…. ஆந்திராவுக்குப் போயிட்டாருன்னு வச்சிக்குங்க… பிடிக்க முடியாது…. அங்கயே செட்டிலாயிட்டாருன்னா…? அத விடுங்க… ஷூட்டிங்கிற்காக பெங்களூர் போகப் போறாரு… தெரியும்ல…. ஏமாந்துடாதீங்க… அவ்வளவுதான்…..”
“எவனாவது இங்க மார்க்கெட் இருக்கிறபோது ஆந்திரா போவானாடீ? உளறாதே…! இங்க குப்பை கொட்ட முடிலங்கிறபோதுதான் அந்தப் பக்கம் கவனம் போகும்…. என்னைமாதிரி நடிகைகளுக்கே அந்த கதிதானே…?”
“நீங்க போயிடலாம்மா…ஆனா நாயகனா அறிமுகமாகுறது கஷ்டமாச்சே…!”
“வில்லனாப் போயிட்டுப் போறாரு…?”
“உங்களுக்கு வில்லனாயிடாமப் பார்த்துக்குங்க…!”
நந்தினியின் மனதில் புயல் வீச ஆரம்பித்திருந்தது. தூரத்து உறவுதான் பாலா. சினிமாவுக்கு வந்த பின்பு பிரேம்குமார். அந்தப் பெயரில் யாரும் இல்லை. பொருத்தமான பெயராய்த் தோன்றியது. பெயரிலேயே என்னவொரு கவர்ச்சி.
அவன் மாமா ரங்கபாஷ்யம் திட்டமிட்டே அவனைச் சென்னைக்கு அழைத்து வந்து பெரு முயற்சி செய்து சினிமாவில் சேர்த்து விட்டிருந்தார். அவன் அதிர்ஷ்டம் அடுத்தடுத்த படங்கள் வெற்றியாகி இன்று பெயர் நிலைத்த கதாநாயகன் ஆகிவிட்டான்.
‘நீயே இன்னும் நிறையப் படங்களில் நடிக்கணும். அதுல கவனம் செலுத்துவியா, அந்த நந்தினியை எதுக்கு இழுத்திட்டு வரணும்ங்கிறே…?’ – ரங்கபாஷ்யத்திற்குப் பிடிக்கவில்லைதான். அவள் வந்து அவனை வைத்து, தான் செய்யும் வியாபார உத்திகளில் மண் விழுந்து விடக் கூடாதே என்ற எண்ணம். பெண்ணை நெருங்க விட்டால் கதை கந்தலாகி விடாதா?
சின்ன வயதிலிருந்தே பாலாவின் மேல் கவனம் இருந்தது இவளுக்கு. ஊரில் வெட்டியாய்த் திரிந்த அவனோடு வலியப் பழகி, சினிமா பார்த்து, இருட்டிலே சில்மிஷங்கள் செய்து, விடுதிகளுக்குப் போய், எல்லாமும்தான். அவன் மேல் தீராத மோகம் உண்டுதான். அதை வெளிக்காட்டிக் கொள்ள முடியாத நிலைமை. எடுத்த எடுப்பிலேயே கதாநாயகி ஆகிவிட முடியவில்லையே…! எத்தனையோ படங்களில் குரூப் டான்சராய் இருந்துதான் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறாள். கதாநாயகி சான்ஸ் எப்போதடா வரும் என்று தவமிருந்திருக்கிறாள். அது கிட்டியது ஒரு நாள். அதுவும் அவன் மூலமாகத்தானே…! எல்லாவற்றிற்கும் நேரம் காலம் என்று ஒன்று இருக்கிறதே! யாரும் தொட முடியாத உயரத்திற்குப் போக வேண்டும் என்ற வெறி வந்துவிட்டது இப்போது அவளுக்கு.
‘நந்தினி…நந்தினி’ என்று தயாரிப்பாளர்கள் தவம் கிடக்க வேண்டும். அதுவரை ஓய்வில்லை, ஒழிச்சலில்லை. அறிமுகப்படுத்திய அவனை விட்டே விலகி தூரமாய் வந்தாயிற்று. அதுவே பொறுக்கவில்லையோ என்னவோ? தானும் நிறையச் சொத்து சேர்த்து, சுயமாய் சாகும்வரை வாழ்ந்து விட முடியும் என்கிற உச்ச நிலைக்கு வந்த பின்புதான் அவனோடு இணைய வேண்டும்.
அதுவரை அவன் காத்திருப்பானா? காத்திருப்பதென்றால் அவன் என்ன தன்னைக் காதலிக்கவா செய்கிறான்? தான்தானே அவனை இப்படி நெருக்கமாய் நினைத்துக் கொண்டிருக்கிறோம்? ஒரு தலைக் காதல் இது. இதை இருதலைக்காதலாய் மாற்ற வேண்டும். தன்னை நினைத்து நினைத்து அவன் ஏங்க வேண்டும். சீக்கிரத்தில் தான் அலுத்து விடக் கூடாது அவனுக்கு. ஸ்பரிசத்தோடு நின்று, ஏங்க வேண்டும். மேலும் கிடைக்காதா என்று தவிக்க வேண்டும்.
தவிப்பு இருக்கிற அடையாளம்தானே இன்று அவன் விளையாடியது. வெட்கங்கெட்டுப் போய் யார் பார்த்தால் என்ன என்றுதானே உள்ளே கைவிடுகிறான்? அவ்வளவு சுதந்திரம் யார் கொடுத்தார்கள் அவனுக்கு? யார் கொடுக்க முடியும்? நான் கொடுத்திருந்தால்தானே அது கிட்டும்? நானே கொடுத்திருந்தாலும் பொது இடத்தில் இதைச் செய்யலாமா? அவன் வைத்த ஆளா நான்? அப்படித்தான் நினைத்து விட்டானோ? சினிமாவில் நுழைவதற்காக அவனுக்கு நிறையச் சலுகைகள் அளித்தது உண்மைதான். அதற்காகவே அவனுக்குத் தாசியாய் இருக்க முடியுமா? இவனை விட்டால் வேறு ஆள் இல்லையென்று நினைக்கிறானா?
வசீகரன் வந்துவிட்டானே இப்போது…! அவன் போகும் உயரம், வேகம், இவன் அறிவானா? அவனோடு சேர்ந்து நான் செய்த ‘புரட்சிக்காரன்’ படம் பிய்த்துக் கொண்டு போகிறதே…! அதைப் பார்த்திருப்பானோ? அதில் எனக்கும் வசீகரனுக்குமான அதீத நெருக்கம் அவனுக்குப் பொறாமையை ஏற்படுத்தி இருக்குமோ? அந்த வசீகரன் என்னடாவென்றால் அதற்குள் பறக்கிறான். வலிய வந்து தன் விருப்பத்தைத் தெரிவித்து விட்டானே…? அதை அறிவானோ இவன்?
‘இந்தப் படத்தோட முடிச்சிக்கோ… அப்புறம் எனக்கு மனைவியாயிடு…. வீட்டோட இருந்திடு…. சுதந்திரமா வாழ்க்கையை அனுபவி… எதுக்கு இந்த அரிதாரம்? அது ஆம்பளைகளுக்குத்தான் லாயக்கு…. உன் அழகு எனக்கு மட்டும்தான் சொந்தம்….. நான் சொல்றதைக் கேள்…’. – என்னவெல்லாம் பேசிவிட்டான். என்ன தைரியம்? சீனியர் ஆர்டிஸ்ட் என்று கூடப் பார்க்காமல்…. என்னவொரு தைரியமான பேச்சு?
இந்த ஆம்பளைகள் ஏன் இப்படி அலைகிறார்கள்? எல்லாம் என் அழகுதான் காரணமா? முதல் அறிமுகத்திற்குப் பின்பு எதையுமே நான் தேடிச் செல்லவில்லையே? எல்லாமும் அதுவாய்த்தானே என் பின்னால் வரிசை கட்டியது? பிரேமின் மீது எனக்கிருந்த பிரேமையைத் தகர்த்தது வசீகரன்தானே? வசீகரன் வசீகரித்து விட்டானா? அதை அவன் உணர்ந்து கொண்டுவிட்டானா? அதனால் வந்த பொறாமையா இன்றைய எல்லை கடந்தது?
இரு குடும்பங்களும் வசதியில்லாத நிலையில், கனவுகளைப் பொத்திப் பொத்தி வைத்துக் கொண்டு திரிந்ததுதான் மிச்சம். தனக்கிருக்கும் அளவுக்கு பாலாவுக்குத் தன் மேல் இச்சை உண்டா என்கிற சந்தேகம் சமீபத்தில்தான் வந்திருந்தது நந்தினிக்கு.
இவள் அதிர்ஷ்டம் அவன் மாமா பாஷ்யம் வந்து சேர்ந்தார். பல காலம் சென்னையிலேயே இருந்தவர். தத்திப் பித்தி என்னென்னவோ வேலைகள் பார்த்து, வியாபாரம் செய்து, திகிடு முகடுகள் பண்ணி இன்று நல்ல நிலைக்கு வந்துவிட்டவர். பெரிய கைகளின் பழக்கமுள்ளவர். காரியம் என்று போய் நின்றால் முடித்துக் கொடுப்பவர். நினைப்பதை நடத்தி முடிக்கும் திறன் கொண்டவர். ஜகதலப்பிரதாபன்.
பிரேமின் அனத்தல் தாங்க மாட்டாமல்தான் ஒப்புக் கொண்டார் ரங்கபாஷ்யம். கடிதம் போட்டு வரவழைக்கப்பட்டாள் நந்தினி. எங்கே கையைவிட்டுப் போய் விடுவானோ என்ற பயம் பாஷ்யத்திற்கு. வட்டிக்குக் கடன் வாங்கி, அவன் படங்களை அவர்தான் தயாரிப்பாளராய் எடுத்துக் கொண்டிருந்தார். யாரையும் உள்ளே நுழைய விடுவதில்லை. அவன் சொல்வதைக் கேட்கவில்லையென்றால், முறுக்கிக் கொண்டானானால், இன்று அவன் இருக்கும் புகழுக்கு தன் வியாபாரம் படுத்துக் கொள்ளும். கை மீறிப் போக விடுவது அத்தனை புத்திசாலித்தனமில்லை.
செட்டில் எல்லோரும் அதிர்ந்திருப்பார்கள். அடுத்து இந்தம்மா என்ன செய்யப் போகிறதோ என்று பேசிக் கொண்டிருப்பார்கள். மாமாவுக்கு இந்நேரம் செய்தி போயிருக்கும். கேட்டால் என்ன சொல்லலாம்? அவரை வைத்து அவனை ஒழித்துக் கட்டத் திட்டம் போடலாமா? வசீகரன்தான் வந்து வந்து வழிகிறானே? ஆள் இல்லாமலா போயிற்று? இப்படி யோசித்தால் அவர் ஒப்புக் கொள்வாரா? அவன் கையை வைத்து அவனையே குத்துவது. யோசனை எப்படி எப்படியோ போயிற்று நந்தினிக்கு. பணமும் புகழும் சேரச் சேர, புத்தி எப்படியெல்லாம் வேலை செய்கிறது?
தன்னை வைத்துப் படங்கள் ஓட ஆரம்பித்திருக்கின்றன. பத்திரிகைகள் அப்படித்தான் சொல்கின்றன. கிசு கிசுக்கள் இதைத்தான் பரப்புகின்றன. கடந்த வாரம் பத்திரிகையாளர்கள் கூட்டத்தைக் கூட்டியபோது இதை உணர முடிந்தது. ஒரு நாயக நடிகன் செய்வதை விட நாயகி நடிகை செய்தால் கூடத்தான் செய்கிறார்கள். நடிகையோடு கொஞ்சமாவது பேசலாமே என்ற ஆசை. அவள் அழகை ரசிக்கலாம். அவள் பல் வரிசை பளிச்சென்று தெரியச் சிரிப்பதைப் பார்த்துக் களிக்கலாம். அவ்வளவு ஆசை ஆசையாய் வருகிறார்கள். ஒவ்வொரு நிருபரின் கண்களும் எங்கெல்லாம் ஓடுகின்றன? எங்கெல்லாம் பதிகின்றன? விட்டால் துவம்சம் செய்து விடுவார்கள் போலிருக்கிறது.
நல்ல வேளை டச்அப் பார்கவி கூட இருக்கிறாள். அவள் நாலு ஆம்பளைக்குச் சமம். யாரையோ கூட ‘இளிச்சது போதும், புறப்படுங்க’ என்றாளே? என்ன ஒரு தைரியமான பேச்சு? அவள்தான் சரி. அவள் யோசனை எல்லாமும் பலன்களைத்தான் கொடுக்கிறது. சூட்கேசும், பணமும் வைத்துக் கொடுக்கும்போது, வந்து வாங்கிக்கொண்டு போவதற்கென்ன வலிக்கிறது? அப்படித்தானே பழக்கி விட்டிருக்கிறார்கள். அது சம்பிரதாயமாகவேதானே போய்விட்டது. குற்றம் என்று சொல்வதற்கில்லையே…! அப்படி இருந்தால்தானே ஆதரவாய்ச் செய்தி வருகிறது. இல்லாவிட்டால் கிசு கிசுவில் பயங்கரமான கற்பனையைக் கலந்துகட்டி விடுகிறார்களே…?
இருக்கும் பத்திரிகைக்காரனெல்லாம் தன்னை விடாமல் எழுத வேண்டும். ஒரு பத்தியாவது எழுதித்தான் ஆக வேண்டும். எந்த இதழும் விடுபட்டது என்று இருக்கக் கூடாது. இதுதான் வியாபார உத்தி. அந்த பிரேமின் மாமாவிடமிருந்து கற்றுக் கொண்டது இது. இப்போது அவர் விட்டுவிட்டதுபோல் இருக்கிறது. எல்லோரும் தன்னை மொய்க்கிறார்கள். தேனிருக்கும் இடத்தில்தானே வண்டுகள் மொய்க்கும்? நந்தினி சந்தோஷமாய் உணர்ந்தாள்.
நாயகனை வைத்துத்தானே எப்போதும் படங்களும், வசூலும். இப்போது அது மாறியிருக்கிறது. அவளின் தற்போதைய படங்களில் ஒன்றிரண்டு கூட அவர் பாகஸ்தர் என்று கேள்வி. இப்பொழுது அவள் பக்கம் ரங்கபாஷ்யம் மாமா கவனம் திரும்பியிருக்கிறதோ? அப்படியானால் அவரை உதற முடியாதே…? ஒதுக்க முடியாதே…? பிரேமை விட்டு விலகி வருகிறார் என்றால் வரவேற்கத்தானே செய்ய வேண்டும். வரட்டும்…முழுதாகத் தன் பக்கம் வரட்டும். அவன் தனிமைப் படட்டும்….
ஒரு நாயகனுக்குரிய அந்தஸ்தோடு அவளை முன்னிலைப்படுத்தும் கதையாகத் தேர்வு செய்து, தான் இப்போது செய்து கொண்டிருக்கும் படம் கூட நல்ல வெற்றி பெறும்தான். அநீதிகளை அழிக்கும் கதாநாயகனை விட, அதை எதிர்த்து நிற்கும் பெண் பெருமையுடையவளாகிறாள். அவள் எதிர்நோக்கும் சிரமங்களை மீறி வெளியே வந்து, துணிந்து துஷ்டர்களை அழித்தொழிக்கும் இந்த அதிரடிக் கதை என்னை முன்னிலைப்படுத்தித்தான். இதில் பிரேமைப் போடச் சொன்னதே நான்தான். தனக்கு முக்கியத்துவம் இல்லையென்று தெரிந்துதான் இப்படிக் கோபப்பட்டு விட்டானோ? ச்சே…! ஒரு கணம் என் அழகில் மயங்கி விட்டான் போலும். ஷூட்டிங் என்பது கூடவா மறந்து போகும்? காமாக்கினி எப்படி ஆட்கொண்டது? என் அதரங்களும், அவயவங்களும் அவனை என்னமாய் ஆகர்ஷித்தது? பிடித்த பிடியை அவன் விடாமலிருக்க, அப்படியே ஒரு உதறு உதறிவிட்டேனே?
அத்தோடு விட்டிருக்க வேண்டியதுதானே? எதற்காகக் கன்னத்தில் அடித்தேன்? அந்தளவுக்கு நான் ஏன் கோபப்பட்டேன்? அப்படியானால் என் மனதில் வேறு என்ன புகுந்திருக்கிறது? யார் நுழைந்திருக்கிறார்கள்? வசீகரன் நுழைந்திருக்கிறானா? எதற்காக அவன் மனதில் இப்படிப் புயலைக் கிளப்பிக் கொண்டிருக்கிறான்? கை நழுவிப் போய் விடுவேன் என்று பயப்படுகிறானோ? நீ எனக்குத்தாண்டீ என்று சொல்லாமல் சொல்கிறானோ? அந்தச் சுதந்திரம்தானா உள்ளே கை விட்டது? குழப்பம் நீடித்தது நந்தினிக்கு.
நாளை மறுதினம் ஊட்டியிலிருக்கும் இதே படத்தின் படப்பிடிப்புக்குச் செல்வதா, வேண்டாமா என்ற கேள்வி பிறந்தது அவள் மனதில். அது கனவுக் காட்சி என்று சொல்லியிருந்ததாக ஞாபகம். பிரேம் கட்டாயம் வேண்டும். அவன்தான் இவளைக் காதலிப்பதாக… கனவில் மிதப்பதாக காட்சி. நிஜத்திலும் அதேகதை. அவன்தான் என்னை நினைத்து ஏங்குகிறான். நடிக்க வந்த பிறகு என்னின் நடப்பு மாறியிருக்கிறது. அதுதான் அவனுக்குப் பலத்த சந்தேகம்.
யோசனையின் உச்சியில் உறக்கமின்றிப் புரண்டு கொண்டேயிருந்தாள் நந்தினி. எப்பொழுது தூங்கினோம் என்று அவளுக்கே தெரியாது. கண் விழித்தபோது, தொலைபேசி சிணுங்கியது.
– உஷா தீபன்