அமெரிக்கத் தியேட்டர்கள் எப்படி?
தயாரிப்பாளர்கள், தியேட்டர் ஓனர்கள் மற்றும் டிஜிட்டல் விநியோகிப்பு நிறுவனம் ஆகியவற்றிற்கு இடையேயான முட்டல் மோதலினால் 47 நாட்களாக நீடித்து வந்த தமிழ் திரையுலகின் போராட்டம் ஒருவழியாகக் கடந்த வாரம் முடிவுக்கு வந்துள்ளது. திரையிடலுக்கான கட்டணத்தைக் குறைக்கச் சொன்னது தயாரிப்பாளர்கள் சங்கம். திரையிடல் கட்டணத்தைக் குறைப்பதைவிட, நடிகர்கள் சம்பளத்தைக் குறைக்கட்டும் என்பது திரையரங்குகள் வாதம். முதலில் கட்டணத்தைக் குறைக்க மறுத்து, அதற்குரியக் காரணத்தைக் கூறிய க்யூப் நிறுவனம், தற்போது கட்டணத்தைச் சில காலத்திற்கு ஒரளவுக்குக் குறைத்து அறிவித்துள்ளது.
திரையரங்கு கட்டணங்களைச் சீரமைப்பது குறித்து ரசிகர்கள் பலகாலமாகக் கூறிவந்தனர். தற்போது தயாரிப்பாளர்களே, இது குறித்து எதிர்ப்பு தெரிவித்து, முடிவில் அரசாங்கமும் தலையிட்டு திரையரங்கு வசூலைக் கணினி மூலம் முறைப்படுத்தி வெளிப்படையாக தெரிவிக்க ஏற்பாடு செய்துள்ளனர். திரையரங்கு சங்கம் இதற்குச் சில மாதகால அவகாசம் கேட்டுள்ளது. மக்கள், தயாரிப்பாளர்கள், அரசாங்கம் கேட்டுள்ளபடி, திரையரங்குக் கட்டணத்தை முறைப்படுத்தி, வசூல் வெளிப்படையாக இருக்கும் வண்ணம் கணினிமயமாக்கினால், அது கண்டிப்பாகப் பல மாற்றங்களைக் கொண்டு வரும். படத்தின் வசூலைப் பற்றி தயாரிப்பாளர்களும், ரசிகர்களும் ஹேஷ்யங்களாக ட்விட்டரில் அறிவித்துவரும் நிலை மாறும். உண்மையான வசூல் நிலவரம் அனைவருக்கும் தெரியும். அதற்கேற்றாற் போல் நடிகர்களும் தங்களது சம்பளத்தைக் குறைக்க முன் வரலாம். அரசாங்கத்திற்கும் சரியான வரி செல்லும். மக்களும் டிக்கெட்டுக்குத் தாறுமாறான விலை கொடுக்கத் தேவை இருக்காது. இது எல்லாம் அனுமானம் தான். நிஜத்தில் என்னவாகும் என்று இப்போது சொல்ல முடியாது. நேர்மை இருக்கும் இடத்தில் நன்மை நிகழும்.
அமெரிக்காவில் காம்ஸ்கோர் (ComScore) என்ற நிறுவனம், பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை செய்தி ஊடகங்களுக்கு மட்டுமில்லாமல், தயாரிப்பாளர்களுக்கும் தெரிவிக்கிறது. வசூல் நிலவரத்தைத் திரையரங்குகள், டிக்கெட் விற்கும் இணையத்தளங்களிலிருந்து சேகரித்து, பிரசூரிப்பது தான் இந்த நிறுவனத்தின் வேலையே. புதுப்படங்கள் வெளியாகும் அனைத்து திரையரங்குகளும் இணையம் மூலம் டிக்கெட் விற்பனை செய்வதால், விற்பனை கணக்கீடு செய்வது பெரிய வித்தை இல்லை.
அமெரிக்காவில் கிட்டதட்ட 6000 திரையரங்குகளும், அதில் 40,000 அளவிலான திரைகளும் உள்ளன. இதில் பாதியை நிர்வகிப்பது ஏ.எம்.சி., ரீகல், சினிமார்க், சினிபொலீஸ் ஆகிய நான்கு திரையரங்கச் சங்கிலி நிறுவனங்கள். டிக்கெட்டை இவர்களது இணையத்தளத்திலோ, அல்லது ஃபேன்டாங்கோ (Fandango) போன்ற டிக்கெட் விற்பனைத்தளத்திலோ ரசிகர்கள் வாங்குவதால், விற்பனைக்கணக்குகள் அனைத்தும் இணையத்தில் பதிவாகிவிடும். தியேட்டர்களிலும் கணினிகள் இல்லாமல் இருப்பதில்லை. இதனால், தகவல் சேகரிப்பு விஷயங்கள் சுலபமாகிறது. இதில் மோசடி செய்ய முடியாது என்று சொல்லவரவில்லை. ஆனால், இந்தத் தகவல்களைப் பெற யாரையும் சார்ந்து இல்லாமல், நிபுணத்துவமுள்ள மூன்றாம் தரப்பிடமிருந்து பெறுவதால், நம்பகத்தன்மை அதிகமாகவுள்ளது சரியான தகவல் கிடைப்பதே பிரச்சினை என்ற நிலை இங்கில்லை.
பொழுதுபோக்கு அம்சங்கள் வீட்டை நோக்கி வருவதால், தியேட்டருக்கான ரசிகர் வருகை உலக அளவில் குறையத்தான் செய்கிறது. அதற்காக டிக்கெட்டை ப்ளாக்கில் விற்பது, கணக்கை குறைத்து காட்டி வரிக்கட்டாமல் தவிர்ப்பது, டிக்கெட் விலையைத் தாறுமாறுமாக விற்பது போன்றவை அமெரிக்காவில் நடைபெறுவதில்லை. மாறாக, ரசிகர் வருகையைக் கூட்டுவதற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்று யோசிக்கிறார்கள்; அதற்கேற்ப திட்டமிடுகிறார்கள்.
அமெரிக்காவிலும் தியேட்டர் டிக்கெட் விலை உயர்ந்துகொண்டு தான் வருகிறது. தற்போது அமெரிக்கத் திரையரங்குகளில் சராசரி டிக்கெட் விலை ஒன்பது டாலருக்கு சிறிது குறைவாக இருக்கிறது. இருபது வருடங்களுக்கு முன்பு, இது ஐந்து டாலராக இருந்தது. கவுண்டரை மூடிவிட்டு, தியேட்டர்க்காரர்களே டம்மி டிக்கெட் விற்பதில்லை. முதல் நாள், முதல் வாரம் என்றெல்லாம் டிக்கெட் விலை மாறுவதில்லை. ஐமாக்ஸ் என்றால் ஒரு விலை, 3டி என்றால் ஒரு விலை, 2டி என்றால் ஒரு விலை எனத் திரையின் தரத்திற்கு ஏற்ப தான் விலை மாறுபடும்.
வார நாட்களில் கூட்டம் குறைவாகவும், வாரயிறுதியில் அதிகமாகவும் இருப்பது தான் அமெரிக்காவில் உள்ள வழக்கமும் கூட. இதற்காகவே, வார மத்தியில் ஒருநாள் தள்ளுபடி விலையில் டிக்கெட் கொடுப்பார்கள். அல்லது, வார நாட்களில் காலை மற்றும் மதியக் காட்சிகளுக்கான டிக்கெட்டுகளைச் சலுகை கட்டணத்தில் கொடுப்பார்கள். இது பொதுவாக ஐந்து டாலர்கள் என்ற ரேஞ்சில் இருக்கும். இதை விடக் குறைவாக, பழைய படங்கள் திரையிடப்படும் சில தியேட்டர்களில் இரண்டு – மூன்று டாலர்கள் ரேஞ்ச்சில் டிக்கெட் விலை இருக்கும். மற்றபடி, பொதுவான விலை என்பது ஏழு டாலரிலிருந்து பதினைந்து டாலர் வரை இருக்கும். தற்சமயம் எட்டரை டாலர்கள் என்பது சராசரி விலை.
எனக்குத் தெரிந்து அமெரிக்காவில் அதிகமான விலைக்கு டிக்கெட் விற்கப்படுவது நம்மூர் படங்களுக்குத் தான். நம்மூரைப் போல், சராசரி விலையை விட இரண்டு, மூன்று மடங்கு அதிகமாக விற்பார்கள். 25-30 டாலர்களுக்குத் தமிழ் – தெலுங்கு படங்களின் டிக்கெட் விலையைப் பார்த்திருக்கிறேன். இப்படி இந்திய அராஜகம் அமெரிக்கத் தியேட்டர்களில் நம்மவர்களால் தான் நடக்கிறது. இதைப் பார்த்து, அமெரிக்கர்கள் கெட்டுப்போகாமல் இருந்தால் சரி.
அதே சமயம், தியேட்டரில் விற்கும் பாப்கார்ன் போன்றவை நம்மூரைப்போல எக்கச்சக்க விலையில் தானிருக்கும். டிக்கெட் விலையை விட அதிகமாகப் பாப்கார்ன் விலை இருக்கும். அதற்காகத் தண்ணீர் முதற்கொண்டு எதையும் ரசிகர்கள் எடுத்துச் செல்லக்கூடாது என்று தடை விதிப்பதில்லை. இலவசமாகத் தண்ணீர் கிடைக்கும். விருப்பப்பட்டால் வேண்டும் என்பதை வாங்கிக்கொள்ளலாம். பார்க்கிங்குக்கு கட்டணம் எதுவுமில்லை. இலவச பார்க்கிங் தான்.
நிறையப் படங்கள் பார்க்கும் ரசிகர்கள், தியேட்டர் கட்டணத்திற்குப் பயந்து திருட்டு சிடியிலும், தமிழ் ராக்கர்ஸிலும் படம் பார்ப்பதில்லை. மூவி பாஸ் (MoviePass), சினிமியா (Sinemia) போன்ற மாதந்திரச் சலுகைகள் உள்ளன. மூவி பாஸில் மாதத்திற்குப் பத்து டாலர் அளவில் சந்தா செலுத்தினால், ஒரு மாதத்தில் எத்தனை படங்கள் வேண்டுமென்றாலும், சில விதிமுறைகளுக்கு உட்பட்டு, பார்த்துக்கொள்ளலாம்.
வருடா வருடம் சினிமாகான் (CinemaCon) என்ற பெயரில் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள், தியேட்டர் நிறுவனங்கள் சந்தித்துக் கலந்துரையாடுகிறார்கள். அவர்களது வியாபார லாப, நஷ்ட விபரங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். திரைப்படத் தயாரிப்பில், வெளியீட்டில், திரையிடலில் என்ன புதியதாகச் செய்யலாம், செய்யப்போகிறோம் என்று உரையாடுகிறார்கள்.
இவ்வருடக்கூட்டத்தில் எல்.இ.டி. திரையரங்குகள் பற்றிய அறிவிப்புகள் வந்துள்ளன. மக்களுக்குச் சிறந்த சினிமா அனுபவத்தை அளிப்பது தொடர்பாக இப்படி ஆக்கப்பூர்வமாக ஏதேனும் பேசி செயல்படுத்தினால், அதனால் எல்லோருக்கும் நன்மை. இதற்கு முதல் அடியாக வெளிப்படைத்தன்மை அவசியமாகிறது.
- சரவணகுமரன்.
Tags: அமெரிக்கா, சினிமா, தியேட்டர், திரைப்படம், ஸ்ட்ரைக்