\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

அந்த வாரம்

Filed in கதை, வார வெளியீடு by on February 11, 2018 0 Comments

ஞாயிறு காலை பத்து மணியில் இருந்தே சங்கீதா பரபரவென அலைந்து கொண்டிருந்தாள். அவள் மனதில் ஆயிரம் ‘To-Do-’ லிஸ்ட். எல்லா நினைவுகளும் வரும் சனியன்று நடக்கப் போகும் தனது நண்பி கவுசி வீட்டு கிரகப்பிரவேசம் ஃபங்ஷன் போவது பற்றிதான். சங்கீதாவும், கவுசியும் நான்கு வருடங்களாக நெருங்கி பழகி வரும் ஃப்ரண்ட்ஸ். இருவர் குடும்பமும் ப்ளைமவுத் மற்று மேப்பில் க்ரோவ்வில் இருப்பதால் அடிக்கடி குடும்பத்தோடு சந்தித்து வாரயிறுதியில் நாட்களைக் கழிப்பார்கள். இருவருக்கும் இரு ஆண் குழந்தைகள். ஒத்த வயது குழந்தைகள் என்பதாலோ, இருவர் கணவர்களுக்கும் ஒரே மாதிரி வேவ்லெந்த் என்பதாலோ என்னவோ, எல்லா நேரமும் ஒன்றாய் இருந்தார்கள்.

சங்கீதா அவள் கணவன் சுரேஷைப் பார்த்து “அந்த ஃபங்ஷனுக்கு இந்தப் புடவை நல்லாயிருக்குமா? அந்த சுடிதார் நல்லாயிருக்குமா?” என்று கேட்டுக்கொண்டிருந்தாள். சுரேஷும் அவனால் முடிந்த அளவுக்கு ஃபேஷன் எக்ஸ்பர்ட் போல பதிலளித்தான். சங்கீதாவும், கவுசியும் அன்று ஃபோனில் அவரவர் ட்ரஸ் சாய்ஸ் பற்றி பேசிக்கொண்டார்கள். ஆனால், சங்கீதாவுக்கு மனதில் ஒரு சலனம். அவள் மனதில் ஏதோ ஒரு கலக்கம் இந்த ஃபங்ஷனைப் பற்றி; ஏதாவது தப்பாகிவிடுமோ என்ற பயம்.

திங்களன்று சாயந்திரம் குமான் கிளாஸிலிருந்து வந்த தனது எட்டு வயது மகன் சரத்தைப் பார்த்து, ‘என்ன ஏதோ ஒரு மாதிரி இருக்கிறாய்?’ என்றாள் சங்கீதா. அதற்கு சரத், ஈவினிங் க்ளாஸில் விக்னேஷுடன் சண்டை என்றும், இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டதாகவும் கூறினான். சங்கீதாவும் மனதில் இதைத்தான் நேற்றே நினைத்து பயந்தேனோ என்று பரபரவென்று கவுசிக்கு ஃபோன் செய்து, விக்னேஷுக்கு ஒன்றும் ஆகவில்லையே என்று விசாரித்தாள். கவுசி அதெல்லாம் ஒன்று இல்லை என்று கூறி ரொம்ப பேசாமல் ஃபோனை வைத்துவிட்டாள்.

செவ்வாய் சாயந்திரம் சங்கீதா தான் கவுசி வீட்டு ஃபங்ஷனுக்கு வாங்கிய கிஃப்ட்டை சுரேஷிடம் காண்பித்தாள். அதற்கு சுரேஷ் “கிஃப்ட் நல்லா இருக்கு, ஆனால் இது கவுசி டேஸ்ட்க்கு ஒத்து வருமா?” என்று கேட்டதும், ஏதோ இவனுக்கு தன்னைவிட கவுசி பற்றி அதிகம் தெரியும் என்பது போல் காட்டுகிறானே என்று நினைத்தாள். சுரேஷும், கவுசியும் நல்ல ப்ரெண்ட்ஸ்தான். ஆனால் அவ்வப்போது ஏடாகூடமாக ஏதாவது கூறிவிடுவான். சங்கீதா, அது நல்ல கிஃப்ட்தான் என்று தனக்குத்தானே நினைத்துக்கொண்டு அதை நன்றாக கிஃப்ட்ராப் செய்தாள்.

டுத்த நாள் தனது ஃபோனைப் பார்த்த சங்கீதா சட்டென்று கோபமுற்றாள். சுரேஷ் ஒரு ஜோக்கை இரண்டு குடும்பமும் இருக்கும் வாட்ஸ்-அப் குரூப்பிற்கு அனுப்பியிருந்தான். அந்த ஜோக் கொஞ்சம் லிமிட் தாண்டியதாக இருப்பதாக நினைத்தாள். எப்போதும் உடனே பதில் போடும் கவுசி அமைதி காத்தது, சங்கீதாவின் மன உளைச்சலுக்கு மேலும் தூபம் ஏற்றியது.

வெள்ளிக்கிழமை கவுசியிடமிருந்து ஃபோன் வந்தது. சங்கீதா ஃபோனை எடுப்பதற்குள், கவுசி ஃபோனை வைத்துவிட்டாள். திருப்பிக் கூப்பிட்டாலும் ஃபோனை எடுக்கவில்லை. சங்கீதாவின் சின்ன கவலை, இன்று நன்றாக கிளை எடுத்து வளர்ந்து நின்றிருந்தது. சனிக்கிழமை எப்படிப் போகுமோ என்று கலக்கமடைந்தாள்.

னிக்கிழமை, சங்கீதா குடும்பத்தில் அனைவரும் காலையில் கிளம்பி முன்னதாகவே கவுசி வீட்டிற்குச் சென்று விழாவிற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்தார்கள். கவுசியும், அவள் கணவர் குமாரும் எப்பொழுதும் போல பேசினாலும், ஏதோ ஒரு சோகம் அவர்களின் கண்களில் இருப்பது போல் இவள் உணர்ந்தாள். விழா சிறப்பாக இருந்தது. நல்ல தமிழ்நாடு ஸ்டைல் விருந்து. குழந்தைகள் எண்டர்டெய்ன்மெண்ட்டுக்கு பலூன் தோரணங்கள், முக வடிவுகள் செய்யும் நபரை அழைத்திருந்தார்கள். ஜேஜேவென்றிருந்தது வீடு. சாயந்திரம் ஆறு மணி அளவில் ஒவ்வொருவராக விடைபெற, கொஞ்சம் கொஞ்சமாக அமைதி ஆகிக்கொண்டிருந்தது. முடிவில் இந்த இரண்டு குடும்பம் மட்டும் தான் அந்த வீட்டில். சங்கீதாவும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகி, நல்லவேளை ஒன்றும் நடக்கவில்லை  என்று நினைத்தாள். அடுத்த நொடி, குமாரும், கவுசியும் சங்கீதாவையும், சுரேஷையும் ஹாலுக்கு அழைத்து கொஞ்சம் பேசவேண்டும் என்றார்கள். சங்கீதாவுக்கு ஹார்ட் ரேட் எகிறத் தொடங்கியது.

எல்லாம் இந்த சுரேஷால் தான் இருக்கும் என்று  நினைத்தாள். அடுத்த நிமிடம், ஒருவேளை இந்த வாரம் நடந்த குழந்தைகளின் சண்டையாக இருக்குமோ என்று நினைத்தாள். மே பி, நான் ஃபோன் எடுக்காததோ என்று அவள் நினைவில் எல்லாமும் கலந்து ஓடியது.

கவசி ஆரம்பித்தாள் – “நான் நேற்றே உனக்கு ஃபோன் பண்ணிச் சொல்லலாம் என்று நினைத்தேன். பிறகு எதற்கு என்று நேரிலேயே சொல்லிக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்”. அடுத்து குமார், “உங்களிடம் தான் முதல்முறையாக சொல்கிறோம்” என்றான். சங்கீதாவுக்கோ, சீக்கிரம் சொல்லிவிட மாட்டார்களா என்று இருந்தது. குமார் மெதுவாக, ட்ரம்ப்பினால் விசா விதிகள் மாறியதால், தான் மற்றும் குடும்பத்தினர் உடனடியாக இந்தியா போக வேண்டும்படி உள்ளது என்று அந்த அதிர்ச்சித்தகவலைக் கூறினான்.

சங்கீதாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவளது குற்றவாளி கூண்டில் இருந்து தனது கணவன் சுரேஷ், குழந்தை சரத் மற்றும் தன்னையும் சேர்த்து விடுதலை செய்தாள். தனது க்ளோஸ் ப்ரண்டைப் பிரியப் போவது பெரிய கவலை என்றாலும், தான் மற்றும் தனது குடும்பத்தினர் ஒரு மனவருத்தத்தையும் உண்டாக்கவில்லை என்று நினைத்த போது, கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனாள். தன் மனதில், எல்லா கெட்டதையும் யோசித்தவள், எப்படி இந்த மெகா கெட்டதான  ட்ரம்ப் பற்றி யோசிக்கவில்லை என்று நினைத்தாள்!

  • காளமேகம் சுப்ரமணியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad