\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

குளிர் படுத்தும் பாடு

இடம் – மின்னியாபொலிஸ்

சென்ற வருடம் டிசம்பர் ஆரம்பத்தில் மக்கள் ஜாகிங் போய்க் கொண்டிருந்ததைக் கண்ட போது ஆச்சரியமாக இருந்தது. குளிர் காலம் வந்ததும் தெரியவில்லை. போனதும் தெரியவில்லை. சில நாட்களே குளிர் இறங்கி அடித்தது.

இந்த வருடம் அப்படி இல்லை. டெம்ப்ரேச்சர் முள், ஃபாரன்ஹீட்டில் சைபருக்குக் கீழேயே காட்டிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவெங்கும் இந்த நிலைமையே. ஏன், இந்தியாவிலும் இதைத் தான் சொல்கிறார்கள். நூறாண்டு காலச் சரித்திரத்தில் இடம் பெறக் கூடிய பல குளிர்ந்த நாட்கள், கடந்த இரு வாரங்களில் வந்து சென்றன.  

நான் மின்னியாபோலிஸிற்குப் பணி நிமித்தமாக மாறி வந்த போது, என் அலுவலகச் சகாக்களிடம் எனக்கு முன் என் பொறுப்பில் இருந்தவரைப் பற்றி விசாரித்தப்போது, அவர்கள் கூறியது – “அவரு இந்த ஊர்க் குளிர் தாங்க முடியாமப் போய்ட்டாரு”. அப்பவே, இந்தக் குளிர் மேல் பெரும் மதிப்பு வந்து விட்டது.

சமீபத்தில் நண்பர் ஒருவர் சியாட்டிலில் இருந்து ஃபோன் செய்து, மினசோட்டாவில் வேலை கிடைத்திருப்பது பற்றிக் கூறி எனது கருத்தைக் கேட்டார். மினசோட்டா பெருமைகளைக் கூறி, மினசோட்டா நைஸ் என்றேன். குளிர் பற்றிய டிஸ்க்ளைமர் சொல்லாமல் இல்லை. என் பேச்சுக்கு மதிப்புக் கொடுத்து வந்தாரா என்று தெரியாது. குளிர் காலத்திற்குக் கொஞ்சம் முன்பு வந்து சேர்ந்தார். குளிருக்கு ஆயத்தமாகத் தான் இருந்தார். சென்ற வாரம் சந்தித்த போது, தான் சியாட்டிலுக்கே திரும்பி விடப் போவதாகக் கூறினார். வேலை சரியில்லை என்றார். அது குளிர் பார்த்த வேலையா என்று தெரியவில்லை.

இப்படி இந்தக் குளிர் பல பேர் வாழ்க்கையில் விளையாடி விடுகிறது. இந்தக் குளிரைச் சமாளிக்க நாம் அமைக்கும் வியூகங்கள் இருக்கிறதே, அப்பப்பா, அது சும்மா இல்லை.

குளிர் 30-40 க்கு இறங்கும் போதே, பரணில் இருந்து ஜாக்கெட், க்ளவுஸ், குல்லா போன்றவை தரையிறங்கும். ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். இங்கு அந்த ஆடையில் ஒரு பாதியைக் குளிரைச் சமாளிப்பதற்காகப் போட வேண்டி இருக்கும். எல்லோருக்குள்ளும் ஒரு சாத்தான் இருக்கும் என்பார்கள். குளிரில் சாதாரணமாக நடமாடுபவர்களின் உடைக்குள் இந்தச் சாத்தான் உருவத்தைக் காணலாம். ஆம், தெர்மல் உடையில் பார்த்தால், விட்டாலாசார்யா படத்தில் வரும் பிசாசுகள் போலத் தெரிவார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இருக்கும் லேயர்கள் போல், இவர்கள் அத்தனை லேயர்களில் உடை அணிந்திருப்பார்கள். அவசரத்திற்குப் பாத்ரூம் சென்றால், இந்த லேயர்களைப் பிரிப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும்.

சில க்ளவுஸ்களின் குணாதிசயங்கள் ரொம்பப் பேஜாரானவை. வெளியே இருக்கும் குளிரை எப்படி உள்ளே அனுமதிப்பதில்லையோ, அதுபோல் உள்குளிரையும் வெளியே அனுமதிக்காது. குளிரான கைக்கு க்ளவுஸ் போட்டு விட்டால், அந்தக் குளிர் அப்படியே உள்ளே இருந்து ஒரு சித்ரவதையைக் கொடுக்கும் பாருங்கள் – கருப்புப் பணத்தை மீட்டெடுக்க ஆசைப்பட்டு ஓட்டுப் போட்டு, சேமிப்பிற்கு வங்கியில் போட்ட பணத்தை எடுக்க முடியாதோ – என்று தவிப்பதற்கு இணையான சோதனை அது.

முன்பெல்லாம் இந்தக் கையுறைகளை மாட்டிக் கொண்டால், பல வேலைகளைச் செய்ய முடியாது. எதைத் தொடுகிறோம், எது கையில் படுகிறது என்று தெரியாமல் சும்மா இருந்து விடுவோம். அல்லது, குளிர்ந்தாலும் பரவாயில்லை என்று வெறும் கையில் அந்த வேலையைப் பார்ப்போம். இன்று அந்த நிலையிலும் சும்மா இல்லாமல் மொபைலை நோண்டுவதற்கான டச் ஸ்கிரீன் ஃப்ரண்ட்லி கிளவுஸ் வந்து விட்டதால், பாம் புயலே வந்தாலும், மக்கள் சிரமப்படாமல் செல்ஃபி எடுத்து ஸ்டேடஸ் போடுகிறார்கள்.

இந்தியர்களுக்கு இந்தப் பனி மேல் உள்ள காதலுக்குப் பின்னுள்ள உளவியல் காரணம், இந்திய சினிமாக்களில் வந்த பனிமலை டூயட் பாடல்கள். தங்கள் ஆதர்ச ஹீரோக்கள், ஹீரோயின்கள் எப்படிப் பனியில் உருண்டு புரண்டார்களோ அது போல் தாங்களும் உருண்டு புரண்டு ஃபோட்டோ எடுத்துக் கொள்வதில் ஓர் அலாதி ஆர்வம். சமீபத்தில் ஒரு வாட்ஸ்அப் வீடியோவில் ஒரு ஹிந்தி பேரரழகன் பனியனோடு பனியில் உருண்டு புரண்ட காட்சி பெரும் காமெடியுடன் வலம் வந்தது. எங்கள் அபார்ட்மெண்டிலும் ஒரு ஜோடி இப்படிப் பனியில் மைனஸ் டிகிரியில் படம் பிடித்து ஃபேஸ்புக்கில் போட்டு லைக்ஸ் அள்ளினார்கள். இப்படி லைக்ஸ் பெற, அவர்கள் பட்ட பாடு இருக்கிறதே!! ஒவ்வொரு ஃபோட்டோவுக்காகவும் ஜாக்கெட்டைக் கழட்டி வைத்துவிட்டு, லைட்டான ஆடையில் புகைப்படம் எடுத்து விட்டு, பிறகு உடனே ஜாக்கெட் மாட்டிக் கொண்டார்கள். தோளில் ஊசி போடும் உணர்வைக் கொடுக்கும் அந்தக் குளிரில், ஃபோட்டோவுக்காக அவர்கள் கொடுத்த தர்மசங்கடச் சிரிப்பு, ஆர்.கே. நகரில் 20 ரூபாய் டோக்கனுடன் சுற்றும் பொதுஜனத்தின் முகத்தில் தெரியும் சிரிப்பிற்கு இணையானது.

நாம் வசிக்கும் வீட்டில் ஏன் ஒரு சிறு துளை கூட இருக்கக்கூடாது என்பதை இந்தக் காலத்தில் தான் உணருவோம். எங்காவது ஒரு இடத்தில் நமக்குத் தெரியாமல் இருந்துவிட்டால் அவ்வளவு தான். நம் ஹீட்டரை அந்தச் சிறு துளை பாடாய்ப் படுத்தி விடும். தரையில் தான் குளிர் உலவும் என்பதால், வெறும் காலில் சுற்றி வந்தால் சித்ரவதை தான். சில சமயம் ஏதேனும் காலணி அணிந்தும் பயனில்லாமல் போகும். கால் விரல்கள் விறைத்து, சிவந்து அதில் புண் உருவாகும் வாய்ப்பும் அதிகம். இந்தக் கால கட்டத்தில் எந்த டாக்டரைச் சந்தித்தாலும் விட்டமின் டி மாத்திரை எழுதிக் கொடுத்து விடுவார்கள். எதற்கு என்று கேட்டால், சூரிய பகவானுக்கு லீவில்லையா!! அதற்குத் தான் என்பார்கள். அதுவே அவர் லீவில் இருந்து ரிடர்ன் வந்த பிறகு, சன் ஸ்க்ரீன் பரிந்துரைப்பார்கள். என்ன ஆனாலும், நாங்க மருந்து எழுதித் தருவோம் என்பார்கள்.

இத்தனை சோதனைகளைச் சந்தித்தாலும், உள்ளூர்வாசிகளுக்கு ஊர்ப் பிரியம் குறைவதில்லை. மினசோட்டா நைஸ் (Minnesota Nice) என்று இந்த ஊர்க்காரர்களின் குணாதிசயத்தைக் குறிப்பிடுவார்கள். அதாவது அன்பானவன், அமைதியானவன், அடக்கமானவன் மாதிரி டைப். உண்மை தான். இப்படிப் பக்குவப்படுத்தியிருப்பதற்கு இந்தக் குளிரும் ஒரு காரணமாக இருக்கலாம். இல்லாவிட்டால், இது போன்ற குளிரைத் தாக்குப்பிடித்து இங்கே வாழ முடியுமா? அதற்கு நைஸாகத்தான் இருக்க வேண்டும்!!

  • சரவணகுமரன்

Tags: , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad