அம்மா
தன்னகத்தே இன்னும் ஓருயிராய்
தவப்புதல் கொண்டு
பெண்ணகத்தே உண்டான
பெருமிதம் கொண்டு
கண்ணகத்தே காக்கின்ற
இமைபோல என்னை
உன்னகத்தே காத்தருளினாய்!
கால்பதிவுகள் முதலில் உன்
கருவறையில் தொடங்கி உன்னை
உதைக்கும் போதிலும்
கண்ணே! மணியே என்றென்னை
தடவிக் கொடுத்து
கதைகள் பேசி
மொழி பயிற்றுவித்து
விதையிட்ட நற்செயல் யாவும்
உன் கருவறையிலேயே
தொடங்கிவிட்டாய்!
வலிமை சேர்த்து
வலியைத் தாங்கி என்
இதயத்தைத் தனியாய்
இயங்க வைத்தாய்!
நடைபயிலும் போதெல்லாம்
நான் பிடிக்கும் உன் விரல்கள்
பசியாறும் வேளையெனில்
அமுதூட்டும் உன் கரங்கள்!
கடுங்குளிர் காலங்களில்
உன் வெப்பத்தில் நான் உறங்கிய காலங்களை
இன்று நினைக்கையில் கண்களில்
கலங்கிய நீர் கோலங்கள்!
எதுக்கென நானழுதேனென
எவருமே அறியாதிருந்திட
கணப்பொழுதில் என் வலியறிந்து
பக்குவமாய்ப் பார்த்திருந்தாய்
இவ்வுலகைக் காண என் விழிகளுக்கு
இமையாய் நீ இருந்தாய்!
அன்னையென்றால் ஒருவரல்ல
தெய்வங்கள் வணங்கும் பிறவியன்றோ!
அவர்தம் பெருமை
யாவரும் அறிந்ததன்றோ!
அன்னையே உன்னையெண்ணி நான்
பேரின்பம் கொள்கின்றேன்.
ந. ஜெகதீஸ்வரன்
Awesome lines Jag, every lines superb