\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மனசாட்சி

Filed in இலக்கியம், கதை by on April 16, 2013 0 Comments

manachaadchi_520x353விடிந்தும் விடிந்திராத காலைப் பொழுது.. அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த கணேஷ் தன் தலையில் இடி விழுந்தது போன்றதொரு பெரும் சத்தமொன்றை உணர்ந்தான்.

மனிதன் தூங்கிக் கொண்டிருக்கும்போதும், அவனுக்குள் ஏதோவொன்று தூங்காமல் விழித்துக் கொண்டு நடப்பவற்றைக் கவனித்துக் கொண்டிருக்குமாம், அதனால்தான் பத்துக் குழந்தைகள் அடுத்தடுத்துப் படுத்து தூங்கும் கல்யாண மண்டப வராந்தாவில் கோபியின் அம்மா வந்து “கோபி, கோபி” என்றழைக்கும்போது கோபி மட்டும் எழுகிறான், மற்ற ஒன்பது சிறுவர்களும் நிம்மதியாகத் தூக்கத்தைத் தொடர்கின்றனர். உறங்கும் கோபியினுள்ளே உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கும் ஏதோவொன்று அவன் தான் கோபியென்று இடைவிடாது சொல்லிக் கொண்டிருக்கிறதாம்.. பெரியவர்கள் சொல்லக் கேள்வி..

மேசை மேலிருந்த கடிகாரத்தின் அலார ஒலியென எண்ணி, தூக்கத்திலிருந்து எழாமலேயே, கடிகாரத்தின் தலையில் தட்டி அதனை நிறுத்த எத்தனித்தான் கணேஷ். எஜமானன் நேற்றிரவு சாவி கொடுத்ததற்கிணங்க, தன் கடமையைச் செய்யத் துவங்க இன்னும் சில மணிநேரமிருப்பதால் அமைதியாக இருந்த கடிகாரம், இப்பொழுது எஜமானனிடம் தலையில் அடிவாங்கிக் கொண்டு தனது அமைதியைத் தொடர்ந்தது. தொடர்ந்து அடித்தும் வாய் மூடாததால் குழப்பமடைந்த கணேஷ், தூக்கத்தை விட்டு சற்று எழுந்து சுற்றும் முற்றும் பார்த்து திரு திருவென விழிக்கலானான். இருட்டுக்குக் கண்களைப் பழக்கிக் கொண்டு தலையைச் சற்று நிமிர்த்தி படுக்கைக்கு அருகிலிருக்கும் குட்டி மேசையைக் கூர்ந்து நோக்க – இப்பொழுது அவனுக்குப் புலப்பட்டது, சத்தம் போடுவது மேசை மேலிருந்த தொலைபேசி என்பது…..

கண்களை இடுக்கிப் பார்க்க, நேரம் அதிகாலை 3.30 மணி. இந்த நேரத்துல யாரு ஃபோன் பண்றா.. குழப்பத்துடன் கண்களைக் கசக்கிக் கொண்டே, தொலைபேசியை எடுத்துக் காதில் வைத்துக் கொண்டு “ஹல்லோ……” என்றான் கணேஷ். தூக்கக் கலக்கம் மற்றும் கோபம் கலந்து இவன் குரல் கொடுக்க, மறு முனையில் பிரகாஷ்… கணேஷின் உற்ற நண்பன்… சிறு வயதிலிருந்து மிகவும் நெருங்கிய நண்பர்கள். இவர்களிருவருக்கும் இடையே  எந்த ஒளிவு மறைவும் எப்பொழுதும் இருந்ததில்லை…

“டேய் மாப்ளே, ரொம்ப முக்கியமான விஷயம்டா….. மனச தேத்திக்கடா… பேசுறது காதுல விழுகுதா?”…  முக்கியமான விஷயத்தைச் சொல்வதற்கு முன் தன் நண்பனின் கவனம் முழுவதும் தன்மீதுள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ளும் முயற்சி அது..

“என்னடா ஆச்சு? இந்த நேரத்துல என்னடா தலை போற அவசரம்..” குழப்பம், எரிச்சல், கோபம் அனைத்தும் கலந்த தொனியில் கணேஷ்..

“பெரிய பிரச்சனையாயிப் போயிருச்சுரா.. நேத்து சாய்ந்தரம் பேசிக்கிட்டிருந்தயில்ல நம்ம செகப்பி…. வீட்ட விட்டு ஓடிட்டாளாண்டா..”

“என்னது..”.. தலையில் நிஜமாகவே இடி விழுந்தது போலுணர்ந்தான் கணேஷ்..

கணேஷ்..

ஆஜானுபாகுவான தோற்றமில்லாவிடினும், நல்ல கவர்ச்சியான உடல் வாகு. களையான முகம். மாநிறமேயென்றாலும், பார்ப்போரை வசீகரிக்கும் காந்தக் கண்கள். இரண்டு நிமிடம் பேசினால் எவரும் விளங்கிக் கொள்வர் இவன் புத்திசாலியென்று. சுற்றி நடக்கும் அனைத்தையும் கவனிக்காதது போலிருந்தாலும் துல்லியமாகக் கவனித்து அதன் பின்னணிகளை எந்த விளக்கமுமில்லாமல் தானே யூகிக்கும் கூர்மையான அறிவு படைத்தவன். எவருக்கு எது பிடிக்குமெனப் பேசுவதிலிருந்தே அறிந்து அதனைக் குறித்துப் பேசி அவர்களை இரண்டே நிமிடங்களில் தன்பால் இழுக்குமளவுக்கு ஆளுமை கொண்டவன் கணேஷ். குறிப்பாகப் பெண்கள் விஷயத்தில் மிகவும் சூட்டிகை. எந்தப் பெண்ணை ஏது செய்து ஆட்படுத்தலாமென்பதில் ஒரு டாக்டரேட் கொடுப்பார்களென்றால் நாட்டிலுள்ள அனைத்து யுனிவர்சிடியும் கணேஷின் வீட்டில் வரிசையில் நிற்பர். அந்த அளவுக்கு திறமையுள்ளவன். அவனைச் சுற்றி மங்கையர் கூட்டம் எப்பொழுதும்… பல ஆண் நண்பர்கள் இதனைப் பார்த்து பொறாமைப் படுவதுண்டு…

செகப்பி…

பேச்சுவழக்கில் மருவிய “சிவப்பி”.. தென் தமிழ்நாட்டில் பொதுவான பெயர். பெயருக்கு ஏற்றாற்போல, எலுமிச்சை நிறத்தில் ஜொலிக்கும் அழகி. சராசரித் தமிழ்ப் பெண்ணின் உயரம், கடவுள் தேவையான நேரமெடுத்துக் கொண்டு தெளிவுடன் செதுக்கிய கவர்ச்சிச் சிற்பம். பெரும்பாலான நேரங்களில் கிராமத்திற்கு உரித்தான பாவாடை தாவணி, இரட்டைச் சடையில் வலம் வருபவள். அழகாகத் தேங்காயெண்ணை தேய்த்துப் படிய நடு வகிடு எடுத்து வாரிய கருகருக் கூந்தல் அவளின் பின்னழகு வரை நீண்டு வளர்ந்திருக்கும். ஆண்களை ஒருமுறை திரும்பிப் பார்த்து ரசிக்க வைக்கும் அதே கூந்தலழகு பெண்களையும் திரும்பிப் பார்த்து பெருமூச்செறிய வைக்கும், பொறாமையில். கிராமத்திற்கே உரித்தான அப்பாவித்தனம் கமழும் முகம் அவளின் அழகுக்கு அழகூட்டும்.. அதே கிராமத்துப் பெண்களுக்கே உரித்தான கவனமும், முன்னெச்சரிக்கையும் அந்த அப்பாவித்தனத்திற்கு சற்றே அன்னியமான குணங்களாகக் காட்சியளிக்கும். இவை சிறு வயதிலிருந்து சொல்லித் தரப்பட்ட இலக்கணங்கள்.

படிப்பிலும் படு சூட்டிகை. கிராமத்திற்கு அருகிலுள்ள காரைக்குடி பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கிறாள். கணேஷின் அதே வகுப்பு. தேர்வுகளில் பொதுவாக முதலிடமோ அல்லது இரண்டாமிடமோ வருபவள். அவள் இரண்டாவதிடம் என்றால், முதலிடம் வந்தவன் நம் கணேஷாகத்தான் இருப்பான்.. இருவருக்கும் படிப்பில் கடும் போட்டி.. ஆனாலும் செகப்பிக்கு எப்போதுமே கணேஷின் மீதொரு அளவு கடந்த பாசம், நம்பிக்கை. கணேஷ் ஒரு சராசரி ஆணாகத்தான் இருந்தான். மனதளவில், எப்படியாவது அவளைவிட அதிக மதிப்பெண் எடுத்துவிட வேண்டுமென்பதில் குறியாக இருப்பான். அது முடியாத வேளையில், எப்படி அவளை மட்டம் தட்டுவது என்பதில் மிகவும் கவனமாக இருப்பான். புத்திசாலித்தனமாகத் தனது ஆணாதிக்கத்தைக் காண்பிப்பதில் மிகவும் தேர்ந்தவன் கணேஷ். படிப்புத் தவிர, கல்லூரியில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளனைத்திலும் கலந்து கொள்வான் கணேஷ். ஓவியம் வரையும் போட்டி மற்றும் பாட்டுப் பாடும் போட்டி தவிர்த்து மற்ற அனைத்துப் போட்டிகளிலும் கணேஷ் மிகவும் திறமையானவன். முதலாவது அல்லது இரண்டாவது இடத்தைப் பிடித்து விடுவான். செகப்பிக்கு படிப்புத் தவிர வேறெதிலும் அவ்வளவாக ஈடுபாடில்லை.

அவையெல்லாம் இப்பொழுது பெரிய பிரச்சனையில்லை. நண்பன் பிரகாஷ் தொலைபேசியில் சொன்ன விவரம், கணேஷின் தண்டுவடம் வழிச் சென்று, மூளைச் செல்களை நேரடியாகத் தாக்கியது. காரணம், நேற்றுத்தான் அவர்களிருவரும் ஒரு முக்கியமான தருணம் குறித்து விவாதித்திருந்தனர். அன்று வரை தன்மீது செகப்பி காட்டிய அன்பை, பாசத்தை ஒரு பெண் ஆணின்மீது காட்டும் காதலென்று எண்ணிக் கொண்டிருந்த கணேஷ், முதன் முறையாக முதலானவன் தான் அல்ல என்பதைக் கேட்டறிந்த நாள். செகப்பி தன்மீது வைத்திருந்தது சகோதரிப் பாசமென்பதையும், அவளின் மனதில் இருப்பவன் வேறொருவன் என்பதையும், அந்த உறவுக்கு, உணர்வுக்குத் தன்னைத் துணைக்கு வர எதிர்பார்க்கிறாளென்பதையும் தெளிவாக உணர்ந்த நாள்.

ராமு..

ஊரில் தனவந்தர் ஒருவரின் ஒரே பிள்ளை, செல்லப் பிள்ளை. அந்த வயதில் வைத்துக்கொள்ள இயலாத, கூடாத அளவு பணம் எப்பொழுதும் புரளும். தந்தையின் பணம் பெரும்பாலானவை நல்ல வழியில் வந்தவையல்ல என்பதாலோ என்னவோ மகனின் செலவுகள் பலவும் நல்ல காரணத்திற்காக இருந்ததில்லை – உடற்பயிற்சிக்காக அவன் செய்யும் செலவைத்தவிர. கட்டுமஸ்தான உடல், சற்றுக் களையான முகமும் கூட. ஆனால், ஒரு நிமிடம் பேசினானெனில் தெள்ளத் தெளிவாக விளங்கிடும் அவனின் பேதைமை. செகப்பிக்கு அதெல்லாம் புரிந்திருக்கவில்லை போலும், அவள் அவனின் உடற்வாகிற்குக் கொடுத்த முக்கியத்துவத்தை  மற்றெதற்கும் கொடுக்கவில்லையெனத் தெளிவாக விளங்கிற்று. என்ன செய்வது, வயது செய்யும் விந்தையல்லவோ அது.

செகப்பி முந்தைய தினம் கணேஷிடம் இது குறித்துத்தான் பேசிக் கொண்டிருந்தாள். சுற்றி வளைத்துத் தட்டுத் தடுமாறி, ராமுவைத் தான் காதலிப்பதாகச் சொல்லிவிட்டாள். கணேஷிற்கு இதனைக் கேட்டபோது தலை சுற்றல் ஆரம்பமாயிற்று. தான் தோற்று விட்டோமென்பதைவிட, தனது அறிவுத் திறனுக்கு ஈடில்லாத ஒரு முரடனிடம் தோற்றோமென்பதே அவனுக்குப் பெரிதாகப் பட்டது. அழுகையின் மத்தியிலே செகப்பி, பிற விவரங்களையும் சொல்லி முடித்தாள்: ராமுவின் வீட்டில் அவனுக்குப் பெண் பேசுவதாகக் கூறினானாம், அதற்கு முன் ஊரைவிட்டு ஓடிச் சென்று இவளைத் திருமணம் செய்து கொள்ள விருப்பமென்று சொன்னானாம். இவளுக்கு ஒரு பெரிய குழப்பமாம், அதற்குத் தெளிவளிக்க கணேஷின் உதவியை நாடினாளாம். அழுது கொண்டே அவள் அதைக் கண்மாய்க் கரையிலே இவனிடம் சொல்லிக் கொண்டிருக்கையில், கதிர் அறுத்து வீடு திரும்பும் ஆண்களும், பெண்டிரும் அப்பக்கம் நடந்து செல்ல, அவர்கள் பார்த்துச் சென்றதெல்லாம் அவளின் அழுகை, இவன் முன்னிலையில் – அவள் பேசியது எதுவும் அவர்களுக்கு கேட்டிருக்க நியாயமில்லை.

நடந்ததனைத்தையும் நண்பன் பிரகாஷிடம் தெளிவாகக் கூறியிருந்தான் கணேஷ். சிறிய கிராமத்தில், பார்த்த சிறு நிகழ்வைக் கண், காது, மூக்கு வைத்துப் பெரிதாக்குவதென்பது மிகவும் சாதாரணமான ஒரு நிகழ்வு. அதுவும் இதுபோல ஒரு பெண் காணாமற் போய்விட்டாளென்றால், அதற்கு முந்தைய தினமிரவு கண்மாய்க் கரையோரம் ஒரு இளைஞனிடம் தனிமையில் அழுது கொண்டே பேசிக் கொண்டிருந்தாள் என்பதை விட  வேறேதாவது வேண்டுமா ஊர் திரண்டு கணேஷின் வீட்டின்முன் முற்றுகையிட.

சோலையன்..

செகப்பியின் அண்ணன்.. பள்ளிப் படிப்பில் பல வருடம் தோல்வியுற்று இதற்கும் நமக்கும் தூரம் அதிகமென்று இறுதியில் விளங்கிக் கொண்டு, ஊருக்கு அருகிலிருந்த காட்டன் மில்ஸ் ஒன்றில் ஹெல்பராக வேலைக்குச் சேர்ந்திருந்தான். நன்றாகச் சாப்பிட்டு, உடற்பயிற்சி செய்து உடம்பைக் கட்டு மஸ்தானமாக வைத்திருந்தான். கட்டம் போட்ட லுங்கியைத் தூக்கிக் கட்டிக்கொண்டு, சட்டையின் முதலிரண்டு பொத்தான்களை அவிழ்த்து விட்டு, காலரை பின்னோக்கி இழுத்து விட்டுக்கொண்டு தெருவில் நடந்தானெனில், பார்ப்பவர்களுக்கு ஒரு பயம் வருமென்பதில் ஐயமில்லை. பொதுவாகத் தெரிந்தவர்கள் வட்டாரத்தில் அவன் பெயர் “சண்டியரு”…. தங்கை ஊரை விட்டு ஓடி விட்டாளென்று கேள்விப் பட்டவுடன், பைக்கை எடுத்துக் கொண்டு தன்னுடன் எப்பொழுதும் வெட்டியாகச் சுற்றும் சில நண்பர்களுடன் புறப்பட்டு விட்டான்.. வெட்டியாக ஊர் சுற்றும் அவன் நண்பர்களுக்கும் இது ஏதோவொரு விதத்தில் ஒரு உருப்படியான வேலை கொடுத்தது போலிருந்தது.

கணேஷ் அவசர அவசரமாக துணி மணிகளைப் பெட்டியிலெடுத்து அடுக்கத் தொடங்கியிருந்தான். தொலைபேசியில் நண்பன் பிரகாஷின் அறிவுரை.. “சோலையன் ஒரு சரியான முரடண்டா, நீ என்ன சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டான்.. நீதான் செகப்பியை எங்கயோ அனுப்பிட்டன்னு உன்னப் பொரட்டி எடுத்துருவான்.. அவன் வர்ரதுக்குள்ள ஊருக்கு கெளம்பிப் போயிரு..”

ஊருக்கு என அவன் சொன்னது சிங்காரச் சென்னையை. கணேஷின் அம்மா மற்றும் அப்பா அவன் சகோதரனின் இல்லத்தில் வசிக்கின்றனர். ஒரு வருடத்திற்கு முன்னர் அவன் சகோதரனுக்கு முதல் குழந்தை பிறந்த நிலையில் ரிடையரான அப்பாவும் அவருடன் அம்மாவும் சென்று அவர்களுடன் வசிக்கத் துவங்கியிருந்தனர். கணேஷ் சொந்த ஊரில், சொந்த வீட்டில் தனியனாய்த் தங்கி காரைக்குடியில் பொறியியல் படிப்பைத் தொடர்ந்தான். இப்பொழுது சென்னை புறப்படத் தயாராகிக் கொண்டிருக்கிறான். படுக்கையறையில் ஒவ்வொரு உடைகளாக எடுத்துப் பெட்டியில் வைத்துக் கொண்டிருக்க, வெளியில்  பைக் வரும் சத்தம் கேட்கத் துவங்கியது. அருகில் வர வர சத்தம் அதிகரித்து, பல வண்டிகள் நெருங்குகின்றன என்பதை உணர்த்தியது. அவசரமாகச் சென்று சன்னலின் திரையை விலக்கிப் பார்த்தான் கணேஷ். பத்துப் பனிரெண்டு பைக்குகள் வந்து நிற்கின்றன, அதிலிருந்து மனிதர்கள் இறங்கத் துவங்குகின்றனர். சோலையன் அடியாட்களுடன் வந்து விட்டானென்று உணர்ந்த கணேஷ், பின்பக்க கதவு வழியாக ஓடத் தீர்மானித்தான். கையில் கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு, அவசர அவசரமாக ஓடி, பின் கதவைத் திறந்த கணேஷுக்கு அதிர்ச்சி காத்திருந்தது….

தந்திரத்துடன் பின்பக்கமாகவும் வந்து காத்திருந்தனர் சோலையனின் ஆட்களில் சில பேர்.. கையிலிருந்த கட்டை மற்றும் கத்தி கொண்டு கணேஷை மிரட்ட ஆரம்பித்தனர். வசமாக மாட்டிக் கொண்ட கணேஷ் வேறு வழியில்லாமல் என்ன செய்வது என்ற யோசனையுடன் நின்று சுற்று முற்றும் பார்த்தான். அடியாட்கள் அவனைப் பார்த்து ஆயுதங்களை உயர்த்திக் கொண்டே வீட்டிற்குள் செல்லுமாறு மிரட்டினர். இதற்குள் மற்றொரு கூட்டம் முன் கதவை உடைத்துத் திறந்து உள்ளே வந்து விட்டிருந்தனர். சோலையன் தலைமையில் பல அடியாட்கள் ஆயுதங்களுடன் கணேஷை முற்றுகையிட, செய்வதறியாது திகைத்துக் கொண்டு நின்றான்.

கணேஷ்….

“எங்கடா ஒளிச்சு வெச்சுருக்க செவப்பிய”…. சோலையன் கடுமையான குரலில் கேட்க..

“என்னங்க கேக்குறீக”….. கணேஷ் அப்பாவியைப் போல் மறுவினா தொடுக்க…

“இங்கரு, அடிபட்டுச் சாவாத.. நெசத்த சொல்லிரு ஆமா”…. சோலையனின் மிரட்டல் தொடர்ந்தது..

“என்னண்ண சொல்றீக.. ஒண்ணும் புரியலண்ண…” உறவு சொல்லி அழைத்தால் கருணை கிடைக்குமென்ற நம்பிக்கையில் கணேஷ் தனது அப்பாவித்தனத்தைத் தொடர்ந்தான்…

“நேத்து செகப்பிப் புள்ள உன்கிட்ட எதையோ சொல்லி அளுதுக்கிட்டு இருந்துச்சாம்.. கம்மாக் கரையில பாத்தவுக சொல்றாக.. இப்ப அவளக் காணோண்டா… எங்கடா வெச்சுருக்க அந்தச் சிறுக்கிய”…. குரலில் கடுமையை உயர்த்தி, கண்களில் கோபத்தைப் பளிச்செனக் காட்டிக் கேட்டான் சோலையன்…

இந்தப் பேச்சுக்களுக்கு இடையிலே பேச்சுக்களை மீறி சுற்றிலுமுள்ளவர்களை தற்செயலாக கவனிக்கத் தொடங்கிய கணேஷுக்கு, கூட்டத்தின் மத்தியிலே ஒரு உருட்டுக் கட்டையை வைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்த ராமு சட்டெனக் கண்ணில் பட்டான்… கண்களைக் கசக்கிக் கொண்டு, மீண்டும் கூட்டத்தின் மத்தியில் பார்க்கிறான், உறுதி செய்து கொள்வதற்கு….

“என்னடா, பொறுக்கி நாயே, நான் கேட்டுக் கிட்டே இருக்கேன், நீ என்னடா அங்க என்னமோ பாத்துக்கிட்டு இருக்க…” சொல்லிக் கொண்டே முன்னேறிய சோலையன் அடித்து விடுவானென்பதை உணர்ந்த கணேஷ், மிகத் துரிதமாக..

“இவன் தாண்ணே….” என ராமுவை நோக்கி கையைக் காட்டலானான்….

குழப்பமடைந்த சோலையன், “என்னடா சொல்ற”… என்று திரும்ப……

“ஆமாண்ண.. செகப்பி என்கிட்ட அதாண்ணே சொன்னா, இவன லவ்பண்றதாவும், இவனோட ஓடிப்போகப் போறதாவும் … கேளுங்கண்ணே, இவன…” சுவாசிக்க மறந்து, கடகடவெனச் சொல்லி முடித்தான் கணேஷ்..

சோலையனின் கோபம் முழுவதும் இப்பொழுது ராமுவின் பக்கம் திரும்பியது. புருவத்தை நெறித்து, கவனத்தை முழுவதுமாக அவன் பக்கம் திருப்பி, கூர்மையான பார்வையால் அவனைத் துளைத்துக் கொண்டே, அவனை நோக்கி முன்னடக்கத் தொடங்கினான்.

சோலையனின் கடுமையான முகம், கோபம் கொப்பளிக்கும் கண்கள் மற்றும் கையிலுள்ள கொடூரமான ஆயுதங்கள் அனைத்தும் ராமுவின்  கண்களில் மரண பயத்தை மிகத் தெளிவாக வெளிக்காட்டத் துவங்கியிருந்தது.

இந்த முரடனிடம் எப்படிச் சொல்லி விளங்க வைப்பது?

ஆம், தாங்களிருவரும் ஊர் விட்டோடி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து மும்பை செல்லும் ரயிலேறியது.. சில மணிநேர ரயில் பிரயாணத்திற்கு பிறகு, பாத்ரூம் சென்று திரும்பி வந்து பார்த்தால், செகப்பியைக் காணாதது.. அப்பொழுது தொடங்கி சோறு தண்ணீரில்லாமல் அவளைத் தேடியலைந்தது, ஆயிரக் கணக்கான தொலை பேசி அழைப்பு விடுத்தது, போலிஸில் சொல்வதற்கு  பயந்து நண்பர்கள் பலரின் உதவியுடன் தேடிப் பிடிக்க முயன்றது…. கடைசியாக கணேஷின் கதையைக் கேட்டு ஒருவேளை அவன் ஏதாவது செய்திருப்பானோ என்றறிய சோலையனுடன் சேர்ந்து வந்தது..…..

மனதில் இந்த ஃப்ளாஷ் பேக் ஓடிக்கொண்டிருக்கையில், சோலையனின் குரூரப் பார்வை ராமுவின் மீது தொடர்ந்து கொண்டிருக்கையில், ராமு முன்னெந்தப் பிறவியிலோ செய்த புண்ணியம் செல் ஃபோன் வடிவில் வந்து மணியடிக்கத் தொடங்கியது. எடுத்துப் பேசிய சோலையனின் முகத்தில் பல உணர்ச்சிகள் பொங்கி வழியத் தொடங்கின…..

“டேய்.. வண்டியெடு்ங்கடா. கெளம்பலாம்”…. ஃபோன் பேசுவதை முடித்த கையுடன் சொல்லிக் கொண்டே வாசலை நோக்கி துரிதமாக நடக்கத் தொடங்கினான். அடியாட்கள் கூட்டமும், ராமுவும், கணேஷும் குழப்பத்துடன் அவனைப் பின் தொடர்ந்தனர். சோலையன் வேகமாகச் சென்று பைக்கில் ஏறிக் குதித்து வேகத்துடன் கிக் ஸ்டார்ட் செய்து, புழுதியையும் புகையையும் பரப்பிக் கொண்டே கிளம்பிச் சென்றான். அவனுடன் வந்த அத்தனை அடியாட்களும் வேகமாகப் பின் தொடர்ந்து செல்ல, தேவலோகம் போன்ற புழுதிப் புகை மண்டலத்திற்கு நடுவே நடந்ததெதும் விளங்காமல் நின்று கொண்டிருந்தனர் கணேஷும் ராமுவும் !!

கணேஷின் கையிலிருந்த கைபேசி மெல்லமாய்ச் சிணுங்கத் தொடங்க, எடுத்து காதில் வைக்க, நண்பன் பிரகாஷ்… “டேய் மச்சி, எங்கடா இருக்க, செகப்பி கிடைச்சுட்டாளாண்டா”……

manachaadchi_2_520x370ரயிலில் சென்று கொண்டிருந்த செகப்பி…. பாத்ரூம் சென்றிருந்த ராமு கடன்களை முடித்து, சிகரெட் பிடித்து முடித்து, ஒரு சில கைபேசிச் சம்பாஷணைகளை முடித்து திரும்ப வருவதற்குள் இருந்த சில மணித்துளி தனிமை…. சிகப்பிக்கு பல குழப்பங்களைத் தருவித்த தருணமது.. பல கற்பனைகளுக்கு மத்தியிலே, அவளை உச்சகட்டத்திற்குத் தள்ளிய கற்பனை, கனவு பயம்.. தன் தாய் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்து போவதாகவும்  அவளின் இறுதி ஊர்வலம் தெருமுனையக் கடந்து செல்வதாகவும்… திரும்பத் திரும்ப வந்த இந்த சிந்தனை அவளை வெகுவாகக் குழப்பியது. நடக்கவிருக்கும் அசம்பாவிதத்தைத் தவிர்த்து தன் தாயைக் காப்பாற்ற வேண்டுமென முடிவெடுத்தாள்.

ரயிலின் அபாயச்  சங்கிலியைப் பிடித்து இழுத்தாள், கும்மிருட்டில் நடுக்காட்டில் ரயிலிலிருந்து குதித்து ஓடத் துவங்கினாள். பாதை தெரியாமல் அலைந்து திரிந்து, தாகம் பசி மயக்கம் எனப் பல தொல்லைகளில் மயங்கி விழுந்து, வழிப்போக்கர்களால் காப்பற்றி அழைத்துச் செல்லப்பட்டு, ஒரு தொலைபேசி கிடைத்து வீட்டிற்குப் பேசுவதற்குள், மேல் கூறப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் நடந்து முடிந்திருந்தன……

வீட்டிற்குப் பேசி முடித்து ஃபோனை வைத்தவுடன், தாயைக் காப்பாற்றிய மகிழ்ச்சி, சரியான முடிவு எடுத்த திருப்தி ஒரு கணம் அவளுக்கு. “ராமுவின் நிலையென்ன”, நினைத்த மறுகணம், எடுத்த முடிவு சரியில்லையோ என்ற சந்தேகம். இந்தப் மனப் போராட்டங்களுக்குத் தீர்வு கொடுக்காமல், சாட்சி போல் நடுவே அமர்ந்து வேடிக்கை பார்ப்பதுதானா மனசாட்சி?

 

– மது வெங்கடராஜன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad