\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மலர்க் கண்காட்சி

MaceysFlowerShow420x546உள்ளுர்த் தொலைக்காட்சி விளம்பரத்தில் மேசிஸ் (Macy’s) பாக்மன்ஸுடன் (Bachman’s) இணைந்து மினியாபொலி்ஸ் மேசிஸ் வளாகத்தில் மார்ச் 24ம் தேதி முதல் ஏப்ரல் 7 வரை மலர்க்கண்காட்சி ஒன்று நடத்துவதாகச் சொன்னார்கள். இந்தியப்  பின்னணியில் அமைந்திருப்பதாகச் சொன்னது மேலும் ஆர்வத்தைக் கூட்டியது. வானம் மழை பெய்யட்டுமா அல்லது பனி பொழியட்டுமா என்று கேட்டுக் கொண்டிருந்த ஒரு நன்னாளில் குடும்பத்துடன் கிளம்பிப் போனோம்.

நகர மையத்தில் கார் நிறுத்த இடம் தேடி அலைந்த போது, இவ்வளவு சிரமப்பட்டு வந்திருக்க வேண்டாமோ என்று தோன்றியது. மேசிஸ் கட்டிடத்தில் எட்டாவது மாடியில் மலர்த் தோட்டக் கண்காட்சி எப்படி சாத்தியம் என நினைத்துக் கொண்டே பாரமுயர்த்தியை (elevator) விட்டு வெளியே வந்த நொடியிலேயே அந்த அவநம்பிக்கை  தகர்த்தெறியப் பட்டது.

MaceysFlowerShow_3_520x354பல மலர்களின் கலவையான வாசம் நாசியைத் தாக்கி மனதைக் கிறங்கடித்தது. இதமான வெளிச்சத்தில் ஆங்காங்கே மலர் ஓவியங்களுக்கு மட்டும் வெளிச்சம் படுமாறு அமைத்திருந்த கூடம் வழியே நடந்துச் செல்லும் போதே மெல்லிய சிதார் ஒலி இந்தியச் சூழலை உணர்த்தி எதிர்பார்ப்பைக் கூட்டியது. கூடம் முடிந்து மண்டப நுழைவாயிலின் தொடக்கத்திலேயே பிரம்மாண்டம் தெரிந்தது. அம்பாரியுடன் கூடிய ஒரு குட்டி யானை சிலைக்கு வண்ண வண்ண மலர்களால் அலங்கரித்து பொருத்தமான வெளிச்ச வீச்சுகளால் அசர வைத்திருந்தார்கள். வந்திருந்த பெரியவர்கள் அனைவருமே குழந்தைகளாகி, கண்கள் விரியப் பார்த்துக் கொண்டிருந்தனர். நிஜமாகவே அவ்வளவு அழகுடன் மிகத் தத்ரூபமாக அமைத்திருந்தார்கள். புகைப்படக் கருவியின் விளக்குகள் பளிச் பளிச்சென மின்னிக் கொண்டிருந்தன.

கலை நிகழ்ச்சிகள் நடக்கக் கூடிய அந்த அரங்கம் முழுதும் வண்ண மலர்ச் செடிகள். நடு நடுவே ஈச்ச மரங்கள், தோடம் பழ மரங்கள், குட்டிக் குட்டி வாழைக் கன்றுகள் என அழகாக அமைத்திருந்தார்கள். விவரம் சொல்லாமல், உங்களின் கண்களைக் கட்டி யாரும் அங்கே அழைத்துச் சென்றிருந்தால் அது மினியாபொலிஸின் நகர மையத்தில் எட்டாவது மாடி என்று சொல்ல மாட்டீர்கள். வளமான ஒரு மலர்த் தோட்டத்தின் நடுவே இருப்பதாகச் சத்தியம் செய்வீர்கள். பல வண்ணங்களில் அல்லி, பூவரசு, மல்லிகை, அலரி், ரோஜா எனப் பூத்திருக்கும் நிஜச் செடிகள், பூக்களின் வண்ணங்களை மெருகேற்றும் வண்ண விளக்குகள், ஆங்காங்கே சலசலக்கும் நீரோடைகள், நடுநடுவே சின்னச் சின்ன மணி மண்டபங்கள். சுற்றுச் சுவர்களில் வண்ண ஓவியங்கள், திரைச் சீலைகள் என மிக ரம்மியமானதொரு சூழல். கூடவே இந்தியக் கலை ஓவியங்கள். தலைக்கு மேல் தொங்கும் கண்ணாடி பொருத்தப் பட்ட வண்ணக் குடைகள், பாரம்பரிய இசை, மலர்களின் வாசம் எல்லாம் சேர்ந்து ஒரு சொர்க்கலோகமாக மாறி இருந்தது.

MaceysFlowerShow_2_520x401அந்தந்த வண்ண மலர்களைத் தொகுத்து அழகுற அமைத்து அதன்  பின்னணியில் பொருத்தமான இந்திய ஓவியங்களைச் சித்தரித்து மிக நுட்பமாகச் சிந்தித்து அமைத்திருந்தனர். சிகப்பு, ஊதா நிற மலர்செடிகளுக்குப் பின்னணியாக தாஜ்மகால் சிகப்பு வெளிச்சத்தில் குளித்தது போன்றதொரு படம், வெள்ளைத் தாஜ்மகாலின் மற்றொரு பரிமாணமாகக் காட்சியிளித்தது.. அதன் முன்னே சிறிய பூங்கா நாற்காலி ஒன்றை வைத்துப் பார்வையாளர்கள் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள ஏதுவாக அமைத்திருந்தனர்.

வந்திருந்த அனைவர் கைகளிலும் புகைப்படக் கருவிகள் துரிதமாக இயங்கிக் கொண்டிருந்தன. ஒரு சிலர் கைப்பேசி வழியாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். மலர்த்தோட்ட ஆர்வலர்கள் பலர் பூக்களையும் செடிகளையும் வாஞ்சையுடன் தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தனர். சிறியோர் பெரியோர், அமெரிக்கர்கள், மற்றும் ஆசியர்கள் எனக் கூட்டம் நிரம்பி வழிந்தது.

மொத்தத்தில் மழை பெய்துக் கொண்டிருந்த ஒரு குளிரான மாலைப் பொழுதில் ஒரு முகலாய மன்னரின் அரண்மனைத் தோட்டத்திற்குச் சென்று வந்த ஒரு பிரமிப்பை ஏற்படுத்தி இருந்தனர் மேசிஸ் நிறுவனத்தினர். அது மட்டுமல்லாமல் வளாகத்தின் முன் அவர்களது காட்சிப்பேழையில் இந்திய சம்பிரதாயத் திருமண உடையில் மணமக்கள் இருப்பதாகச் சிறப்புடன் அலங்கரித்து இருந்தார்கள்.

இந்தியப் பின்னணியில் இக்கண்காட்சியை அமைத்து இந்தியத் திருநாட்டின் கலாச்சாரத்திற்கும், இயற்கை வளத்திற்கும் அவர்கள் அளித்த பெருமைக்கு கண்டிப்பாக நன்றி சொல்லியாக வேண்டும். இந்த முறை வாய்ப்பைத் தவற விட்டவர்கள், பின்னொரு முறை இது நிகழுமாயின் தவறாமல் போய் வாருங்கள்.

– ரவிக்குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad