\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

சூப்பர் பவுல் ஜோரில் மினசோட்டா

“ட்வின் சிட்டீஸில்” கண்கூடாகத் தெரிகிறது. மைனஸ் டிகிரி குளிரால், ஒரு பக்கம் வைரஸ் ஜூரம் இன்னொரு புறம் சூப்பர் பவுல் எனப்படும் ஃபுட்பால் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஜுரம். ஃபிப்ரவரி நான்காம் தேதியன்று நடக்கவிருக்கும் ஃபைனல் போட்டிக்காக இப்பொழுதே திருவிழாக் கோலமாகி விட்டது மின்னியாபொலிஸ் நகரம்.

பேருதான் அமெரிக்கக் கால்பந்து. ஆனால், அந்தப் பந்தைத் தூக்கிப் போட்டு விளையாடுவது கைகளால். என்ன தான் ஓடுவதற்குக் கால்கள் பயன்படுகிறது என்றாலும் இதைக் கால்பந்து என்று அழைப்பது வாழையடி வாழையாக அமெரிக்காவில் நடைபெற்று வரும் மோசடி. யாராச்சும் இதைத் திருத்துங்கப்பா.  

சூப்பர் பவுல் எனச் செல்லமாக அழைக்கப்படும் இந்த விளையாட்டு போட்டி, அமெரிக்காவின் வெவ்வேறு மாகாணங்களில் இருக்கும் உள்ளூர் அணிக்களுக்கிடையேயான சாம்பியன்ஷிப் போட்டியாகும். இந்த அணிகள் அனைத்தும் நேஷனல் ஃபுட்பால் கான்ஃப்ரன்ஸ், அமெரிக்கன் ஃபுட்பால் கான்ஃப்ரன்ஸ் என்ற இரு குடைகளுக்குள் வரும். இந்த இரு பிரிவிற்குள் முதலிடம் பெற்ற இரு அணிகள், சூப்பர் பவுல் என்ற இறுதிப் போட்டியில் விளையாடுவார்கள். 1967 இல் இருந்து தொடர்ந்து வருடா வருடம் விளையாடப்பட்டு வரும் இவ்விளையாட்டுத் தொடரின் 52 ஆம் ஆண்டுச் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இந்தாண்டு மின்னியாபொலிஸ் “யூ.எஸ்.பேங்க்” ஸ்டேடியத்தில் பிப்ரவரி நான்காம் தேதியன்று நடைபெறயுள்ளது.

இது இரண்டாம் முறையாக மினசோட்டாவில் நடைபெறுகிறது. இதற்கு முன், 1992 ஆம் ஆண்டு இங்கிருந்த “மெட்ரோடோம்” ஸ்டேடியத்தில் நடைபெற்றது. பிறகு, 2014 இல் மெட்ரோடோம் ஸ்டேடியம் இடிக்கப்பட்டு, தற்போது இருக்கும் யூ.எஸ்.பேங்க் ஸ்டேடியம் இந்த விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு, புதிதாக வேக வேகமாகக் கட்டப்பட்டு 2016 இல் திறக்கப்பட்டது.

மினசோட்டாவின் கால்பந்து அணியான “வைகிங்ஸ்” இதுவரை பலமுறை இறுதிப் போட்டியில் விளையாடியும் இதுவரை கோப்பையை வென்றதில்லை. இம்முறையாவது உள்ளூரில் நடக்கும் இறுதிப் போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றிப் பெற்று விடுவார்கள் என மினசோட்டாவாசிகள் எதிர்பார்ப்புடன் இருந்தனர். அதிலும் சென்ற வாரம் ஃபிலடெல்ஃபியா ஈகிள்ஸ் அணியினரால் மண்ணள்ளி போடப்பட்டது. எது எப்படியோ, இறுதிப்போட்டிக்காக மினசோட்டா உற்சாகம் குறையாமல் தான் இருக்கிறது.

இந்தியர்களுக்குக் கிரிக்கெட் எப்படியோ, அமெரிக்கர்களுக்கு இந்த ஃபுட்பால். வருடா வருடம் இந்தச் சமயத்தில் வீட்டில் டிவியும் ரிமோட்டுமாக இருப்பார்கள். இல்லாவிட்டால், இது ஒளிபரப்பப்படும் ரெஸ்டாரண்ட் மற்றும் பார்களில் இருப்பார்கள். இங்கு வந்த பிற நாட்டினரையும் இந்த ஆர்வம் விட்டு வைத்ததில்லை. இதில் இந்தியர்களின் ஆர்வம் காமெடியானது. ஒரே ஊரில் செட்டிலான அமெரிக்கர்கள் சாகும் வரை ஒரே அணிக்கு விசுவாசமாக இருப்பார்கள். பணி நிமித்தமாக வெவ்வெறு ஊர்களுக்கு இடம் மாறும் இந்தியர்கள் உடனே அந்தந்த ஊர் அணிக்கு ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ என அதிரடி ரசிகராகி விடுவார்கள். பின்ன, வேறு ஏதாவது அணிக்கு ஆதரவாக ஏதேனும் சொல்லி அடி வாங்கவா? மண்ட பத்திரம் அல்லவா?

சென்ற வாரம், இந்த விளையாட்டுப் போட்டிக்காக உள்ளூர் மதமார்களை வைத்து ஒரு வீடியோ எடுத்தார்கள். அதில் உள்ளூர் ஹிந்து கோவில் அர்ச்சகரையும் சேர்த்துக் கொண்டார்கள். பிற மதக்குருக்களுடன் அவர் ஆடிய விளையாட்டு, நல்ல ஜாலி ஆட்டம்.

வைகிங்ஸ் அணியின் நிறம் ஊதா என்பதால், இங்கிருக்கும் கட்டிடங்களில் எங்கும் ஊதா நிற விளக்குகள், கொடிகள் மயம். “ஊதா கலரு ரிப்பன்” எனப் பாட்டு போடாதது தான் குறை.  கடைகள் அனைத்திலும் சூப்பர் பவுல் முன்வைத்தே விற்பனைக்கான விளம்பரங்கள் அமைக்கப்படுகின்றன. அணிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்ட டி-சர்ட்கள் போன்றவற்றை விற்பனை செய்யும் ‘திடீர்’ கடைகளையும் காண முடிகிறது.

இங்குள்ள பேக்கரிகளில் கேக்குகள் கால்பந்து போன்ற வடிவத்திலும், ஊதா நிறத்திலும் செய்யப்பட்டு எங்கும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. சூப்பர் பவுல் மூலம் கிடைக்கும் விளம்பரத்தையும், வியாபாரத்தையும் தவற விட யாரும் விரும்பவில்லை என்று நன்கு தெரிகிறது. இந்திய ரெஸ்டாரண்ட்களிலும் உணவு பதார்த்தங்களுக்கு விளையாட்டு வீரர்கள் பெயர்கள் வைக்கப்பட்டுச் சிறப்புப் பஃபேக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முர்ரே மட்டன் பிரியாணி என்பது இதில் ஒரு பதம். ஒட்டவேயில்லை அல்லவா? சாப்பாடாச்சும் நல்லா போட்டால் சரிதான்.

வெள்ளிக்கிழமையில் இருந்து சூப்பர் பவுல் லைவ் என்ற நிகழ்வு மின்னியாபொலிஸ் டவுண்டவுனில் தொடங்கிவுள்ளது. மிஸ்ஸிப்பி ஆற்றைப் பறந்தவாறு கடக்கக்கூடிய ஜிப்லைன் (Zip line) சாகச விளையாட்டு, பாட்டுக் கச்சேரிகள், சறுக்கு விளையாட்டுகள் எனக் கொண்டாட்டத்திற்குக் குறைவில்லை. நகரெங்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஸ்கைவே நேரங்கள் நீடிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு உதவும் வண்ணம் ஆங்காங்கே உதவியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். டவுண்டவுனில் பணிபுரியும் பணியாளர்கள் தேவைப்படுமானால் வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தற்போதைய டிக்கெட் நிலவரம் நான்காயிரத்து சொச்சத்திலிருந்து தொடங்குவதாகத் தெரிகிறது. கார் பார்க்கிங் நூறில் இருந்து கிடைக்கிறது. அடுத்த வாரம் இறுதிப் போட்டி நடக்கும் சமயம் குளிர் வேறு பட்டையைக் கிளப்பப் போவதாகக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. நல்ல வேளை, குளிருக்குப் பழக்கப்பட்ட ஊரைச் சேர்ந்த அணிகளான ஃபிலடெல்ஃபியாவும், நியூ இங்கிலாந்தும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறார்கள். இல்லாவிட்டால், இந்தக் குளிரையும் சேர்த்து ஜெயிக்க வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாயிருக்கும் பிற அணிகள்.

பின்ன, மினசோட்டானா சும்மாவா? Bold North!!

 

  • சரவணகுமரன்  –

 

 

Tags: , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad