தெய்வத் தமிழிசை – பாகம் 2
( * பாகம் 1 * )
டிசம்பர் 30ம் தேதியன்று, லயசாரம் மற்றும் “க்ளோபல் ஆர்கனைசேஷன் பார் டிவினிட்டி ” (Global Organization for Divinity) இணைந்து நடத்தி வரும் Spirits of Margazhi 2018 “தெய்வத் தமிழ் இசை” நிகழ்ச்சியின் மூன்றாவது வாரமாக நடந்த கச்சேரியில் முதலில் “தேவ கானம் ” குழுவினரின் கானம் அழகாக இருந்தது . சிறிய குழந்தைகள் பாசுரம் பாடியது பக்தியோடு கூடிய பாமாலை.
சங்கீத வித்துவான்கள் ஒரு அஷ்டாவதானி போல என கூறுவது உண்டு. ஒரு சங்கீதக் கச்சேரி பாடும் பொழுது ஸ்ருதி, லயம், ராகம், தாளம், சக்யம், சபை, பாவம்(Bhavam), ஆத்மா என எட்டு விஷயங்களையும் சம நிலையாக , சரியாக செய்வதால் அவர் அஷ்டவாதனி. கச்சேரியை ரசிக்கும் ரசிகர்களான நமக்கும் அந்த எட்டு விஷயங்களில் ஓரிரு விஷயங்கள் மனதோடு ஒட்டி வந்து விடும்.
“கொண்டாடு பண்பாடு” என்ற திரு ராகுல் ஸ்ரீனிவாச ராகவன் கச்சேரியின் முடிவில் நம் அனைவரின் மனதிலும் எட்டு விஷயங்களில் ராகங்கள் தான் நிறைந்திருந்தன.
நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே, என்னென்ன ராகங்கள் பாடப் போகிறார் என்று ஊடகங்களில் யூகிக்க வைத்து ஒரு எதிர்பார்ப்பைத் தூண்டியதும் அதற்கு ஒரு காரணம் . பாடகர் ஆலாபனை தொடங்கும் பொழுதே சிரியோரோடு , பெரியவர்களும் ,ராகங்களை ஊகித்தது மிகவும் உற்சாகமாக இருந்தது.
திரு ராகுல் ஸ்ரீனிவாச ராகவன், பத்மபூஷன் திரு.T.N சேஷ கோபாலன் அவர்களிடம் கர்நாடக சங்கீதம் பயில்கிறார்.
“அழகா அழகா” என்று அழகாக சுத்த தன்யாசியில் தொடங்கியது கச்சேரி.
லதாங்கியின் பிரதி மத்தியமம் இசைக்கும் பொழுது விவரிக்க முடியாத ஒரு காந்த சக்தி உணர்வது போல தோன்றும் என்பது அந்த ராகத்தின் ஒரு அனுபவம். “சங்க சக்ர தாரி உன்னை சரணடைந்தேன் பிழை பொறுத்தருள் ” என்று லதாங்கியின், அந்த அனுபவத்தைக் கேட்டவருக்கு அளித்தார்.
தொடர்ந்து “அச்சுதன் சரணத்தை அடையவே அழுது நின்றேன் ” என்று ரஞ்சனியில் கரைந்தது மனம் .
“சொன்னால் ஒழிய மனம் கேளாதே “என்று தமிழ் கவியின் பாடலையும், “கா வா வா” என்று வராளியை முக்கியப் பகுதியாக பாடியும் அசத்தினார். தாளத்தில் இணையாக மிருதங்கத்தில் திரு.எத்திராஜன் ராமானுஜம் அவர்களும், கடத்தில் திரு. பாலாஜி சந்திரன் அவர்களும் அசத்தினர்.
ஒவ்வொரு பகுதியிலும் பாடகருக்குத் துணையாக வயலினில் திருமதி. அபர்ணா ஸ்ரீவத்சன் மனதைத் திருடிச் சென்றார்
கச்சேரியில் தொடர்ந்து ,சிந்து பைரவியில் “மாவூர் வளம் பெறுக வந்த காளியே ” , ராகமாலிகையில் “சின்னஞ் சிறு கிளியே ” என பாடகர் மனதில் ராகங்களை நிறைத்தார்.
பொதுவாக கச்சேரியில் கடைசியில் பாடும் ராகம் தான் மனதில் நிற்கும் என்ற எண்ணத்தோடு துள்ளலான தில்லானாவில் நர்த்தன கணபதியை ஆட விட்டு, நம் மனதோடு இல்லத்திற்கும் அழைத்து வர வைத்தார்.
பசந்த் அல்லது வசந்த் என்ற ராகத்தில் அமைந்த இந்த தில்லானா துள்ளலான பெயருக்கு ஏற்ப, இந்த புதிய வருடத்தின் தொடக்கத்தில், மினசோட்டாவின் தாளாத குளிரிலும், வசந்தத்தை மனதில் கொண்டு வந்தது.
துளியூண்டு தெரிந்த கர்நாடக சங்கீதத்தில், ‘நானும் ராகம் கண்டுபிடித்தேனே’ன்னு எல்லோரும் உற்சாகமாகத் திரும்பினோம். அந்த உற்சாகத்தைக் கச்சேரியில் முழுக்கத் தக்க வைத்ததற்கு வாழ்த்துக்கள் .
“கொண்டாடு பண்பாடு ” மிகப் பெரிய கொண்டாட்டமாகவே அமைந்தது. ஒருங்கிணைத்த அனைவருக்கும் நன்றிகள்.
- லக்ஷ்மி