வந்தார் ரஜினி!!
கடந்த ஒரு வாரமாகத் தனது ரசிகர்களைச் சந்தித்துப் புகைப்படம் எடுத்துவந்த ரஜினிகாந்த், டிசம்பர் 31 ஆம் தேதியன்று தனது அரசியல் நிலைபாட்டை அறிவிப்பதாகக் கூறியிருந்தார். அதனால் 31 தேதியன்று ரஜினி அறிவிக்கப்போகும் முடிவின் மீது மீடியா மற்றும் அவரது ரசிகர்களது பார்வை குவிந்து இருந்தது.
இதுவரை பலமுறை தனது அரசியலைக் குறித்துச் சூசகமாகப் பேசிவந்த ரஜினிகாந்த், இந்த முறையாவது அழுத்தம்திருத்தமாக ஏதேனும் கூறுவாரா அல்லது நழுவும் மீனாகவே இருந்துவிடுவாரா என்ற கேள்வி அனைவருக்கும் இருந்தது. இதுவரை அரசியல் குறித்துப் பட்டும் படாமலுமே பேசி வந்த அவர், 2017 ஆம் ஆண்டின் இறுதி நாளில் தான் அரசியலுக்கு வருவதாகவும் அடுத்தச் சட்டமன்றத் தேர்தலில் தனிக்கட்சித் தொடங்கி அனைத்துத் தொகுதிகளிலும் நிற்க போவதாகவும் அறிவித்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகை அதிர்ச்சியை அளித்திருக்கிறார். கடந்த கால் நூற்றாண்டுக் காலமாகக் கேட்டு வந்த கேள்விக்கு ஒரு வழியாகப் பதில் அளித்துவிட்டார். அதை எப்படிச் செயலில் காட்டப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழக அரசியலும், சினிமாவும் காலம் காலமாகப் பின்னிப்பிணைந்துள்ளன. சினிமாவில் மக்களின் அபிமானத்தைப் பெற்றவர்கள் அனைவருமே, அரசியல் குறித்த கேள்வியைக் கடந்து வர வேண்டி உள்ளது. சிலருக்கு இயல்பிலேயே அரசியல் ஆர்வம் இருக்கிறது. சிலருக்குத் திரையில் நாயகப்பிம்பத்தை ஊதிப் பெருக்க, சமூகம் குறித்த அக்கறை இருப்பது போன்றும், மக்களுக்காக உழைத்துத் தள்ளுவது போன்றும் காட்சிகள் அமைக்கப்பட்டன. படுகின்றன.
சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு இருந்தே, ரஜினி படங்களில் அரசியல் குறித்த வசனங்களும், பாடல் வரிகளும் வரத் தொடங்கிவிட்டன. ‘ராஜாதி ராஜா’வில் வரும் “எனக்குக் கட்சியும் வேண்டாம், ஒரு கொடியும் வேண்டாம்” என்ற பாடல் வரியை இப்போது நினைவுக்கூறலாம். இதுதான் அவருடைய ஆரம்பக்காலக் கருத்தாக இருந்தது. எம்.ஜி.ஆரைப் போல் சினிமாவில் வெற்றி இருந்தாலும், மக்கள் அபிமானம் இருந்தும், எம்.ஜி.ஆர் போன்று ரஜினிக்கு அரசியல் ஆர்வம் அச்சமயம் இருக்கவில்லை. பிறகு, சோவின் சகவாசத்தால் அவருடன் நடித்த படங்களில் அரசியல் வசனங்கள் சேரத்தொடங்கி, அதற்கு ரசிகர்களின் ஆதரவு இருப்பது கண்டு, தொடர்ந்து அரசியல் வசனங்கள் இடம்பெற்றன. இது ஒரு கட்டத்தில் ரஜினி படங்களில் தவிர்க்க முடியாத அம்சமாகி போனது.
எம்.ஜி.ஆர். இருந்தவரை ரஜினியும் அரசியலை நினைத்ததில்லை. மக்களும் நினைத்ததில்லை. எம்.ஜி.ஆருக்குப் பிறகு ரசிகர்கள் ரஜினியை அடுத்த எம்.ஜி.ஆராக நினைத்தனர். அரசியலுக்கு வருமாறு கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. கலைஞருடன் இருந்த நல்லுறவால், ரஜினிக்கு அப்போதும் அரசியலில் வரும் எண்ணம் எழவில்லை. 1991 இல் ஜெயலலிதா அரசியலுக்கு வந்தபின்பு, நிலைமை மாறியது. ஜெயலலிதாவின் அப்போதைய ஆட்சிக்காலம் மக்களுக்குப் பிடிக்காமல் போனது போல், ரஜினிக்கும் பிடிக்காமல் போனது. இருவருமே போயஸ் கார்டனில் இருந்ததால், தனிப்பட்ட முறையில் ரஜினியும் சில தொந்தரவுகளைச் சந்தித்தார். துணிச்சலாக மேடைகளில் ஆட்சிக்கு எதிரான தனது கருத்தை முன்வைத்தார். மன்னன், பாண்டியன், முத்து, படையப்பா போன்ற படங்களில் திமிர் பிடித்த பெண் கதாபாத்திரங்கள் இடம் பிடித்தன. அக்கதாபாத்திரங்களின் திமிரை அடக்கும்வண்ணம் வசனங்கள் பேசப்பட்டன. ரசிகர்களின் கைத்தட்டல் தமிழகத்தின் திரையரங்கு எங்கும் கேட்கப்பட்டன.
ஒரு பக்கம் சினிமாவிலும், இன்னொரு பக்கம் மேடைகளிலும் அரசியல் பேசத் தொடங்கினார் ரஜினி. அவரது அரசியல் நிலைப்பாடு மூன்று துருவங்களில் இருந்தது. 1991 முதல் 1996 வரையான ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் அதிருப்தி அடைந்து, அவருக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படையாகக் காட்டினார். ஆனால், சினிமாவில் உச்சக்கட்டத்தில் இருந்த காரணத்தாலும், கலைஞர், மூப்பனார் போன்ற அனுபவஸ்தர்கள் அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாலும், அவர் நேரடி அரசியலில் இறங்க நினைக்கவில்லை. மாறாக, கலைஞர், மூப்பனார் கூட்டணிக்கு ஆதரவளித்தார். பிறகு, 2001 ஆம் ஆண்டில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தப்போது, ரஜினியின் ஜெயலலிதாவுக்கு எதிரான நிலைப்பாடு மாறத்தொடங்கியது. மகளது திருமணத்திற்கு ஜெயலலிதாவை திருமணப்பத்திரிக்கை கொடுத்து அழைப்பு விடுத்தார். ஜெயலலிதாவின் இறப்பு வரை, அவருடன் சுமூகமாக அணுகுமுறையையே கடைப்பிடித்து வந்தார்.
2002 இல் பாபா படத்திற்குச் சுருட்டுப் பிரச்சினை காரணமாகப் பாட்டாளி மக்கள் கட்சி கொடுத்த குடைச்சலால், அந்த வருட நாடாளுமன்றத் தேர்தலில் பாமகவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். இருந்தாலும், அத்தேர்தலில் பாமக வென்றது. பிறகு, 2005 இல் வெளிவந்த சந்திரமுகி படத்தில் அன்புமணி ராமதாஸின் வேண்டுகோளை ஏற்று, சிகரெட்டைக் கைவிட்டு பப்பிள் கம்மைத் தூக்கி எறிந்து வாயில் பிடித்தார். அதிலிருந்து பாமகவுக்கும் ரஜினிக்குமான மோதல் முற்றுப்பெற்றது.
இவர்களைத் தவிர, பல அரசியல்வாதிகள் ரஜினிக்கு எதிராக அவ்வபோது கருத்துக்கூறி வந்தாலும், ரஜினி அதற்கு எதிர்வினை ஆற்றியது இல்லை. அவரது கவனம் சினிமாவில் மட்டும் இருந்தது. கருணாநிதி, வாஜ்பாய், அத்வானி, சோனியா, மன்மோகன் சிங், மோடி, சிதம்பரம், ஸ்டாலின், அழகிரி, வைகோ, திருமாவளவன் எனப் பல்வேறு அரசியல்வாதிகளுடன் நட்புறவு பேணி வந்தார்.
மற்ற சமயங்களில் சைலண்ட் மோடுக்குச் சென்று விடும் ரஜினி, தனது படங்களின் வெளியீட்டுக்கு முன்பாக மட்டும் அரசியல் கருத்துகளைக் கூறிக்கொண்டு இருந்தார். ரஜினியின் அரசியல் என்ற டாபிக் எந்தளவுக்கு ஹாட்டாக இருந்ததோ, ஒரு கட்டத்தில் அந்தளவுக்குச் சலிப்பான விஷயமாக ஆனது. ரஜினியின் அரசியல் என்பது இனி சாத்தியம் இல்லை என்று அனைவரும் எண்ணி இருந்த சமயத்தில், தற்சமயம் மிகவும் உறுதிப்படத் தான் தேர்தல் அரசியலில் ஈடுபட இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பும் அவருடைய அடுத்த இரு படங்கள் வெளியான ஆறு மாதங்களுக்குப் பிறகு செயலில் இருக்குமா அல்லது அந்நேரத்து நிலைக்கு ஏற்ப மாறுபடுமா என்பதைப் பொறுத்திருந்து தான் காண வேண்டும். அவரே சொல்வது போல் அவர் எப்ப வருவார், எப்படி வருவார் என்பதை அவர் சொல்லும் நேரத்தில் தான் பார்க்க வேண்டும்.
சரி, இவ்வளவு காலம் இல்லாத தேவை இன்று எப்படி ரஜினிக்கு ஏற்பட்டது? கடந்த ஒரு வருடத் தமிழக அரசியல் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார். அப்படியென்றால் இவ்வளவு காலம் எல்லாம் நன்றாகப் போய்கொண்டு இருந்ததா என்றால் இல்லை தான். ரஜினிக்கு ஜெயலலிதா மீது பயம் இருந்ததா என்றால் இல்லை தான். விமர்சனங்கள் இருந்தாலும், தமிழ்நாட்டுக்குப் பலமிக்கத் தலைமைகள் இருந்தன என்று எண்ணி, தாம் தலைமைக்கு வரவேண்டிய அவசியம் இல்லை என்று நினைத்திருக்கலாம். அவரே கூறியிருப்பது போல், இனியும் வராமல் இருப்பது மக்களுக்குத் தான் காட்டும் நன்றியாக இருக்காது என்ற குற்றவுணர்வை அளித்திருக்கலாம். வெற்றியோ, தோல்வியோ என்ன ஆகிறது என்று ஒருமுறை பார்த்துவிடலாம் என்று நினைத்திருக்கலாம்.
ரஜினிக்கு தனது ரசிகர்கள் மீதும், தனக்கு வாரி வழங்கிய தமிழக மக்கள் மீதும் பெரும் மரியாதையும், அன்பும் இருப்பதை மறுக்க இயலாது. “என்னை வாழ வைத்த…” என்று அவர் மேடைப்பேச்சைத் தொடங்காமல் இருந்ததில்லை. அதைவிட, தனது தொழில் மீதும், புகழ் மீதும் காதல் இருக்கிறது. தனது பொருளாதாரத்திற்கு எவ்விதப் பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்ற கவனமும் அவருக்கு உள்ளது. இதில் எதன் மீதும் தவறு இல்லை. இது அனைத்தையும் பேலன்ஸ் செய்வதில் தான், இதுவரையான அவரது முடிவுகள் இருந்துள்ளன.
இப்போது அவர் எடுத்திருக்கும் முடிவு நல்ல விஷயம். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்பது ஜனநாயக உரிமை. ரஜினி வந்து தான் இருக்கும் அரசியலைக் கெடுக்க வேண்டும் என்று இல்லை. அவருடைய அரசியலும் எப்படித் தான் இருக்கப் போகிறது என்று பார்த்துவிடலாம். சிறுகட்சிகள் ஏற்கனவே இந்த முடிவுக்கு எதிரான எதிர்ப்புகளைப் பதிவு செய்யத் தொடங்கிவிட்டன. ஏனெனில் முதல் பாதிப்பு அவர்களுக்குத் தான். ரஜினிகாந்த் என்ற காந்தத்திடம் இருந்து தங்கள் தொண்டர்கள் ஈர்க்கப்படாமல் காக்கப்பட வேண்டுமே!!
அடுத்து ஆன்மீக அரசியல் என்று அவர் கூறியிருப்பதைப் பிஜேபியுடன் இணைத்துப் பார்க்கும் பி டீம், சி டீம் விமர்சனங்கள். பிஜேபியின் தலைமையும் எப்போதும் போல் இப்போதும் அவரை ஆதரித்துள்ளது. ஆனால், ரஜினி தெளிவாகத் தான் தனித்துத் தனிக் கட்சி ஆரம்பித்து நிற்கப் போவதாக அறிவித்து உள்ளதை வைத்து, நாம் இப்போது அது குறித்த அனுமானங்களைப் பேச வேண்டியது இல்லை. தேர்தலின் போது நடப்பதை வைத்து ஏ டீமா, பி டீமா என்று பார்த்துக்கொள்ளலாம்.
அது என்ன ஆன்மீக அரசியல் என்ன? என்னது, கொள்கை இல்லையா? இதுவரை எங்களுடன் போராட வந்தாயா? என்று சோசியல் மீடியாக்களில் சமூகப் போராளிகள் (!?!) குரல் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. மீம்ஸ் வரத் தொடங்கிவிட்டன. சோசியல் மீடியாவுக்கும், கள நிலவரத்திற்கும் தொடர்பே இருந்ததில்லை என்பது இதுவரை நாம் கண்ட நிசர்சனம். அதனால் அதைப் பார்த்து ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ளலாம். அல்லது, ரஜினியே சொல்லியிருப்பது போல், எதிர்மறை எண்ணங்கள் வராமல் இருக்க, சோசியல் மீடியாவில் தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்ளலாம்.
யார் அரசியலுக்கு வந்தாலும் பாலாறும் தேனாறும் ஓடப் போவதில்லை. மக்களுக்கு ஏற்றாற் போன்ற தலைவர்கள் தான் உருவாகுவார்கள். சமீபத்தில் முடிந்த ஆர்.கே. நகர் தேர்தலிலும் எல்லாவற்றையும் பார்த்து வந்த மக்கள் தான், அறிவுஜீவிகளின் கணிப்பிற்கு நேரெதிராகத் தங்களுக்கு யார் எம்.எல்.ஏ.வாக வேண்டும் என்று முடிவெடுத்தனர். இது தற்சமயத்தில் நடக்கும் எல்லாத் தேர்தல்களிலும் நிரூபணமாகி வருகிறது. இது போன்ற களத்தில் வெற்றி பெறும் ஆற்றல் ரஜினிக்கு இருக்குமா என்பதைப் போகப் போகப் பார்ப்போம். ஆனால், களத்தில் இறங்கும் தைரியத்தைத் தற்போது வெளிபடுத்தி இருப்பதற்குப் பாராட்டுவோம். இந்த மக்களுக்குத் தலைமை ஏற்கும் தகுதி ரஜினிக்கு இருக்கிறதா என்பதை விட, ரஜினி போன்ற தலைமையை ஏற்கும் தகுதி மக்களுக்கு இருக்கிறதா என்பதுமே இன்றைய காலத்தில் எழுப்பப்பட வேண்டிய கேள்வி தான்.
எளிய மக்களின் மனதில் புது வருடத்தில் புது நம்பிக்கையை விதைத்திருக்கும் ரஜினிக்குப் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
- சரவணகுமரன்.
Tags: Party, politics, Rajini, Rajinikanth, அரசியல், கட்சி, ரஜினி, ரஜினிகாந்த்