விடைபெறும் 2017
‘காய்ந்த நிலங்கள் கருகும்; காலத்தே வெள்ளம் பெருகும்; லண்டன், இத்தாலி, பிரான்ஸ் நாடுகளில் பெருவாரிநோய் பரவும்; வல்லரசு நாடொன்று போர்த் தாக்குதலால் நிலைகுலையும்; சில காலம் உலகில் நோய்கள் ஒழியும், அமைதி பரவும்; மீண்டும் போர் துவங்கும்; அரசியொருத்தியின் ரகசியங்கள் வெளிவரும்; இரண்டு முறைகள் தவறி மூன்றாவது முறை மேற்கத்திய நாடொன்று கிழக்கத்திய நாடுகளால் வீழ்ச்சியுறும்’
இந்த வரிகள், நாஸ்டிராடாமஸ் ஐநூறு ஆண்டுகளுக்கு முன், தனது ‘தீர்க்கதரிசனங்கள்’ என்ற புத்தகத்தில், 2017ஆம் ஆண்டுக்கான கணிப்புகளாக எழுதியவை.
உலகில் சென்ற ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சிகள் பலவற்றை இவ்வரிகளோடு தொடர்புபடுத்திக் கொள்ளலாம். கலிஃபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட தீ; போர்ட்டோ ரிக்கோ, அமெரிக்கக் கன்னித் தீவுகள், தெற்காசிய நாடுகளில் உண்டான வெள்ளம்; வடகொரியா அமெரிக்காவுக்கு ஏற்படுத்தும் அச்சுறுத்தல்; இளவரசி டயானா முறையற்ற வழியில் கர்ப்பமாக இருந்ததே அவரது இறப்புக்குக் காரணம் என்ற கருத்து – இப்படிப் பல. ஆனால் எவருமே எதிர்பார்க்காத சில சந்தோஷ, துயர சம்பவங்களும் நடந்துள்ளன. அவற்றில் சிலவற்றைத் திரும்பிப் பார்ப்போம்.
அமெரிக்க நிகழ்வுகள்
- அமெரிக்காவின் 45 ஆவது அதிபராகப் பதவியேற்றார், கோடிஸ்வரரான, வியாபாரச் சக்கரவர்த்தி டானல்ட் ஜே. ட்ரம்ப். தான் சார்த்த கட்சியிலிருந்தும், எதிர்க் கட்சியிலிருந்தும் பலமான எதிர்ப்புகளைச் சந்தித்து அவற்றையெல்லாம் தவிடு பொடியாக்கி வென்றவரின் ஆட்சி குறித்து பல எதிர்பார்ப்புகள் எழுந்தன. அமெரிக்காவை மீண்டும் வல்லரசாக மாற்றுவேன் என்ற வாக்குறுதியைக் காக்க பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டார் ட்ரம்ப்.
- டாக்கா (DACA) – அகதிகளாக, முறையான ஆவணங்களின்றி அமெரிக்க நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சிறுவர்கள் வெளியேற அவகாசம் கொடுக்கும் டாக்கா திட்டம் ரத்து செய்யப்பட்டது. ஏறத்தாழ 800,000 இளைஞர்கள் விரைவில் வெளியேற்றப்படுவர்.
- புவி வெப்பமடைதல் குறித்தான பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது.
- பயங்கரவாதம் தலையெடுக்கும் நாடுகள் என்று ஆறு இஸ்லாமிய நாடுகள் அடையாளப்படுத்தப்பட்டு அந்நாடுகளிலிருந்து மக்கள் அமெரிக்கா வருவது தடைசெய்யப்பட்டது.
- வரி சீர்த்திருத்த மசோதோ நிறைவேறியது.
- அமெரிக்க நாட்டில் நடந்த பல துப்பாக்கிச் சூடு வன்முறைகளில் மிகக் கொடுமையானதான லாஸ் வேகஸ் இசை நிகழ்ச்சியின் சூட்டில் 59 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.
- கடந்த பல ஆண்டுகளில் பாலியல் தொல்லைகள் அனுபவித்த பல பெண்கள் முன் வந்து புகார் அளித்தனர். பல அரசியல், ஊடக, திரையுலகப் பிரபலங்கள் இப்புகார்களில் சிக்கி இழிவடைந்தனர். #MeToo எனும் டிவிட்டர் தலைப்பில் இன்னமும் சிலர் தங்களது குறைகளைச் சொல்லி வருகின்றனர்.
- ஜோர்டான், இராக் நாட்டு இராணுவத்தினருக்குப் பயிற்சியளித்து வந்த அமெரிக்க, பிரிட்டிஷ் படையினரை அச்சுறுத்திய சிரியா தீவிரவாதிகளை அடக்க, சிரியா மீது அமெரிக்கா விமானத் தாக்குதல் நடத்தியது.
இந்திய நிகழ்வுகள்
- இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம், ஒரே கலத்தில் 104 செயற்கைக் கோள்களை ஏற்றிச் சென்று விண்வெளியில் மிதக்கவிட்டது. உலக விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வு இது.
- தை புரட்சி
தமிழர் பாரம்பரியங்களில் ஒன்றான ஜல்லிக்கட்டு விளையாட்டைத் தடை செய்திருந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை விலக்கக் கோரி தமிழகமெங்கும், ஏன் தமிழர் வாழும் உலகப் பகுதிகளெங்கும், மக்கள் தாங்களாகவே ஒன்றுகூடி நடத்திய புரட்சிப் போராட்டம். குறிப்பிட்ட தலைமை ஏதுமின்றி, தமிழர் அடையாளமொன்றைக் காக்கும் ஒரே குறிக்கோளோடு, மக்கள், குறிப்பாக இளைஞர்கள், வன்முறை தவிர்த்து அமைதி காத்து நடத்திய போராட்டம். ஏழு நாட்கள் நாட்டை ஸ்தம்பிக்கச் செய்த மக்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியது. இந்த விஷயத்தில் அரசியல் மற்றும் சமூக எல்லைகளைக் கடந்து மக்கள் கொண்ட உறுதி அளப்பரியது. இது போன்ற உறுதி வருங்காலங்களில் பல மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான அறிகுறி. அவை நன்மைக்கான மாற்றங்களாக இருக்க விழைவோம்.
- ஆகஸ்ட் மாதம் மும்பை மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பெருமழை பெய்து வெள்ளப் பெருக்கால் பல உயிர்களைப் பலி வாங்கியது. அதே போல நவம்பர் மாதப் பிற்பகுதியில் ஒகி புயலால் தென் தமிழ்நாட்டு மாவட்டங்களில் ஏராளமான உயிர்ச் சேதங்களும், பொருட் சேதங்களும் ஏற்பட்டன.
- ·ஜிஎஸ்டி (GST Goods and Services Tax) எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டு, நாடு முழுதும் பொருட்களுக்கும் சர்வீஸ்களுக்கும் ஒரே வரி என்பது நடைமுறைப்படுத்தப்பட்டது.
- மருத்துவம், பல் மருத்துவத்துக்கான பட்டப்படிப்புக்கு நீட் (NEET National Eligibility cum Entrance Test) எனப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு அமல்படுத்தப்பட்டது. நாடெங்கும் ஏற்றத்தாழ்வு நிரம்பிய கல்விச் சூழலில் நீட் நுழைவுத் தேர்வு முறையற்றது என்ற கருத்து, கிராமப்புற மாணவி அனிதாவின் தற்கொலைக்குப் பிறகு, வலுப்பெற்று எதிர்ப்புகள் கிளம்பின. மக்களிடையே கிளம்பிய எதிர்ப்புகளைப் புறந்தள்ளி நீட் நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை நடைபெற்றது.
- தமிழக அரசியலில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அந்த இடத்தை நிரப்புவதில் பெருங்குழப்பம் நிலவி, பின்னர் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகவும், ஓ. பன்னீர் செல்வம் துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்று செயல்பட்டு வருகின்றனர். இதனிடையே சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலாவும், மேலும் சிலரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு, சசிகலா, இளவரசி போன்றோர் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
உலக நிகழ்வுகள்
- 2017ஆம் ஆண்டு பிறந்த தினத்தன்று, இஸ்தான்புல் நகர இரவுக் கேளிக்கை விடுதி ஒன்றில் ஐஸிஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் நாற்பதுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
- வட கொரிய அதிபரான கிம் ஜாங் உன் னின் சகோதரர் கிங் ஜாங் நம் மலேசிய விமான நிலையத்தில் வைத்துக் கொல்லப்பட்டார்.
- கடல் கடந்து தாக்கக்கூடிய அணு ஏவுகணைப் பரிசோதனைகளை நடத்தி வடகொரியா அமெரிக்க நாட்டை எச்சரித்தது.
- ராணி எலிசபெத் பிரிட்டிஷ் அரச பரம்பரையிலிருந்து நீண்ட காலம் ( 65 ஆண்டுகளைக் கடந்து) ஆட்சி செய்துகொண்டிருக்கும் முதல் நபரானார்.
- ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இரண்டு ஆண்டுகளில் விலகுவதற்கான ஆவணங்கள் 2017 மார்ச் 29ஆம் நாளன்று கையெழுத்தானது. இதன்படி 2019 ஆம் ஆண்டு மார்ச் இறுதிக்குள் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறி விடும்.
- பதிவு செய்யப்பட்ட பிறப்புகள் அடிப்படையில் 1900 முன்னர் பிறந்தவர்களில் கடைசி நபரான எம்மா மொரானோ இத்தாலியில் காலமானார். இறக்கும் சமயத்தில் அவரது வயது 117.
- வான்ன க்ரை (Wanna Cry) எனும் கம்ப்யூட்டர் வைரஸ் ஒன்று உலகெலாம் பரப்பப்பட்டு, பெருந்தொகைகள் பிணையமாகப் பெறப்பட்டது.
- லண்டனில் வெவ்வேறு இடங்களில், கூட்டத்தினரிடையே வாகனங்களைச் செலுத்தி உயிரைப் பறிக்கும் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. பலர் காயமுற்ற இச்சம்பவங்களில் 12 பேர் மாண்டனர்.
- லண்டனில், மான்செஸ்டர் பகுதியில் நடைபெற்ற ஆரியானா கிராண்டே இசை நிகழ்ச்சியில் தற்கொலைப் படையினர் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 25 பேர் மாண்டனர். பலர் காயமுற்றனர்.
- ஜிம்பாப்வே நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்டு, விடுதலைக்குப் பின்னர், 1980ஆம் ஆண்டு முதல் 1987ஆம் ஆண்டு வரை பிரதமராகவும், அதைத் தொடர்ந்து 2017 வரை அதிபராகவும் விளங்கிய புரட்சியாளர் ராபர்ட் முகாபே ராணுவப் புரட்சியால் பதவியிலிருந்து விலக்கப்பட்டார்.
இவை 2017 ஆம் ஆண்டில் உலக அரங்கில் நடைபெற்ற நிகழ்வுகளின் ஒரு சிறிய தொகுப்புத்தான். இங்கு குறிப்பிடப்படாத பல நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை என்று நீங்கள் கருதும் நிகழ்வுகளைப் பற்றி எழுதுங்களேன்!
– ரவிக்குமார்.