\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

எதிர்பாராதது…!? (பாகம் 7)

Filed in கதை, வார வெளியீடு by on January 7, 2018 0 Comments

( * பாகம் 6 * )

ங்கபாஷ்யம் ஏன் இப்படி விருட்டென்று காரை எடுத்துக்கொண்டு போனார் என்று புரியாது நின்றாள் நந்தினி. பார்கவி உட்கார்த்தி வைத்து விட்டு வந்ததாகச் சொன்னவுடனே, கிளம்ப முடியலைதான். பாதியில் நிற்கும் ஷாட்டை விட்டுவிட்டு எப்படி வருவது? அதுவும் அதே மேக்கப் டிரஸ்ஸோடு? தொடை தெரியும் இந்த உடையில் அவர் முன்னால் போய் நிற்க முடியுமா? மேக்கப் அறைக்குள் நுழைந்து வெளியே வந்திருக்கிறேன். அதற்குள் போய்விட்டார்களே? உடன் ஒருவரும் வந்திருக்கும்போது எப்படி? சற்று நின்றால் என்ன?  அதுதான் கோபமோ? நான் பிஸியாய் இருப்பதைப் பார்த்துவிட்டுக் கிளம்பி விட்டாரா? கூட்டி வந்த பெரியவரைப் பார்க்கலாம் என்று ஆவலுடன் இருந்தேனே…!

“நீ அவங்களை உட்காரச் சொன்னியா இல்லியா…?” – கோபமாய்க் கேட்டாள் பார்கவியிடம்.

“என்னம்மா இப்டிக் கேட்குறீங்க… இத்தனை வருஷமா உங்ககூட இருக்கிற எனக்குத் இது கூடத் தெரியாதா? டீ கொடுத்திட்டுத்தாம்மா உங்ககிட்டே வந்து சொன்னேன்….பாருங்க டீ கப்ஸ் இருக்கிறதை….” என்று விரலை நீட்டி கப்புகளை அவளுக்குக் காட்டினாள்.

பார்கவியை ஒன்றும் சொல்வதற்கில்லை. சமயமறிந்து நடப்பவள். இன்னும் கொஞ்சம் படித்தவளாயிருந்தால் அவளையே பி.ஏ.வாக வைத்துக் கொள்ளலாம்தான். கணக்கு வழக்குக்கு வழியில்லை. பெரிய இடங்களோடு பேச, பழக இன்னும் கொஞ்சம் படிப்பு வேண்டும். அது இல்லை.  ஆனால் பேரம் படியச் செய்வதில் சாமர்த்தியசாலிதான். அந்தப் பேச்சுத் திறமையெல்லாம் உண்டுதான் என்றாலும், வரும் வி.ஐ.பி.க்களை எதிர்கொள்வதற்கு அவள் லாயக்கில்லை….எனவேதான் அவளை தன் பர்சனல் டச்அப்போடு மட்டும் நிறுத்தியிருந்தாள் நந்தினி.

இப்போது ஒரு வாய்ப்பு வந்ததுபோல் வந்து உடனே கண்ணுக்கு மறைந்து விட்டதே…! ஏன் போனார் பாஷ்யம்? புரியவில்லை. மனுஷன் கோபித்துக்கொண்டால் ரொம்பக் கஷ்டம்.  லேசில் குணம் மாறாது. குழப்பத்தோடேயே திரும்பவும் படப்பிடிப்புத் தளத்திற்குள் நுழைந்தாள் நந்தினி.

கார் மெல்ல ஊர்ந்து கொண்டிருந்தது. வந்த காரியம் முடியவில்லையே என்ற நினைப்பில் முகத்தில் சலனமில்லாமல் வண்டியை விட்டுக்கொண்டிருந்தார் பாஷ்யம். பெரும்பாலும் அவர் கார் ஓட்டுவதில்லை. இன்று டிரைவர் வேலு இல்லை. எனவே அவரே எடுத்து வந்தார். அருகில் அமர்ந்திருந்த பஞ்சாபகேசன் பேசுவோமா வேண்டாமா என்ற யோசனையிலேயே அமைதியாய் அமர்ந்திருந்தார்.

“என்னய்யா…உமக்கு  நல்ல நேரம் இன்னும் வரல போலையே?” என்றார் பாஷ்யம் சாலையைப் பார்த்தவாறே.

“நாம இன்னும் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணியிருக்கலாமோ?” என்றார் பஞ்சாபகேசன். சொல்லிவிட்டு ஏன் சொன்னோம் என்று நாக்கைக் கடித்துக் கொண்டார்.

“ஏன்யா, அந்தப் பொம்பளையைப் பார்க்க எம்புட்டு நேரம் காத்துக் கிடக்கச் சொல்றே…? உள்ளே கூப்பிடப் போன அந்த பார்கவியோட உடனே கிளம்பி வர வேண்டிதானே…அவளை வச்சுப் படம் எடுக்கிற தயாரிப்பாளர் வந்திருக்கார்னா அத விட அவளுக்கு  வேறே எதுய்யா முக்கியம்…வந்தாளா பார்த்தியா?”

“உள்ளே போன இந்தப் பிள்ளை எப்போ விபரத்தைச் சொல்லிச்சோ…? யாருக்குத் தெரியும்? அத்தோட நடிச்சிட்டிருக்கைல எப்படிங்க பாதில விட்டிட்டு வர முடியும்? அதான் லேட்டாயிருக்கு….”

“பார்யா…அதுக்குள்ளேயும் அவளுக்குச் சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சிட்டீராக்கும்….நான் இன்னும் அவ கிட்டே சொல்லவே இல்லைய்யா…அத ஞாபகம் வச்சிக்கோ…..”

“உங்க மனசுக்கு நீங்க சொல்லாம இருக்கப் போறீகளா என்ன? ஏதோ உங்களால நானும் ஒரு நிலைக்கு வரணுமில்ல…..? நீங்க செய்வீங்க…அதானே உங்க அடிபணிஞ்சு சுத்துறேன்….” – தாராளமாய் வார்த்தைகளை விட்டார் பஞ்சு. எந்த நிலைக்கும் இறங்க அவர் தயார். பாஷ்யம் குளிர்ந்துதான் போனார்.

“நல்லாப் பேசத் தெரிஞ்சிருக்கேய்யா நீ…இதப் புரிஞ்சிதான் எனக்கு இந்த யோசனையே தோணிச்சு மனசுல….கிளம்பின நேரம் சரியில்ல போலிருக்கு….?”

“அது சரிங்கய்யா….அத்தனை அவசரமா ஏன் கிளம்பிட்டீங்க…? அம்புட்டு ஒண்ணும் நாம காத்துக்கிடக்கலியே…?” – கொஞ்சம் தைரியம் வந்தவர்போல் கேட்டார் பஞ்சு. உடனே முறுக்கிக்கொண்டு ஓடி வந்துவிட்டு, இப்படிப் பேசுகிறாரே?

“அது வேறே விஷயம்யா….அந்த ஸ்டுடியோவுல நிறைய ரூம்க உண்டு…பெரிய ஹீரோக்களெல்லாம் தனித்தனி ரூமைப் பயன்படுத்திப்பாங்க…அதுல ஒண்ணுல அந்தப்  பிரேம் இருக்கிறான்னு தோணிச்சு…..வெளிலயும் காரைப் பார்த்துட்டனா…எதுக்கு வம்புன்னு கிளம்பிட்டேன்…..”

“என்னது? பிரேம்குமாரையா சொல்றீங்க…?” – அடக்க முடியாத ஆர்வத்தோடு கேட்டார் பஞ்சு.

அவனை இவர் மூலமாய்ப் பிடித்து எப்படியாவது தன் பெண்ணைக் கட்டி வைத்து விட வேண்டும் என்பதுதானே தனது திட்டம். நந்தினியையும் நெருங்கி, அவள் மூலமாகவும் விஷயத்தைப் பழமாக்க வேண்டும். லட்டுப் போல் கைமேல் அருகில் இருந்த ஒரு விஷயம் நழுவிப் போய் விட்டதே…! ஆளைப் பார்த்திருக்கலாமே…! அது கூட ஆகாமலாகி விட்டதே…! முடியுமானால் அவனோடு ஒட்டிக் கொள்ளக் கூட வாய்ப்புத் தேடலாமே…!

முதல்ல ஆளைப் பாரு…அப்புறம் படிப்படியா யோசி…எடுத்த எடுப்பில உச்சிக்குப் போய் உட்கார்ந்துக்கிறதே உன் வேலையாப் போச்சு… – மனசு தடுத்தது. அதுவும் சரிதான் என்று தோன்றியது. ரொம்ப அவசரப்படுகிறோமோ…! தடுக்கி விழப் போகிறோம்…!!

ஊருக்கு வந்து இன்னும் அவனைப் பார்க்க ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைக்கவில்லையே…! எப்படியானாலும் இந்த இடத்தில் அவனைப் பார்த்தாலும், எதுவும் பேச முடியாதுதான். வெறும் அறிமுகமாவது கிடைத்திருக்குமே…! பழசைக் கொஞ்சமாவது ஞாபகப்படுத்தி வெள்ளோட்டம் விட்டிருக்கலாம்தான்….! ‘மாம்மா…மாமோய்’…..என்று சொல்லிக் கொண்டு இப்போது பாய்ந்து வருவானா? அல்லது விலகி நிற்பானா? நெருங்கியாவது நிற்க முடியுமா?  அவன் கௌரவம் என்னாவது? அந்தளவுக்கு எதிர்பார்க்க முடியாதுதான். ஆனாலும் தெரியாத மாதிரியா காட்டிக் கொள்ளப் போகிறான்?  எதைச் சொல்வது? எதை விடுவது? பணம் பத்தும் செய்யும்…!!

வாய்மூடி மௌனியாய் வெளியேறிய இந்த மனுஷனை என்னதான் சொல்வது? தனக்குத்தானே நொந்து கொண்டார் பஞ்சு. இவருக்கே இன்னும் இந்தச் சூழல் படியவில்லை. தயங்கித் தயங்கித்தான் அடி எடுத்து வைக்கிறார். புரிந்தது பஞ்சாபகேசனுக்கு. பணம் போடுபவராயிற்றே…! எடுத்தேன் கவிழ்த்தேன் என்று விட்டு விட முடியுமா?

வந்த வேலையே அதுதான். அதாவது அவனைப் பார்ப்பது. நெருங்குவது. ஒட்டுவது. கட்டி வைப்பது. ஆனால் இப்போது விஷயம் திசை மாறிப் போய்க்கொண்டிருக்கிறது. எதுவோ வேறு ஒரு அதிர்ஷ்டம் தன்னைத் தேடி வருவதுபோல் தென்படுகிறது. அந்தக் குதிரைமேல் முதலில் ஏறி அமர்ந்துவிட வேண்டும் என்று முனைந்தாயிற்று. அப்படியானால் படிப்படியாகத்தானே தன் நோக்கத்தை நிறைவேற்றியாக வேண்டும். எடுத்த எடுப்பில் இரட்டைக் குதிரையில் எப்படி பயணம் செய்தல் சாத்தியம்?

நான் ஒன்று நினைத்திருக்கிறேன். இவர் ஒன்று நினைக்கிறார். கடவுள் என்ன நினைத்திருக்கிறாரோ? – பலத்த யோசனையில் பாஷ்யத்தின்  பங்களா வந்தது கூடத் தெரியவில்லை பஞ்சாபகேசனுக்கு.

“என்னய்யா, தூங்கிட்டியா….வெளில வா….” என்ற பாஷ்யத்தின் சத்தம் கேட்டுத்தான் தன் நினைவுக்கு வந்தார் பஞ்சு. ரங்கபாஷ்யம் ரொம்பவும் இஷ்டமாக வா, போ என்றும், சமயங்களில் இடத்திற்கேற்றாற்போல் வாங்க போங்க என்று விளிப்பதும் அவர் தொழில் யுக்தி என்று தோன்றியது இவருக்கு. எதுவானால் என்ன? நல்லது நடந்தால் சரி என்பதே அவர் முடிவாயிருந்தது.

ப்படியான சிந்தனையில் இவர்கள் இங்கே வியாபித்திருக்கையில், அங்கே மனம் குமுறிக்கொண்டிருந்தான் பிரேம். கைவசம் அவனிடம் இருந்த இரண்டு படங்கள் நழுவிப் போயிருந்தன. காலையில்தான் செய்தி கிடைத்தது அவனுக்கு.

நாந்தான் ஓ.கே. சொல்லிட்டனே…அப்புறம் எப்படி நீங்க மாத்துறீங்க…நல்லா யோசிச்சிட்டுப் பேச மாட்டீங்களா? – இயக்குநரை எகிறினான். யார் காரணம் என்பதை அவர் மூலமாய் வரவழைத்துவிட வேண்டும்என்ற அவசரம்.

“நான் என்ன சார் பண்றது? எல்லாம் ப்ரொட்யூஸர் விருப்பம் சார்…அந்தம்மா கூடப் பேசிட்டிருந்தாரு, அதான் எனக்குத் தெரியும்…என்னை ஆள விடுங்க….”

“ஏன், நீங்க சொல்ல மாட்டீங்களா? என்னை வச்சு உங்களுக்கு எத்தனை படம் சக்ஸஸ் ஆகியிருக்கு…அதைச் சொல்ல வேண்டிதானே? “

“சொல்லியாச்சு சார்…அவர் கேட்கமாட்டேங்குறாரு…வசீகரனத்தான் புக் பண்ணியிருக்காங்க….அந்தம்மாவும் இருக்காங்க….இளமைப் புயல் வசீகரனும் இருக்காரு….ரெண்டுமே சுனாமிதான்யா எனக்குங்கிறாரு….”

“சுனாமின்னா அழிவுன்னு அந்தாள் மூளைல உதிக்காதாமா? “

“சாரி சார்…இதெல்லாம் நான் பேச முடியாது. அப்புறம் எனக்குப் படம் பண்ற வாய்ப்புப் போயிடும்….எனக்கு நீங்களும் வேணும்…அவரும் வேணும்…அந்தம்மாவும் வேணும்…யாருக்குன்னு நிக்கச் சொல்றீங்க என்னை? நீங்க வேணுங்கிறதுனாலதான் இப்போ இந்த விஷயத்தை உங்ககிட்டே சொன்னேன்…..”

“நான் ஒரு தப்புப் பண்ணிட்டேன்…அன்னைக்கே அட்வான்சை வாங்கியிருக்கணும்….பழகின டைரக்டர், ப்ரொட்யூசர்னு விட்டுட்டேன்…இப்போ என்னடான்னா நீங்க அவரோட சேர்ந்துக்கிட்டுக் கழுத்தறுத்திட்டீங்க….”

“சாரி சார்…திரும்பத் திரும்ப என்னையே பழி போடுறீங்களே….பணம் போடுற ஆள் அவரு சார்….நானும் உங்களை மாதிரி அவர்ட்டச் சம்பளம் வாங்குற ஆள்தானே…”

நந்தினி கதாநாயகி என்றால் இப்போதெல்லாம் அந்த வசீகரனைப் போட ஆரம்பித்து விட்டார்கள். அவனைப் போட்டால் தெலுங்கிலும், மலையாளத்திலும் டப் செய்து விற்பனை செய்வது தோதாயிருக்கிறதாம். அங்கேயும் அவனுக்கு ஒரு ரசிகர் கூட்டம் சேர்ந்திருக்கிறதாம். நந்தினிதான் இதற்கு சிபாரிசு என்றார்கள். இதென்ன புதிய மோகம் அவளுக்கு? இத்தனைக்கும் அவன் வயசில் சற்றுச் சிறியவன் போல் தெரிகிறது. ஒன்றிரண்டு வித்தியாசம் காட்டினாலும் பரவாயில்லை என்று துணிந்து விட்டாளா? தனக்கான கைவசம் இருந்த மூன்று  படங்களும் கைநழுவிப்போன ஆத்திரத்தில் இருக்கும் படங்களைச் சிரத்தையாக முடித்துக் கொடுக்க வேண்டும் என்கிற அக்கறையில் பெங்களூர் பயணம் பற்றி எண்ணங்களை ஓடவிட்டான்.  தன்னை அந்தப் படப்பிடிப்புக்குப்  பொருத்தமாகத்   தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.. நந்தினியோடு மீதமிருந்த ஒரே படத்தின் கதி என்னவாகும்? இந்த யோசனையும் அப்போது அவன் மனதில் ஓடிக் கொண்டுதானிருந்தது.

ன்று பிரேம்குமாருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. குறிப்பிட்ட காட்சிக்கு இன்று ஐந்து டேக்குகள். புதிதாகத் திரைக்குள் புகுந்த புது முகங்கள் கூட இன்று தப்புவதில்லை. அடித்துத் தூள் கிளப்புகிறார்கள். ஆனால் எனக்கு என்ன வந்தது? ஏன் இன்று கவனம் இப்படிச் சிதறுகிறது?  அந்தக் காட்சியில் அந்தப் புதுமுகப் பெண்ணும்தான் எத்தனை முறை தன்னிடம் அடி வாங்கும்?

“பரவால்லண்ணே…போதும்… சரியாத்தான வந்திருக்கு…” – தயங்கிக்கொண்டே கூறிய துணை இயக்குநர் விதேந்திரனை முறைத்தான் பிரேம்.

இவன் யார் இதைச் சொல்ல? எப்படி வந்தது தைரியம்? யார் கொடுத்தது? எது கொடுத்தது? இவனெல்லாம் பேச ஆரம்பித்து விட்டானா? எனக்கான காலக்கேடுதானா இது?

சே…! என்னவெல்லாம் தோன்றுகிறது இந்த மனதில்?  இருக்கும் இடம் தெரியாமல் நிற்கும் ஆளெல்லாம் வாயைத் திறக்கிறான்கள்?

மனசு சலித்தது பிரேம்குமாருக்கு. இருந்தாலும் வெளிக்காண்பித்துக் கொள்ள அவன் அப்போதைக்கு விரும்பவில்லை.

“உனக்குப் போதும்யா…நீ கூடவே இருந்து எப்பவும் என்னைப் பார்க்கிறவன்…ஆனா என் ரசிகர்களுக்கு? அவுங்களுக்கு நான் தீனி போட்டாகணுமே…எதிர்பார்த்திட்டே உட்கார்ந்திருப்பாங்களே…மனசில அவ்வளவு ஆசையைத் தேக்கி வச்சிட்டுக் காத்திருப்பாங்களே…அவுங்கள நான் ஏமாத்தக் கூடாதுல்ல….”

வாழ்க்கையிலேயே முதன் முறையாக ஒரு உதவி இயக்குநரிடம் சகஜமாகப் பேசியிருக்கிறான் பிரேம்குமார். அவனுக்கே ஆச்சரியம். இவனின் நெருங்கிய பேச்சில் அவன் முழித்துப் போனான். மேற்கொண்டு வார்த்தைகளே வரவில்லை அவனுக்கு.

ஒவ்வொரு முறையும் தனக்குத் திருப்தி ஏற்படாத காட்சிகளில், இப்படித்தான் சொல்வான் பிரேம். அப்படியே பார்த்துப் பார்த்து, உயிரைக் கொடுத்து உழைத்து மேலே வந்தவன் அவன். உண்மையான உழைப்புக்கு என்றும் பலனில்லாமல் போகாது என்பதில் அதீத நம்பிக்கை உள்ளவன்.

ஆனால் அதற்கும் ஒரு காலம் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது போலும்… அதனால்தான் தனது முந்தைய இரண்டு சொந்தப் படங்களும் பின்னுக்கு இழுத்துக் கொண்டனவோ…அதற்கும் முந்தைய பிற கம்பெனிப் படங்கள் ஊத்திக் கொண்டனவே? இதுதான் காரணமோ? திரும்பத் திரும்ப மனதுக்குள் தோன்றித் தோன்றித் துடிக்க வைக்கும் அவமானங்கள் இவை. அடுத்தடுத்து எத்தனை வெற்றிகளைக் கொடுத்தவன் அவன். வரிசையாக வெற்றி மேல் வெற்றி வந்து என்னைச் சேரும் என்று அயராது பாடுபட்டுக் களைத்தவனாயிற்றே! அவனுக்கா தோல்வி?

நானா களைத்துப் போனேன்? அன்று போல்தானே இன்றும் உழைத்துக் கொண்டிருக்கிறேன்.

பின் எது என்னை இப்படிப் பின்னுக்குத் தள்ளியது? விடை தெரியா கேள்விகள் பல.

அதற்கு முக்கிய காரணம் அவள். அந்த நந்தினி. நான் கை பிடித்து அழைத்து வந்தவள். கூடவே வைத்துக் கொண்டு உயரத்தைக் காண்பித்து மேலே போய்விடு என்று தூக்கி உச்சிக்கு அனுப்பி இப்பொழுது அங்கிருந்து என்னைப் பார்ப்பவள்.

என்னவொரு கொடுமை? காலம் இப்படியுமா வேடிக்கை காட்டும்?அவளோடு கை கோர்த்த படங்கள் அத்தனையும் வெற்றி. என்னுடன் சேர்ந்து அவள் மார்க்கெட் பிடிக்க முடியாத இடத்திற்குப் போய்விட்டது. கைக்கு எட்டாத தூரம் போய்விட்டாள் அவள்.   

இப்போது தனிக் கதாநாயகியாம் அவள். அவளேதான் நாயகனுமாம். என்ன ஒரு தெனாவெட்டு? அவள் தன்னைப்பற்றி அப்படி என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறாள்? இந்த சினிமா உலகம் அவளை உதற எவ்வளவு நேரம் ஆகும்? அனுபவமில்லாதவள்…!  

நெஞ்சுக்குள் இனம் புரிந்த குரூரம்…! பொறாமை அறுத்தது மனதை.. பார்ப்பவர் எல்லாரிடமும் அநாவசியமாய் குற்றம் கண்டு பிடித்தது. தீக்குழம்பு மனதுக்குள். கொதித்துக் கொண்டிருக்கிறது தளதளவென்று. எதை ஊற்றி அணைப்பது என்று புரியாமல் தவிக்கிறேன் நான். இவன் என்னடாவென்றால் எனக்கு ஆறுதல் சொல்கிறான்.

நான் மட்டும் பழைய பிரேமாய் இருந்திருந்தால் இவன் வாய் இப்படி நீண்டிருக்குமா? அல்லது இந்த இடத்தில்தான் இந்நேரம்வரை நின்றிருக்க முடியுமா? எல்லாம் காலத்தின் கோலம்…நேரக் கொடுமை…!

அப்படி என்ன வீழ்ச்சி வந்து விட்டது தனக்கு. வெளியே ஒன்றும் அதற்கான பரபரப்புத் தெரியவில்லையே….? எல்லாம் வழக்கம்போல்தானே நடந்து கொண்டிருக்கின்றன. இந்த முயற்சியும் தோல்வியில் முடிந்து விடுமோ? வந்தது வரட்டும், போனது போகட்டும் என்று இறங்கியாயிற்று. வெற்றி இலக்கை மீண்டும் தொட்டாக வேண்டும். அதை நோக்கித்தான் ஓடிக் கொண்டிருக்கிறேன். இடையில் எது வந்து வந்து தடுக்கிறது? என்ன பயம் அது? ஏன் வந்தது? இரண்டு தோல்வி மூன்றாவது வெற்றிக்கான படியாக அமையக் கூடாதா? அதுவும் தோற்றுத்தான் போகும் என்று ஏன் இப்பொழுதே மனதுக்குள் வெறுப்பு மண்டிப் போக வேண்டும்? ஏன் ஊமையாய் அழ வேண்டும். தாழ்வுணர்ச்சி வெற்றியைப் பூமிக்குள் புதைத்து விடுமே? என் முனைப்பு மழுங்கிப் போய்விட்டதா?

நினைப்பது சரி? ஆனால் உலகம்? அந்த ரசிகர்கள் உலகம்? என்னையே நினைத்துக் கொண்டிருக்குமா? என்னை மீண்டும் எழுப்பி நிறுத்துமா? சும்மாவானும் தூக்கி நிறுத்து என்றால் எப்படி? கொடுப்பதைக் கொடுத்தால்தானே தூக்கும்? கொடுப்பதைக் கொடுத்தால் அவர்கள் என்ன தூக்குவது, அது, தானே உயர்ந்துதானே நிற்கும்? அப்படியானால் இதுநாள்வரை, தான் அவர்கள் மூலம் நிற்கவில்லையா? அவர்கள்தானே கூட்டங்கூட்டமாய்ப் போய் அதிர வைத்தார்கள்? அதை மறந்து விட முடியுமா? அந்தப் பரபரப்பை உலகறியச் செய்தவர்கள் அவர்கள்தானே? பாலாபிஷேகம் செய்து கடவுளாய் வணங்கியவர்கள் அந்தத் தொண்டர்கள்தானே? அப்படித்தானே நான் உச்சிக்குப் போனேன்? பிறகு எப்படிக் கீழே விழுந்தேன். ஏன் இன்னும் எழமுடியாமல் தவிக்கிறேன்? என்னை இந்த ரசிகர் உலகம் மறந்துவிட்டதா? போதும் என்று அலுத்துவிட்டேனா நான்? இவர்களே வசீகரன் பக்கம் திரும்பிவிட்டார்களா? அல்லது ஆம்பளை வேஷம் போடும் நந்தினியை நாட ஆரம்பித்து விட்டார்களா?

உன்னைப்பற்றியே இந்த உலகம் நினைத்துக் கொண்டிருக்க வேண்டுமா? மற்றவர்களுக்கெல்லாம் வேறு வேலையே இல்லையா? இப்போது எந்தப் பத்திரிகைக்காரனாவது எழுதுகிறானா? எதிலாவது உன் செய்திகள் வருகின்றனவா? காலம் மாறிப்போச்சுய்யா… தோல்விப்படமாக் கொடுத்தேன்னா? எவன் கவனிப்பான் உன்னை? சரக்கு நல்லாயிருந்தாத்தானே விலை போகும்? சும்மாவானும் வித்துப்புடணும்னு குதியாட்டம் போட முடியுமா? இது குதிரை ரேசு. தெரியும்தானே…? ஜெயிக்கிற குதிரை மேலதான் பணம் கட்டுவாங்க….அது ஆம்பளையா, பொம்பிளையா கணக்கில்லே….காசப்போட்டா டபுளா எடுக்கணும்….அவ்வளவுதான்….உனக்குப் போட்டியா பறந்தடிக்கிறாளே நந்தினி…அவ மார்க்கெட் இப்போ எங்க இருக்கு தெரியுமில்ல? நீ பண்ணுன போலீஸ் வேஷத்தப் பூராவும் இப்போ அவுளுக்குக் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க….பொம்பளப் போலீசு எங்கயாவது இத்தனை சாகசம் செய்ய முடியுமா? முடியும்….ஏன் முடியாது? சினிமாவுல செய்யலாமுல்ல….யாரு தடுக்கப் போறா? தீமையை அழிக்கத் தீயாப் புறப்பட்டவடா நா….ன்னு அவ பேசுற பன்ச் டயலாக் இன்னைக்கு அவ்வளவு பிரபலம்…! ஒவ்வொருத்தன் வாயிலயும் துடிக்குது அது..….. இதுதாம்ப்பா டிரென்ட்….ஒரு படம் வெற்றியாச்சின்னா வரிசையா முப்பது படம் எடுத்திட்டுத்தான் ஓய்வானுங்க ஃபீல்டுல…உனக்குத் தெரியாதா? நீ பார்க்காத பரபரப்பா? எல்லாம் பார்த்து ஓய்ஞ்சுதான இன்னைக்கு இப்டி நிக்கிறே…? திரும்ப நிமிரணும்னா அந்த முயற்சி எந்தளவுக்கு இருக்கணும்னு உனக்குச் சொல்லியா தரணும்? ஆனா ஒண்ணு கீழே விழுந்தவன் எந்திரிச்சதா சரித்திரம் கிடையாது….சர்வ சாதாரணமாத் தூக்கி நிறுத்துவாங்க….தடால்னு கீழே போட்ருவாங்க…ஜாக்கிரதை….

மனசு தொடர்ந்து எச்சரித்துக் கொண்டுதான் இருக்கிறது.-ஆனாலும் எதுவோ காழ்ப்புணர்ச்சியைத் தூண்டியது. இல்லையென்றால் கேரளத்திலிருந்து இப்படியொரு ஜோடியைத் தேர்ந்தெடுக்க தேடி ஓட வேண்டி வந்திருக்குமா?

ங்கிருந்தபடியே சற்றுத் தள்ளி வேறொரு காட்சிக்குக் கோணம் பார்த்துக் கொண்டிருந்த டைரக்டர் நவீனை நோக்கிக் கை தட்டினான் பிரேம். சுற்றிலுமிருந்த மலைச்சாரல் பகுதியும், அந்தப் பண்ணை வீடும், அவனுக்குப் புதிய உற்சாகத்தை அளித்திருந்தன. அப்படியும் மனதைப் பழைய நினைவுகள் புரட்டிப் போட யத்தனிக்கின்றன. மொத்தக் கதைக்கும், அந்தக் குறிப்பிட்ட இடத்திலும், சுற்றுப் பகுதிகளிலுமான காட்சிகளை ஒரேயடியாக எடுத்து முடித்துக்கொண்டு பிறகு சென்னைக்குக் கிளம்பலாம் என்று சொல்லி அவன்தான் மொத்த யூனிட்டையும் அங்கு இறக்கி, தங்க வைத்திருந்தான். பணம் ஆறாய்ப் பெருகி நீராய் ஓடியது. ஏதோ ஒரு வெறியில் அள்ளி வீசினான். வந்தா வருது, போனாப் போகுது…இது தோத்தா நான் பிச்சைக்காரன்….தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்.

இனி அடகு வைப்பதற்கு ஒன்றுமில்லை. சென்னை பங்களாவையும் எழுதிக் கொடுத்திருப்பது இதுவரை யாருக்கும் தெரியாது. துணிந்தவனுக்குத் துக்கம் இல்லை என்று இறங்கியாயிற்று. ஆனால் இறங்கி நடக்க நடக்கத்தான் துக்கம் பெருகுகிறது. பயப்பேயைக் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டே செல்வது போன்ற பிரமை.

வந்திட்டேன்….என்ன ஓ.கே.தானே? – கேட்டவாறே பரபரப்பாய் நெருங்கியவரை, திருப்தியில்ல…இன்னொரு டேக் எடுத்திருவோம் என்றான் பிரேம். அவர் விதேந்திரனைப் பார்த்தார். அவன் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் நிற்பதைக் கண்டு ஏதோ புரிந்தவராய், நோ, ப்ராப்ளம்….முடிச்சிருவோம்….என்றார்.

கண்ணாடியில் தன் முகத்தை ஒரு முறை பார்த்துக் கொண்டான் பிரேம். ரொம்பவும் பொருத்தமாகத்தான் அந்தத் தந்தை காரெக்டரை அப்போது உணர்ந்தான். தலையில் மாட்டியிருந்த விக்  கனகச்சிதமாகப் பொருந்தியிருந்தது. முன் பக்க நரையும், இரு காதுப்பக்க நரைகளும், அவன் முதிர்ந்த முகத்திற்கு ஒரு தனி தேஜஸைக் கொடுத்தன. முகத்தின் வட்டத்திற்கு ஏற்றாற்போல, இரட்டை நாடிக்கு உகந்தாற்போல் கனமான மீசை. ஹா…என்ன ஒரு கம்பீரம்? இனிமேல் வயதான வேடங்களை ஏற்றால் கடைத்தேறும் போலிருக்கிறதே?  அப்படிக் கொஞ்ச காலம் காசு பண்ணலாமா, தாங்குமா சினி உலகம்? குரலை வேற மாற்றியிருந்தான். இப்படி ஒரு அடிக் குரல் தன்னிடமிருந்தா? ஜால வித்தை செய்யலாம் போலிருக்கிறதே…! இந்தக் குரலில் வசனத்தை அழுத்தி, நிறுத்தி, உணர்ச்சியோடு பேசினால் அசந்து போவார்களே? ஹஹா…என்னா ஸ்டைல்யா….?

மனசு இதற்கும் துள்ளிக் குதிக்கத்தான் செய்கிறது. இந்தப் படத்தின் மூலம் குறைந்த பட்சம் அதையாவது உறுதி செய்து விட வேண்டும். வில்லன் வேஷங்கள் கிடைத்தாலும் ஓ.கே.தான் என்று புறப்பட்டு விட வேண்டியதுதான். அப்படி கொஞ்ச காலம் தன்னால் ஓட்ட முடியாதா என்ன? ஆனால் ஒன்று. அதற்கென்று இந்த விசேஷத் தன்மையை, நிலை நிறுத்திக்  கொள்ள வேண்டும். இதுவரை யாராலும் தொடப் படாத, தொட முடியாத நடிப்பு வகை. தீயாய் இருக்க வேண்டும். எனக்கு, எனக்கு என்று வந்த நிற்க வேண்டும்….நரம்புகள் துடிக்க ஆரம்பித்தன பிரேமுக்கு. பழைய துடிப்பு மீள்கிறதோ என்று அவனுக்கே வியப்பாய் இருந்தது. இந்தளவுக்கு நினைக்க வேண்டிய அவசியம் என்ன? கேள்வியும் பிறக்காமலில்லை.

என்ன இது? எதற்காகத் தன் சிந்தனை இப்படியெல்லாம் பாய்கிறது? என் தோல்வியை நானே ஒப்புக் கொள்கிறேனா? என் காலம் முடிந்து விட்டது என்று என்னையறியாமல் முடிவு செய்து விட்டேனா? அதனால்தான் சென்ற முறை கொடைக்கானலில் வைத்து  அந்தக் குறிப்பிட்ட காரெக்டரைப்  பண்ணுறீங்களா என்று அவர்கள் கேட்டார்களோ? என்ன ஒரு தைரியம்? என்னைப் பார்த்து அப்படிக் கேட்பதற்கு? இரண்டில் ஒன்றாய் நானும் இணைய வேண்டுமாம். ஒரு கதாநாயகன் பாத்திரம் வில்லத் தன்மை வாய்ந்ததாம். அது எனக்குப் பொருந்தும் என்று முடிவு செய்தே வந்தார்களாம்.

“அண்ணே, நீங்கதாண்ணே செய்யணும் இந்தக் காரெக்டர்…. உங்க காரெக்டருக்காகவே இந்தப் படம் டாப்புல போகும்ணே…நீங்க மொதப் படத்துல அப்ளை பண்ணுன ஸ்டைலை இதுல திரும்பவும் யூஸ் பண்ணிக்கலாம்ணே…இந்தக் கதைக்குப் பச்சுன்னு உட்கார்ந்துக்கும்….”

ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை? எது தடுத்தது? இன்னும் தனக்கு அந்த அளவுக்கான பின்னடைவு ஏற்படவில்லை என்று எந்த மனம் சொன்னது? இருந்தால் கடைசிவரை கிரீடம்தான். அதைக் கீழே இறக்குவதேயில்லை. இல்லையேல் எதுவும் வேண்டாம். என்னவொரு பிடிவாதம்? முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு போன அவர்களில் ஒருவன் முணு முணுத்தது இன்னும் காதில்…ரீங்கரித்துக் கொண்டுதான் இருக்கிறது.

“இன்னும் பத்துப் படம் அந்த நந்தினி கூட நடிச்சாத்தான் தன் மார்க்கெட் பழையபடி எகிறும்னு நினைக்கிறாரு போலிருக்கு….அது என்னடான்னா இவர் பேரைச் சொன்னாலே ஓடுது… படமே வேண்டாங்குது…. அது மார்க்கெட் பிச்சிக்கிட்டு நிக்குது… தெரியுதா இவுருக்கு? புதுசு புதுசா எம்புட்டோ பசங்க வரானுங்க…அதுகளோட நடிச்சி தன் பேரை நிக்க வைக்கிற டிரிக்குல இருக்குது அது….அந்தம்மா ராசிக்கு தொட்டதெல்லாம் பொன்னாகுது….இவரக் கவனிக்குமா?”

காண்பவர் எல்லோருமே நந்தினியைப்பற்றிப் பேசுவது எரிச்சலை ஏற்படுத்தத்தான் செய்கிறது இவனுக்கு. வெளியில் காண்பித்துக் கொள்ள முடியவில்லை. நாம கொண்டு வந்து விட்ட பொண்ணு…நல்லாயிருக்குன்னா அது நமக்குப் பெருமைதானே? – அவன் சொன்னதும், சொல்வதும்,  அவனுக்கே இப்பொழுதும் செயற்கையாகத்தான் இருக்கிறது. இந்த அளவுக்கான புழுக்கத்தை ஏற்படுத்தியவள் அவள்தான். அவளேதான். என் எத்தனையோ படங்கள் தோல்வியைத் தழுவியிருந்தாலும், கடந்த எனது  சொந்தப் படங்களில் அவள் நடித்திருந்தால் இந்த அளவுக்கான சரிவை அவை நிச்சயம் எட்டியிருக்காதுதான். நானும் கீழே போயிருக்க மாட்டேன். அவள் பெயரை வைத்தாவது நின்றிருப்பேன்.

ரசிகர்களின் கனவுக் காதல் ஜோடி நாங்களாகத்தானே இருந்தோம். உண்மையிலேயே நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்று எத்தனை கிசு கிசுக்கள்? என்னமாதிரியெல்லாம் புரளிகள். மஉறாபலிபுரம் ரிசார்ட்டில் கபளீகரம் என்றெல்லாம் தலைப்புப் போட்டு எப்படியெல்லாம் உசுப்பேற்றினார்கள்? பத்திரிகை விற்றார்கள்? அந்தச் செய்தியை எல்லாம் பார்த்து விட்டு என்னிடம் ஒரு மாதிரியாய்ச் சிரிப்பாளே? அந்தச் சிரிப்புதானே என்னைக் கொள்ளை கொண்டது? என்னை மட்டுமா? இந்தச் சினிமா உலகத்தையே அல்லவா ஆட்டி வைக்கிறது. வளைத்து அவள் காலடியில் அல்லவா போட்டிருக்கிறது? அந்த மப்பில்தான் அவள் என்னை உதறியிருக்கிறாள். அந்த மண்டைக்கனம்தான் என்னைச் சந்திப்பதைக் கூடத் தவிர்த்திருக்கிறது.

வீட்டின் உள்ளே இருந்து கொண்டே வெளியூர் படப்பிடிப்பு என்று சொல்ல வைத்தாளே….எனக்கே அல்வா கொடுக்கிறாள் பாவி? இந்த சினிமா உலகம் உன்னை உதறித் தள்ள எவ்வளவு நேரம் ஆகும்? உன்னிடமுள்ள படங்களைப் பிடுங்க எவ்வளவு நாளாகும்? நினைத்தால், செய்தால், எல்லாமும் தலை கீழாய் மாறிப் போகும். போகட்டும் என்று விட்டால் தலையில் ஏறி மிதிக்கிறாளே?

“அண்ணே…பிரேம்ணே…எடுத்திருவமா…இல்ல இன்னிக்கு இத்தோட முடிச்சிக்குவமா?” – எதிரில் கேள்விகளோடு நின்ற இயக்குநரை வெறித்தான் இவன். அந்த முக பாவத்தில் எதுவும் புரியாமல் நின்றார் அவர்.

“நீங்க வேணா இன்னும் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்கண்ணே…நா இதோ வந்திடறேன். ஒரு லொகேஷன் ஃபிட் ஆயிடுச்சண்ணே….நாளைக்குக் காலைல அங்கதான் ஷூட் பண்ணப் போறோம்…” – சொல்லிக் கொண்டே அவனின் நிலைமை கண்டு ஓடி ஒளிந்து கொண்டார் அவர்.

பிரேம் அப்படியே அமர்ந்திருந்தான். அவனுக்கும் மனது அப்படித்தான் சொல்லியது. கூடவே என்னவோ ஒரு திட்டம் அவனுக்குள் உருவாகிக்கொண்டிருந்தது. உள்ளுக்குள் அதுநாள் வரை இருந்த குரூரத்தை அப்பொழுதுதான் சட்டென்று உணர்ந்து கொண்டான். தயங்காதே…உடனே நடத்து……நீயில்லாமல் அவளுக்கு ஏது வாழ்வு?

— உஷா தீபன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad