மன்மதனே …!!
தாவணிக் கனவுகளில் மனதில் நுழைந்தவனே
தலையிலே பூச்சூட்டி எனையாட் கொண்டவனே
தனிமையில் தளர்ந்த தருணத்தில் உயிர்த்தவனே
தந்திரத்தால் மனதில் தஞ்சம் அடைந்தவனே..!
மேகக் கூந்தலில் விரலால் கோதியவனே
மேனியில் வேதியியல் மாற்றம் செய்தவனே
வேதனையின் வேஷம் தனைக் களைத்து
வேந்தனாய் மாறி எனை ஆள்பவனே …!
வயக்காட்டில் வம்பு செய்த மன்னவனே
வரப்பில் அத்துமீறி வரம்பு மீறியவனே
வயலில் செங்கமலமாய்ப் பூத்தவளை
வஞ்சனையால் மயக்கி மஞ்சத்தில் சாய்த்தவனே…!
காதலில் எனைக் களவாடிய கள்வனே
காதுமடலில் இதழால் வருடி ஈர்த்தவனே
காந்தக் கண்களால் கட்டி இழுத்தவனே
காற்றை வில்லாய் வளைத்தவனே உனைக்
காதலனாய் இரவின் மடியில் கனாக் கண்டேனடா …!!
என் மன்மதா …!!
-உமையாள்