\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

குழந்தை மனசு

Filed in இலக்கியம், கதை by on April 16, 2013 0 Comments

kuzhanthai_manasu520x480விமானம் கிளம்புவதற்கு இன்னும் அரைமணி நேரமாவது ஆகும் என்பதால் அதுவரை இருக்கையில் இருக்க மனமில்லாமல் எழுந்து என் கைப் பையில் இருந்த புத்தகங்களில் ஒன்றை எடுத்துப் படிக்கத் தயாரானபோது என் மகள் குறுக்கிட்டாள்.

 “அப்பா இன்னும் எவ்வளவு நேரத்திலை நாங்கள் யாழ்ப்பாணத்துக்குப் போகலாம்”

 “இன்னும் ரெண்டு நாள் ஆகுமட செல்லம்…”

 “ரெண்டு நாளோ… அப்ப  இண்டைக்கு திங்கள்… செவ்வாய்… புதன் கிழமை நாங்கள் யாழ்ப்பாணத்திலை நிப்போம் என்னப்பா…”

 நான் ஆம் என்பதற்குப் பதிலாகத் தலையை ஆட்டினேன். அவளும் அப்படியே அமைதியாகி விட்டாள்.

 இரண்டு மூன்று வாரங்களாக எமது தாய்நாட்டில் இருக்கும் உறவுகளின் புகைப்படங்கள், ஒளிப் படங்களைத் திரும்பத் திரும்பப் பார்த்து அவர்களைத் தன் மனதில் ஞாபகப்படுத்திப் பத்திரப் படுத்திக் கொண்டாள். ஊருக்குப் போகும்போது எடுத்துச் செல்வதற்கென நிறைய விளையாட்டுப் பொருட்களையும் மற்றும் தன் விருப்பத்துக்குரிய சிலவற்றையும் பத்திரப் படுத்தித் தன்னுடனே வைத்திருந்தாள்.

 விமானம் புறப்படுவதற்கு இன்னும் சில வினாடிகளே இருப்பதாக ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப் பட்டு ஆசனத்தில் அமர்வது இடுப்பு பட்டி பூட்டுவது தொடர்பான விவரணங்களை ஒளிப் படமாகக் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். என் மனைவி சாளரத்தினூடாக வெளியில் பார்த்து; “அமெரிக்காவே நான் போய்வருகிறேன்…” என்பது போல் புன்னகைத்தாள். மூன்று வருடங்களுக்கு முன்னர் நாம் இங்கு வந்த போது அவளுக்கு இந்த மண் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஆனால் இப்போது அவளுடைய பூர்வீகமே மினசோட்டா என்பது போல் உணரத் தலைப்பட்டிருந்தாள்.

இரவு ஆகியிருந்ததால் மின்னொளியில் விமான நிலையம் மிகவும் அழகாகத் தெரிந்தது. தன்னைச் சாளரத்தின் பக்கம் இருக்க விடவில்லை என்பதனால் அடம் பிடித்துச் சிறிது நேரம் மௌன விரதம் இருந்த என் மகள் இப்போது விரதத்தை முடித்துக் கொண்டு பேசத் தொடங்கினாள்.

 “அப்பா யாழ்ப்பாணம் மினசோட்டா போல இருக்குமோ… அங்கைப் பெரிய கடைகள்… பெரிய பள்ளிக்கூடம்…எல்லாம் இருக்குமோ…” என்று தன் வழமையான நக்கீரர் பாணியைத் தொடர்ந்தாள். மூன்று வருடங்களுக்கு முன்னர் நாங்கள் சென்னையில் இருந்து இங்கு வரும்போது

 “அப்பா அமெரிக்கா சென்னையைப் போல இருக்குமோ… அங்கைத் தியேட்டர்…பீச்…பார் இருக்குமோ…” என்று அவள் கேட்டவை இப்போது என் ஞாபகத்தில் எட்டி பார்த்தன.

 “இல்லையடா செல்லம் மினசோட்டா வேற யாழ்ப்பாணம் வேற ரண்டும் வித்தியாசமான  வடிவாயிருக்கும் இருக்கும்” என்று கூறியவாறே அவளின் தலையை என் விரல்களால் கோதி விட்டேன். அப்படியே அவள் உறங்கிவிட்டாள்.

 அபுதாபியில் அடுத்த விமானம் மாறுவதற்காக இறங்கியபோது அவள் யாழ்ப்பாணம் வந்துவிட்டது எனக் குதூகலித்துக் கொண்டாள்.

 “இது யாழ்ப்பாணம் இல்லையடா செல்லம்…அபுதாபி. இன்னும் ஒரு நாளிலை யாழ்ப்பாணத்துக்குப் போயிடலாம்.” எனச் சமாதானம் சொன்னாள் என் மனைவி.

நல்ல திரைப்படம் நல்ல சாப்பாடு என விமானப் பயணம் சலிப்பில்லாமல் போனதால் நேரம் போனதே தெரியவில்லை.

kuzhanthai_manasu_2_520x426 கொழும்பை வந்தடைந்தபோது வியாழக்கிழமை அதிகாலை ஆகியிருந்தது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் வழியெங்கிலும் யுத்தத்தின் வடு ஆங்காங்கே எட்டி பார்த்தது. யுத்தம் முடிந்ததாகச் சொல்லப்பட்ட இந்த நான்கு வருடக் காலத்திலும் ஏதும் மாறுதல் நிகழ்ந்தது போல் என்னால் உணர முடியவில்லை. நான்கு வருடங்களுக்கு முன்னர் யுத்தக் காலத்திலும் ஓர் சந்தோசம் இருந்தது. நாம் ஓடி உலாவிய மண்ணில் இப்போது நாகரிகமான மக்கள் கூட்டம் வாழ்ந்ததற்கான நிறைய ஆதாரங்கள் ஆங்காங்கே அழிக்கப்பட்டிருந்தன. மருதமும் முல்லையும் நெய்தலும் சார்ந்த எம் நிலத்தில் பாலைக்கான சாயல் ஆங்காங்கே தென்பட்டது.

 “அப்பா நாங்கள் திங்கள் இரவு வெளிக்கிட்டனாங்கள் புதன் தானே இஞ்சை

வந்திருக்க வேணும் இண்டைக்கு வியாழன் எப்பிடி ஆனது… நீங்கள் ரண்டு நாளிலை போகலாமெண்டு பொய் சொல்லிப் போட்டிங்கள் என்ன” என்று என் மகள் கேட்டாள்

“இல்லையடா செல்லக்குட்டி நாங்கள் அங்கையிருந்து திங்களிரவு வெளிக்கிட்டனாங்கள் அப்ப இஞ்சைச் செவ்வாய் கிழமை காலமை இப்ப வியாழக்கிழமை காலமை ரண்டு நாள் சரிதானேடா செல்லம்…. அமெரிக்காவுக்கும் இஞ்சத்தைக்கும் இடையிலை அரை நாள் வித்தியாசம் அங்கை இரவு எண்டால் இஞ்சைப் பகல்… இப்ப அமெரிக்காவிலை புதன் இரவு இஞ்சை வியாழன் காலமை”

“அதெப்பிடி… போங்கப்பா நீங்கள் பொய் சொல்லுறீங்கள்….”என்றபடி சலித்துக் கொண்டாள்.

அவளுக்கு அகல-நெடுங்கோடு பற்றி படிப்பிக்கும் ஆற்றல் எனக்குமில்லை சொன்னாலும் புரியும் வயது அவளுக்குமில்லை என்பதனால் நான் அவள் போக்கிலேயே விட்டுவிட்டேன்.

ஊருக்கு வந்த சில நாட்களிலேயே வெற்று கால்களுடன் மண்ணில் இறங்கி விளையாடப் பழகிக் கொண்டாள். கோழி, நாய், பூனை, ஆடு, மாடு என அனைத்தையும் ரசனையுடன் நல்ல நண்பர்களாக ஏற்று கொண்டிருந்தாள். அவளுக்குக் கரப்பான் பூச்சி மட்டும் இன்றுவரை நண்பராக மறுத்து விட்டது. இந்த மண்ணுக்குரிய வாழ்வை அவள் மிகவும் ரசிப்பதை அவளின் நடவடிக்கைகள் மூலம் உணர முடிந்து.

அவளுக்குத் தமிழ் சரளமாகக் கதைக்கத் தெரியுமென்பதனால்  சொந்தக்காரர்களுடன் அவளால் இயல்பாகப் பழக முடிந்தது.

“உங்கன்ரை மகள் எப்பிடி இவ்வளவு வடிவாய்த் தமிழ் கதைக்கிறா…” எனப் பலர் என்னிடம் கேட்டனர்.

“நாம் பிறப்பினால் தமிழர் அதன் பின்தான் அமெரிக்கர்… தாய்மொழியைச் சொல்லித்தர ஆள் எதுக்கு வீடே போதும்…அவளுக்கு தமிழுடன் ஆங்கிலம் எழுதக் கதைக்கத் தெரியும் அமெரிக்காவில் ஆங்கிலத்துடன் மேலதிகமாக இன்னும் சில மொழி தெரிந்தால் அதுக்குத் தனி மரியாதை அது அவள் எதிர் காலத்துக்கும் நல்லது. அமெரிக்கர்களில் பெரும்பான்மையானோர் பல நாடுகளில் இருந்து வந்து குடியேறியவர்கள் என்பதனால் அவர்கள் ஆங்கிலத்துடன் தமது பூர்வீக நாட்டு மொழியையும் தெரிந்து வைத்திருக்க விரும்புகின்றனர். அதுபோல் என் மகளும் தன் தாய்மொழியைப் படிப்பதில் என்ன தவறு”  என்றேன். அவர்கள் என்னை வியப்புடன் பார்த்தனர்.

இப்படியே வீடும் சொந்தமும் சுற்றமும் என நாட்கள் உருண்டோடின. மறுபடிக்கும் அமெரிக்காவுக்குத் திரும்புவதற்கான நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. ஆட்டுக் குட்டிக்கும் “வீசா” எடுக்கும் படி என் மகள் அடம்பிடித்தாள். ஆட்டுக் குட்டியையும் அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லப் போவதாகவும் வீட்டின் பின்னே உள்ள புல் வெளியில் கட்டி வளர்க்கப் போவதாகவும் கூறினாள்.

ஊரை விட்டுப் பிரியும் போது அழுகையும் ஆர்ப்பாட்டமுமாகக் கிளம்ப வேண்டியதாயிற்று. என் மகள் தான் அங்கிருந்து கிளம்பவே மாட்டேன் என்று அடம்பிடித்து அழத் தொடங்கினாள். அவளுக்குக் கிராம வாழ்க்கை பிடித்துப்போய் விட்டதாக எண்ணத் தோன்றியது. ஒருவாறாக அவளைச் சமாளித்து அங்கிருந்து கிளம்பி அமெரிக்காவுக்கு வருவதே பெரும் பாடாகியிருந்தது.

மறுநாளே மறுபடியும் வேலையில் இணைய வேண்டி இருந்தமையினால் வந்த களைப்பு தீர ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிட்டு வேலைக்குக் கிளம்பிவிட்டேன். மாலையில் வீடு வந்தபோது மனைவி வழமைபோல் ஏதோ வேலையில் மூழ்கியிருந்தாள்.

மகள் சில புத்தகங்களை நிலத்தில் பரப்பி எதையோ பரபரப்புடன் தேடிக் கொண்டிருந்தாள். அருகில் சென்று நானும் அவளுடன் அமர்ந்து…

“இனி என் செல்லக்குட்டி எப்ப யாழ்ப்பாணம் போறது..” என்றேன்.

“போங்கப்பா நீங்கள் இப்பதானே போயிட்டு வந்தனாங்கள் நாளைக்குப் பள்ளிக்கூடம் அதை முதல்லை பாப்போம். யாழ்ப்பாணம் போறதைப் பற்றி பிறகு யோசிக்கலாம் என்ன…” என்றாள்.

எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.

 

“என் செல்லக் குட்டியே”

என்று சொல்லியவாறு வாரியணைத்து ஒரு முத்தமிட்டேன்.

– தியா –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad