சங்கமம் 2018
மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தும் சங்கமம் விழா, இவ்வாண்டு ஜனவரி 13ஆம் தேதியன்று ஹாப்கின்ஸ் ஹை ஸ்கூலில் கோலாகலமாக நடைபெற்றது. இது பத்தாவது ஆண்டு விழா என்பது குறிப்பிடத்தக்கது.
மதியம் 12 மணிக்குச் சிறப்புப் பொங்கல் விருந்துடன் தொடங்கிய இவ்விழாவில், மினசோட்டாவில் வசிக்கும் தமிழ் மக்கள் பெருமளவில் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டனர். கருப்பட்டிப் பொங்கலுடன் தமிழ் பாரம்பரிய மதிய உணவு பரிமாறப்பட்டது.
மதிய விருந்திற்குப் பிறகு, 2 மணிக்குத் தமிழ் தாய் வாழ்த்து மற்றும் மங்கல இசையுடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்கின. அமெரிக்க தேசிய கீதம், தமிழில் பாடப்பட்டது.
இந்தாண்டு சங்கமத்தின் சிறப்பம்சமாக, அடுத்த தலைமுறையினரின் தமிழ் கலை நிகழ்ச்சிகளைச் சொல்லலாம். கரகாட்டம், மயிலாட்டம், புலி ஆட்டம், பொய்க் கால் குதிரை ஆட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், பரதம், குறவன் குறத்தி ஆட்டம், வில்லுப்பாட்டு, பறை, சிலம்பாட்டம் எனத் தமிழர் பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகளை, இங்குள்ள சிறுவர் சிறுமிகள் முன்னின்று சிறப்பாக நடத்திக் காட்டினர்.
இவை தவிர, பல்வேறு உள்ளூர் குழுக்களின் நடன நிகழ்ச்சிகள், பாட்டுக் கச்சேரி, மழலைகளின் மலரும் மொட்டும் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முதல்முறையாக, இங்கு குற்றாலக் குறவஞ்சி நாட்டிய நடனம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. நாகசுரம், தவில், பறை, கொம்பு, முரசு போன்ற மரபு இசைக் கருவிகள் இசைக்கப்பட்டன.
இடை இடையே தமிழ்ச் சங்கத்தின் கடந்த ஆண்டு நிகழ்வுகளின் விவரங்கள், நிதி அறிக்கை, பள்ளியின் சாதனைகள், திட்டங்கள் குறித்த உரைகள் நிர்வாகிகளால் அளிக்கப்பட்டன.
அரங்கிற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த தமிழர் காலக்கோட்டினைக் கொண்ட பதாகை, விருந்தினர்களின் கவனத்தை ஈர்த்தது. மாலைச் சிற்றுண்டி, இரவு உணவு ஆகியவையும் இங்கேயே விற்பனை செய்யப்பட்டதால், மக்கள் ஒருபக்கம் தங்கள் பசியைத் தீர்த்தபடி, மற்றொரு பக்கம் கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து உற்சாகமாகப் பார்த்தனர்.
நிகழ்ச்சிகள் அனைத்தையும் வந்திருந்த பார்வையாளர்கள் கை தட்டி ரசித்துக் கண்டு களித்தனர். தமிழ் மரபுக் கலைகளை இளம் தலைமுறையினர் அடுத்த கட்டத்திற்கு உலகெங்கும் எடுத்துச் செல்வார்கள் எனும் நம்பிக்கை இங்கு வந்தவர்களுக்குக் கிடைத்தது என்றால் அது மிகையல்ல.
இங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு,
- சரவணகுமரன்.
Tags: MNTS, Sangamam 2018, சங்கமம், மினசோட்டா தமிழ் சங்கம்