வாசகர்களுக்கு வணக்கம் !
அனைவருக்கும் பனிப்பூக்களின் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 2017 ஆம் ஆண்டு இப்பொழுதுதான் தொடங்கியது போல் இருந்தது. தொடங்கிய சுவடு தெரியாமல், வருடம் முடிவுக்கு வந்து விட்டது. நாமும் இதேபோல் ஒவ்வொரு வருடப் பிறப்பிலும் சொல்லிக் கொண்டு, மறு நாளே அந்த நினைவுகளைக் கைவிட்டு நம் வேலைகளைத் தொடர்கிறோம். இதேபோல் ஒரு நாள், நாம் வேண்டினாலும் வேண்டா விட்டாலும், இந்நிலவுலகு நீத்துப் போகவும் போகிறோம். இதுவே நிதர்சனம். எண்ணற்ற அறிவியல் கண்டுபிடிப்புகளை மனித குலம் செய்திருந்தாலும், பிறப்பு இறப்பை நிறுத்தவோ காலச் சக்கரத்தின் சுழற்சியை நிறுத்தவோ எந்தக் கண்டுபிடிப்பையும் நம்மால் உருவாக்க இயலவில்லை, இனியும் உருவாக்க முடியாது என்றே தோன்றுகிறது. இதற்கு என்னதான் செய்வது?
இந்தக் கேள்வியையே ஆயிரக்கணக்கான முனிவர்களும், சித்தர்களும், ரிஷிகளும் கேட்டுக் கொண்டுள்ளனர் என்று அறிய முடிகிறது. இந்தக் கேள்விக்கு விடை காணவே தங்களின் முழு வாழ்நாளையும் அர்ப்பணித்துள்ளனர். இறப்பை இல்லாமல் செய்து விட முடியாது, ஆனால் இறப்பிற்குப் பிறகு என்ன நிகழ்கிறது என்பதை அறிந்து கொள்ளும் முயற்சியில், ஆன்மிகவாதிகள் ஓரளவாவது வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.
என்ன இது, தலையங்கம் ஒரு தத்துவ விளக்கமாக மாறிவிட் டதே என்று தோன்றுகிறதா? விரிவான தத்துவ விளக்கம் கொடுப்பதற்கான இடமும் இதுவல்ல, கொடுக்குமளவுக்கு ஞானம் கொண்டவரும் நாமல்ல! ஆனால் ஒன்றை உறுதியாக விளங்கிக் கொள்ள முடிகிறது. நாம் இறப்பிற்குப் பின்னர் நாம் வாழ்வதென்பது உறுதியே. அதாவது, மேம்போக்காகச் சொல்ல வேண்டுமென்றால் நமக்குப் பின்னர் விட்டுச் செல்லும் எச்சமே நம் இறப்பிற்குப் பிறகான வாழ்க்கையாகும். எச்சம் என்பது நம் பெரும்பாலும் அடுத்த சந்ததியினரைக் குறிக்கிறது என்பதே பெரியவர்களின் விளக்கமாக இருந்திருக்கிறது. நாம் செய்யும் செய்வினையின் நிகரப் பலன்களை நம் வாழ்நாளில் அனுபவிப்பது மட்டுமல்லாமல், எஞ்சியிருக்கும் பலன் நம் அடுத்த சந்ததியைச் சென்றடைகிறது. இதனை முழுவதுமாய்ப் புரிந்து கொண்டால், உணர்ந்து கொண்டால், நம் அடுத்த சந்ததியினருக்கு நல்லதைத் தவிர வேறேதும் விட்டுச் சொல்ல விழைவோமா?
இந்த எளிதான தத்துவத்தைப் புரிந்து கொண்டு, எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் நல்ல வினைகளை மட்டுமே புரிவோமென நாமனைவரும் உறுதி எடுத்துக் கொள்வோம். இந்த உறுதியையே இந்தப் புத்தாண்டின் உறுதியாகக் கொண்டு செயல்படுத்த முயல்வோம்.
வாசகர்கள் அனைவரும், உலகத்திலுள்ள ஒவ்வொரு மனிதனும், ஏன் ஒவ்வொரு ஜீவராசிகளும் நலமே பெற்று, நல்வாழ்வு வாழ, எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக் கொண்டு, மீண்டுமொரு முறை வாசகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
– ஆசிரியர் குழு.