சூப்பர் போல் லைவ்
மின்னியாபொலிஸில் ஃபிப்ரவரி 4ஆம் தேதியன்று சூப்பர் போல் ஃபுட்பால் இறுதிப் போட்டி டௌன்டவுனில் இருக்கும் யூ.எஸ். பேங்க் ஸ்டேடியத்தில் நடைபெறுவதையொட்டி, சூப்பர் போல் ரசிகர்களுக்காக டௌன்டவுன் நிக்கலட் மால் சாலையில் ஜனவரி 26 ஆம் தேதியிலிருந்து, தொடர்ந்து பத்து நாட்களுக்கு “சூப்பர் போல் லைவ்“ என்னும் கண் கவர் கொண்டாட்ட நிகழ்வை மினசோட்டா சூப்பர் போல் பொறுப்பு அமைப்பின் நடத்துகின்றனர்.
தினமும் இசை நிகழ்ச்சிகள், பனிச் சறுக்கு விளையாட்டுகள், ஜஸ் கட்டிச் சிலைகள், பல வகை உணவுகள் என வெளியூரில் இருந்து வரும் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் உள்ளுர்வாசிகளையும் குதூகலப்படுத்தும் அம்சங்கள் பல இங்குள்ளன.
மொத்த டௌன் டவுனும் ஃபுட்பால் ரசிகர் ஜனத்திரளில் மூழ்கப் போகிறது என்று கொடுக்கப்பட்டிருந்த பில்டப் சரியானதாகத் தெரியவில்லை. நிக்கலட் மால் சாலையில் மட்டும் நிறைய மனிதத் தலைகளைக் காண முடிந்தது. அதிலும் பெரும்பான்மை தன்னார்வலர்களும், பாதுகாப்பு அணியினரும். ஸ்கைவே எங்கும் முனைக்கு இரண்டு பேர்கள் நின்றார்கள். ரொம்பவே போர் அடித்திருக்கும். நடக்கையில் ஒரு நொடி நின்று யோசித்தாலும், உடனே ஓடி வந்து ஏதேனும் உதவி வேணுமா என்று கேட்டு கடமையாற்றுகிறார்கள்.
நிக்கலட் மால் சாலையின் மத்தியில் ஓர் இசை மேடை அமைத்து பல்வேறு குழுக்களின் கச்சேரிகள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. குளிர் அடிச்சாலும் சரி, பனி விழுந்தாலும் சரி, “ஜானி“ படத்து ஸ்ரீதேவி போல் பாடிக் கொண்டே இருக்கிறார்கள்.
பொதுமக்கள் ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் ஸ்டேடஸ் கடமைக்காக ஆங்காங்கே நின்று செல்ஃபி எடுத்தவாறே நகர்கிறார்கள். அவர்கள் புகைப்படங்கள் எடுப்பதற்கு வாகாகப் பல விஷயங்களை வழி நெடுக ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
குளிர் மைனஸில் இறங்கி அடிக்கும் என்று இவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருப்பதால், ஆங்காங்கே வெதுமையில் இளைப்பாற வார்மிங் ஸ்டேஷன்கள் அமைத்திருக்கிறார்கள். அதே சமயம், குளிர் இப்படி மைனஸில் இருக்கும் என்பதாலே ஐஸ் கட்டியில் பல சிலைகளைச் செய்து வைத்திருக்கிறார்கள். அவை அனைத்தும் அப்படியே உருகாமல் கல்லாய் நிற்கின்றன. மக்களும் அதன் முன்னால் புகைப்படம் எடுக்க, குளிரைப் பொருட்படுத்தாமல் வரிசையில் நிற்கிறார்கள். தவிர, பனி என்பது மினசோட்டாவின் முக்கிய அம்சம் அல்லவா?
இது போல், நிக்கலட் மால் சாலையின் ஒரு பகுதியைப் பனிச் சறுக்கு மைதானமாக்கி விட்டார்கள். பனியில் மினசோட்டாவினர் என்ன செய்கிறார்கள் என்று இங்கு வரும் மற்ற மாநிலத்தினர் தெரிந்து கொள்ளும் பொருட்டு ஸ்கேட்டிங், ட்யூபிங் என்று இந்தப் பனிப்பாதையைப் பிஸியாக வைத்திருக்கிறார்கள். டௌன் டவுன் ட்ராஃபிக் செல்லும் பாதையில் சிறு தற்காலிக பாலம் அமைத்து, குறுக்கே இந்தப் பனி விளையாட்டுத்தளத்தை உருவாக்கியிருக்கிறார்கள். பொதுமக்களும் பதிவு செய்து கொண்டு, இந்தப் பனி விளையாட்டுகளில் கலந்து கொள்கிறார்கள்.
ஆங்காங்கே சூடாகக் காப்பியும், சில்லென்று பீரும் விற்கிறார்கள். எது அதிகம் விற்பனை ஆகும் என்று அனைவருக்கும் தெரியும். நடமாடும் உணவகங்களில் உணவுப் பரிமாறல் ஒரு பக்கம். வாரத்திற்கு ஒருமுறை இந்த வண்டிகள் டௌன் டவுனுக்கு வருகை தருவதுண்டு. அப்போது என்ன விலை இருக்குமோ, அதைவிட இருமடங்காகத் தற்சமயம் விற்கிறார்கள். அது சரி, பனி விழும்போது தானே, அதை வாரி எடுத்து ஸ்னோமேன் செய்ய முடியும்? இந்திய உணவு விற்கும் ஒரு நடமாடும் உணவகத்தில் தேங்காய்க்குப் பட்டை அடித்துச் சூப்பர் போல் பால் போல் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.
செய்தி நிறுவனங்கள் பெரும்பாலானவை இங்குக் கடை போட்டுச் செய்திகளை லைவ் செய்த வண்ணம் இருக்கிறார்கள். நிக்கலட் மால் சாலையை ஒட்டினாற்போல் இருக்கும் கடைகளில் வழக்கத்திற்கு மாறான நல்ல மக்கள் நடமாட்டத்தைக் காண முடிந்தது. மற்ற இடங்களில் வழக்கம் போல் தான். மாற்றம் ஏதுமில்லை.
உள்ளூர் அணியான வைகிங் ஃபைனல் சென்றிருந்தால், உள்ளூர் மக்களுக்கு இன்னமும் உற்சாகமாக இருந்திருக்கும். அணியை ஊக்குவிக்கிறேன் என்று இன்னமும் கேளிக்கை ஆட்டங்களில் இறங்கியிருப்பார்கள். பங்களிப்பு பன்மடங்காக இருந்திருக்கும். அப்படி இல்லாமல் போனதால், ஊர் கொஞ்சம் அடங்கித்தான் இருக்கிறது.
- சரவணகுமரன்.