இலங்கையில் தைப் பொங்கல்
தைப் பொங்கல் என்பது தமிழர்களின் பெருவிழா என்றே பொதுவாக அர்த்தப்படுத்தப்பட்டாலும் சிறப்பாக இவ்விழா விவசாயத்தோடும் விவசாயிகளோடும் தொடர்புள்ள ஒரு பண்டிகையாகவே ஈழத்து தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. விவசாயத்தை மையப்படுத்திய பண்டிகையாக தைப் பொங்கல் அடையாளப்படுத்தப் பட்டாலும் சர்வதேச ரீதியாகவோ அல்லது இலங்கை, இந்தியா போன்ற ஆசிய நாடுகளிலோ தைப்பொங்கல் என்பது விவசாயம் சார்ந்த ஒரு பொது விழாவாகக் கொண்டாடப்படுவதில்லை.
சங்க இலக்கிய காலத்தில் இருந்தே தைப்பொங்கல் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்பட்டு வருகின்றது. மழைக்கு அதிபதியாகிய இந்திரனைக் குறிக்கும் வகையில் ‘இந்திரவிழா’ என்ற பெயரில் சங்ககாலத்தில் கொண்டாடப்பட்ட விழாதான் பின்னர் தைப்பொங்கலாக மாற்றம் பெற்றது. இங்கு கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் சங்ககாலத்தில் கொண்டாடப்பட்ட இந்திரவிழாவும் பிற்காலத்தில் கொண்டாடப்படுகின்ற தைப்பொங்கலும் இந்து சமய அடையாளங்களையும் அதன் கோட்பாடுகளையும் தழுவி நிற்பதால் இதனுடைய தாக்கமும் நோக்கமும் இலங்கையில் எப்படி இருக்கிறது என்பதை ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.
எந்தவொரு சமயம், சமூகம் அல்லது கலை சார்ந்த நிகழ்வானாலும் அவற்றை வடிவமைக்கும் காரணிகளில் முக்கியமானது அந்த நிலம் சார்ந்த சீதோஷண நிலைமையாகும். இலங்கையின் தமிழர் தாயகமான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தைப்பொங்கல் முக்கிய பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. சங்க காலத்தில் இந்திர விழாவாக இது கொண்டாடப்பட்டிருப்பினும் பிற்காலத்தில் விஞ்ஞான வளர்ச்சி காரணமாக; பூமியில் உள்ள நீரை ஆவியாக்கி பின் மழையாகக் கொடுக்க சூரியனே காரணம் எனக் கண்டறியபட்டதனால் உழவர்கள் தங்கள் நன்றியைச் சூரியனுக்கு செலுத்தும் விதமாகவும் மற்றும் பூமி, கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் தைப்பொங்கலைக் கொண்டாடி வருகின்றனர்.
தமிழர்கள் செறிந்து வாழும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் யாழ்ப்பாணம் தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் நெல் உற்பத்தியே முக்கியத் தொழிலாகக் காணப்படுகின்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு சிறிய பகுதியில் நெல் விளைவிக்கப் பட்டாலும் மிளகாய், வெங்காயம் போன்ற உப உணவுப் பயிர்களின் உற்பத்தி உச்ச நிலையில் இருந்து வருகின்றது. தைப்பொங்கல் என்று வரும் பொழுது நெல் விவசாயமே எல்லா இடங்களிலும் அடையாளப்படுத்தப் படுகின்றது. இருந்தாலும் தைப்பொங்கல் காலங்களில் யாழ்ப்பாண மாவட்டம் களைகட்டி விடுவதுதான் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களுக்கு இணையாக முஸ்லீம்களும் நெல் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தைப்பொங்கல் என்று வரும்போது முஸ்லீம்கள் கொண்டாடும் வழக்கம் இல்லை.
தமிழ் நாட்டில் தைப்பொங்கல் காலமென்பது அறுவடை முடிந்து அதன் பலனை விவசாயிகள் அனுபவிக்கும் காலமாக இருப்பதால் அவர்களுக்கு உற்சாகத்தையும் மகிழ்வையும் தரும் நிகழ்வாக இக்காலம் அமைகின்றது. ஆனால் ஈழத்து விவசாயிகளின் வயல்களில் நெற்பயிர் முற்றி பழுத்து மஞ்சள் ஆறுபோல் அறுவடைக்குத் தயாராக இருக்கும் காலம் என்பதால் அவர்களிடம் எதிர்காலம் பற்றிய பயத்துடன் கூடிய கனவுகளும் கற்பனைகளுமே அதிகமாகக் காணப்படும்.
‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது ஈழத்து விவசாயிகளைப் பொறுத்தவரையில் யதார்த்தமானது. தை பிறந்து விட்டது வழி இனித்தான் பிறக்க வேண்டும் என்றே இதற்குப் பொருள் கொள்ள வேண்டியுள்ளது. வன்னி பெருநிலப் பரப்பில் தொண்ணூறு வீத விளை நிலங்கள் நெல் விவசாயத்தை நம்பியே உள்ளது.தைப்பொங்கல் என்பது அவர்களின் எதிர்பார்ப்புக்கும் கனவுகளுக்கும் கதவு திறக்கும் நேரமாகும்.
அறுவடை முடிந்து அதன் பலனை அனுபவிக்கின்ற நேரத்தில் சித்திரை புத்தாண்டு வருவதால் ஈழத்து தமிழர்கள் சித்திரைப் புத்தாண்டையும் மிகுந்த உற்சாகத்துடன் உறவுகளுடன் இணைந்து கொண்டாடுகின்றனர். தமிழ் நாட்டில் கலைஞரின் அரசு தை முதல் நாளை அதாவது தைப்பொங்கல் நாளை தமிழ் வருடமாக அறிவித்தாலும் ஈழத்து தமிழர் மத்தியில் இது எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தியதுபோல் தெரியவில்லை.
-சதா-
I appreciate this Thaip Ponkal article. In Canada Thaip Ponkalis celebrated with Tamil Heritage Month activities.