வேலைக்காரன்
தனி ஒருவன் படத்திற்குப் பிறகு இயக்குனர் மோகன் ராஜாவும், ரெமோ படத்திற்குப் பிறகு சிவகார்த்தி்கேயனும் இந்த வேலைக்காரனில் கைகோர்த்திருக்கிறார்கள். தங்கள் முந்தையப் படங்களில் வெற்றிப் பெற்ற இயக்குனரும் நாயகனும் தரும் அடுத்தப் படம் என்பதால் இயல்பாகவே இப்படத்தின் மீது ஒரு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. எதிர்பார்ப்பைப் படம் பூர்த்திச் செய்ததா எனப் பார்ப்போம்.
கொலைகாரக் குப்பத்தில், குப்பத்து மக்களுக்கெனப் பிரத்யேக ஃஎப்.எம். சர்விஸ் தொடங்குகிறார், அம்மக்களுக்கான அக்கறையுடன் அங்கிருக்கும் படித்த வேலையில்லாத இளைஞரான சிவகார்த்திகேயன். அந்த வானொலிக்கான உண்மையான நோக்கம், அந்த மக்களை அங்கிருக்கும் தாதாவான பிரகாஷ்ராஜ் பிடியிலிருந்து விடுவித்து, நல்ல வேலைக்கு அனுப்பி வைப்பதாகும். அதற்கான முயற்சியிலிருக்கும் போதுதான், குப்பத்து ரவுடிகளுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பது புரிபடுகிறது. அதற்குப் பிறகு, சில பல வியூகங்கள் அமைத்து எப்படி அந்த நிறுவனங்களைத் தன் வழிக்குக் கொண்டு வருகிறார் என்பது மிச்சக் கதை.
நிச்சயமாக, ஒரு புது விஷயத்தைக் கையில் எடுத்திருக்கிறார் இயக்குனர் எனலாம். கார்ப்பரேட் நிறுவனங்களின் உணவுப் பொருட்கள் தயாரிப்பில் இருக்கும் பிரச்சினைகள், அதனால் ஏற்படும் உடல் நலக் குறைபாடுகள், தேவையில்லாதப் பொருட்களை எப்படி நுகர்வோர் தலையில் மார்க்கெட்டிங் மூலம் கட்டுகிறார்கள் என்பதை நச்சென்று பார்வையாளர்களுக்குப் புரியும் விதத்தில் எடுத்திருக்கிறார்கள். முதல் பாதிப் படத்தில் பிரச்சினைகளைக் காட்டும் காட்சிகளில் சிக்ஸர் அடித்த இயக்குனர், அதற்குத் தீர்வு சொல்கிறேன் என்று வைத்த காட்சிகளில் ஸ்கோர் செய்ய முடியாமல் திணறியிருக்கிறார். இது போன்ற உலகளாவிய பிரச்சினைகளுக்கு ஒரு மணி நேரத்தில் தீர்வுச் சொல்வது ஒன்றும் சுலபமில்லை அல்லவா?
சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வென அமைக்கும் திரைக்கதைகள் ஒவ்வொரு இயக்குனருக்கும் வேறுபடும். அவரவர் பாணிக்கு ஏற்றாற்போல் யோசிப்பார்கள். பிரச்சினைக்குரிய கதைக்களனில் தனது கதாபாத்திரங்களின் வாழ்க்கையின் மூலம் தனது கருத்தைச் சொல்வது மணிரத்னம் பாணி. ரொம்ப ஃபேன்ஸியாக, கொள்ளை, கொலை, வித்தியாசமான தண்டனைகள் எனத் தீர்ப்புச் சொல்வது ஷங்கர் பாணி. ஹீரோயிசம், இன்ட்ரஸ்டிங் முடிச்சுகள் எனக் கொண்டு போவது முருகதாஸ் பாணி. இதில் மோகன் ராஜா தனது பாணியாகத் ‘தனி ஒருவன்’ படத்தில் வருவது போன்ற ஹீரோ – வில்லனுக்குமான கேட் – மவுஸ் கேம் போன்ற திரைக்கதையே இதில் அமைத்திருக்கிறார்.
சிவகார்த்திகேயன் ஒவ்வொரு படத்திலும் தனக்கான எல்லையை விரிவாக்கிக் கொண்டே போகிறார். காமெடி, நடனம், ஆக்ஷன், நடிப்பு எனத் தனது திறமையை மெருகேற்றிக் கொண்டே செல்கிறார். தனது பலமான காமெடி ஏரியாவில் ஸ்கோர் செய்ய இதில் வாய்ப்புக் குறைவு என்பதே ஒரு குறை. ரொம்பவும் அலட்டாத வெரி ஸ்மார்ட் வில்லனாகப் பகத் ஃபாசில். தனது பங்கைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். நயன்தாரா இப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது யாருடைய ஆசையோ? அந்த யாரோ ஒருவர் திருப்தியடைந்து இருப்பார். சிவாவுக்கு அக்கா போல் இந்த ஜோடி பொருத்தமில்லாமல் இருக்கிறது.
படத்தில் ஒரு பெரும் நடிகர் பட்டாளமே வந்து செல்கிறது. சினேகா, பிரகாஷ்ராஜ், ரோகிணி, சார்லி, விஜய் வசந்த், தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், ஆர் ஜே பாலாஜி, சதீஷ், மன்சூரலிகான், முனிஸ்காந்த் என நீண்டு செல்லும் நடிகர்கள் கூட்டம். அவரவருக்குச் சிறு பங்கு. அதில் தேவைப்பட்ட அளவுக்கு நடித்திருக்கிறார்கள்.
படத்தில் எந்தளவுக்குச் சில காட்சிகளை அழுத்தமாக எடுத்திருக்கிறார்களோ, அதேபோல் சில காட்சிகளைச் சிறுபிள்ளைத்தனமாக எடுத்திருக்கிறார்கள். பிரகாஷ்ராஜ் கத்தி குத்துப்பட்டுப் படுத்தபடியே ஹீரோவுக்கு ஞானவுரை அளிக்கும் காட்சி, முதலாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் காட்சி போன்றவை ஸ்கூல் ட்ராமா தரம். செயல் தான் முக்கியம் என்று சொல்லிச் சொல்லியே பத்தி பத்தியாக எல்லோரும் டயலாக் பேசுகிறார்கள். நல்ல விஷயம் தான் பேசுகிறார்கள் என்றாலும் ஒரு அளவு வேண்டாம்?
ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அனுபவம் வாய்ந்த நடிகர்களை நடிக்க வைத்திருப்பது போல், பின்னணியில் வேலை செய்திருப்பதும் ஒரு தேர்ந்த தொழில்நுட்பக் குழுதான். இப்போதெல்லாம் அனிருத் பாடலில் கவருவதை விடப் பின்னணி இசையில் தான் அசத்துகிறார். ஒளிப்பதிவாளர் ராம்ஜி, கலை இயக்குனர் முத்துராஜ் இருவருமே படத்தில் தங்களது வேலையை உணரும்படி செய்திருக்கிறார்கள். எடிட்டர் வேலையைத் தான் சிரமமாக்கி விட்டார் இயக்குனர். பதிவாக்கியத்தில் கிட்டதட்ட அரை மணி நேரத்திற்கு மேற்பட்ட காட்சிகளை, பிறகு வெளியே எடுத்து விட்டார்களாம். அவை இனி யூ-ட்யூப்பில் வெளிவரும்.
பாதி வரை கொண்டு வந்த சீரியஸ்நெஸ்ஸை இறுதி வரை தொய்வில்லாமல் கொண்டு சென்றிருந்தால் இது வேறு லெவல் படமாக இருந்திருக்கும். படம் பார்த்த இரண்டு நாட்களுக்காவது இப்படம் பார்த்தப் பாதிப்பினால் நாம் கடைகளில் வாங்கும் பொருட்களை யோசித்து வாங்கினாலே, அதுவே இப்படத்திற்கான வெற்றி. ஒரு திரைப்படம் ஒரு பிரச்சினை குறித்த விழிப்புணர்வையும், விவாதத்தையும் பொதுவெளியில் ஏற்படுத்துவது என்பது பெரிய விஷயம். அந்த வகையில் இயக்குனர் மோகன் ராஜா பாராட்டுக்குரியவர். டாக்குமெண்டரியாக எடுக்க வேண்டிய கண்டென்ட்டை வைத்து கமர்ஷியல் படத்தை எடுத்திருக்கும் அவரது துணிவு மெச்சத்தக்கது. வருட இறுதியில் வந்திருக்கிற இப்படத்தைப் பார்த்து அவரவருக்கான அளவில் புத்தாண்டு தீர்மானம் எடுத்துக் கொள்ளலாம்.
இந்த வேலைக்காரன் அதிகம் பேசுவான். பேசப்படவும் செய்வான்.
- சரவணகுமரன்
Tags: vellaikaran, விமர்சனம், வேலைக்காரன்