\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

எதிர்பாராதது…!? (பாகம் 10)

Filed in கதை, வார வெளியீடு by on February 11, 2018 0 Comments

( * பாகம் 9 * )

பெங்களுரு லால் பாக். கூட்டம் அலை மோதியது. சனங்களை ஒதுக்குவதே பிரயத்தனமாய் இருந்தது. எந்தக் காலத்திலும் சினிமா என்றால் இடம் மாறினாலும், தனிப் பிரேமைதான் மக்களுக்கு.

  பத்துப் பன்னிரண்டு ரவுடிகளோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தான் பிரேம்குமார். அவனின் பார்வை பளிச்சென்று அங்கே உதித்த இன்ஸ்பெக்டரின் பக்கம் விழ, லேசாக அதிர்ந்தான். உள்ளுக்குள் மெலிசாக உதறல்.

  ஜீப்பிலிருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர் வர்மா நேராக மரத்தடியை நோக்கி வந்தார். உதவியாளரிடம் காட்சியைக் கவனிக்கச் சொல்லிவிட்டுத் திரும்பிய டைரக்டர் “ஹலோ சார்…” என்றவாறே வரவேற்றார் வர்மாவை.

  “என்ன டைரக்டர் சார்…பந்தோபஸ்து ஏற்பாடெல்லாம் எப்டியிருக்கு? ஐ திங்க் யு ஆர் சாடிஸ்ஃபைட்…”

  “யெஸ்…யெஸ்…ஐ ஆம் ஃபுல்லி சாடிஸ்ஃபைட்… வெரி கைன்ட் ஆஃப் யூ…. வெளி மாநிலத்துல வேலை பார்த்தாலும் தமிழர் பண்பாடுங்கிறதை மறக்காம எங்களுக்கெல்லாம் இவ்வளவு  ஆதரவா இருக்கீங்களே…அதுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்…”

  “நான் என்ன பெரிசா செய்திட்டேன்…மேலதிகாரி ஆர்டர்…அவ்வளவுதானே…என் ட்யூட்டியைச் செய்தேன்…”

“இருந்தாலும் அவுங்ககிட்ட எடுத்துச் சொல்லி உதவியிருக்கீங்களே… இவ்வளவு சின்சியரா யார் செய்வாங்க… உங்கள மாதிரியே நாங்க போற எடத்திலெல்லாம் போலீஸ் எங்களுக்கு உதவிச்சுன்னா எங்க டியூட்டி ரொம்ப சுலபமாயிடும்…உங்களுக்கு எவ்வளவோ பணிகள். அசெம்பிளி வேறே நடக்குது….அங்கேயும் போக வேண்டி வரலாம்…. நாளைக் கழிச்சி ஏதோ பந்த் அறிவிச்சிருக்காங்க போலிருக்கு உங்களுர்ல…அதுக்கு முன்னாடி நாங்க ஷூட்டிங்கை முடிச்சாகணும்…மனசுல அந்த அவசரம் வேறே…”

“அது சரி டைரக்டர் சார்… நம்ம பிரேம்குமார் எப்ப வந்தாரு…?”

  “அவருதான் ட்யூட்டியில் ரொம்ப ப்ராம்ப்ட் ஆச்சே சார்… காலைல ஆறு மணிக்குப் படப்பிடிப்புன்னா அஞ்சுக்கே தனியாளா வந்து உட்கார்ந்துக்கிடுவாராக்கும்…. முந்தியே வந்திட்டாரே…”

  “ஐ. ஸீ….”

  “எதுக்குக் கேட்குறீங்க…?”

  “நத்திங்… முன்னே இருந்த மார்க்கெட் இப்ப இல்லன்னு கேள்விப்பட்டேன்…ஆள் இப்போ அவ்வளவு பிஸியில்லையோ? இருந்தாலும் அவருடைய ட்யூட்டி கான்ஷியஸைப் பார்த்தீங்களா? –“ எதிரே பார்வை போக பேச்சை நிறுத்தினார் இன்ஸ்பெக்டர்.

  இதற்குள் காட்சி முடிந்து பிரேம் குமார் அங்கே வந்து சேர்ந்தான்.

  “ஹலோ இன்ஸ்பெக்டர்… ஹவ் ஆர் யூ…” கேட்டவாறே வந்து உற்சாகமாய்க் கை குலுக்கினான். அந்தக் கையின் இறுக்கம் அதிர வைத்தது.

  “வெரி ஃபைன் மிஸ்டர் பிரேம்…ஏற்பாடெல்லாம் எப்டியிருக்கு? ஆர் யூ ஓ.கே? உங்க சினிமா வாழ்க்கை எப்படிப் போயிட்டிருக்கு? ரொம்ப சீக்கிரமா பெங்களுரு வந்திட்டீங்களாமே? –“ கேள்விகள் போதும் என்பதுபோல் அவனைப் பார்த்தார்.

“ஆமா இன்ஸ்பெக்டர்…மெட்ராசிலே ஷூட்டிங் இல்லே…வேற வேலையும் இல்லே…சரி இங்கே வந்து ரெஸ்ட் எடுப்போமேன்னுதான் புறப்பட்டேன்…”

  “ஐ..ஸீ…எங்கே தங்கியிருக்கீங்க.. வழக்கம்போல் ஹோட்டல் டிரடிஷன்தானே…?”

  “யெஸ்… பெங்களுருவில் அதை விட்டுட்டு வேறே எங்கேயும் நா போறதில்லே… எனக்குப் பிடிச்சமான எடம் அதான்….”

  “ஓகே. மிஸ்டர் பிரேம்… நீங்க ஒங்க ட்யூட்டியைப் பாருங்க…நான் புறப்படுறேன்…”

  “அச்சா…” விடை கொடுத்தான் பிரேம்குமார்.

றுநாள் காலையே பொழுது புலரும் முன்பு  இன்ஸ்பெக்டர் வர்மா மீண்டும் தன்னைத் தேடி தன் அறைக்கே வருவார் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

  “ஹலோ…விஷயம் தெரியுமா? சென்னைல நடிகை நந்தினி கொலையாம்…”

  “அப்படியா…? ஐயையோ….” செயற்கையாய் அதிர்ந்தான் பிரேம்.

  “தெரியாதா?” கேட்டவாறே தினசரியை நீட்டினார்.

  ‘பிரபல நடிகை நந்தினி கொலை…சென்னையில் பயங்கரம்… ‘ முதல் நாள் மாலைப் பேப்பரின் அந்தத் தலைப்புச் செய்தியைப் படித்தபோது அவனை அறியாமல் கைகள் ஆட்டம் கண்டன. அடக்கிக் கொண்டான்.

  “அப்புறம் இன்ஸ்பெக்டர்… எப்படி நடந்திருக்க முடியும் இந்தக் கொலை…? நேத்து சரியான ஒர்க். டைரக்டர் டிரில் வாங்கிட்டாரு… அப்டியே வந்து பொணமா விழுந்தவன்தான். என்னால நிக்கக் கூட முடிலன்னா பார்த்துக்குங்களேன்… பயங்கர ஃபைட் சீன் வேறே… உடம்பு சரியான வலி. நடந்தது எதுவும் தெரியாது எனக்கு.” ரொம்பக் கவலையோடு கேட்டான். அவனின் பதற்றம் அவனுக்கே செயற்கையாய்த் தோன்றியது.

  “உங்களை மாதிரித்தான் நானும்…யாருக்குத் தெரியும்..ஆமாம் மிஸ்டர் பிரேம்…உங்களோட சேர்ந்து சில படங்களில் நடிச்சவங்களாச்சே…அவங்க கேரக்டர் எப்படி?”

  “என்ன இன்ஸ்பெக்டர் நான் அறிமுகப்படுத்திய பொண்ணு அவங்க…இப்டிக் கேட்கிறீங்களே?”

  “சாரி…சும்மா ஒரு பேச்சுக்குத்தான் கேட்டேன்…”

  ”ஷூட்டிங் டயத்துலயே அவுங்க யார் கூடவும் பேச மாட்டாங்க…அவங்ககிட்ட யாரும் தப்பாப் பேச முடியாது… அவ்வளவு நல்ல பொண்ணு… சில பேர் ராங்கிக்காரின்னு சொல்வாங்க… ஆனா எனக்குத் தெரிஞ்சு அப்படி இல்லே… ராங்கிக்காரி இல்லே… ராசிக்காரி….”

  ”ஐ.ஸீ…”

  ”எனி ப்ராப்ளம் இன்ஸ்பெக்டர்? ”

  ”நோ…நோ..ஃபார் இன்ஃபர்மேஷன் கேட்டேன்…ஆனா ஒண்ணு மிஸ்டர் பிரேம்…கொலையாளி ரொம்ப சாமர்த்தியசாலி…”

  ”ஏன் அப்டிச் சொல்றீங்க…?” பிரேம் அடிவயிற்றில் புளியைக் கரைத்தது.

  பாத்ரூம் வருவதுபோல் இருந்தது பிரேமுக்கு. அடக்கிக் கொண்டான்.

   ”கைக்கு கிளவுஸ் மாட்டிக்கிட்டு, ஃபிங்கர் பிரின்ட்ஸ் கூடக் கிடைக்காம… ஆனா ஃபூட் பிரின்ட்ஸ் கிடைக்க வாய்ப்பிருக்குன்னு நினைக்கிறேன்.. ” இன்ஸ்பெக்டர் முகத்தில் அத்தனை தீர்மானம். அது பிரேமை மிரள வைத்தது.

  ”இசிட்…அது சரி…இதெல்லாம் உங்களுக்கு எப்டித் தெரியும்? ”

  ”இன்னிக்கு மாரினிங் நியூஸை வச்சித்தான் சொல்றேன்…”

  ”பேப்பர்,டிவி., படிக்க, பார்க்க, எதுக்கும் இம்மியும்  டைம் இல்ல இன்ஸ்பெக்டர்…பயங்கர டைட்…ஒவ்வொரு நாளைக்கு அப்டித்தான் ஆகிப் போகுது…சரியான அலைச்சலா…. விடாத ஷூட்டிங் வேறே…வேறெதிலும் மைன்ட் இல்லே…..”

  ”நீங்க இருக்கிற பிஸிக்கு உங்களால முடியாதுதான்….” – ஏதோ கேலியாகச் சொன்னதுபோல் உணர்ந்தான் பிரேம். அமைதியாயிருந்தான்.   ”ஆல்ரைட் மிஸ்டர் பிரேம்…நா கிளம்பறேன்…”

  தூக்கம் வராமல் புரண்ட பிரேம்குமார் துள்ளி எழுந்து அமர்ந்தான்.

  ஃபூட் பிரின்ட்ஸ்…ஃபூட் பிரின்ட்ஸ்…கொலை நடந்த இடத்தில் ஃபூட் பிரின்ட்ஸ்…வர்மாவின் வார்த்தைகள் அவனைப் பயமுறுத்த ஆரம்பித்தன. மனதிற்குள் யாரோ பிளேடால் அறுப்பதுபோல் இருந்தது. பயம் பூதாகாரமாய் உருவெடுத்தது. உடம்பெங்கும் வியாபித்து வியர்த்துக் கொட்டியது. தொப்பலாய் உடைகள் கணத்தில் நனைந்து விட்டன.

  எப்படி சாத்தியம்? எப்படி சாத்தியம்?  இருக்கலாம். நம் போதாத வேளைக்கு மாட்டிக் கொண்டாலும் போயிற்று. விபரீதம். எவ்வழியிலேனும்  அழித்துவிட வேண்டும். உடனே செய்தாக வேண்டும் அதையும். அதற்கு முன்னோடியாக சென்னை அறையில் வைத்திருக்கும் ஷூவை முதலில் அகற்றியாக வேண்டும். அதுவே ஒரு பெரிய சாட்சி.

  முடிவு செய்தான். பயணத்தை ரத்து செய்த ஒரு வி.ஐ.பி.யின்  இடத்தைக் கெஞ்சிப்  பிடித்துப் பறந்து சென்னை வந்து சேர்ந்தான். பரபரப்பான கூட்டத்தின் நடுவே புகுந்து புயலாய்க் கடந்து அறையை அடைந்த அந்தக் கணம் –

  வாங்க மிஸ்டர் பிரேம்குமார்…என்ன இவ்வளவு அவசரமா புறப்பட்டு வந்திட்டீங்க? ” – என்று வரவேற்றார் இன்ஸ்பெக்டர் ரஉறீம்.

அவரை அந்த நேரத்தில் சற்றும் எதிர்பார்க்காத பிரேமின் சர்வ நாடியும் ஒரு கணம் ஒடுங்கி மீண்டது.

  ”ஷூவை எடுத்து மறைக்கிறதுக்கா? மல்லேஸ்வரம் இன்ஸ்பெக்டர் வர்மா சொன்னதை நம்பிப் புறப்பட்டு வந்திட்டீங்களா? நாங்க சந்தேகப்பட்டது சரியாத்தான் போச்சு…உங்களை எப்படி திசை திருப்பறதுன்னு ஒரு ப்ளான் போட்டோம்…அது ஒர்க் அவுட் ஆயிடுச்சி…. எதிர்பார்த்தபடியே வந்து நிக்கிறீங்களே? ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுன்னு சொல்வாங்க…அதை அப்படியே நிரூபிச்சிட்டீங்க…!”

  ”என்ன சொல்றீங்க இன்ஸ்பெக்டர்…?” – அவரைப் பார்த்துக் கத்தினான் பிரேம்.

  ”ஒய் ஆர் யூ ஷவுட்டிங்? நாங்க எதிர்பார்த்தது நடந்து போச்சுன்னு சொல்றேன்.அவ்வளவுதான்…ஜஸ்ட் லைக் தட்….எவ்வளவோ கேர்ஃபுல்லாத்தான் இந்தக் கொலையைச் செய்திருக்கீங்க மிஸ்டர் பிரேம்…இத்தனை க்ளவரா நடந்துக்கிட்ட நீங்க கொஞ்சம் இந்தக் காவல்துறையோட திறமையையும் நினைச்சுப் பார்த்திருக்க வேண்டாமா? அதென்ன எங்க மேலே அத்தனை அவநம்பிக்கை உங்களுக்கு? இவுங்களால என்னதான் முடியும்னு நினைச்சிட்டீங்களோ? ” குரலில் மிளிர்ந்த கேலியோடு அதை நீட்டினார் அவர்.

  சதுர வடிவமாக வைரத்துண்டு போல் பளபளத்தது ஒரு பட்டன். மனதிற்குள் புரிந்ததை வெளியில் காட்டிக் கொள்ள விரும்பாமல் பார்த்தான் பிரேம்.

  ”இது எப்படி எங்க கைக்குக் கிடைச்சதுன்னு நினைக்கிறீங்களா? போஸ்ட் மார்ட்டத்துலதான்…நீங்க கொலை செய்தபோது உங்களோட ஏற்பட்ட போராட்டத்துல, என்ன செய்றோம்ங்கிறது தெரியாம மேகலா இதை விழுங்கியிருக்காங்க… சினிமா டெக்னிக் மாதிரி இல்ல? அப்படித்தான். ஆனா இது அவுங்க வயித்துக்குள்ள போனதுதான் உங்க துரதிருஷ்டம்…என்ன? இன்னும் சந்தேகமாயிருக்கா?  ஒரு பட்டனை வச்சு எப்படிடா இவன் நேரா நம்மளைத் தேடி வந்தான்னுதானே? சந்தேகந்தான்… என்னடா ஆயிரத்தெட்டு நடிகைகள் இருக்கிற போது நேரா நம்ம ரூமுக்கு வந்து கதவைத் தட்டியிருக்கானேன்னுதானே யோசிக்கிறீங்க… நீங்க கோலத்துக்குள்ள போனா போலீஸ் தடுக்குக்குள்ள நுழையும்…தெரியுமில்ல? காரணம் இல்லாமலா? இந்த பட்டனைக் கொண்டு வந்து திரும்பவும் உங்க சட்டைல வச்சுத் தைச்சுப் பார்க்கணும்னு  நான் எவ்வளவு அக்கறையா வந்திருக்கேன் பார்த்தீங்களா? ரியலி இடீஸ் பியூட்டி மிஸ்டர் பிரேம்… இத்தனை அழகான பட்டன்களோட இந்தச் சட்டையை எங்கே வாங்கினீங்க? என்ன விழிக்கிறீங்க? நந்தினி வாங்கிக் கொடுத்தாங்களா? அவங்களுக்கும் உங்களுக்கும்தான் பிடிக்கிறதில்லியே…. உங்க ரெண்டு பேருக்குள்ள சண்டைன்னு சொல்றாங்க…?  புரியலேல்ல…? இதோ பாருங்க…” – கூறியவாறே அந்தப் புத்தகத்தை நீட்டினார் இன்ஸ்பெக்டர்.

  அமுதம் என்ற அந்த வாரப்பத்திரிகையில் இப்படி வெளியாகியிருந்தது அந்தச் செய்தி –

   ”பிரேமையான நடிகருக்கு இப்பொழுது மார்க்கெட் அவ்வளவு இல்லையென்று அவரோடு இனி சேர்ந்து நடிப்பதில்லையென முடிவு செய்து விட்டாராம் அந்தப் பிரபல நடிகை. அவரோடு சேர்ந்து வரும் வாய்ப்புக்களையெல்லாம் தட்டிக் கழிக்கிறாராம். விடாப் பிடியாகத் தவிர்க்கிறாராம். ஒரு    காலத்தில் அவரைப் பற்றி பிரேமையோடு உளறித் தள்ளிய இந்த நடிகை இப்பொழுது அவரை எதிரில் கண்டால் கூட கண்டு கொள்வதில்லையாம்.இதனால் பிரேமையான நடிகர் குமுறிக் கொந்தளிக்கிறாராம் அது சரி… இவர்களின் சண்டையைக் கவனிக்கவா நமக்கு நேரம்…”

  ”என்ன மிஸ்டர் பிரேம்… கிசு கிசுச் செய்தி கூட எவ்வளவு… உபயோகப்படுது பார்த்தீங்களா? சந்தேகப்படுறதுன்னு ஆரம்பிச்சா எதுவேணாலும் உபயோகப்படும். எப்படிக் கோர்த்துப் பார்த்து உண்மையைக் கண்டுபிடிக்கிறதுங்கிறதுதான் எங்க வேலை…? ஓ.கே…? இப்போ உங்க சந்தேகமெல்லாம் முழுக்கத் தீர்ந்திருக்குமுன்னு நினைக்கிறேன்…லேட்டாச்சு போகலாமா? ” கேட்டவாறே கம்பீரமாக எழுந்தார் இன்ஸ்பெக்டர் ரஉறீம்

  பிரேதமாய் பின் தொடர்ந்தான் பிரேம்குமார்.

  சொல்லாமல் கொள்ளாமல் ஊருக்கு ரயிலேறியிருந்தார் பஞ்சாபகேசன். இன்னும் ஒருநாள் தாமதித்தால் அந்த ரங்கபாஷ்யம் ஆளைத் தேடிக் கண்டுபிடித்துவிட்டாலும் போச்சு. எது எதையோ நினைத்து, கனவுலகில் மிதந்து,கற்பனைக் குதிரையைப் பறக்கவிட்டு, தான் சென்னையில் காலடி வைக்கப் போக என்னென்னவோ நடந்து விட்டனவே இந்தக் கொஞ்ச நாட்களில் என்பதை நினைத்தபோது அவர் உடம்பு  தவிர்க்க முடியாமல் நடுக்கம் கண்டது.

  நல்லவேளை…அந்தப் பரங்குன்றம் முருகன்தான் தன்னைக் காத்தருளினான்….அன்று பாஷ்யத்தோடு ஸ்டுடியோவுக்குள் நுழைந்து, தான் ஆசையாய்ப் பார்க்க வந்த அந்த தடிப்பயல் பிரேம்குமாரைப் பார்க்காமல் திரும்பியது தனக்குக் கடவுள் அருளிய கிருபை. அவரின் கருணை தன்பால் இருக்கிறது என்பதற்கான அடையாளம்தான். அவனிடம் மாட்டிக் கொள்ளக்கூடாது என்ற பாஷ்யம் அவசரம் அவசரமாகக் கழன்று கொள்ளப் போக, காரை எடுத்துக் கொண்டு பறக்கப் போக…. வந்த வேளை நல்ல வேளை என்பது அவருக்கு மட்டுமல்ல, தனக்கும்தான் என்று இப்போது தோன்றியது. அன்று சந்தித்து ஒட்டிக் கொண்டிருந்தால்? ‘மாம்மோய்…’ என்று பழைய நினைப்பில் அவன் சேர்த்தணைத்துக் கொண்டிருந்தானானால், இன்று தன் கதி அதோ கதியாகி இருக்குமே…?

  ஊரில் வெட்டியாய், தறுதலையாய்த்  திரிந்த பயலுக்கு, கடைசியில் அந்த தறுதலைப்  புத்திதானே ஜெயித்திருக்கிறது என்பதை அவனென்ன பகுத்து உணரவா போகிறான்?

என்னவோ பி.ஏ.வாச் சேர்த்து விடுகிறாராம்…பி.ஆர்.ஓ.ன்னு அதுக்கு பீத்தப் பேரு வேறே…! .அந்தப் பெண்ணிடம் சென்று ஒட்டிக் கொண்டிருந்தால் இன்று தன் கதி என்னவாகியிருக்கும்? சந்தேகப்பட்டு உள்ளே அல்லவா கொண்டு உட்கார்த்தியிருப்பார்கள்? நினைக்கும்போதே மனசு பதறியது, உடம்பு நடுங்கியது பஞ்சுவுக்கு.

பெயருக்கேற்றாற்போல் பஞ்சு போல் மனசை வைத்துக் கொண்டு, நண்பர் தாமுவையும் இழுத்துக் கொண்டு, தெருத் தெருவாய் யாதா யாதா என்று அலைந்தாலும்,  வெறுமே கதை பேசிக் கொண்டு திரிந்தாலும்,மரத்தடியில் உருண்டாலும் எவனும் எதுவும் கேட்கப் போவதில்லை.  அதில்தான்  எத்தனை சொர்க்கம் அடங்கியிருக்கிறது? ஒரு வம்பில்லை, தும்பில்லை….சாப்டியா, சாப்பிடலியா, எத்தனை நாள் பட்டினி? எந்தக் கேள்விக்கும் இடமில்லையே?

இந்த மாதிரிக் கோணப்புத்தி ஏன் வந்தது தனக்கு? அக்கறையாய் அறிவுரை சொன்ன பெண்டாட்டியின் பேச்சைத் துச்சமென மதித்து, சவுக்கைக் கையில் ஏந்திய அந்தப் பாவிப்பயல் பிரேம்குமாரின் உருவத்தையே மனசில் வைத்து, தன் பெண்ணுக்குக் கணக்குப் பண்ணப் பார்த்து புறப்பட்டு வந்தோமே…….எவனாவது இப்படி யோசிப்பானா? என்னவொரு பைத்தியக்காரத்தனம்?

தன் புத்தி ஏனிப்படிக் கோணி வக்கரித்துக்கொண்டு போனது? ‘மலையில் குடியிருக்கும் பரங்குன்றம் முருகா, நாளைக்கே ஊருக்கு வந்து உனக்கு மொட்டை போடுறேம்ப்பா….எனக்கு நல்ல புத்தியைக் கொடுத்தே….பெரிய ஆபத்துலேர்ந்து என்னைக் காப்பாத்தினே….உனக்கு அனந்த கோடி நமஸ்காரம்…..உன் கோயிலைச் சுத்தி எத்தனை தடவை உருண்டாலும் அத்தனையும் மன நிம்மதிதாம்ப்பா….இது புரியாமப் போச்சே இந்த மடப்பயலுக்கு….வெறும் பயலாத் திரிஞ்சாலும் அதுலதான் சுகமிங்கிறதை எனக்குப் புரிய வச்சிட்டப்பா….புரிய வச்சிட்ட….’

  சுற்றி அமர்ந்திருக்கும் சக பயணிகளை மனதில் நினையாமல் கன்னத்தில் பட்டுப் பட்டென்று எம்பெருமான்  முருகக் கடவுளை நினைத்து மாறி மாறிப்  போட்டுக் கொண்டார் பஞ்சாபகேசன். எல்லோரும் ஒன்றும் புரியாமல், இந்தாளுக்கு ஏதும் ஆகிப் போச்சோ…? என்று எண்ணியவாறே அவரையே அதிசயமாயும் பயத்தோடும் பார்த்தார்கள்.

  வலைப் படாதீங்கம்மா… நம்ப பஞ்சுவுக்கு ஒண்ணும் ஆகாது….. பத்திரமாத் திரும்பி வந்துடுவார்….. நாளைக்குக் காலைல கல்லுக் குண்டா உங்க முன்னாடி வந்து நிக்கிறாரா இல்லையா பாருங்கோ….” என்று பஞ்சுவின் மனைவி பவானியைப் பார்த்து ஆறுதலாய்ச் சொல்லிக் கொண்டிருந்தார் தாமோதரன்.

  விமானம், ரயில், பேருந்து, என்று எதிர்பாராத விபத்துக்கள் இந்த உலகத்தில் அவ்வப்போது நடப்பதில்லையா? அதில் மனிதர்கள் பலியாவதில்லையா? பலரும் பிழைத்துப் போவதில்லையா?

அதுபோல் இந்த உலகத்தில் சில மனிதர்களை அவர்களின் அதிர்ஷ்டம் பெருவாரியாய் அலைக்கழிக்கும். சீரழிக்கும். ஆனால் ஆபத்து என்று ஒன்றும் வந்துவிடாது. அப்படியான ராசியுள்ளவர்களாய் சிலர் இருப்பார்கள்.

யாரும் சற்றும் எதிர்பாராத திகில் சம்பவங்களும் சொந்த வாழ்க்கையில் சிலருக்குக்  குறுக்கிட்டுத்தானே போகின்றன?

‘யப்பாடீ….!!! போதுமைய்யா அப்படி ஒண்ணு….!!! இனி ஒரு தடவை எனக்குக் கோடியே கொடுத்தாலும் அந்தப் பக்கம் தலைவச்சுப் படுக்க மாட்டேன்’ என்று இருப்பவர்களை நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். அப்படி அதிர்ஷ்டவசமாய்த் தப்பித்துக் கழன்று வந்த பஞ்சாபகேசனை நாமும்தான்  வாயார, மனதார, வாழ்த்துவோமே…!!     

உஷாதீபன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad