இணையத்தில் இனிமையாக இருந்து கொளல் எப்படி?
நாளாந்த நடத்தைகள் பற்றி இணையத்தில் துச்சமான, துக்கமானச் செய்திகள், அறிக்கைகள் வருகினும் அவற்றை முற்றிலும் உண்மையென நம்பி நாம் எடுத்துக் கொள்ளலாகாது.
மனிதாபிமானம் என்பது இலத்திரனியல் நூற்றாண்டிலும் தொன்மையானது . இது நாம் நாளாந்தம் மற்றவருடன் பேணக் கூடியது, பேணவேண்டியது. இதே மனிதாபிமானத்தை நாம் நாளாந்தம் உபயோகிக்கும் இணையத்திலும் கடைபிடிக்கவேண்டும்,
- இணையத்தில் தொடர்பு நன்னெறிகளைப் பேணல்
மற்றவர்கள் நுகர்வுக்கு ஒரு கருத்தை எழுதும் போதும் சற்றுச் சிந்தித்து எழுதுவதும் , சித்தரிப்புக்களைப் பகிர்வதும் நலம். நாம் பரிமாறும் தகவல் ” உண்மையா? மற்றவர்களுக்கு உதவியாக இருக்குமா? இந்தப் பரிமாறல் தேவைதானா? இது அன்பான வகையில் பகிர்ந்து கொள்ளப்படுகின்றனவா போன்ற கேள்விகளுக்கு பதில் ஆம் என்ற வகையில் அமைத்துக் கொள்வது நன்று.
- சிறிய இனிமையான மின்னஞ்சல் பரிமாறல்
சராசரி மக்கள் தமது மின்னிணையத்தில் பல்வேறு அநாவசியமான, தேவையற்ற மின்னஞ்சல்கள் குவிந்து திணறியவாறுள்ளனர். எனவே தொடர்பு கொள்ள மின்னஞ்சல் எழுதும் போது சுருக்கமாக எழுதுவது அவசியம். உடன் பதில் வராவிட்டால் அதற்கு தகுந்த காரனமுண்டென எடுத்துக் கொள்ளலாம்.
- நல்ல விமர்சனங்களை எழுத வேண்டும்
நீங்கள் உணவகம, காபிக்கடை பண்டம், பொருள் வாங்கினால் பிடித்திருந்தால் நல்ல விமர்சனங்களை மற்றவர்களுக்கும் உதவும் வகையில் பகிரலாம். குறை காண்பது இலகு ஆயினும் நிறை காண்பதற்கு உதவுவது சாலவும் நலம். எனவே உங்களுக்கு ஒரு வர்த்தகதாபனத்தில் எதிர்பார்த்த பணிவிடை, சேவை கிடைக்கவில்லையானால் முடிந்தால் அந்தத் தாபனத்திற்கு நேரடியாகத் தெரிவித்துக் கொள்வதே நலம். சில சமயங்களில் வர்த்தகர்கள் வாடிக்கையாளர் எடுத்துக் கூறாவிட்டால், தமது குறைகளைத் தாமே அறிந்து முடியாதவர்களாகவும் இருக்கலாம். எனவே விமர்சனங்கள் எழுதும் போது சிந்தித்து முன்னேற உதவும் நல்ல உபகாரச் சிந்தனைகளைத் தருவது யாவருக்கும் உதவியாக அமையும்.
- நற்செய்திகளைப் பரிமாறுதல்
செய்திகள் பலவும் எம்மிடையே பரவியவாறுள்ளன. இதில் வர்த்தக முயற்சியுடையோர் திகில் செய்தி எனும் முறையில் பல தீவிரமான விடயங்களை நுகர்வோரைக் கவர பொறியாகப் பயன்படுத்துவர். இதனால் மனம் சலித்துப் போகும் மக்கள் பலர்.
எனவே உங்களுக்கு ஏதாவது பொதுநல நற்செய்தி கிடைத்தால் அதை உடன் பரிமாறுவது மற்றவர்களுக்கும் இலகுவாகச் சந்தோசத்தைப் பரிமாறும் செயலாகவும் அமையும். உங்கள் நற்செய்தி நுகர்வோரை உற்சாகமான மனநிலையில் வைத்தால் அதுவே சிறு துளி பெரும் வெள்ளமாகும் வாய்ப்பை உண்டாக்கும்.
- நன்மக்களைப் பற்றிச் சிந்திப்போம்
மக்களின் நன்மையான பகுதியை நினைத்துச் செயல்படுவது நலமானது. நாம் மின் இணையத்தில் கோபம், குற்றப்பழி சாட்டும் உந்தல்களிலிருந்து நம்மை நாமே தவிர்த்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக முகம் முறிக்கும் வகையில் சுடச் சுடப்பதிலளித்தல், பழி வாங்குதல் பிறரை வெகுவாகப் பாதிக்கும். இதைத் தவிர்த்து, நல்ல மக்களும் சில தடவைகளில் தடுமாறலாம், இடைஞ்சலுக்கு உள்ளாகியிருக்கலாம் என்பதை உணர்ந்து தொழிற்முறை பாங்குடன் பதிலளிப்பது நலமே.
- பாதகமற்ற நகைச்சுவையைப் பரிமாறுவோம்
சிரிப்பானது தொற்றக்கூடிய மனதிற்கு இனிதானதொரு சுபாவம். எனவே அவ்வப்போது மற்றவர்களுக்கும் சிரிப்பை உண்டு பண்ணும் தகவல், படங்கள், தொகுப்புக்கள் பரிமாறுதல் நலமான விடயமே . அது மின் இணையமாக இருக்கட்டும் இல்லை நேரடிப் பகிர்வாக இருக்கட்டும் சிரிப்பூட்டல் மனதிற்கு இனிமை தரும் அன்பானச் செயலே.
- எப்போதும் நலமானவற்றைப் பற்றிச் சிந்திப்போம்
சுவையான சமையல் குறிப்பு, புதிதாக நீங்கள் சென்று வந்த உல்லாச இடம், வாசித்த புத்தகம், சஞ்சிகை, திரைப்படம், தொலைக்காட்சி நிகழ்வு, புதிய பண்டம் அல்லது கடை இப்படி எதுவானாலும் மற்றவர்களுக்கும் உதவுமானால் அவற்றைப் பகிர்வது இனிமையான செயலே.
- தொண்டு நிதி திரட்ட உதவலாம்
உலக வாழ்வில் பல தாப்பட்ட தேவைகள் பாதிக்கப்பட்டவர்கள், நோயாளிகள், உயிரினங்கள், இயற்கை வதிப்புக்கள், மனிதரால் உருவாக்கப்பட்ட அழிவுகள் என பலவற்றிற்கும் நிதியுதவி தேவைப்பட்டவாறேயுள்ளது. மின்னிணையம் துரிதமாக மக்களைத் தொடர்புகொண்டு, சிறிதளவேயானாலும் , சில நாழிகைகளிலேயே நிதி திரட்டிக் கொள்ள நிகர் இல்லாத சாதனம்.
எனவே உங்களுக்குப் பிடித்த பொதுநல நிதி திரட்டல்களில் மின் இணையம் மூலம் நன்மார்க்க பங்குதனை நீங்களும் கடைப்பிடிக்கலாம்
- மின் இணையத்திலும், மற்ற இடங்களிலும் நற்சிந்தனை சார்ந்த குழுமியங்களில் சேரலாம்
அன்பையும், பண்பையும் பரவும் பல குழுமியங்கள் மின் இணைத்தில் தொடர்ந்து உருவாகியவாறே உள்ளன. இவற்றில் சில சமயம் சார்ந்தவை மற்றயவை மனிதாபிமானம் கருதிச் செயல்படும் ஒன்றியங்கள். இவை யாவும் நாம் என்றும் திடகாத்திரமான வாழ்வுதனை வாழவும், மன நிறைவான கருமங்களில் மற்றவர்களுடன் ஒன்று சேர்ந்து உதவவும் சந்தர்ப்பம் தருபவை.
எனவே மனமுண்டானால் இடம் உண்டு என்பது எமது சான்றோர் வாய்மொழி. இதைப் பின்பற்றி இணையத்தில் இனிமையைக் கடைப்பிடிப்போம்
– ஊர்க் குருவி