\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

ஸ்டெர்லைட்டை ஏன் மூட வேண்டும்?

ஸ்டெர்லைட் நிறுவனம் 1993 இல் தாமிர உற்பத்தி தொழிற்சாலையைத் தூத்துக்குடியில் அமைக்கப்போவதாகச் செய்திகள் வந்த சமயத்திலிருந்தே, தூத்துக்குடியில் போராட்டங்கள் தொடங்கிவிட்டன. அச்சமயத்தில் தூத்துக்குடியில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த என்னைப் போன்றவர்கள் தொடர் பேரணி போன்ற போராட்டங்களில் கலந்துகொண்டோம். உள்ளூர் பொதுமக்களின் சம்மதம் இல்லாமல், மாநில அரசின் ஆதரவைப் பெற்று 1996இல், மக்களின் பாதுகாப்பை மண்ணுக்குள் புதைத்துவிட்டு, தனது உற்பத்தியைத் தொடங்கியது ஸ்டெர்லைட் தொழிற்சாலை. இன்று இந்தியாவின் முன்னணி தாமிரத்தொழிற்சாலை என்ற நிலையில், ராட்சத உற்பத்தியைக் கொட்டிக்கொண்டிருக்கிறது இந்நிறுவனம். அதன் பாதிப்பு கண்கூடாக உள்ளூரில் தெரிந்தாலும், அதைக் கண்டுக்கொள்ளாமல் அடுத்து உலகின் பெரிய தொழிற்சாலையாக உருவெடுப்பதற்கான ஏற்பாடுகளை இவ்வாண்டு தொடக்கத்தில் தொடங்கிவிட்டது.

இந்நிலையை எதிர்த்து, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் அமைந்திருக்கும் குமரெட்டியாபுரத்தில் தொடங்கிய போராட்ட நெருப்பு, இன்று உலகமெங்கும் தமிழர்கள் வசிக்கும் நகரங்களில் பற்றிக்கொண்டு வருகிறது. சென்ற வாரம் மினசோட்டா மாமன்றத்திற்கு எதிரே நடந்த அடையாள எதிர்ப்புப் போராட்டத்தில் இங்கே வசிக்கும் தமிழர்கள் குடும்பத்துடன் கலந்துக்கொண்டனர். அடுத்த தலைமுறையைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் இதன் பாதிப்புகள் கொண்டு செல்லப்பட்டு, அவர்களும் எதிர்ப்புக் கோஷங்கள் எழுப்பினர். இப்படித் தலைமுறை கடந்து, இந்தப் போராட்டங்கள் தொடர்கின்றன.

ஸ்டெர்லைட் தொடங்கியதிலிருந்து சர்ச்சைகள் தொடந்த வண்ணம் உள்ளன. பலமுறை இந்த நிறுவனம் இழுத்து மூடப்பட்டு உள்ளது. ஆனாலும், அரசு இயந்திரத்தைச் சமாளித்து, சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்திக்கொண்டு, மீண்டும் மீண்டும் திறக்கப்பட்டு, உற்பத்தியைத் தொடர்ந்தவண்ணம், தனது லாபத்தைக் கூட்டியவண்ணம் உள்ளது.

தாமிரம் (அ) செப்பு (Copper) என்பது நமது அன்றாடப் பயன்பாட்டில் ஆயிரம் காலமாக உள்ள ஒரு உலோகம். அதை உற்பத்தி செய்ய  பல தொடர் அடுக்குச் செயல்முறைகள் உள்ளன. தாதுப்பொருட்கள் நிலத்தில் இருந்து எடுக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு, தேவைப்படும் செப்பை மட்டும் அதிலிருக்கும் பிற தாதுக்களுடனிருந்து பிரித்தெடுத்து, செப்பைப் பயன்பாட்டுக்கு ஏற்ப மேம்படுத்துகிறார்கள். இந்த உற்பத்தியில் உருவாகும் சல்பர் டை ஆக்சைட் (Sulphur Dioxide) காற்றில் திறந்துவிடப்படுகிறது. தேவைப்படாத இரும்பு தாதுக்கள் மண்ணில் கலக்கிறது. பிற பயன்பாட்டுக்குத் தேவைப்படும், சல்ப்யூரிக் ஆசிட் (Sulphuric acid), அதன் உற்பத்தி நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது. கெமிஸ்டரி லேப்பில் சல்பர் டைஆக்சைட், சல்ப்யூரிக் ஆசிட் போன்றவற்றுடன் வேலை செய்தவர்களுக்கு, அதன் பாதிப்பு பற்றி உடனே புரியும். தோலில் பட்டால் எரியும், கண் எரிச்சல் ஏற்படும், உட்கொண்டால் குடலில் ஓட்டை விழும். இந்த அனுபவங்கள் எல்லாம் ஸ்டெர்லைட் தொழிற்சாலையைச் சுற்றி இருக்கும் மக்களுக்குச் சகஜம். 2013இல் ஒரு மார்ச் மாத துன்ப தினத்தில் தூத்துக்குடி மக்கள் அனைவரும் இந்த அவல அனுபவத்தைப் பெற்றனர். கண் எரிச்சல், மூச்சு முட்டல் என பாதிப்புகள் ஏராளம். காரணம் – ஸ்டெர்லைட்டிலிருந்து பெரிதளவில் திறந்து விடப்பட்ட சல்பர் டைஆக்சைட்.

ஸ்டெர்லைட் நிறுவனத்தைக் கேள்வி கேட்டால் அது என்றும் அசைந்துக்கொடுப்பதில்லை. பாதிப்பு எங்கள் நிறுவனத்தால் என்றால் அதற்குச் சான்று கொடு என்று மக்களைக் கேட்கும் அது. இந்தக் குயுக்த தந்திரத்தைத் தான் பல கார்பரேட் நிறுவனங்களும் பல்லாண்டுகளாகப் பயன்படுத்தி வருகின்றன. குளிர்பானத்தால் உடல் நலக்கேடு ஏற்படுகிறது என்று எதிர்த்தால், சான்று கொண்டு வா என்று சொல்லிவிடுவார்கள். இதற்காக ஆராய்ச்சிகள் நடத்தி முடிவுகள் எடுத்துச் செல்லும் வரை, அவர்கள் தொழில் மக்கள் நலனுக்குப் பாதிப்புடன் நடக்கும். முடிவுகள் வந்தவுடன் தங்கள் தயாரிப்பில் சிறு மாற்றங்கள் கொண்டு வந்து தொடர்வார்கள். பிறகு, ஒரு பத்தாண்டுகள் அதில் என்ன பாதிப்பு என்று ஆராய்ச்சிகள் நடக்கும். அவர்கள் தொழில் அடுத்தப் பாதிப்புடன் தொடரும். 1984 இல் 15000 மக்கள் இறந்த போபால் சம்பவத்திற்கே, அந்தத் தொழிற்சாலையின் தாய் நிறுவனமான டவ் (Dow) பொறுப்பெடுத்துக்கொள்ளவில்லை.

2008 இல் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியால் நடத்தப்பட்ட ஆய்வில், ஸ்டெர்லைட்டின் பாதிப்பு சான்றுடன் நிறுவப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் தொழிற்சாலை பக்கமிருக்கும் மக்களின் உடல் நிலை, ஏனைய பகுதியில் இருக்கும் மக்களின் உடல் நிலையுடன் ஒப்பிடப்பட்டு அவர்கள் உடலில் இருக்கும் பாதிப்புகள் பற்றிக் கூறப்பட்டு உள்ளது. இத்தனைக்கும் அச்சமயம் ஸ்டெர்லைட்டின் உற்பத்தி இப்போது உள்ள அளவை விட மிகக் குறைவு. அடுத்தக்கட்டமாக, உற்பத்தியை நான்கு மடங்காகக் கூட்டப் போகிறார்களாம். இதற்கு விலையாகத் தூத்துக்குடி மக்களின் உயிரும், உடல் நலனும் சமரசம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட்டாலும், அதன் தாய் நிறுவனமான வேதாந்தாவாலும் தூத்துக்குடி மட்டும் பாதிக்கப்படவில்லை. 2009இல் சத்தீஸ்கரில் உள்ள ஒரு தொழிற்சாலையின் சிம்னி இடிந்துவிழுந்து, 41 பேர் இறந்தனர். இந்தச் சம்பவத்தை மறைத்து, வேதாந்தா பெற்றிருந்த பாதுகாப்பு விருதுகள் அனைத்தையும் இச்செய்தி அறிந்து, ப்ரிட்டிஷ் பாதுகாப்புக் கழகம் (British Safety Council) உடனே திரும்பப் பெற்றுக்கொண்டது. 2010இல் ஒரிசாவின் இயற்கை வளங்களைச் சூறையாடி அலுமினிய உற்பத்தி செய்ய இருந்ததற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. வேதாந்தா நிறுவனத்தின் சுற்றுச்சூழல் சூறையாடல் இந்தியாவிற்கு மட்டும் உட்பட்டதல்ல. சென்ற வருடம் 2017இல் ஜாம்பியா நாட்டின் (Zambia) கிராமத்துவாசிகள், அவர்கள் கிராமத்தில் வேதாந்தாவின் தாமிர உற்பத்தி தொழிற்சாலை ஏற்படுத்தும் மாசு சீர்கேட்டை எதிர்த்து லண்டன் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் வெற்றிப்பெற்றனர்.

இப்படித் தொடர்ந்து ஸ்டெர்லைட்டும், வேதாந்தாவும் சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்காக எதிர்க்கப்பட்டும், தண்டிக்கப்பட்டும் வந்தாலும், அவர்களது சீர்கேடுகள் நின்றபாடில்லை. தாமிரம், அலுமினியம் போன்ற உலோகங்கள் மக்களின் பயன்பாட்டிற்குத் தேவை, அதன் உற்பத்தி அவசியம்தான் என்றாலும், அதற்கு விலையாகச் சுற்றுச்சூழல் நலனையும், பொது மக்களின் உடல் நலத்தையும் கொடுக்க முடியாது. சுற்றுச்சூழலுக்கும், மக்களுக்கும் பாதிப்பு இல்லா பகுதிகளுக்கு இவ்வகைத் தொழிற்சாலைகள் கொண்டு செல்லப்பட வேண்டும். பாதுகாப்பு சார்ந்த நிர்வாகம் கண்டிப்புடன் செயல்படவேண்டும். இவற்றை அரசாங்கமும், தொழில் நிறுவனங்களும் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

  • சரவணகுமரன்.

 

ஸ்டெர்லைட் குறித்த மேலும் தகவலுக்குக் கீழுள்ள இணைப்புகளை வாசிக்கவும்.

 

https://en.wikipedia.org/wiki/Sterlite_Industries

https://www.theguardian.com/business/2010/sep/29/vedanta-court-shuts-down-copper-smelter

https://www.thenewsminute.com/article/sterlite-here-s-proof-how-copper-plant-impacts-health-thoothukudi-people-78772

https://scroll.in/article/874441/every-house-has-a-sick-person-why-people-in-tuticorin-are-opposing-vedantas-copper-smelter

https://www.lusakatimes.com/2017/10/14/zambian-villagers-win-right-sue-vedanta-english-courts/

https://www.theguardian.com/business/2010/aug/29/vedanta-safety-awards-stripped

 

Tags: , , , ,

Comments (2)

Trackback URL | Comments RSS Feed

  1. சுந்தரமூர்த்தி says:

    அருமை சரவணக்குமரன்!

  2. Murthy says:

    Is there any study report from Govt of India or Tamil Nadu? What are the measures proposed by Pollution control boards? Is there any court case update available? I am looking to update in detail. Thanks folks.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad