நி(தி)றம்படப் பழகு
ஏனோ இந்தக் கேள்வி இப்போதெல்லாம் சுஜாவிற்கு ஒரு வெறுப்பை ஏற்படுத்த தொடங்கி இருந்தது. அவள் எவ்வளவுதான் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள நினைத்தாலும் சில நேரங்களில் அது முடியாமல் போய்விடுவதும் உண்டு.அவள் தன் கட்டுப்பாட்டை இழக்கும் போதெல்லாம் அவள் கணவனிடமிருந்து வரும் விமர்சனம் இப்போதெல்லாம் அவளிற்குப் பழக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது. அவன் தினமும் அவளிடம்
“ சுஜா எதையும் மறந்து விடுவதுதான் குழந்தைகளின் இயல்பு. நீ அறிவுரை சொல்லும் நேரத்தில் அதை எவ்வளவு வேகமாக ஒரு குழந்தையால் புரிந்து கொள்ள முடியுமோ அதை விட வேகமாக அக்குழந்தை அதை மறந்தும் விடுகின்றது”
“நாம் வாழும் சூழலும் வாழ்கின்ற வாழ்க்கையும் முன்னுக்கு பின் முரணானது. முரண்பட்ட சூழலில் நேரான ஒரு வாழ்க்கையை வாழ்வதென்பது நமக்கே கடினமாக இருக்கின்ற போது பாவம் அந்த குழந்தையால் இதைச் சரியாகப் புரிந்துகொள்ளல் எப்படி சாத்தியம்?”
“ஒரு தாயாக நம் மகள் சோர்வுறும் போதெல்லாம் நீதான் அவளைத் தட்டிக்கொடுத்தாக வேண்டும். அது உன் கடமையும் கூட”
இதை அவன் சொல்லும் போதெல்லாம் ஒரு தாயாக அதன் உண்மையை அவள் உணர்ந்து கொள்வதுண்டு.ஆனாலும் அவளது மகள் திரும்பத் திரும்ப அந்தக் கேள்வியை எழுப்பும் போது சில நொடிகளில் அவள் தன்னை மறந்து வெறுப்பைக் காட்டி விடுவதும் உண்டு.
வெளிநாடுகளில் வாழ்க்கை என்பது அத்தனை இலகுவானதல்ல. புகைப்படங்களில் பார்ப்பதற்கு அத்தனை அழகாகவும் வர்ணஜாலமாகவும் தெரியும் இந்த வாழ்க்கை உண்மையில் வாழ்வதற்கு அத்தனைச் சிரமமானது. அமைதியாக எதையும் சிந்தித்துச் செய்வதற்கு இந்த வாழ்க்கை எப்போதுமே இடம் கொடுப்பதில்லை. எம்மால் முடியுமோ இல்லையோ அதன் போக்கில் நாம் ஓடியே ஆக வேண்டும்.
இயந்திரங்களுடனும் தொழில்நுட்பத்துடனும் போராடிப்போராடி மனிதத்தையும் மனிதர்களையும் மதிக்கத் தெரியாத ஒரு ஜடமாக வெளிநாடுகளில் மனித இனம் மாறிக் கொண்டிருக்கின்றது. பேசுவதற்கு உறவுகளோ சேர்ந்து விளையாட நண்பரகளோ இல்லாமல் இலத்திரனியல் சாதனங்களுடனேயே போராடும் இந்தக் குழந்தைகளின் வாழ்க்கை அத்தனை கொடுமையானது. மாறுபட்ட நிறம் மாறுபட்ட மொழி நமக்கு பொருத்தப்படாத வாழ்க்கைமுறை இவற்றுடன் தம்மை பொருத்திக்கொள்வதென்பது குழந்தைகளிற்கு உண்மையிலேயே மிகப் பெரிய சவால் என்பது சுஜாவிற்கு நன்கு புரிந்திருந்தும் ஏனோ சில நிமிடங்களில் அவள் தடுமாறி விடுவதுண்டு.
அவள் தாயாகிவிட்டாள் என்பதை விட ஒரு பெண் குழந்தைக்கு தாயாகியதில்தான் அவள் இரட்டிப்பு மகிழ்ச்சியும் அமைந்திருந்தது. அவளைச் சுற்றி இருந்த உறவுகளிற்கு அது ஒரு சிறு ஏமாற்றமாக அமைந்த போதும் சுஜாவிற்கும் கணவருக்கும் அது பெருமையையே கொடுத்திருந்தது.
சுஜா தன் வீட்டில் ஒரு தேவதையாகவே வளர்ந்திருக்கின்றாள். ஆனால் திருமணம் பற்றி அவள் மனதிலும் ஏதோ ஒரு பயம் இருந்து கொண்டுதான் இருந்தது. திருமணத்துடன் ஒரு பெண்ணின் சுதந்திரம் முடிந்து விடும் என்று பலர் சொல்லி அவள் கேட்டிருக்கின்றாள்.
தனது சுயத்தைத் தொலைத்து ஒரு திருமண பந்தத்தை அமைத்து கொள்வதில் அவளிற்கு என்றுமே உடன்பாடு கிடையாது. காலம்தான் யாருக்காகவும் காத்திருப்பதில்லையே. அவளையும் காலம் ஒருவனுடன் இணைத்து வைத்தது. அவனைக் கைப்பிடித்த பின்புதான் ஆண்கள் மீதே அவளிற்கு மரியாதை வந்தது. அவளிற்குப் பெற்றோர் கொடுத்த அன்பும் சுதந்திரமும் மரியாதையும் அவனிடமிருந்து இரட்டிப்பாகவே கிடைத்தது. மொத்தத்தில் அவள், அவனிற்கு ஒரு குழந்தையாகவே மாறியிருந்தாள். இந்த மாற்றம்தான் அவள் பெண் குழந்தையை விரும்புவதற்கு ஒரு காரணமாக அமைந்தது.
ஒரு வரமாக தனக்குக் கிடைத்த குழந்தையின் வேதனையை நன்கு புரிந்தும் அதற்கானத் தீர்வு எதுவும் தன்னிடம் இல்லை என்று எண்ணும் போது யாரோ அவளது இதயத்தை நெரிப்பதுபோல் இருந்தது. தமிழனாய்ப் பிறந்தது தப்பா அல்லது தமிழனுக்கென்று ஒரு நாடு இல்லாமல் போனது தப்பா? இதுதான் வெளிநாட்டில் குடியேறியதில் இருந்து அவளுக்குள் எழும் ஒரே கேள்வி. இப்படியே சிந்தனையில் இருந்தவளை “அம்மா” என்று அழைத்த மகளின் குரல் மீண்டும் அவளை நனவுலகத்நிற்கு கொண்டு வந்தது.
“என்னடா”
என்ற சுஜாவின் கேள்வியிலேயே ஏதோ ஒரு பயம் இருந்தது. அவள் எதிர்பார்த்தது போலவே மகள் அதே கேள்வியை திரும்ப ஆரம்பித்தாள்.
“அம்மா ஏன் என்னுடைய வகுப்பில் நான் மட்டும் கறுப்பாய் இருக்கிறன். என்ர பிரண்ட்ஸ் எல்லாம் வெள்ளையாய் இருக்கினம். எனக்கு என்ர கலர் பிடிக்கேல்ல. நான் வெள்ளையாய் இருந்தால் தான் அவை என்னோட பழகுவினம். ஏன் அம்மா நான் கறுப்பாய் பிறந்தனான்”
என்று மகள் கேட்ட போது அந்த வார்த்தைகள் அவளது வலியை அப்படியே படம் பிடித்து காட்டின.
இந்த நிறம் என்பது எங்கேயும் ஒரு பிரச்சனைதான். நம் நாட்டில் எல்லோரும் ஒரே நிறம் என்றாலும் அதற்குள்ளும் கறுப்பு, பொதுநிறம், வெள்ளை என நாமே நம்மைப் பிரித்து வைத்துள்ளோம். அழகு என்பது நிறத்தில்தான் தங்கி இருப்பதாக நம்பும் ஆண் சமூகமும் நிறமாய் இருந்தால் திருமணச் சந்தையில் பெண்களை இலகுவாய் விற்று விடலாம் என நம்பும் பெற்றோரும் வாழும் சமூகத்தில்தான் நாம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்த நிலையில் வெள்ளைக்காரப் பிள்ளைகளை மட்டுமே பாடசாலையில் பார்த்து வளரும் தன் பிள்ளைக்கு இப்படி ஒரு பிரச்சனை வருவது மிகவும் இயல்பானதே என்பதை அவளால் நன்கு உணர முடிந்தது.
இதற்கு என்ன தீர்வு என்பதுதான் அவளிற்கு புரியாமலே உள்ளது. நிற வேறுபாட்டிற்கான காரணங்களைப் புவியியல், காலநிலை, பரம்பரை என்ற ரீதியில் அவள் பலமுறை விளக்கி இருக்கின்றாள். ஆனாலும் அவை எதுவும் மகளிற்குத் தேவையான பதிலை வழங்கவில்லை என்பது ஒரே கேள்வி திரும்ப திரும்ப அவளிடம் இருந்து வரும்போது அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. அவள் இம்முறை வேறுபட்ட கோணத்தில் இதற்கான பதிலை ஆரம்பித்தாள்
“செல்லம் நீ ஒன்றும் கறுப்பு இல்லை. உனது நண்பர்களை விட நீ கொஞ்சம் நிறம் குறைவாக இருக்கின்றாய். அவ்வளவுதான். வெள்ளை மட்டுமே அழகான நிறம் என்று எண்ணும் உன் எண்ணத்தை முதலில் மாற்றிக்கொள். நிறங்கள் எல்லாமே ஒவ்வொரு விதத்தில் மாறுபட்ட அழகைக் கொண்டவை. கோயிலில் இருக்கும் அத்தனை விக்கிரகங்களும் கறுப்பாகத்தான் இருக்கின்றன. ஆனால் அவற்றில் இருக்கும் அழகை வேறெங்கும் பார்க்க முடிவதில்லை. அந்த விக்கிரகங்களில் நிறைந்திருக்கும் அன்பும் கருணையும் அமைதியும் எல்லோருக்கும் உதவும் இயல்பும் அவற்றின் அழகை இரட்டிப்பாக்கின்றன. ‘செல்லம்’ நீ மற்றவர்களுடன் உன்னை ஒரு போதும் ஒப்பிட்டு பார்க்காதே . நான் தான் அழகு என்பதை முதலில் உனக்குள் நீ நம்பியாக வேண்டும். அந்த எண்ணம் உனக்குள் ஒரு வைராக்கியத்தைக் கொண்டுவரும். எதையும் என்னால் சாதிக்க முடியும் என்ற எண்ணத்தை உன்னுள் தோற்றுவிக்கும். நான் அழகாகவும் நிறமாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணுவதை விட அன்பு அமைதி அடக்கம் ஒழுக்கம் கருணை போன்ற உயரிய பண்புகளை உன்னுள் நீ வளர்த்து கொண்டால் உன்னைச் சுற்றியுள்ள அனைவருக்கும் நீ அழகாகத் தெரிவாய். மற்றவர்கள் மாதிரி நீ இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதை விட மற்றவர்களிற்கு நீ முன்னுதாரணமாய் இருக்க முயற்சி செய். அது உனக்கு உண்மையான சந்தோஷத்தைக் கற்றுத்தரும். என்று தன்னால் முடிந்த அனைத்தையும் சொல்லி முடித்தாள் சுஜா.
இதை அவள் சொல்லி முடித்த போது அவள் மகளின் முகத்தில் ஒரு தெளிவை அவளால் அவதானிக்க முடிந்தது.இது நடந்து முடிந்து ஒரு ஆறுமாத காலத்திற்கு மேலாகி விட்டது. இப்போதெல்லாம் அந்தக் கேள்வி மகளிடமிருந்து வருவதில்லை . எந்தக் கேள்வி இத்தனை காலமாக அவளைச் சங்கடப்படுத்தியதோ இப்போது மாறாக ஏன் அந்தக் கேள்வி மகளால் எழுப்பப்படுவதில்லை என்ற எண்ணம் அவளைக் குழப்பத்திற்கு உள்ளாக்கியிருந்தது.
மகளின் இந்த மாற்றம் ஏனோ அவளிற்குச் சந்தோஷத்திற்கு மாறாக வேதனையையே கொடுத்தது. மகளின் இந்த மாற்றத்திற்கு காரணம் தனது விளக்கம் அவளில் மாற்றத்தைக் கொண்டு வந்ததா அல்லது திரும்பத் திரும்ப கேட்டாலும் அம்மா ஒரே விளக்கத்தைதான் சொல்லப் போகிறார். அந்த விளக்கம் எதையுமே மாற்றி அமைக்கப் போவதில்லை என்று மகள் எண்ணி விட்டாளா என்பது விடை தெரியாத கேள்வியாகவே அவளிற்குள் ஓடிக்கொண்டிருந்தது. நிறம்சார் பிரச்சனை என்பது காலம் காலமாக இலைமறை காயாக தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. எல்லோரும் சமம் என்பது பல நாடுகளின் சட்டமாக இருந்தாலும் அவற்றை நடைமுறை வாழ்க்கையில் காண்பதென்பது கடினமான ஒன்றுதான். மனித மனங்களில் மாற்றம் வந்தாலன்றி சட்டங்களைக் கொண்டு இதை மாற்றுவதென்பது சாத்தியமற்றது. இவையெல்லாம் அவளிற்குத் தெரிந்திருந்தும் ஏனோ தன் மகளின் பிரச்சனைக்குத் தன்னால் தீர்வு காணமுடியும் என எண்ணுவது அவள் தாய் பாசத்தின் உச்சக்கட்டமே.
-நிகேதா-