\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

பத்மாவத் – திரை விமர்சனம்

மதம் – அரசியல் – சினிமா, இம்மூன்றும் எக்காலத்திலும் இல்லாத வகையில் தற்காலத்தில் ஒரு பெரும் தொடர்போடு செயல்பட்டு வருகிறது. அது இந்த ‘பத்மாவத்’ திரைப்படத்தின் மூலம் மேலும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.

பிரமாண்ட இதிகாசப் படங்களுக்குப் புகழ் பெற்ற ஹிந்திப் பட இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, இந்த முறை கையில் எடுத்துக் கொண்டது, ராஜபுத்திர ராணியான பத்மாவதி பற்றி பதினாறாம் நூற்றாண்டில் மாலிக் முகமது ஜயாஸி என்னும் கவிஞர் எழுதிய ‘பத்மாவத்’ இதிகாசப் படைப்பை. ராணி பத்மாவதியாகத் தீபிகா படுகோன், அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங், ரத்தன் சிங்காக ஷாகித் கபூர் என்று இந்தப் படம் அறிவிக்கப்பட்டதிலிருந்து பிரச்சினை கிளம்பிவிட்டது. எங்கள் வம்சத்து ராணியைத் தவறாகக் காட்டப் போகிறார்கள் என்று கிளம்பிவிட்டார்கள் ராஜபுத்திர வம்சத்தின் மானத்தை நிலைநாட்டுவதற்கு என்றே இருக்கும் கர்னி சேனா என்ற அமைப்பினர்.

படப்பிடிப்புச் சமயத்தில் இருந்தே இயக்குனர் மீது தாக்குதல், நாயகி மூக்கை அறுப்போம் என்று மிரட்டல், படத்தை வெளியிட எதிர்ப்பு என்று இந்த ராஜ வம்சத்தின் பாதுகாவலர்கள் கம்பு சுழற்றத் தொடங்கிவிட்டனர். படத்தில் ராணி பத்மாவதியை தப்பாகக் காட்டப் போகிறார்கள் என்பது இவர்களது புகார். அப்படி எதுவும் இல்லையென படக்குழுவினர் மறுத்த பின்பும், இவர்கள் விடுவதாக இல்லை. இன்னொரு பக்கம், இஸ்லாமியத் தலைவர்கள் முஸ்லீம்களைத் தவறாகக் காட்டுகிறார்கள் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். சரி, படம் எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.

அலாவுதீன் கில்ஜி, தனது மாமா ஜலாலுதீன் கில்ஜியிடம் இருந்து டெல்லி சாம்ராஜ்யத்தைப் பறித்த பின், பிற சாம்ராஜ்யங்களின் மீதும் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்த வண்ணம் இருக்கிறார். இன்னொரு பக்கம், ராஜபுத்திர அரசரான ரத்தன் சிங், பத்மாவதியின் மீது காதல் கொண்டு அவரை ராணியாகத் தன் அரண்மனைக்கு அழைத்து வருகிறார். ராணி பத்மாவதியின் அழகினைப் பற்றி கேள்விப்படும் அலாவூதீன், அதன் காரணமாகச் சித்தூர் சாம்ராஜ்யத்தையும் தன் பிடிக்குள் கொண்டு வர முயல்கிறார். அலாவுதீனை ரத்தன் சிங்கும், பத்மாவதியும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது மிச்சக் கதை. ராணி தன் மானத்தைக் காக்க என்ன செய்தார் என்பது கிளைமாக்ஸ்.

உண்மையில் பத்மாவதி என்ற ராணியே, ராஜபுத்திர அரச வம்ச வரலாற்றில் கிடையாதாம். அப்படி இல்லாத ஒருவரின் புகழைக் காக்க, இத்தனை எதிர்ப்புகள், போராட்டங்கள். அடுத்தது, இந்தப் படத்திலும் அவருடைய மேன்மைக்கு எந்தச் சேதாரமும் உண்டாக்கவில்லை. பெருமைப்படத்தக்க வகையில் தான் அந்தக் கதாபாத்திரத்தைக் காட்டியிருக்கிறார்கள். அவருடைய சுயமரியாதை, வீரம், அறிவாற்றல் எனப் பெருமை சேர்த்திருக்கிறார்கள். அலாவுதீன் கில்ஜியைத்தான் பயங்கரமான வில்லனாகக் காட்டியிருக்கிறார்கள். வரலாற்றில் நிஜமாகவே இடம் பிடித்தவர் என்பதால், வரலாற்று ஆர்வலர்களால் விவாதிக்கப்பட வேண்டியது இந்தப் பாத்திரப் படைப்புதான்.

சரி, இயக்குனர் வரலாற்றுப் படம் எடுக்கவில்லை, ஒரு கவிஞரின் இதிகாசத்தைப் படமாக எடுத்திருக்கிறார் என்பதால் அந்த விவாதமும் எடுபடாது. ஒரு கமர்ஷியல் படத்திற்குத் தேவைப்படும் அம்சங்கள் அனைத்தையும் சேர்த்துப் பிரமாண்டமாக எடுத்திருக்கிறார். பழங்காலச் செட், கிராபிக்ஸ், 3-டி என்று எக்கச்சக்க செலவு செய்தவர்கள் வரலாற்று ஆவணப் பதிவா செய்வார்கள்? அசலைப் பெருக்கத்தான் நினைப்பார்கள். அந்த வகையில் இந்தப் படம் ஒரு புது அனுபவத்தைக் கொடுக்கிறது என்பது உண்மை.

படத்தில் மிரட்டியிருப்பவர் ரன்வீர் கபூர். தனது வெறித்தனமான நடிப்பால் முழுப்படத்திலும் ஆக்ரமித்திருக்கிறார். அடுத்து, தீபிகா படுகோன். மூத்தோருக்கு அடிபணிந்த ராணியாகவும், கணவனை மீட்க செல்லும் வீரமங்கையாகவும் தன் சிறப்பை வெளிக்காட்டியிருக்கிறார். முகபாவத்தில் பெரிய வேறுபாடுகள் காட்டாமல் ஒரே மாதிரி வைத்திருப்பது தான் குறை. இவருக்குக் கிராபிக்ஸில் மேலும் ஒரு கோட்டிங் அடித்துப் பேரழகாக ஆக்கியிருக்கிறார்கள். ஷாகித் கபூர் நிலைமை தான் இதில் பரிதாபமானது. “இவன் எவ்ளோ அடிச்சாலும் தாங்குறான்யா” என்பது போலவே வந்து செல்கிறார். படத்தில் இன்னும் பலர் வருகிறார்கள். பாராட்டும்படியான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். அவர்கள் பெயர் எல்லாம் நமக்குத் தெரியாத காரணத்தால் லூஸில் விடுவோம்.

யூகிக்கக் கூடிய கதை என்பது குறை என்றாலும், அதற்காகச் செயற்கையான வெற்றுத் திருப்பங்கள் இல்லாமல் இருப்பது நல்லதுதான். பிரமாண்டம் என்ற பெயரில் எதுவும் துருத்திக்கொண்டில்லாமல், ஒரு யதார்த்தத்தன்மையுடன் இருப்பது அழகு. அதை 3டியில் காண்பது பேரனுபவத்தைக் கொடுக்கிறது. படத்தின் இசையும் இயக்குனர் பன்சாலி தான் . இசை ஞானம் உள்ளவர் என்பது பின்னணி இசையைக் கேட்கும்போது தெரிகிறது. போர்க்காட்சிகளின் வீரியத்தை அட்டகாசமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அதிலும் மங்கோலிய அரசனின் தலையை ஈட்டியில் ஏந்தியப்படி குதிரையில் ரன்வீர் வரும் காட்சி மிரட்டல்.

வரலாறு தெரிய வேண்டும் என்றோ, வரலாற்றை எடுத்திருக்கிறார்கள் என்றோ நினைக்காமல், ஒரு படமாக மட்டும் பார்க்க சென்றால், பத்மாவத் ஒரு நல்ல அனுபவத்தைக் கொடுக்கும். அதாவது அனுபவிக்கணும். ஆராயக்கூடாது.

இப்படத்தில் வரும் அரசர்களான அலாவுதீன் கில்ஜி மற்றும் ரத்தன் சிங் இருவருமே தாங்கள் வரலாற்றில் எவ்வாறு இடம்பெற வேண்டும் என்பது குறித்துப் பேசுவதாகக் காட்சிகள் வருகின்றன. இந்த அக்கறை தற்காலத்திய அரசியல்வாதிகள் வரை தொடர்கிறது. இவர்கள் இன்னும் ஒருபடி மேலே சென்று, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வரலாற்றையும் மாற்ற நினைக்கிறார்கள். வரலாறு முக்கியம் தான். அது உண்மையாக இருப்பது மிகவும் முக்கியம். கூடவே, ஒரு படைப்பாளி வரலாற்றாசிரியன் இல்லை என்ற புரிதல் இருப்பதும் அவசியம்.

  • சரவணகுமரன்

Tags: ,

Comments (2)

Trackback URL | Comments RSS Feed

  1. Saisubbulakshmi Dakshinamoorthy says:

    Excellent review that too without exaggeration
    Vazhga valamudan…
    Saisubbulakshmi

  2. ssornabharathi says:

    a neet & clean review good, at present communal and religious dominations are violating all things,even politics,cenema and also individual life.ssornabharathi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad