2018 – நுகர்வோர் நம்பிக்கையும் சில்லறை வர்த்தகமும்
அண்மையில் வெளியான அறிக்கை ஒன்றின்படி , அமெரிக்க விடுமுறைக் கால விற்பனை, சென்ற ஆண்டைக் காட்டிலும் 4.9 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது. 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு, சென்ற ஆண்டின் “வருடாந்திர வளர்ச்சி” (Year over year sales) கணிசமாக உயர்ந்துள்ளது. ‘ஆ !! சூப்பர், இனிமே பொருளாதாரப் பிரச்சனை எதுவுமில்லை’ என நினைத்து மகிழ்ந்து சுயநினைவுக்கு வருவதற்குள் ‘பொருளாதார வல்லுநர்கள் கணித்திருந்த வளர்ச்சியை விட இது சற்றுக் குறைவு.’ என்று இன்னொரு அறிக்கை வந்து விழுந்தது.
அதைப் படித்து முடிப்பதற்குள் ‘வாட் டூட்? உங்க கண்ட்ரி கன்ஸ்யூமர் கான்ஃபிடன்ஸ் டவுனாமே ? மோடியை வேணா ஹெல்புக்கு அனுப்பி வைக்கவா?’ என்ற தொனியில் வாட்ஸ்-அப் மெசேஜ் ஒன்று.
அவசர அவசரமாகத் தேடிப் படித்துப் பார்த்தால், நவம்பரில் 128.6 எனவிருந்த நுகர்வோர் நம்பிக்கைக் குறியீடு டிசம்பர் மாத இறுதியில் 6.5 புள்ளிகள் குறைந்து 122.1 என்று இருந்தது.
கிரஹப்ரவேசத்துக்கு வந்த தூரத்து மாமா ஒருவர், ‘வீடெல்லாம் நல்லா வாஸ்து பாத்து கட்டிருக்கே எக்ஸ்டீரியர் சூப்பர் .. வாசக் காலுக்கெல்லாம் தேக்கு மரம் போட்டிருக்கே போலிருக்கு .. பார்த்தேன்… என்ன இந்த மண்ணுதான் எனக்குச் சந்தேகமாயிருக்கு .. இந்த ஏரியால திடீர் திடீர்னு நெலம் உள்வாங்கிடுதுன்னு சொல்றாங்க .. கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோ ..’ என்று சொன்னால் எப்படியிருக்கும்? அது போன்றது தான் மேலே சொன்ன விஷயங்களும்.
நுகர்வோர் நம்பிக்கை நிஜமாகவே நாட்டின் பொருளாதாரத்துடன் தொடர்புடையதா என்றால், ‘ஓரளவுக்கு’ என்று சொல்லலாம்.
நுகர்வோர் நம்பிக்கை
நுகர்வோர் நம்பிக்கைக் குறியீடு (Consumer Confidence Index) என்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த பொதுமக்களின் கணிப்பு எனலாம். ஒவ்வொரு நாட்டிலும் இது வெவ்வேறு மாதிரியாக அமைந்தாலும், இறுதியில் கணக்கிடப்படும் சதவிகிதப் புள்ளி அந்நாட்டின் பொருளாதாரக் குறியீடாகக் கொள்ளப்படும்.
அமெரிக்காவைப் பொறுத்தவரையில், த கான்ஃப்ரன்ஸ் போர்ட், (The Conference Board) எனப்படும் தனியார் பொருளாதார ஆய்வு நிறுவனத்தால், மாதந்தோறும் இந்தக் கணிப்பு நடத்தப்படுகிறது.
இந்நிறுவனம், நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து பல்வேறு சமூக, பொருளாதார நிலையிலிருக்கும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்துகிறது.
- தற்காலப் பொருளாதாரச் சூழல்,
- அடுத்த ஆறு மாதத்தில் பொருளாதார நிலை
- தற்போதைய வேலை வாய்ப்பு
- அடுத்த ஆறு மாதங்களில் வேலை வாய்ப்புச்சூழல்
- அடுத்த ஆறு மாதங்களுக்கான குடும்ப வரவு
என ஐந்து தலைப்புகளைக் கொண்ட ஆய்வில், அவ்விடைகள் ஒவ்வொன்றும் மதிப்பிடப்பட்டு நுகர்வோர் நம்பிக்கைக் குறியீட்டு எண் கணக்கிடப்படுகிறது.
இந்த நுகர்வோர் நம்பிக்கைக் குறியீடு தான் ஒரு நாட்டின் தேவையை (டிமாண்ட்) நகர்த்துகிறது. மக்கள் தங்களது வேலை மற்றும் வருமானம் பற்றி சந்தேகம் கொண்டிருந்தால் அவர்களது ‘கொள்முதல்’ சக்தி குறைந்துவிடும். அதற்கு நேர் மாறாக, அதீத நம்பிக்கை குறியீடு சேமிப்பைக் குறைத்து, பணவீக்கத்துக்கு வழி வகுக்கும்.
அரசாங்கம் இந்தக் குறியீட்டு எண்ணைக் கவனமாகக் கண்காணித்து தேவையான மாற்றங்களைச் செய்கிறது. உதாரணமாக செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு சரிந்த நுகர்வோர் நம்பிக்கைக் குறியீட்டை நகர்த்த வாகனக் கடன், வீட்டுக் கடன் ஆகியவை எளிமைப்படுத்தப்பட்டன. அதே போல் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த சேமிப்புக் கணக்கு வட்டி , கடனுக்கான வட்டி அதிகரிப்பு போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன.
1977ஆம் ஆண்டு முதல் மாதந்தோறும் இந்தக் கணக்கீடு நடத்தப்படுகிறது. 1985ஆம் ஆண்டு சில மாதங்கள் தொடர்ந்து 100 சதவிகிதமாக இருந்ததே இந்தக் குறியீட்டுக்கு படிமக் குறியாகக் (பென்ச்மார்க்) கருதப்படுகிறது. ரானால்ட் ரீகன் அதிபராக இருந்த அந்தக் காலகட்டமே அமெரிக்காவின் நிலையான பொருளாதாரம் என்று கருதப்படுவதற்கு இந்த நுகர்வோர் நம்பிக்கையும் ஒரு காரணம்.
2000ஆம் ஆண்டு மே மாதம் இந்தக் குறியீடு வரலாற்றில் அதிகபட்சமாக 144.7 புள்ளிகள் பதிவானது. 2009ஆம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம் மிகவும் குறைந்த புள்ளிகளான 25.3 பதிவானது.
விடுமுறைக் கால விற்பனை பற்றிய அறிக்கையில் கவனத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு புள்ளி ‘விற்பனை முறை’
டிசம்பர் 2017இல், இணைப்பு நிலை (ஆன்லைன்) வசதி கொண்டவர்களில் 100க்கு 83 பேர் அதனைப் பயன்படுத்தியுள்ளனர். ஆன்லைன் வர்த்தகம் அதிகரித்ததால்
கட்டிடச் சில்லறை வியாபாரிகளின் விற்பனை பெருமளவு சரிந்துவிட்டது.
ஈ-காமர்ஸ் எனப்படும் மின்வர்த்தகம் சென்ற ஆண்டை விட 24% அதிகரித்துள்ளதாம்.
- மில்லேனியல்ஸ் எனப்படும் (1980 தொடங்கி 2000 ஆம் ஆண்டின் பிற்பகுதிக்கு இடையே பிறந்தவர்கள் ) தலைமுறையினரில் 67% மின் வர்த்தகம் மேற்கொண்டுள்ளனர்.
- ஜென் எக்ஸர் எனப்படும் (1961 தொடங்கி 1980 ஆம் ஆண்டின் தொடக்கப்பகுதிக்கு இடையே பிறந்தவர்கள்) தலைமுறையினரில் 56% மின் வர்த்தகம் மேற்கொள்கின்றனர்.
- பேபி பூமர்ஸ் எனப்படும் (1940க்கும் 1960க்கும் இடையே பிறந்தவர்கள்) தலைமுறையினரில் 41% பொத்தானை அழுத்தி வாங்குகின்றனர்.
- 1940க்கு முன்னர் பிறந்த சீனியர் தலைமுறையினர் 24% ஆன்லைன் வர்த்தகம் பழகிவிட்டனர்.
இந்நிலை தொடருமானால் பெரும்பாலான சில்லறை விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுவிடுமே என்று தோன்றுகிறதல்லவா? அது தான் இல்லை.
சென்ற ஆண்டின் மத்தியில், உலகப் பிரசித்தி பெற்ற ஆன் லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் ‘ஹோல் ஃபூட்ஸ்’ நிறுவனத்தைப் பெருந்தொகை கொடுத்துப் பெற்றதற்கு வாடிக்கையாளருடன் நேரடித் தொடர்பும், நம்பிக்கையும் ஏற்படுத்த வேண்டியிருப்பது ஒரு காரணமாகச் சொல்லப்பட்டது.
கஸ்டமர் ஃபீட்பேக் , செல்லர் ரேட்டிங், பையர் ரேட்டிங், ரிடர்ன் பாலிசி, விஷ் லிஸ்ட், ஒன் கிளிக் பையிங் எனப் பல புதுமைகளைப் புகுத்தி மின் வர்த்தகத்தைப் புரட்டிப் போட்ட அமேசானால் அமெரிக்க உணவுப் பொருள் வர்த்தகப் பழக்கத்தை அசைக்க முடியவில்லை என்பது தான் உண்மை. ஜி-20 நாடுகளில் உணவுப் பொருட்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் அமெரிக்கா அடிமட்டத்தில் உள்ளது. இதனை மாற்ற வேண்டி, அமேசான் எடுத்த மிகப் பெரிய முடிவு தான் ‘ஹோல் ஃபூட்ஸ்’ நிறுவனத்தைக் கையகப்படுத்திய முயற்சி எனச் சொல்லப்படுகிறது.
அமேசானின் இந்த நகர்வு பல நிறுவனங்களையும் சிந்திக்க வைத்துள்ளது. அதன் விளைவாக முளைத்த எண்ணம் தான் ‘ஆர்டர் ஆன்லைன் – பிக் – அப் இன் ஸ்டோர் என்ற கருத்துரு. வால்மார்ட் , டார்கெட், கோல்ஸ், மேஸிஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் தொடங்கி பனீரா பிரட், சிபோடலே, டாக்கோ பெல் போன்ற துரித உணவகங்கள் வரையில் பல நிறுவனங்கள் இம்முறைக்கு மாறி வருகின்றன.
2018ஆம் ஆண்டு வர்த்தகத் துறையில் நிகழக்கூடிய மாற்றங்கள்
- கடைக்குச் சென்று பொருட்களைத் தேடித் தேடி வாங்கும் வழக்கம் குறையும். பல வருடங்களாகத் தொடர்ந்து உங்களது பொருட்கள் கொள்முதல் பாணியைக் (pattern) கவனித்து வரும் நிறுவனங்கள் ‘ஒத்தைப் பொத்தான்’ (one button or one tap button) முறையை விரிவுபடுத்தவுள்ளன.
- அலெக்ஸா, கூகிள், கோர்டானா, சிறி போன்ற ‘பேச்சு அறிதல்; (Voice Recognition) தொழில் நுட்ப உபகரணங்கள் கொள்முதல் பணியைப் பெருமளவில் மேற்கொண்டு, மனிதரைத் தாங்கள் பரிந்துரைப்பவற்றை ஏற்றுக்கொள்ளும் அடிமைகளாக மாற்றக்கூடும்.
- சியாட்டில் நகரில் பரீட்சார்த்த முறையில் செயல்படும் ‘அமேசான் கோ’ கடைகள் பெருகும். இக்கடைகளில் பயனர் முகவரி கொடுத்து ‘பார வண்டியை’ (cart) எடுத்துக் கொண்டால், உங்களது வீட்டுக் காரியதரிசி ‘அலெக்ஸா’ உங்கள் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் பட்டியலைத் தரும். பார வண்டியில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் தானியங்கி முறையில் விலை கணக்கிடப்பட்டு, நீங்கள் பாரவண்டியைத் தள்ளிக்கொண்டு, கடையை விட்டு வெளியே வரும் நொடியில் உங்கள் கடனட்டை கணக்கில் சேர்க்கப்படும்.
- இணைப்பாக்க மெய்மை (Augmented Reality) முறையில் மனித உருவத்தைப் பதிவேற்றி, வெவ்வேறு உடைகளை மாட்டி, பொருத்தமான உடைகளை வடிவமைக்கும் / தேர்ந்தெடுக்கும் உத்தி பிரபலமடையும், ஏற்கனவே ‘ஆப்பிள்’ நிறுவனத்தோடு இணைந்து ‘ஐகியா’ நிறுவனம் வீட்டு அறையின் படங்களைப் பதிவேற்றினால் பொருத்தமான அறைகலன்களைப் பரிந்துரைக்கும் பணியை அறிமுகப்படுத்தி வெற்றி கண்டுவருகிறது.
- ‘பிராண்ட்’ இல்லாத பொருட்கள் பெருமளவில் விற்பனையாகும் என்று கருதப்படுகிறது. ‘பிராண்ட்லெஸ்’ எனும் நிறுவனம் ஒன்று தனது ஒவ்வொரு பொருளையும் பெரிய ‘பிராண்டட்’ பொருட்களுடன் ஒப்பிட்டு இரண்டுக்குமான விலை வித்தியாசத்தை முன்னிலைப்படுத்தி எடுத்துக்காட்டுவதன் மூலம் புதிய மில்லேனிய மற்றும் ஜென் Z தலைமுறை வாடிக்கையாளர்களை வென்று வருகிறது.
- பெரிய டிபார்ட்மென்ட் கடைகள் நகரின் பல இடங்களில் தனிப்பயனாக்கக் கடைகளைத் (customized local stores) திறக்கக் கூடும். இந்தக் கடைகள் பெரும்பாலும் பொருட்களைத் தொட்டுப் பார்த்து உணரும் ‘ஷோரூம்’ நிலையங்களாக மட்டுமே செயல்படும். பொருட்கள் வாங்க விருப்பமெனில் இந்த ஷோ ரூம்களில் அவற்றை ஆர்டர் செய்தால் மறுநாள் அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும். ‘நார்ட்ஸ்டார்ம்’ நிறுவனம் இந்த முறையில் பல இடங்களில் சிறிய ஷோ ரூம்களைத் திறந்துள்ளது.
- கடைக்காரர்கள் தங்கள் அனுமானப்படி, பொருட்களைக் குவித்து வைத்து விற்பனை செய்யாமல் சிறிய அளவில் ‘சாம்பிளுக்கு’ பொருட்களைக் கூறு கட்டி, வாடிக்கையாளரின் விருப்பப்படி வாங்கச் செய்யும் வழக்கம் பெருகும். ‘செஃபோரா’ அலங்கார ஒப்பனைப் பொருள் நிறுவனம் இம்முறையைக் கையாளத் துவங்கிவிட்டது.
- சுற்றுச் சூழல் பாதுகாப்பு, உடல் நலப் பாதுகாப்பு போன்ற வாசகங்கள் பெருமளவில் பிரயோகிக்கப்படும். ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்று கடற்கரையில் கிடைக்கும் குப்பை மற்றும் தேவையற்ற பொருட்களை வைத்து மூக்குக் கண்ணாடி ஃபிரேம்களைத் தயாரிக்கத் தொடங்கி இன்று அந்நாட்டின் மிகப் பெரிய நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. வாடிக்கையாளரின் மெல்லுணர்வுகளைத் தட்டியெழுப்பி சூழ்நிலை அடிமையாக்கும் முயற்சி இது.
- பாயிண்ட் ஆஃப் சேல் எனப்படும் விற்பனை முனைகள் தரவுச் சேகரிப்பு மையங்களாக உருவெடுக்கும். சில்லறைக் கடைகளில் ஒவ்வொரு பிரிவிலும் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் நீங்கள் ஒரு பொருளை வாங்கும் முன்னர் பார்வையிடும் ஏனைய பொருட்கள், அவற்றை ஒப்பிடும் நேரத்தில் உங்களது முகத்தில் ஏற்படும் மாற்றங்கள் இவற்றைப் பதிவு செய்து நீங்கள் அப்பொருளை வாங்க அல்லது வாங்காமல் ஒதுக்க நேர்ந்த காரணத்தை அறிய முற்படும்.
இவையெல்லாம் இந்த வருடத்தில் சில்லறை வணிகத்தில் ஏற்படக் கூடிய மாற்றங்களாக எதிர்பார்க்கப்படுகின்றன. மொத்தத்தில் ‘சர்வைவல் ஆஃப் த ஃபிட்டஸ்ட’ எனும் சித்தாந்தப்படி வர்த்தகத் துறையில் ஏற்படும் போட்டியில், நாம் வெளிப்படையாக உணராத வகையில் நம்மை ஆசை வலையில் சிக்க வைத்து, தேவைகளை அதிகரிக்கச் செய்யும் உத்திகள் இவை. இந்த ஆண்டின் இறுதியில் நம்மில் எத்தனை பேர் இவ்வுத்திகளில் சிக்குண்டு தொலைந்தோம் எனத் தெரிய வரும். பார்க்கலாம்!!
- ரவிக்குமார்.
Tags: Amazon, VR, Whole Foods, அமேசான், அலெக்ஸா, ஈ-காமர்ஸ், கூகிள், கோர்டானா, நுகர்வோர் நம்பிக்கை