‘உலகச் சாலைகளின் சந்திப்பு’ எதுவென்று தெரியுமா?
அமெரிக்காவின் அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படும் நியூயார்க்கில் உள்ள ‘டைம்ஸ் ஸ்கொயர்’ தான் உலகச் சாலைகளின் சந்திப்பு (Cross Roads of the World) எனப்படுகிறது. புதுவருடம் பிறந்து விட்டது என்று அறிவிக்கும், உலகப் புகழ்பெற்ற ‘பால் டிராப்’ நிகழ்வு நடைபெறுவது இங்கு தான்.
இன்று மன்ஹாட்டன் நகரின் பிராட்வே சாலையும், ஏழாவது அவென்யுவும் சந்திக்கும் இடம்1880 களில், வெட்ட வெளியாக, குதிரைகள் வாங்கி விற்கும் பெருஞ்சந்தையாக இருந்தது. அக்காலத்தில் இந்த இடம் லாங் ஏக்கர் சதுக்கம் (Long Acre Square) என்றழைக்கப்பட்டு வந்தது. வெகு விரைவில் மின்சார உபயோகம் பரவலாகி, அருகிலிருந்த நாடக அரங்குகளின் விளம்பரங்கள் இந்த இடத்தில் தோன்றத் துவங்கின. அதே சமயத்தில் ‘இன்டர்பரோ ராபிட் டிரான்ஸிட்’ திட்டம் உருவாக்கப்பட்டு, நியூயார்க் நகரின் முதல் சுரங்கப்பாதை ரயில் போக்குவரத்து நியூயார்க் நகர மையத்திலிருந்து, பிராட்வே வரை செயல்படத் துவங்கியது. அதிரடியாக நடந்த மாற்றங்களால், இந்த இடம் புகழ் பெறத் துவங்கியது. நிலச்சுவான்தாரர்கள் லாங் ஏக்கரைச் சுற்றிலும் நிலங்கள் வாங்கிப் போட்டார்கள். 1890களில் சட்டவிரோத நடவடிக்கைகள் நடைபெறும் இடமாக, வழிப்பறிக் குற்றவாளிகளின் புகலிடமாக இருந்த லாங் ஏக்கரில் உயரமான கட்டிடங்கள் எழும்பி, வர்த்தக மையங்கள் உருவாகத் தொடங்கின. அந்தச் சமயத்தில் வானளாவிய ஒரு கட்டிடத்தைக் கட்டி, தனது ‘நியூ யார்க் டைம்ஸ்’ பத்திரிக்கை அலுவலகத்தை இங்கு தொடங்கினார் அடால்ஃப் ஆக்ஸ்.
1904ஆம் ஆண்டு ‘டைம்ஸ் டவர்ஸ்’ என்ற இந்தக் கட்டிடம் வந்த பிறகு, பல மாற்றங்கள் நிகழ்ந்தன. பிராட்வேயில் புதிதாக அரங்குகள் முளைத்தன. ரயில் போக்குவரத்து வசதியிருந்ததால் பெருமளவில் மக்கள் புழங்கும் இடமாகிப் போனது ‘லாங் ஏக்கர்’. அங்கு அடையாளமாக இருந்த ‘டைம்ஸ் டவரின்’ குறியீடாக, பொதுமக்களும், ரயில் பயணிகளும் அந்த இடத்தை ‘டைம்ஸ் ஸ்கொயர்’’ என்று அழைக்கத் துவங்க ‘லாங் ஏக்கர் ஸ்கொயர்’ என்ற பெயர் மெதுவே மறைந்தது.
தனது பத்திரிகைக்கு விளம்பரம் தேடும் முயற்சியில், புதிய 1905ஆம் ஆண்டை வரவேற்கும் வகையில், டைம்ஸ் டவர்ஸ் கட்டிடத்தின் மேலிருந்து வானவேடிக்கைக்கு ஏற்பாடு செய்தார் அடால்ஃப். அதுவரையில் ட்ரினிட்டி தேவாலயத்தில் கூடி புத்தாண்டை வரவேற்று வந்த மக்கள் பலர் டைம்ஸ் டவர்ஸ் முன் கூடினர். ஏறத்தாழ 2 லட்சம் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
இரண்டாண்டுகள் வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்று வர, மென்மேலும் மக்களைக் கவரும் விதத்தில் புதிதாக ஏதேனும் செய்ய வேண்டுமென அடால்ஃப் விரும்பினார். டைம்ஸ் பத்திரிக்கையின் மூத்த மின் பொறியாளர், வால்டர் பால்மர் ‘டைம் பால்’ (time ball) எனும் எண்ணத்தை முன்மொழிய அதற்கான திட்டம் தயாரானது.
மரச் சட்டங்களாலும், இரும்புப் பட்டைகளாலும் ஐந்தடி சுற்றளவும், எழுநூறு பவுண்ட் எடையும் கொண்ட பெரிய உருண்டை தயாரிக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட பல்புகள் பொருத்தப்பட்டு, உருவான இந்த உருண்டை கட்டிடத்தின் உச்சியிலிருந்த கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்டு சரியாக 31ஆம் நாள் இரவு 11.59 மணிக்கு இறக்கப்பட்டது. துல்லியமாக 12 மணிக்கு, அதாவது 1905 பிறந்த நொடியில் அந்த உருண்டை கட்டிடத்தின் உச்சியினைத் தொட்டதும் வான வேடிக்கைகளும், மின் விளக்குகளும் ஒளிர புது வருடம் மிகக் கோலாகலமாகத் துவங்கியது.
பின்னர் சில ஆண்டுகளில் இடப் பற்றாக்குறையால் ‘டைம்ஸ்’ பத்திரிக்கை வேறு இடத்துக்கு மாற்றப்பட்ட பின்னரும் இந்த ‘பால் டிராப்’ நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 110 ஆண்டுகளில் இரண்டே இரண்டு ஆண்டுகள் மட்டும் பால் டிராப் நிகழ்வு நடைபெறவில்லை. உலகப் போர் உச்சம் பெற்றிருந்த 1942 மற்றும் 1943 ஆண்டுகளில் இரவில் மின்னொளி தடைசெய்யப்பட்டு இருந்ததால் இந்த இரண்டு ஆண்டுகளும், தேவாலய மணி இசைக்குப் பின் மௌனம் அனுஷ்டித்துப் புத்தாண்டு பிறப்பைக் கொண்டாடினர்.
அதற்கு முன்னர், 1920களில் நியான் ஒளிப்பலகைகள் வந்த பிறகு டைம்ஸ் சதுக்கம் ஒளி விளம்பரங்களுக்குப் பிரதான இடமாகிப் போனது. டைம்ஸ் கட்டிடத்தில், 14,800 பல்புகள் பொருத்தப்பட்டு ‘ஜிப்பர்’ முறையில் தலைப்புச் செய்திகள் தவழத் தொடங்கின. முப்பரிமாண வடிவில், பெரிய காப்பி கோப்பையிலிருந்து ஆவி பறப்பதைப் போல் நிறுவப்பட்ட விளம்பரம் ஒன்று அனைவரது கவனத்தையும் பெற்றது. பின்னர் புகைபிடிக்கும் மனிதர் ஒருவர் வளைய வளையமாகப் புகை விடுவதைப் போன்ற விளம்பரம், ஒளி விளம்பர உத்தியை மேலும் பிரபலப்படுத்தியது. அதன் பின்னர் டைம்ஸ் சதுக்கம் ஒளி விளம்பரங்களின் தலைமையிடமாக மாறி, அந்தச் சதுக்கமே ஒளிரத் துவங்கியது.
1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி போரில் ஜப்பான் தோல்வியை ஒப்புக்கொண்டு சரணடைந்ததாகவும், போர் முடிவுற்றதாகவும் ‘டைம்ஸ்’ சதுக்கத்தில் அறிவிக்கப்பட்டது. அதற்குச் சற்று முன்னரே நாடு திரும்பியிருந்த ஜார்ஜ் மெண்டோஸா எனும் மாலுமி ஒருவர் சந்தோஷ மிகுதியால் உணர்ச்சி வயப்பட்டு எதிரே நடந்து வந்த கிரேடோ ஜிம்மரை இழுத்து, அணைத்து முத்தமிட்டார். மகிழ்ச்சியில் தடுமாறிப் போன கிரேடோவும் முத்தத்தை ஏற்றுக் கொள்ள, ஆல்ஃப்ரட் ஐஸான்ஸ்டட் என்ற புகைப்படக் கலைஞர் ஒருவர் அதைப் படம் பிடித்து விட்டார். உலகப் போரின் முடிவை உலகம் கொண்டாடிய படங்களில் ஒன்றாக ‘லைஃப்’ பத்திரிகையில் வெளியாகி, வரலாற்றில் பதிவான இந்தப் படம் ‘த டைம்ஸ் ஸ்கொயர் கிஸ்’ என்றே அழைக்கப்படுகிறது.
உலகப்போரைத் தொடர்ந்து அமேரிக்கா பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்த போது பிராட்வே சாலையிலிருந்த பெரும் நாடக அரங்குகள் நஷ்டமடையத் துவங்கின. நாடகங்கள் நிறுத்தப்பட்டு நீலப்படங்கள் திரையிடப்பட்டன. போர் வீரர்கள் பலரும் வந்து குவிந்ததால், டைம்ஸ் சதுக்கத்தில் விபச்சாரம் கொடிகட்டிப் பறந்தது. தாதாக்களும், ரவுடிகளும் நிறைந்த நிழலுலகமாகிப் போனது டைம்ஸ் சதுக்கம். 1990களில் அப்போதைய மேயர் ரூடி ஜூலியானியின் முயற்சியால் டிஸ்னி நிறுவனம் பெரும் முதலீடு செய்தது; டைம்ஸ் சதுக்கத்தில் பல உலக நிறுவனங்களின் கடைகளும், ஷோரூம்களும் திறக்கப்பட்டன.
இன்றைய தேதியில் டைம்ஸ் சதுக்கம் உலகப் புகழ்பெற்ற பல்நோக்கு வணிகச் சதுக்கமாகும். பல நாட்டுக் கலாச்சாரங்கள், உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகள் சங்கமிக்கும் இடமாகவுள்ளது டைம்ஸ் சதுக்கம்; பல வித இசை, பகலிலும் கண்ணைப் பறிக்கும் வண்ண விளக்குகள், சாலையோர சாகச வித்தைகள் என்று எப்போதும் கலகலவென்று உள்ள சூழ்நிலை; நியூயார்க், மன்ஹாட்டன் பெருநகர பகுதியில் சுற்றுலாப் பயணிகளால் அதிகம் விரும்பப்படும் இடமாக டைம்ஸ் சதுக்கம் உள்ளது.
– ரவிக்குமார்