பிட் காயின் அலை
சென்ற வருடம், ஏறத்தாழ இதே சமயம், இந்தியாவில் பலர், திருவோடு ஏந்தாத குறையாக ஏ.டி.எம்.களில் ஸ்தலவாசம் செய்திருந்தனர். ‘கேஷ்லெஸ் எகானமி’ என்ற பொருளாதாரத் தத்துவம் தலை தூக்கியது. ஒரு வேளை அப்படி நடந்துடுமோ என்று வயிற்றில் புளி கரைய, பணத்தைச் சேமிக்க, மாற்று வழி தேட ஆரம்பித்தனர் சிலர்.
சில மாதங்களுக்கு முன்பு ‘வான்ன க்ரை’ (wanna cry) எனும் ‘ரான்சம் அட்டாக்’ நடத்தியவர்கள் தாங்கள் கேட்ட மீட்புத் தொகையை கரன்சி எனும் நாணய வடிவில் பெறாமல் முழுக்க முழுக்க ‘மெய்நிகர்’ தொகையாகப் பெற்ற விஷயம், உலகெங்கும் பரவி ‘ஓ! இப்படி ஒரு ஆப்ஷன் இருக்கோ’ என்று பலரையும் யோசிக்க வைத்தது.
2009 முதல் புழக்கத்தில் இருந்தாலும், ‘பிட்காயின்’ எனப்படும் ‘மெய்நிகர் பணம்’.பலரின் தனிக்கவனத்தைப் பெற்றது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, பண்டமாற்று எனும் பழங்காலச் செலாவணி (barter) மூலம், ‘பணமில்லாப் பரிவர்த்தனை’ (Cashless transaction) செய்து காட்டிய ஜித்து ஜில்லாடிகள் நம் முன்னோர். அதிலிருந்த சில நடைமுறைச் சிக்கலைத் தீர்க்க பொதுவான மதிப்புகளைக் கொண்ட காகிதத் தாள்களையும், நாணயங்களையும் நாம் பயன்படுத்தி வந்தோம்.
இருப்பினும் இந்த நாணயங்களுக்கு நாடுகளிடையே ஒரே மதிப்பு இருப்பதில்லை. ‘க்ளோபல் எகானமி’ என்று உலக வர்த்தகம் நடத்தினாலும், பின் புலத்தில் அந்த வர்த்தகம் தொடர்பான பல அன்னியச் செலாவணி வேலைகள் நடைபெற வேண்டியிருந்தது. இந்தச் செலாவணிப் பரிமாற்றத்தை நிகழ்த்தி வந்த பல பெரு நிறுவனங்களும், வங்கிகளும் இடையில் கணிசமான தொகையை, தரகுத் தொகை (commission), பரிமாற்றச் செலவு (conversion fee) என்ற பெயரில் சுருட்டிக் கொண்டிருந்தன.
இதையெல்லாம் முடிவுக்குக் கொண்டு வர, உலகமெங்கும் ஒரே மதிப்பீடு கொண்ட நாணய வடிவம் தான் பிட்காயின்.
2008 ஆம் ஆண்டு, ‘லேமன் பிரதர்ஸ்’ எனும் மிகப் பெரிய அமெரிக்க வங்கியின் ஊழல் அம்பலமாகியது. பல நாடுகளிலும் கிளைகள் கொண்டு, முதலீடு செய்திருந்த இந்நிறுவனம் திவாலானது உலகெங்கும் அதிர்வலையை உண்டாக்கியது.
இந்தச் சமயத்தில் ‘சதோஷி நாகமொட்டோ’ எனும் ஜப்பானியருக்கு உதித்த எண்ணம் தான், ‘மெய்நிகர் நாணயம்’. ஒரு குறிப்பிட்ட நிறுவனம் ‘வங்கி’ என்ற பெயரில் நாணயத்தைக் கட்டுப்படுத்துவதால் எழும் குளறுபடிகள், ஊழல்களைத் தவிர்க்க அனைவருக்கும் வெட்டவெளியாகத் தெரியக்கூடிய பரிவர்த்தனையை. தன்னைப் போல் மறையாக்க மென்பொருளர் சிலர் இணைந்திருந்த வலைத்தளத்தில், பரிந்துரைத்தார் சதோஷி. அனைவராலும் இந்தச் சிந்தனை ஏற்றுக்கொள்ளப்பட அடுத்த சில மாதங்களில் ‘பிட்காயின்’ எனும் மெய்நிகர் நாணயம் புழக்கத்துக்கு வந்தது.
தற்போது நிகழ்நிலை (ஆன்லைன்) வர்த்தகங்களுக்கு கடனட்டை மூலம் கட்டணம் செலுத்துகிறோம். இந்த கடனட்டை பாக்கிகளை வங்கிக் கணக்கிலிருந்து அடைத்து விடுகிறோம். சராசரியாக கடனட்டை நிறுவனங்கள் 2% செயலாக்கக் கட்டணம் வசூலிக்கின்றன. இதே கடனட்டையை அயல்நாடுகளில் பயன்படுத்தினால், நமது நாணயத்தை அங்கிருக்கும் நாணயமாக மாற்ற வேண்டும். எடுத்துக்காட்டாக, அமெரிக்க கடனட்டை வைத்திருக்கும் ஒருவர், லண்டன் நகரத்தில் பொருள் வாங்கினால், அந்தப் பொருளின் ஸ்டெர்லிங் பவுண்ட் / யூரோ
மதிப்பு அமெரிக்க டாலராக மாற்றப்படும். இந்த மாற்றத்துக்கான கட்டணம், நாணயத்தைப் பொறுத்து, 1.5% முதல் 3% வரையில் விதிக்கப்படும். இவையெல்லாம் பின்புலத்தில், கண்ணுக்குப் புலப்படாமல் நடப்பவை.
பிட்காயின் உலகம் முழுதும் ஒரே மதிப்பைக் கொண்டது. இன்றைய தேதியில், ஒரு பிட்காயினின் மதிப்பு 10,03,158.61 ரூபாய்; அமெரிக்க டாலரில் கணக்கிட்டால் ஒரு பிட்காயின் = $15,670.00. இன்று நீங்கள் ஆன்லைனில் $500 மதிப்புடைய ஒரு பொருளை வாங்க 0.03190000 பிட்காயின் தர வேண்டியிருக்கும்.
(இன்றைய நாளில் பிட்காயினை எட்டு தசமங்களாகப் பிரிக்க முடியும். (0.00000001). வரும் காலங்களில் இது 16 தசமங்களாகப் பிரிக்கக் கூடிய அளவுக்கு அமையும்). இந்த பின்ன மதிப்பைக் கொடுக்க பிட்காயினை உடைக்கத் தேவையில்லை.
பிட்காயின் 26 முதல் 35 எண்ணெழுத்து கொண்ட மறையாக்க முகவரியை அடையாளமாகக் கொண்ட கிரிப்டோ கரென்சி – எண்ம நாணயம்; ஜார்ஜ் வாஷிங்டன் படங்கள் கொண்ட தாள்கள் கிடையாது; தாமரைப் பூவில் உட்கார்ந்திருக்கும் லக்ஷ்மி உருவங்கள் பதித்த நாணயம் கிடையாது.
ஒருவர் பிட்காயின் வாங்கினால் அவருக்கு ஒரு மின்னணுக் கணக்கு உருவாக்கப்பட்டு, பயனர் சொல், கடவுச்சொல் உண்டாக்கப்படும். இதுவே பிட்காயினை வைக்கப் பயன்படும் பணப்பை, ‘வாலட்’ (wallet) எனப்படுகிறது. இந்த வாலட் முகவரிகள் நிலையானது கிடையாது. அடிக்கடி மாறக்கூடியவை. ஒருவருக்கு பிட்காயின் மூலம் கட்டணம் செலுத்த அவரது முகவரியைப் படக்குறி (QR code) வடிவில் பெற்று அனுப்ப வேண்டும்.
இந்தப் பரிவர்த்தனைகள் ‘பிளாக்செயின்’ (blockchain) எனப்படும் எண்மப் பதிவேடுகளில் (digital ledger) பதியப்படுகிறது. இந்தப் பரிவர்த்தனைகளைச் சரிபார்த்து அங்கீகரிப்பது, பிட்காயின் கணக்கு வைத்திருக்கும் உங்களது சக பயனர்கள் மட்டுமே. இவர்கள் இவ்வகையான பரிவர்த்தனைகளை அங்கீகரிப்பது மட்டுமல்லாமல் புதிய பிட்காயின்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் ‘மைனிங்’ எனும் வேலையையும் செய்து வருகின்றனர்.
மற்ற கரன்சிகளைப் போல் பிட்காயின் எந்த வங்கியாலும், அரசாலும் வெளியிடப்பட்டு, கட்டுப்படுத்தப்படுவதில்லை. மொத்தம் 21 மில்லியன் பிட்காயின்களுக்கான மறையாக்க எண்களே உருவாகும்படி நிரலிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 2140 ஆம் ஆண்டு, நிர்ணயிக்கப்பட்ட அனைத்து – 21 மில்லியன் – பிட்காயின்களும் சந்தையில் புழங்கும்.
மைனிங் செய்பவர்கள், பரிவர்த்தனைகளை அங்கிகரிப்பது மட்டுமல்லாமல், கணினி மென்பொருள் மூலம், கணிதப் புதிர்களை விடுவித்து புதிய பிட்காயின்களின் மறையாக்க எண்களைக் கண்டுபிடித்து சந்தைக்குக் கொண்டு வருகின்றனர். இன்றைய நிலவரப்படி ஒரு மணி நேரத்துக்கு 12.5 பிட்காயின்கள் இவர்களால் சந்தைக்குக் கொண்டு வரப்படுகின்றன. இவ்வாறு கண்டுபிடிக்கப்படும் பிட்காயின்கள் சந்தையில் விற்கப்படுகின்றன.
இந்த மறையாக்க எண்களைக் கண்டுபிடிக்க சக்தி வாய்ந்த கணினிகள் தேவைப்படுகின்றன. எல்லோராலும் எளிதில் இதில் இறங்கி பிட்காயின்களைப் பெற முடியாது.
பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கி விற்கும் நிறுவனங்கள் போல், பிட்காயின்களை வாங்கி, விற்க ‘பிட் கனெக்ட்’ , ‘ஜெப் பே’ போன்ற நிறுவனங்கள் உள்ளன. பிட்காயின் கணக்குத் துவங்கிய பின்னர் இவர்களிடமிருந்து பிட்காயின்களை வாங்கிக் கொள்ளலாம்.
ஆன்லைன் வர்த்தகத்தில் ஏதேனும் ஒரு பொருளை விற்று, அதற்குரிய விலையை பிட்காயின்களாகப் பெறலாம்.
பிட்காயின் ஏ.டி.எம்.களில் பணம் செலுத்தி பிட்காயின்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
தற்போது ஆன்லைன் வர்த்தகத்தில் பிட்காயின் கட்டணத்தை ஏற்றுக் கொள்ள பல நிறுவனங்களும், விற்பனையாளர்களும் முன் வருகின்றனர். மைக்ரோசாஃப்ட், டெல், லம்பார்கினி போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் பிட்காயின் கட்டணத்தை ஏற்றுக் கொள்கின்றன. ஜப்பானிய அரசு, பிட்காயின் பரிவர்த்தனைகளை அங்கீகரித்துள்ளது.
முன்னர் சொன்னது போல், நீங்கள் யாருக்காவது பிட்காயின் அனுப்பவேண்டும் என்றால் அவரது அப்போதைய முகவரி / க்யூஆர்கோட் கேட்டு வாங்கிய பிறகு அனுப்ப வேண்டும். அதேபோல உங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றாலும் உங்களின் தற்போதைய முகவரி / க்யூஆர்கோடு அனுப்ப வேண்டும். ஒவ்வொரு முறையும் இதே போலத்தான் பரிமாற்றம் நடக்கும். ஆனால் இந்தப் பரிமாற்றம் புரிந்தவர்கள் யாரென்ற விவரங்கள் மைனர்களுக்குத் தெரிய வராது.
பிட்காயின் பரிவர்த்தனைகள் மூன்றடுக்குப் பதிவேட்டு பராமரிப்பு உத்தியைக் கொண்டது. கணினிகளை ஹாக் செய்து வங்கி, கடனட்டை விவரங்களைக் களவாடுவது போல் பிட்காயின் கணக்குகளைத் திருட முடியாது. அதே போல் ஒருவர், ஏற்கனவே தான் பயன்படுத்திய பிட்காயினைத் திருட்டுத்தனமாக இரட்டைச் செலவாக்கம் செய்ய முடியாது. இந்தப் பரிவர்த்தனைகள் சில வினாடிகளில் திறந்த இணைய வெளியில் ஏற்றப்படுவதால் அவை உடனுக்குடன் சக மைனர்களால் சரிபார்க்கப்பட்டு அவரவர் கணக்கில் பதியப்பட்டுவிடும். போலி பிட்காயின்கள் நிராகரிக்கப்பட்டுவிடும்.
பிட்காயினின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைக் கணிக்க முடியவில்லை. இன்று அதனால் பயனடைந்த ஆதரவாளர்கள் வருங்கால பொருளாதாரத்தில் ‘பணம்/ என்பது இருக்க போவதில்லை. பிட்காயின் எண்கள் மட்டுமே உலக வர்த்தகத்தை இயக்கம் என்கிறார்கள்.
தடயம் இல்லாத பரிவர்த்தனை என்பதால் ஹாக்கர்கள் பிணைத்தொகை கேட்டாலும் பிட்காயினாகக் கேட்கின்றனர். தீவிரவாதிகளுக்குப் பண உதவி, ஆயுத விற்பனை, போதைப் பொருள் விற்பனை என அனைத்து நிழலுலக வர்த்தகங்களும் இதனால் பெரிதும் வளரும் அபாயமுள்ளது. இதனால் ஒரு சில நாடுகள் பிட்காயின் பரிவர்த்தனையைச் சட்ட விரோதச் செயலாக அறிவித்துள்ளன.
இந்தியாவைப் பொறுத்தவரை பிட்காயின் பயன்பாட்டிற்கு அவரவரே பொறுப்பு என ரிசர்வ வங்கி சில மாதங்களுக்கு முன் எச்சரித்துள்ளது..
பிட்காயின் போன்ற டிஜிட்டல் நாணயங்களைக் கட்டுப்படுத்துவது அல்லது முறைப்படுத்துவது தொடர்பான விவாதமும் தீவிரமாகி வரும் நிலையில் பிட்காயின் மீதான ஆர்வமும் அதிகரித்து வருகிறது. இன்று பிட்காயின் வைத்துள்ள சிலர் கோடிஸ்வரர்களாக மாறிவிட்டாலும். இதைப் பற்றித் தெளிவான புரிதல் இன்றி பிட்காயின்களில் முதலீடு செய்வது உசிதமில்லை.
ரவிக்குமார்
Tags: bitcoin, Cashless transaction, பிட் காயின், மெய்நிகர் நாணயம்