தேனீ அறியாத தேன்
அமெரிக்க ஊத்தப்பமான பேன் கேக்கில் (Pan Cake) தொட்டுக்கொள்ள அமெரிக்கர்கள் பயன்படுத்துவது மேப்பிள் சிரப் (Maple Syrup) எனப்படும் ஒரு தேன் போன்ற சமாச்சாரத்தை. சுவையாக, தேன் போன்ற தித்திப்புடன் இருக்கும். இது தேனீயிடம் இருந்து பிடுங்கிய தேன் இல்லை. மேப்பிள் என்ற மரத்திடமிருந்து எடுக்கும் தேன்.
குளிர் பிரதேசங்களில் இருப்பவர்கள் மேப்பிள் மரத்தைப் பற்றி அறிந்திருப்பார்கள். மிகவும் அழகாக இலைகளைக் கொண்ட மரம். கனடா நாட்டின் சின்னமாக, அதிகாரப்பூர்வ அரசாங்கச் சின்னமாக மட்டுமில்லாமல், கனடா நாட்டின் பெரும்பாலான நிறுவன சின்னங்களிலும் (Logo) இந்த மேப்பிள் இலை இடம்பெற்றிருக்கும். இலையுதிர் காலத்தில் இந்த இலை சூழ்ந்திருக்கும் இடங்களிலெல்லாம் ஃபோட்டோகிராபர்கள் சுற்றி வளைத்திருப்பார்கள். வண்ணங்களை மாற்றியபடி அது காட்டும் மேஜிக் ரசிக்க வைக்கும்.
இப்படிபட்ட பெருமை வாய்ந்த இலைகளைக் கொண்ட மேப்பிள் மரத்தில் தான் சுவையான மேப்பிள் சிரப் கிடைக்கிறது. பனிக்காலத்திலிருந்து வசந்தக்காலத்திற்கு மாற்றமடையும் காலக்கட்டத்தில் இந்த மரங்களிலிருந்து மேப்பிள் சப் (Maple Sap) எனப்படும் இனிப்பான நீர் எடுக்கப்படுகிறது. பனிக்காலத்தில் வேர்களிலும், மரத்தின் அடிப்பகுதிகளிலும் சேகரிக்கப்படும் இந்த ஸ்டார்ச் திரவம், தட்பநிலை மாறும் சமயம், மரத்தின் மேல் பகுதிக்கு இடம் மாறும். அச்சமயம் மரத்தின் மத்தியில் பட்டையினுள் ஒரு சிறு துளை போட்டால், இத்திரவம் வெளியே சொட்டு விடத் தொடங்கும். அப்படிச் சொட்டுவிடும் இந்த மேப்பிள் நீரைச் சேகரித்து, மிதமான சூட்டில் தொடர்ந்து மணிக்கணக்கில் கொதிக்கவிட்டால், சுவையான மேப்பிள் சிரப் தயாராகிவிடும். நம்மூர் பதநீர் போன்றது தான் இது. கருப்பட்டி, வெல்லம் தயாரிப்பது போல், இதில் இருந்து மேப்பிள் சுகர் தயாரிப்பார்கள்.
40-50 கேலன் மேப்பிள் நீரைக் காய்ச்சத் தொடங்கினால், அது பல மணி நேரங்களுக்குப் பிறகு, 1 கேலன் மேப்பிள் தேனாகக் கிடைக்கும். இப்படிப் பல மணி நேர கடும் உழைப்பிற்குப் பின் கிடைக்கும் மேப்பிள் சிரப் சிறப்பாக இருப்பதில் ஆச்சரியமேதுமில்லை. மேப்பிள் சிரப் தயாரிக்கும் நுட்பத்தைக் காணும் வாய்ப்பு கிடைத்துவிட்டால், மேப்பிள் சிரப்பை சுவைக்கும் ஆர்வம் ஏற்பட்டு, பின்பு அதன் சுவைக்கும் ரசிகராக மாறிவிடும் வாய்ப்பு நிறைய உண்டு. பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இப்படி மேப்பிள் சிரப் எடுக்கும் வழக்கமிருந்தாலும், கால ஓட்டத்தில் அதை மரத்தில் இருந்து எடுப்பதிலும், காய்ப்பதிலும் முன்னேற்றங்கள் பல வந்துள்ளன. காய்க்கும் முறைக்கு ஏற்ப, சிரப் நிறமும் சுவையும் மாறும். அதற்கு ஏற்ப சிரப்பின் தரத்தை நிர்ணயிக்கிறார்கள்.
கடைகளில் பேன் கேக் சிரப் என்று விற்பவை எல்லாம் மேப்பிள் சிரப் அல்ல. சோளச் சிரப் (High Fructose Corn Syrup) அதிகமாகச் சேர்க்கப்பட்ட பேன் கேக் சிரப்புகள் பல மார்க்கெட்டில் மலிவான விலையில் கிடைக்கும். நயமிக்க மேப்பிள் சிரப் தான் வேண்டும் என்றால் கவனித்து வாங்க வேண்டும். கலப்படம் இல்லாத மேப்பிள் சிரப் என்றால், அளவும் குறைவாக இருக்கும். விலையும் சற்று அதிகமாக இருக்கும்.
பேன் கேக், ப்ரெட் என இங்குள்ள உணவில் மட்டுமில்லாமல், இட்லி, தோசை போன்ற நம்மூர் ஐட்டங்களுக்கும் மேப்பிள் சிரப் நன்றாக இருக்கும். கேக், குக்கி என மேப்பிள் சிரப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் தின்பண்டங்கள் பல இங்குண்டு.
இதுவரை மேப்பிள் சிரப் சுவைத்ததில்லை என்றால், அடுத்த முறை கடைக்குச் செல்லும்போது மேப்பிள் சிரப் வாங்கிச் சுவைத்துப்பாருங்கள். தேனீ அறியாத இந்தத் தேன் உங்களுக்குப் பிடிக்கும்.
- சரவணகுமரன்.
Tags: maple syrup, மேப்பிள், மேப்பிள் சிரப்