காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (மார்ச் 2018)
2018 தொடங்கியதில் இருந்து வெளி வந்த படங்களில் உள்ள சிறந்த பாடல்கள் என்று கணக்கிட்டால் குறைவு தான். முன்னணி இசையமைப்பாளர்கள் படங்கள் ஏதும் சொல்லிக் கொள்ளும்படி வரவில்லை. தவிர, கடந்த இரு வாரங்களாகப் படங்கள் எதுவுமே ஸ்ட்ரைக்கால் வெளிவரவில்லை. பார்ப்போம், போகப் போக எப்படிப் போகிறது என்று.
தானா சேர்ந்த கூட்டம் – சொடக்கு மேல சொடக்கு
அனிருத் இசையில் இந்த வருடம் வந்த முதல் படமான இதில் இருந்த பாடல்கள் நன்றாக ஹிட்டடித்தது. முக்கியமாக, இந்த “சொடக்கு மேல சொடக்கு மேல போடுது”. ஒரு பக்கம் இசையில் அனிருத் பட்டையைக் கிளப்பினால், மற்றொரு பக்கம் அந்தோணிதாசன் தனது குரலிலேயே கேட்போரை ஆட்டம் காண வைக்கிறார். பாட்டைப் பிரபலப்படுத்த ஒரு கேஸ் வேறு போடப்பட்டது. அப்புறம் தான் மக்கள் அந்த வரியைக் கவனித்துப் பாடத் துவங்கினர்.
விரட்டி விரட்டி அடிக்கத் தோணுது
வந்து விரட்டி விரட்டி வெளுக்கத் தோணுது
அதிகாரத் திமிர பணக்காரப் பவர
தூக்கிப் போட்டு மிதிக்கத் தோணுது
கலகலப்பு 2 – ஒரு குச்சி ஒரு குல்ஃபி
இதுவரை ஹிப் ஹாப் ஆதியின் இசையில் பாடல் கேட்கும்போது, ஏதோ மிஸ் ஆவது போல இருக்கும். அதிலும் அவர் எல்லாப் பாட்டிலும் வந்து ராப் பாடுவது இன்னும் கடுப்பைக் கிளப்பும். இதில் மெய்ன் ஸ்ட்ரீம் இசைக்கு, முழு ஆர்கஸ்ட்ரேஷனில் மாறியிருப்பதற்கு சுந்தர்.சியின் பங்களிப்பு இருக்குமா என்று தெரியவில்லை. இருந்தால், அவருக்கு நன்றி. பாடல்கள் அனைத்தும் கேட்க நன்றாக உள்ளன. குத்து, ஹிந்துஸ்தானி, கர்னாடிக், கானா எல்லா வகையில் அடி பின்னியிருக்கிறார். குச்சி, குல்ஃபி, செல்ஃபி எனப் பாடல் வரிகள் செம சிம்பிள். ஜாலிலோ ஜிம்கானா ரகம்.
உன்கூட தான் போட்டோ புடிச்சேன் டச்சு ஃபோன்ல
டச்சு பண்ணி இச்சு குடுப்பேன் ஹனிமூன்ல
நிமிர் – நெஞ்சில் மாமழை
உதயநிதி நடிக்க, ப்ரியதர்ஷன் ஒரு படம் இயக்குவார் என யாரும் எண்ணியிருக்க மாட்டார்கள். அதுவும் நடந்தது. இம்மாதிரிப் படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டுவதற்கு உதயநிதிக்குப் பாராட்டுகள். ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தின் ரீ-மேக்கான இப்படத்திற்கு இசை – கன்னட இசையமைப்பாளர் அஜனேஷ் லோக்நாத்தும் தர்புகா சிவாவும். அஜனேஷ் இசையமைத்த “நெஞ்சில் மாமழை” பாடலும், “எப்போதும் உன்மேல் ஞாபகம்” பாடலும் மனதை வருடும் பாடல்கள். இவ்விரண்டு பாடல்களை எழுதியது கவிஞர் தாமரை.
சொல்லப் போனால் என் நாட்களை
வண்ணம் பூசித் தந்தவளும் நீதான்
துள்ளல் இல்லா என் பார்வையில்
தூண்டில் மீனாய் வந்தவளும் நீதான்
குலேபகாவலி – குலேபா
பிரபுதேவாவுக்கு இது ரீ-என்ட்ரி காலம். இருந்தாலும், அவரது ஆட்டத்துக்குக் குறைச்சலில்லை. ரஹ்மான் இசையில் ஆடத் தொடங்கியவர், இன்று விவேக்-மெர்வின் காலம் வரை அதே எனர்ஜியுடன் ஆடி வருகிறார். விவேக்கும் மெர்வினும் அனிருத்துடன் இசைக்குழுவில் இருந்தவர்கள். இப்படத்தில் குலேபா பாடலை அனிருத் தான் பாடியிருக்கிறார். குழந்தைகள் மத்தியில் சூப்பர் ஹிட் இப்பாடல்.
ஏய் விக்கலு விக்கலு விக்கலு வந்தா
தண்ணிய குடிச்சிக்கம்மா!!
சிக்கலு சிக்கலு சிக்கலுனக்கா
ஓரமா ஒத்திம்மா!!
சவரக்கத்தி – தங்கக்கத்தி
இயக்குனர் மிஷ்கின் போல, நடிகர் மிஷ்கின் போலப் பாடகர் மிஷ்கினும் நம்மை ரசிக்க வைப்பவர். குரலிலோ, பாடுவதிலோ, பெரிய வித்தைகள் ஏதும் காட்டாமல் அவர் பாடுவது சிம்பிளாகவும், சிறப்பாகவும் இருக்கும். இதில் அரோல் கரோலி இசையில் அவர் பாடியிருக்கும் ‘தங்கக்கத்தி’ பாடலும் அப்படி ஒன்று தான்.
அறிவக் கொடஞ்சு வேர் கண்டோம்
எமனத் தொறத்தி ஓட விட்டோம்
அன்பத் தான் தொலைச்சோமே
வாழத் தான் மறந்தோமே
- சரவணகுமரன்